சிலம்போ சிலம்பு/புகார் - சோழர் சிறப்பு
26. புகார் - சோழர் சிறப்புகள்
நூலின் தொடக்கத்திலேயே - பத்தாம் அடியிலேயே 'பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்' என இளங்கோ புகாரைப் போற்றியுள்ளார். காவிரிப்பூம்பட்டினத்தின் மற்றொரு சுருக்கமான பெயர் புகார். இந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்றால் சென்னைக்குப் போகிறேன் என்று சொன்னதான பொருள் படும். அந்தக் காலத்தில் பட்டணம் போகிறேன் என்று சொல்லியிருந் தால் புகாருக்குப் போகிறேன் என்று சொன்னதான பொருள் கொள்ளப்பட்டிருக்கலாம்.
இளங்கோவின் ஏமாற்றம்
பொதிய மலையிலும், இமய மலையிலும், குடிமக்கள் என்றும் வேறிடத்துக்குப் பெயர்ந்து செல்ல வேண்டாத அளவுக்கு வாய்ப்பு வசதிகள் நிறைந்ததும் தனக்கென்று தனிச்சிறப்பு உடையதுமாகிய புகாரிலும் சான்றோர்கள் இருப்பதால், இந்த மூன்று இடங்களும் என்றுமே அழிவு என்பதின்றி நிலை பெற்றிருக்கும் என்று - முற்ற முடிந்த நூலறிவும் பட்டறிவும் உடைய சான்றோர் கூறுவர் என இளங்கோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"பொதியி லாயினும் இமய மாயினும்
பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
நடுக்கின்றி நிலைஇய என்ப தல்லதை
ஒடுக்கம் கூறார் உயர்ந்தோர் உண்மையின்
முடித்த கேள்வி முழுதுணர்ந் தோரே"
(1:14 - 19)
"பொதியி லாயினும் இமய மாயினும்
பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்"
என்று மட்டும் இளங்கோ பாடியிருந்தால் நல்லது. ஆனால், புகார் நகரம், பதியெழு வறியாப் பழங்குடி நிலவியது என்று பாடியிருப்பதுதான் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
புகாரில் இருந்த பழங்குடி மக்கள் வேறிடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளதாகக் கருத இடமுண்டு. புதுக்கோட்டை மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் நாட்டுக் கோட்டைச் செட்டிமார்கள் உள்ளனர். இவர்கள் உள்ள பகுதியைச் செட்டிநாடு என்று அழைப்பர் சிலர். இங்கே உள்ள செட்டிமார்கள் சிலரின் வீடுகள் உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும்.
1962 ஆம் ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களுடன் மற்றொரு செட்டியார் எங்கள் வீட்டிற்கு வந்தார். அவரும் எனக்கு நண்பராகி விட்டார். பெயர் நினைவில்லை. நான் அவரை நோக்கி, உங்கள் ஊர்ப் பக்கங்களில் வீட்டின் கீழ்த்தளமே - அதாவது முதல் தளமே உயரமான அடித்தளத்தின் மேல் கட்டப் பட்டிருப்பது ஏன்? - என்று கேட்டேன். அதற்கு அவர் இறுத்த விடை விளக்கமாவது:
எங்கள் இனத்தவர்கள் காவிரிப்பூம் பட்டினமாகிய புகாரிலிருந்து வந்தவர்கள். புகாரைக் கடல் கொண்டு விட்டதாலும், எஞ்சியிருந்த பகுதியில் வீடுகளில் இருந்த பொருள்கள் நனைந்து கெட்டு விட்டதாலும், நீர் அச்சம் மிகுந்த கடற்கரைப் பகுதியில் வசிப்பதை வெறுத்து, நீர் அச்சம் இல்லாத மேட்டுப் பாங்கான இப்போதுள்ள இடத்திற்கு வந்து விட்டனர். வெள்ளம் வரலாம் என்ற தண்ணீர் அச்சத்தால், பல படிகள் அமைத்த அடித்தளத்தின்மேல் வீடுகளைக் கட்டினர் - என்பது அவர் தந்த விளக்கம். இந்தக் கருத்தைப் பற்றி மற்ற செட்டிமார்கள் என்ன எண்ணுவார்களோ - தெரியாது. எதுவோ - எப்படியோ? பதியெழு வறியாப் பழங்குடி நிலைஇய புகார் என்னும் இளங்கோவின் கூற்று ஏமாற்றத்திற்கு இடமாகி விட்டது. ஆனால் இயற்கையின் திருவிளையாடலுக்கு இளங்கோ பொறுப்பாளர் ஆகார்.
தேவர் (சொர்க்க) உலகத்தையும் நாக நாட்டையும் ஒத்த இன்பமும் புகழும் பொருந்தியதாம் புகார்.
"நாகநீள் நகரொடு நாகநா டதனொடு
போகம்மீள் புகழ்மன்னும் புகார் நகர்"
(1:21,22)
என்பது பாடல் பகுதி. புகார், அரசரும் விரும்பும் மிக்க செல்வம் உடைய வணிகர் மிக்கது: உலகம் முழுவதும் வரினும் விருந்தோம்பி வேண்டியதைத் தரக்கூடிய வளம் உடையது. கப்பல் வாயிலாகவும் கால்நடை முதலிய வேறுவகையிலும் பல நாட்டுப் பொருள்களும் வந்து குவிவதால் பல நாடுகள் ஒன்று சேர்ந்திருப்பது போன்றது.
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குவியல் நிறைந்த புகார் நகரில் மாலை கழிந்தும் வாணிகம் நடக்கும் வாணிகத் தெருவில், வண்ணம் சாந்து மலர் கம்மியரின் பொருள் மோதகம் மீன் முதலியன விற்போர் வைத்திருக்கும் விளக்குகளும், கலங்கரை விளக்கமும், பரதவரின் படகு விளக்கு களும் அயல் நாட்டவர் பயன்படுத்தும் விளக்குகளும் காவலர் கையாளும் விளக்குகளும் ஒளி பொழிந்தனவாம்.
புகாரில் கற்பகக் கோட்டம், வெள்யானைக் கோட்டம், நாகர் கோட்டம், ஞாயிறு கோட்டம், வேல் கோட்டம், வச்சிரக் கோட்டம், நிக்கந்தர் கோட்டம், நிலாக் கோட்டம், முதலிய கோட்டங்கள் இருந்தன.
புகார் நகரம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கிழக்கே கடற்கரைப் பக்கமாக இருந்தது மருவூர்ப் பாக்கம் எனவும், மேற்குப் பக்கம் இருந்த மறுபாதி பட்டினப் பாக்கம் எனவும் பெயர் வழங்கப்பட்டன.
மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை வருமாறு: அணிகல மாளிகை, சரக் கறைகள், மிலேச்சர் இருப்பிடம், பிற நாட்டார் இருப்பிடம், தொய்யில்குழம்பு சுண்ணம் சாந்து மலர்கள் ஆரம் அகில் விற்பவர் தெருக்கள், பலவகை உலோகம் மரம் ஆகியவற்றால் பொருள்கள் செய்து உண்டாக்கும் கம்மியர் தெருக்கள், தையல்காரர் . தோல் வேலை புரிபவர் - பூக்கட்டுவோர் தெருக்கள், பல் இயங்கள் கொண்டு பாடும் பாணர் தெரு, ஒழுக்கமற்ற சிறு தொழிலோர் தெரு - முதலிய பகுதிகள் மருவூர்ப் பாக்கத்தில் இருந்தவை. வாணிகம் என்னும் தலைப்பிலும் பாடலுடன் இச்செய்தி இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
அடுத்து, பட்டினப் பாக்கத்தில் இருந்தவை: மன்னர், அமைச்சர், படைவீரர், அந்தணர், வணிகர், சூதர், மாகதர், மருத்துவர், சோதிடர், முத்துக் கோப்பவர், சங்கு அறுப்பவர், நாழிகை அறிவிப்பவர், படைத் தலைவர்கள், கூத்தர், பதியிலார், நகை வேழம்பர், திருவிழா முழவு கொட்டுவோர் முதலியோர் வாழ்ந்த தெருக்கள் முதலியன பட்டினப்பாக்கப் பகுதியில் இருந்தன. அரண்மனை வட்டாரம் இந்தப் பகுதியில்தான் இருந்தது.
இந்த இருவேறு பாக்கங்களைப் பற்றி எண்ணுங்கால், எங்கும் பிரிவினை - எதிலும் பிரிவினை இருக்கும்போலும் என எண்ணத் தோன்றுகிறது.
மாறுபட்ட இரு வேந்தர்களின் பாசறைகளுக்கு நடுவே போர்க்களம் இருப்பதுபோல், இந்த இரண்டு பாக்கங்கட்கும் இடையே நாளங்காடி என்னும் பகுதி இருந்தது. அங்கே, முசுகுந்தச் சோழனுக்கு உதவிய பூதத்தின் கோயிலும் பலி பீடிகையும் இருந்தன. பலிபீடிகையில் பலியிடலும், ஆடல் பாடலும் நிகழ்ந்தது உண்டு. மற்றும் புகாரில் உள்ளனவும் நடந்தனவும் வருமாறு:
உயிர்ப் பலி மேடை
முசுகுந்தச் சோழன் காலத்திலிருந்தே மறவர்கள் (வீரர்கள்) தம் உயிர்ப்பலி கொடுத்து வந்தனர். மருவூர்ப்பாக்கத்து மறவர்களும் பட்டினப் பாக்கத்து மறவர்களும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு, அரசன் வெல்க என வாழ்த்தித் தம் தலையைத் தாமே அரிந்து பலி கொடுத்துக் கொள்வார்களாம். தற்கொலைப் படையினர் அந்தக் காலத்திலேயே இருந்தனர் என்பது இதனால் உய்த்துணரக் கிடக்கிறது. இது போன்றதோர் உயிர்ப்பலி கலிங்கத்துப் பரணியில் சொல்லப்பட்டுள்ளது:
மறவர்கள் தலையை அடிக்கழுத்தோடு அரிந்து கொற்றவையின் கையில் கொடுப்பராம். தலை கொ ற் ற வை யை த் துதிக்குமாம். குறையுடலும் கொற்றவையைக் கும்பிட்டு நிற்குமாம். (பாடல்: கோயில் பாடியது-15)
"அடிக்கழுத்தின் நெடுஞ்சிரத்தை அறிவ ராலோ
அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ
கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவு மாலோ
குறையுடலம் கும்பிட்டு கிற்கு மாலோ"
சிலப்பதிகார உயிர்ப்பலியைவிட, கலிங்கத்துப்பரணி உயிர்ப்பலி கடுமையாகத் தெரிகிறதே!
கரிகாலன் பகைவரிடமிருந்து பெற்ற முத்துப் பந்தரும் பட்டி மண்டபமும் வாயில் தோரணமும் உள்ள மண்டபம் ஒரு பகுதியில் இருந்தது.
வெள்ளிடை மன்றம்: பரசரக்குப் பொதிகள் உள்ள இடம். திருடியவர் ஊர் சுற்ற வைக்கப்படுவர்.
இலஞ்சி மன்றம் நோயுற்றோர் குளித்தால் நோய் போக்கும். .
நெடுங்கல் மன்றம்: பித்து மருந்து உண்டவர், நஞ்சு அருந்தியவர், பேய் கோட்பட்டவர் ஆகியோர் இந்த மன்றத்தைச் சுற்றிவரின் நோய் போக்கும். இதில் உள்ள கல் ஒளி உமிழும்.
பூத சதுக்கம் பொய் வேடத்தார், கற்பு கெட்டவர், தீய அமைச்சர், பிறன்மனை விரும்புபவர், பொய்ச் சான்று புகன்றவர் ஆகியோரைப் புடைத்து உண்ணும் பூதத்தின் இருப்பிடம் அது.
பாவை மன்றம்
அரசன் கோல் கோடினும், நீதி மன்றத்தார் நடுநிலை தவறினும் வாய் பேசாமல் நீர் சொரியும் பாவையுள்ள மன்றம் இது.
இந்திர விழாவின்போது, பல தெய்வங்களின் கோயில் களிலும் தீ வளர்த்தனர். முப்பத்து மூவர் முதலியோர்க்கு விழா எடுத்தனர். சமணப் பள்ளிகளிலும் புத்தப் பள்ளிகளிலும் பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு இசை வல்லுநர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரச வினைஞர் பலரும் சேர்ந்து இந்திரனை எழுந்தருளச் செய்து விழா நடத்தினர்.
விழாக் காலத்தில், தெருவில் கோவலன் முதலிய காமுகர்கள் களித்துத் திரிந்தனர். தெருவில் பொது மகளிர் பலர் திரிந்தனர். அவர்களின் மார்புகள் தெருவில் ஆடவர்களின் மார்புகளோடு உரசின. அதனால், பொது மகளிரின் மார்புத் தொய்யில் குழம்பு ஆடவர் மார்பில் தோய்ந்தன. இந்த மார்போடு வீடு செல்லின் மனைவி நம் மேல் ஐயங்கொண்டு கடிவாள் என எண்ணி ஆடவர் விருந்தினரோடு சென்றனராம். ஊடல் தீர்ப்பவரின் பட்டியலில் விருந்தினர்க்கும் இடம் உண்டல்லவா?
திருநீலகண்ட நாயனாருக்கும் இந்த விதமான இடையூறு (விபத்து) நேர்ந்தது. அவர் விருந்தினரோடு செல்லவில்லை போலும். அவர் மனைவி அவர் மேல் ஐயங் கொண்டு எம்மைத் தொடாதீர் என்றார். அதிலிருந்து மாறர் சேலை கட்டிய திருமேனிகளைத் திரும்பியும் பாராராயினார். அதனால், பட்டினத்தார், "மாது சொன்ன சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லேன்" என்று அவரை உள்ளத்தில் குறிப்பிட்டுக் கொண்டு பாடினார்.
சிலம்பில் இளங்கோவடிகள், இலக்கியச் சுவைக்காக இப்படியொரு காட்சியைப் படைத்துள்ளார். வேண்டுமென்றே உரசிக் கொண்டு போதல் நடக்கலாம்; ஆனால், விருந்தினரோடு போகும் அளவிற்கு நிலைமை முற்றியிராது.
புகாரின் சிறப்புப் போலவே சோழர் குடியின் சிறப்பும் பாராட்டத் தக்கது. மதுராபதி கண்ணகிக்குப் பல கூறிய போது, புறாவுக்காகத் தசையை அரிந்து கொடுத்த சோழன் பெருமையையும், கன்றுக்காகத் தன் மகன்மேல் தேரோட்டி முறைசெய்த மனுநீதி சோழனின் பெருமையையும் கூறிற்று.
சோழ நாட்டுக் கற்புடைய மங்கையரின் புகழ் மிக்க வரலாறுகள் கண்ணகியால் கூறப்பட்டன.
சிலம்பில் சோழரின் வெற்றிகள் சில குறிப்பிடப்பட்டு உள்ளன: தெற்கிலும் மேற்கிலும் பகை இல்லையாதலின் கரிகாலன் வடக்கே படையெடுத்துச் சென்று வென்றது, இமயத்தைச் செண்டால் அடித்தது, புலி பொறித்தது ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.
மற்றும், முசுகுந்தச் சோழன் இந்திரனுக்கு உதவி செய்தமை, தொடித்தோட் செம்பியன் துங்கெயில் எறிந்தமை முதலிய சோழர் குடியின் சிறப்புகள் பல பெரிதுபடுத்திப் பேசப்பட்டுள்ளன.
அரசன் நன்முறையில் செங்கோல் செலுத்தினாலேயே பெண்களின் கற்பு காக்கப்பட்டுச் சிறப்பெய்தும் என்னும் தமிழ் உரையை மெய்ப்பிக்கும் வகையில் கண்ணகி தன் கற்பின் திண்மையால், கிடைத்த புகழைச்சோழ மன்னனுக்கு உரிய தாக்கினாளாம்.
"அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்
பண்டையோர் உரைத்த தண்தமிழ் நல்லுரை
பார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்
ஆர்புனை சென்னி அரசர்க்கு அளித்து"
(28:207-211)
என்பது பாடல் பகுதி. மணிமேகலைக் காப்பியத்திலும் இந்தக் கருத்து இடம் பெற்றுள்ளது:
"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்
காவலன் காவல் இன்றெனின் இன்றால்"
(23:208.9)