சிலம்போ சிலம்பு/பொற்கொல்லனின் பொய்ம்மை
25. பொற் கொல்லனின் பொய்மை
கோவலனைக் கொல்லச் செய்த பொற்கொல்லன் அரண்மனைப் பொற்கொல்லன் என்னும் தகுதி பெற்றவன்; அதற்கேற்ற மெய்ப்பையும் (சட்டையும்) கைக்கோலும் உடையவன்; கோவலனுக்கு எம தூதனானவன்; பொற்கொல்லர்கள் நூற்றுவருடன் வந்தவன்.
சிலம்பை மதிப்பிடுவாயா எனக் கேட்ட கோவலனைத் தொழுது, காலணியை மதிக்க இயலாதவனாயினும் வேந்தர்க்கு முடி செய்வேன் யான் என அடக்கமாகப் பதிலிறுத்தான் அந்தப் பொய்யன்.
கோவலன் காட்டிய வேலைப்பாடும் விலை மதிப்பும் மிக்க சிலம்பைக் கண்டு, தான் திருடிய அரசியின் சிலம்புக்கு இதை ஈடு கட்ட எண்ணிக் கோவலனைத் தன் இல்லத் தயலே இருக்கச் செய்து அரசனைக் காணச் சென்றான்.
கள்வர் திறன்
அரசியின் ஊடலைத் தணிக்கும் காம நோக்குடன் அரசியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பாண்டியனிடம் சிலம்பு திருடிய கள்வன் என் இல்லத்தருகே உள்ளான் எனக் கூறினன். அவனைக் கொன்று சிலம்பைக் கொணர்க என்று மன்னன் ஆணையிட்டான். அவ்வாறே சென்று, உடன் வந்தவரிடம் கோவலனைக் காட்டினான். கோவலனது தோற்றத்தைக் கண்ட சிலர், இவன் கள்வனாக இருக்க முடியாது என்றனர். அதை ஒவ்வாத பொற் கொல்லன், கள்வர்கள், மந்திரம், தெய்வம், மருந்து, நிமித்தம், தந்திரம், இடம், காலம், கருவி ஆகிய எட்டையும் படையாகக் கொண்டு திருடுவதில் வல்லவர். இன்ன இன்னதால் இன்னின்னவாறு ஏமாற்றி விடுவர் என்றெல்லாம் கூறினன். மேலும், முன்னொருநாள் இரவில் இளவரசன் உறங்கிக் கொண்டிருந்தபோது அவனது மார்பு மாலையைக் கள்வன் ஒருவன் திருடினான். உடனே இளவரசன், உறையிலிருந்து வாளை உருவினான். கள்வன் வாள் உறையை இளவரசனிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். இளவரசன் வாளால் குத்தியபோதெல்லாம், கள்வன் அந்தக் குத்துகள் உறைக்குள் செருகிக் கொள்ளும்படிச் செய்துகொண்டேயிருந்து பின் மறைந்து விட்டான். எனவே, இவர்களை நம்ப முடியாது எனறான.
இதைக் கேட்டிருந்தவர்களுள் ஒருவன், முன்னொரு நாள் இரவில் ஒரு கள்வன் எதிர்ப்பட்டான் - அவனைக் கொல்ல யான் வாளை ஒங்கியபோது அவன் வாளைப் பறித்துக் கொண்டு ஓடிவிட்டான் - எனவே, இவர்களை நம்ப முடியாது என்றான். இவ்வாறு பேசிக்கொண்டிருந்த சூழ்நிலையில், கல்லாக் களிமகன் ஒருவன் கோவலனை வெட்டி வீழ்த்தினான்.
கண்ணகி வழக்குரைக்க, பாண்டியன் நெடுஞ்செழியன் இறந்ததும் முடிசூடிக்கொண்ட அவன் இளவலாகிய வெற்றி வேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைப் பலி கொடுத்தானாம்;
பொற்கொல்லன் ஒருவனது கொடுஞ் செயலால், கோவலன், பாண்டியன், நெடுஞ்செழியன், கோப்பெருந்தேவி, கண்ணகி, கண்ணகியின் தாய், கோவலன் தாய், கவுந்தி, மாதரி ஆகியோர் இறந்து பட்டனர். இதற்கு ஈடாக ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட்டதால் இறந்தவர்கள் வந்துவிட்டார்களா?
எந்தத் தொழிலிலும் மறைவு உண்டு. பொல்கொல்லத் தொழிலில் இது சிறிது கூடுதலாக இருக்கலாம் என மக்கள் சிலம்போ சிலம்பு! 327
ஐயுறுவது உலகியலாயுள்ளது. இதனால் அந்த இனத்தையே பூண்டோடு அழிக்கும் முறையில் ஆயிரவர் பொற்கொல்லரைக் கொன்ற தும் கொடுங்கோலேயாகும். ஒருவனால் ஒரு குலமே கெட்ட பெயர் எடுக்கிறது.
மகாத்மா காந்தியண்ணலை நாதுராம்விநாயக கோட்சே என்னும் பிராமணன் கொன்றதனால், மற்ற பிராமணர்களையும் மக்கள் கோட்சே என்னும் பெயரால் சிறிது காலம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. இதுவும் முறையன்று.
இந்தக் கதைப் பகுதியிலிருந்து தெரிவதாவது:- களவு நூல் இருந்திருக்கிறது - களவு செய்வதற்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது - இதில் கைதேர்ந்தவர்கள் இருந்தனர் - என்னும் செய்தியாகும். இந்தக் காலத்திலும், களவு செய்வதற்காக இளைஞர்கட்குச் சில இடங்களில் பயிற்சி தரப்படுவதாகக் கூறப்படுகிறது.
கள் வருக்குக் கொலை ஒறுப்பு தரின் படிப்படியாக இது குறையலாம். கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று - வெள்வேல் கொற்றம் என்ற பாண்டியன், அக்காலச் சட்டப்படி, கள்வனாகக் கருதப்பட்ட கோவலனைக் கொல்வித்தான். இந்தச் சட்டம் இருந்த அந்தக் காலத்திலேயே களவு நூலும் பயிற்சியும் இருந்தன - பொற்கொல்லன் போன்ற கள்வர்கள் இருந்தனர் - என்றெல்லாம் எண்ணுங்கால் தலை சுற்றுகிறது. தெருக்கூத்தில், இப்பொற் கொல்லனுக்கு 'வஞ்சிப்பத்தன்' என்பது பெயர். -
சிலம்பில் இளங்கோ, கள்வன் ஒருவனைக் குறிப்பிட்டுக் "கல்வியில் பெயர்ந்த கள்வன்" (16:199) எனக் கூறியுள்ளார். தனது களவு நூற்கல்விப் பயிற்சியினால் இடம் விட்டுப் பெயர்ந்து மறைந்து விட்ட கள்வன் - என்பது இதன் கருத்தாகும். களவு நூல் பயிற்சி இல்லாமலே, A-B, C, D. 328 சுந்தர சண்முகனார்
இருபத்தாறு எழுத்துகளையும் தம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டிருக்கும் மேதைகள் சிலர், களவு - கையூட்டு பெறல் - கையாடல் செய்யும்போது, களவு நூல் பயிற்சி பெற்றவர்கள் களவு செய்வது பற்றிச் சொல்லவா வேண்டும்!
ஒற்றைச் சிலம்பு
களவைக் கண்டிக்கும் யான், களவு செய்வதற்குத் துணை புரியும் வழி ஒன்றை அறிமுகப் படுத்துவதைப் பொறுத்தருள வேண்டும். அதாவது:- பொற்கொல்லன் பாண்டியனிடம் இன்னொரு சான்றுக் கருத்தும் கூறியதாக இளங்கோ எழுதியிருக்க வேண்டும் - ஆனால் அவர் விட்டு விட்டார். இணையான - இரட்டையான நகையை விற்பவர்கள் ஒரே நேரத்தில் இரண்டையுமே விற்பது பெரும் பான்மையான வழக்கு. இரண்டுக் காதுக் கம்மல்களுள் ஒன்றை மட்டும் விற்றால், விற்கும் கம்மலுக்கும் மதிப்பு குறைவு - விற்கப் படாமல் வீட்டில் இருக்கும் ஒற்றைக் கம்மலுக்கும் மதிப்பு குறைவு. பின்னொருகால் ஒற்றைக் கம்மலுக்கு இணையாகும்படி ஒரு புதிய கம்மல் வாங்கினால், இரண்டும் தோற்றத்தில் ஒத்திருப்பது அரிது ஈடு தாழ்த்தியாகவே இருக்கும். ஒற்றைக் கம்மலை மட்டும் விற்பவன் எங்கோ திருடிக் கொண்டு வந்துவிட்டான் என ஐயுற இடம் உண்டு. சிலம்புக்கும் இதே கதைதான். அவன் (கோவலன்) எங்கிருந்தோ திருடிக் கொண்டு வந்திருக்கிறான் என்பதற்கு, அவன் ஒற்றைச் சிலம்பு கொண்டு வந்திருப்பதே போதிய சான்றாகும் எனப் பொற்கொல்லன் பாண்டியனிடம் கூறி மேலும் மெய்ப்பிக்கச் செய்திருக்கலாம். அடியேனுக்குத் தோன்றிய இந்தச் சூதுவாதுக் கருத்து இளங்கோவுக்கும் தோன்றியிருப்பின் இன்னும் சிறப்பாயிருக்கும். அடுத்து மேற் செல்லலாம்.எல்லாச் சாதியினரையும் இழிவுபடுத்தும் சொற்றொடர்களும் பழமொழிகளும் கதைகளும் உலகியலில் உண்டு. நான் கைக்கோளர் இனத்தைச் சேர்ந்தவன். எங்கள் இனத்தைக் குறைவு படுத்தும் சொற்கள் உண்டு எங்கள் இனத்தவருள் சிலர் நெசவு நூல் திருடுவதுபோல், பொற்கொல்லர்கள் சிலர் பொன் திருடுகின்றனர். வேறு தொழிலாளர் சிலரும் தம்மால் இயன்றவரையும் ஒரு கை பார்க்கிறார்கள்.
எனவே, எல்லாத் தொழிலாளரும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளுடன் இந்தத் தலைப்பை நிறைவு செய்யலாம்.