சுந்தரன் பாமாலை

சுந்தரன் பாமாலை

தொகு

கவிமணி அவர்கள் பாடியது

தொகு
(வெண்பா)
1. ஆரா அமுதம் அனைய தமிழ்வளர்த்த
பேரா சிரியர் பெருமானைச் - சீராரும்
வஞ்சிமா மன்னர் மதித்தகுண சுந்தரனை
நெஞ்சமே! நித்தம் நினை.
(வேறு)
2. தாலம் புகழும் திருஞான சம்பந் தப்பேர் முனிவாழ்ந்த
காலமதனை ஆராய்ந்து கற்றோர் மெச்சக் கணித்திட்டோன்
ஆலப் புழைமா நகருடைய அறிஞன்பெருமாள் அரும்புதல்வன்,
சீலஞ் சிறந்த சுந்தரனைச் சிந்தை மகிழ்ந்து போற்றுவமே.
3. தில்லைப் பெருமான் அருள்பெற்றுச் செல்வன்நட ராசனைப் பெற்றோன்,
நெல்லை இந்து கலாசாலை நிறுவித் தலைமை தாங்கி நின்றோன்,
சொல்லி லமுதம் கனிந்த சுவை சொட்டச் சொட்டக் கவிதருவோன்
நல்லன் பகதூர் சுந்தரனை நாளும் நாளும் போற்றுவமே.
4. ஊக்கம் குன்றி உரம்குன்றி ஓய்ந்த தமிழர்க் குணர்வூட்டி
ஆக்கம் பெருக, அறிவோங்க, ஆண்மை வளரச்செய்(து), உலகில்
மீக்கொள் புகழைப் பெற்றெழுந்த விறலோன் நமது சுந்தரைனைப்
பாக்கள் புனைந்து மகிழ்ந்துநிதம் பாடி இனிது போற்றுவமே.
5. தேடி வைத்த செல்வமெல்லாம் திரைகொண் டோட வருந்திமுகம்
வாடி மெலிந்த தமிழணங்கு மகிழ்ந்து மகிழ்ந்து கூத்தாட
நாடும் அரிய மனோன்மணிய நாடகத்தைச் செய்தளித்த
நீடு புகழோன் சுந்தரனை நித்தம் நித்தம் போற்றுவமே.
6. வையம் புகழும் திருவஞ்சி வளநா டதனை முடிசூடிச்
செய்ய முறைசெய் தரசாண்ட சேர மன்னர் சரிதமெலாம்
ஐயம் இன்றிச் சிலையிலெழுத்(து) ஆய்ந்து சொன்ன பேரறிஞன்
துய்ய சீலன் சுந்தரன்பேர் சொல்லி நாளும் போற்றுவமே.
7. ஆடும் தில்லை அம்பலவன் அடிகள் மறவா அன்புடையோன்,
பாடித் திருவா சகத்தேனைப் பருகிப் பருகி இன்புறுவோன்,
கோடைப் பதிசுந் தரமுனியைக் குருவாய்க் கொண்ட குணசீலன்
ஈடில் லாத பேரறிஞன், எங்கள் பெரியன் சுந்தரனே.
(வேறு)
8. சித்திரம் வரைந்து காண்போம், சிலைகண்டு தொழுது நிற்போம்
சத்திரம் கட்டி வைப்போம், தருமங்கள் பலவும் செய்வோம்
வித்தகன் சுந்த ரன்பேர் மெய்ம்மையாய் விளங்க வைத்தல்,
இத்தமிழ் நாட்டில் வாழும் எம்மனோர் கடமை யன்றோ?
(வேறு)
9. எம்மொழியும் ஈடாகா திம்மொழிக் கென்றுலகம்
செம்மையுறக் கண்டு தெளிந்திடவே - நம்மினிய
செந்தமிழின் தெய்வச் சிறப்பெல்லாம் யாருரைத்தார்
சுந்தரனைப் போலத் தொகுத்து?
10. சிந்தை கவரும் சிவகாமி நற்சரிதம்
செந்தமிழில் சுந்தரன் செய்ததனால் - முந்தவரு
மூலத்தை வெல்லும் மொழிபெயர்ப்பென்றே எவரும்
சாலப் புகழ்ந்திடவே தான்.
11. ஆசிரியன் பேர்விளங்க ஹார்வி புரம்கண்ட
மாசிலா மாணவர் மாணிக்கம் - பேசுபுகழ்ச்
சுந்தரன் வந்துதித்த தொல்குலம் இந்நிலத்துச்
சந்ததம் வாழ்க, தழைத்து!

அறிஞர் பெருந்தகையும், பேராசிரியருமாகிய ராவ் பகதூர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இகவாழ்வை நீத்து, 1947 ஏப்பிரல் மாதத்தோடு ஐம்பது ஆண்டுகள் நிறைந்தன. இந்நிறைவு நாளின் நினைவுக்குறியாகப் பின்வரும் கவிதைகள் பாடப்பெற்றன.

-கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (நூல்: மலரும் மாலையும்)


பார்க்க:

தொகு
ஆறுமுக நாவலர்
[[ ]]
"https://ta.wikisource.org/w/index.php?title=சுந்தரன்_பாமாலை&oldid=1399059" இலிருந்து மீள்விக்கப்பட்டது