சேதுபதி மன்னர் வரலாறு/இயல் V ரகுநாத கிழவன் சேதுபதி


இயல் - V
ரகுநாத கிழவன் சேதுபதி

மன்னர் திருமலை சேதுபதியை அடுத்துச் சேதுநாட்டின் மன்னர்களான இராஜ சூரிய தேவரும், அதான ரெகுநாத சேதுபதியும் சிறிது காலத்திற்குள் காலமாகி விட்டதால் இந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கிழவன் என்பவர் கி.பி. 1678ல் ரகுநாத கிழவன் சேதுபதி என முடிசூட்டப் பெற்றார். திருமலை ரெகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலம் போன்றே இவரது ஆட்சிக்காலமும் நீடித்தாலும் அவரது சாதனைகளை விஞ்சிச் சாதனைகள் படைக்க இயலவில்லை காரணம் இவருக்கு உட்பகை மிகுதியாகத் தோன்றி நாட்டின் பல பகுதிகளிலும் பல குழப்பங்களை ஏற்படுத்தின. என்றாலும் அவை அனைத்தையும் தமது அறிவார்ந்த ஆற்றலினாலும், போர்த் திறமையாலும் நசுக்கி அழித்தார். இவருக்கு மிகுந்த தொல்லை கொடுத்தவர் சேதுபதி அரச குடும்பத்தினரும் செருவத்தி பாளையத்தின் தலைவருமான திரையத் தேவர் ஆவார்.

கள்ளர் சீமை என்று வழங்கிய சேது நாட்டின் வட பகுதியைத் திருமலை சேதுபதி மன்னர் தமது நாட்டின் ஒரு பகுதியாக அமைத்தார் என்பதை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். தற்பொழுதைய புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் அன்று அறந்தாங்கிப் பகுதி நீங்கலாகக் கள்ளர் சீமை என வழங்கப்பட்டு வந்தது. இங்கு வாழ்ந்த குடிமக்கள் மிகப் பெரும்பாலோர் கள்ளர் என்ற இனத்தவர். இவர்களது தலைவராகக் குளத்துர் ரெகுநாதராய தொண்டைமான் இருந்து வந்தார். பேராற்றல் மிக்க இந்த வீரரையும் இவரது சகோதரர் நமனத் தொண்டைமானையும் இராமநாதபுரத்திற்குச் சேது மன்னர் வரவழைத்து அவர்களுக்கு மிக உயர்ந்த இராணுவப் பதவிகளை வழங்கி இருந்தார் என, இராமநாதபுரம் மேனுவலில் வரையப் பெற்றுள்ளது.

இந்த இரு சகோதரர்களது தங்கையான காதலி நாச்சியார் என்பவரும் சிறந்த வீராங்கனையாக விளங்கியதால் அவரை மன்னர் தமது பட்ட மகிஷியாக ஏற்றுக்கொண்டார். மன்னரைப் போன்று இந்தப் பெண்மணியும் ஆன்மீகப் பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார் தஞ்சைப் பேரரசின் இராஜ இராஜ சோழனது அன்புக் கிழத்தியான உலக மகா தேவியைப் போன்று இராணியார் சில அறக் கொடைகளை வழங்கியிருப்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இராமேஸ்வரம் திருக்கோயிலில் கோயில் உள்துறைக் கட்டளைக்கு திரு உத்திரகோச மங்கையை அடுத்த மேலச் சீத்தை என்ற கிராமத்தை கி.பி. 1693ல் இந்த இராணியார் வழங்கியதைச் செப்பேட்டு வாசகம் ஒன்று தெரிவிக்கின்றது. அடுத்து கி.பி. 1709ல் தனுஷ்கோடியில் அந்தணர்களது அக்கிரஹாரம் அமைவதற்கு தேவகோட்டைப் பகுதி களத்தூர் எனற கிராமத்தை இவர் தானம் வழங்கியது இன்னொரு செப்பேட்டின் மூலம் தெரியவருகிறது. இவைகளைப் போன்றே சேதுப் பயணிகளது பயன்பாட்டிற்கென எம்மண்டலமுங் கொண்டான் என்ற கிராமத்தினைத் தானமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அந்த அன்ன சத்திரம் இன்றும் இராமநாதபுரம் இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி என்ற இடத்தில் செயலற்று இருந்து வருகிறது. அந்தக் கிராமம் இன்று என்மனம் கொண்டான் என்ற பெயரில் வழக்கில் உள்ளது.

திருமெய்யம் பாளையக்காரன் சிவந்து எழுந்த பல்லவராயர் என்பவர், சேது நாட்டின் வடக்கில் அமைந்திருந்த காவல் அரணாகிய திருமெய்யம் கோட்டையின் பொறுப்பில் இருந்தவர். அப்பொழுது நிலவி வந்த குழப்பமான அரசியல் சூழ்நிலையில் சிவந்து எழுந்த பல்லவராயர் தஞ்சை மராட்டியருடன் இரகசியமான தொடர்புகளைக் கொண்டு இருந்தார். இதனையறிந்த சேது மன்னர் விசாரணைக்காக அவரைத் தமது அரசவைக்கு அழைத்த பொழுது அவர் மறுத்ததால் அவரைக் கொன்று ஒழித்துவிட்டு அவரது பணிக்கு ரகுநாத ராய தொண்டைமான் என்ற கள்ளர் சீமைத் தலைவரை நியமனம் செய்தார். இவரது உடன் பிறந்தவரான காதலி நாச்சியார் என்பவரைச் சேது மன்னர் ஏற்கனவே தமது மனைவியாகக் கொண்டிருந்தார். இதனால் மன்னரது நம்பிக்கைக்கு உரியவராக இரகுநாத தொண்டைமான் கருதப்பட்டார். என்றாலும் மன்னரது மைத்துனர் என்ற உறவையும் மீறித் திருமெய்யம் உள்ளிட்ட புதிய புதுக்கோட்டை தன்னரசினை இவர் ஏற்படுத்தினார்.[1] இதனால் மன்னர் மிகுந்த சீற்றம் அடைந்த பொழுதிலும் தொண்டைமானைத் தண்டிக்க முற்படவில்லை. மனைவி காதலி நாச்சியாரின் வேண்டுதல் ஒருபுறமும், தெற்குச் சீமையில் எழுந்த கலவரங்களும் மன்னரை மற்றொரு புறமுமாகத் தடுத்துவிட்டன சேதுநாட்டில் கிறித்துவ சமயப்பணி

அப்பொழுது மதுரை கிறித்தவ சபையைச் சேர்ந்த ஜான் டி பிரிட்டோ என்ற போர்ச்சுகல் நாட்டுப் பாதிரியார் சேது நாட்டின் வடபகுதியில் மதமாற்றம் செய்ய வந்தபொழுது செருவத்திப் பாளையக்காரரும் அந்த பாதிரியாரிடம் ஞானஸ்நானம் பெற்றுக் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்டார். அன்றைய சூழ்நிலையில் பாண்டிய நாட்டு கிறித்துவ சமயத்தை ஏற்ற ஒவ்வொரு குடிமகனும் போர்ச்சுகல் நாட்டு மன்னரது குடிமகன் என்ற தகுதியைப் பெறும் வாய்ப்பு இருந்தது. இதனால் செருவத்தி பாளையக்காரருக்குப் போர்ச்சுகல் நாட்டு மன்னரது உதவி கிடைத்தால்..” இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்த சேது மன்னர் பிரிட்டோ பாதிரியாரைச் சோழ மண்டலத்திற்கு நாடு கடத்தி உத்தரவிட்டார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பிய ஜான் டி பிரிட்டோ பாதிரியார் கி.பி. 1692ல் மீண்டும் சேது நாட்டிற்கு வந்து மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் சமயத்தொண்டை மேற்கொண்டார். இதனால் சினமுற்ற, மன்னர், செருவத்தி பாளையக்காரரது தலையீட்டையும் புறக்கணித்துப் பாதிரியாருக்கு மரண தண்டனை வழங்கினார். இந்தக் கடுமையான நடவடிக்கையினால் சேதுபதி மன்னரது கடைசி எதிரி செருவத்தி பாளையக்காரரும் ஒழித்துக் கட்டப்பட்டார்.

மற்றுமொரு மன்னருக்கு எதிரான கிளர்ச்சி சாயல்குடி பகுதியில் எழுந்தது. சேதுபதி மன்னர் அந்தப் பகுதிக்கு முகாம் சென்ற பொழுது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பாளையக்காரர்கள் குடிமக்களைத் திரட்டி மன்னரைத் தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்திருந்தனர். தற்செயலாக இந்தச் சதியினைக் கேள்வியுற்ற மன்னர் சதிகாரர்களான பாளையக்காரர்களை ஒருவர் பின் ஒருவராகத் தம்மைச் சந்திக்குமாறு செய்து அவர்களைத் தனித்தனியாகக் கொன்று ஒழிக்க ஏற்பாடு செய்தார். இத்தகைய கடுமையான எதிர் நடவடிக்கைகளினால் குழப்பம். கிளர்ச்சி, சதி என்ற சிக்கல் சேது நாட்டு அரசியலிலிருந்து அகன்று விட்டன. இப்பொழுது மன்னர் அமைதியாகப் பல ஆக்கப் பணிகளில் ஈடுபட்டார்.

திருப்பணிகள்

தமது முன்னோர்களைப் போல இராமேஸ்வரம் திருக்கோயிலில் திருப்பணிகள் பலவற்றை மேற்கொண்டார். இராமேஸ்வர திருக்கோயிலில் அன்றாட பூஜை முதலிய கைங்கரியங்களுக்குத் திருவாடானை வட்டம் இராஜசிங்கமங்கலம் ஏரியின் 48 மடைகளில் ஒரு மடை வழியாக வெளிப்படும் வெள்ளப் பெருக்கினால் வேளாண்மை நடைபெறுகின்ற நிலப்பரப்பு முழுமையையும் இந்த மன்னர் கி.பி. 1697ல் தானமாக வழங்கினார். இதன் காரணமாக இந்த மடை பின்னர் இராமனாத மடை எனப் பெயர் பெற்றது. மேலும் இந்தக் கோயிலில் நடைபெறும் ‘'தேவர் கட்டளை” என்ற ‘'உச்சி கால கட்டளை'’ முதலிய நிகழ்ச்சிகளைச் சரிவர நடக்கிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக இந்த மன்னர் இராமேஸ்வரம் சங்கர குருக்கள் மகன் ரகுநாத குருக்களைத் தமது சொந்தப் பிரதிநிதியாக நியமித்து அவருக்குத் திருக்கோயிலில் வழங்கப்பட வேண்டிய மரியாதைகள் முதலியனவற்றை நிர்ணயம் செய்ததை இந்த மன்னரது இன்னொரு செப்பேட்டுச் செய்தி மூலம் தெரியவருகிறது. இந்தக் கோவிலின் நடைமுறைகளைக் கவனிப்பதற்கு என ஆதீனகர்த்தர் ஒருவர் இருந்து வந்தபொழுதிலும் ரெகுநாத குருக்கள் புதிதாக ஏன் நியமனம் செய்யப்பட்டார் என்ற வினா இங்கு எழுகிறது. இந்தத் திருக்கோயிலின் உச்சிக்காலக் கட்டளையை இந்த மன்னரது முன்னோரான முதலாவது சடைக்கத்தேவர் ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆதலால் சேதுபதி மன்னர் இந்தக் கட்டளையை மிகப் புனிதமான செயலாகக் கருதி அதனைச் செம்மையாக நாள்தோறும் தவறாமல் நிறைவேற்றுவதைக் கண்காணிப்பதற்கு ரெகுநாத குருக்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. மற்றும் இந்தத் திருக்கோயிலுக்கு வருகைதருகின்ற பயணிகளுக்கு இராமேஸ்வரத்தில் அன்னசத்திரம் ஒன்றினை நிறுவி அதன் பராமரிப்புக்கு உதவுவதற்காக முதுகளத்துர் வட்டத்தில் உள்ள நல்லுக்குறிச்சி என்ற ஊரினைச் சர்வமானியமாக வழங்கியதை கி.பி.1691ஆம் ஆண்டு செப்பேடு தெரிவிக்கின்றது. அந்தச் சத்திரம் இன்றும் இராமேஸ்வரம் மேலரத வீதியில் நடத்தப்பட்டு வருகிறது.

தமது முன்னவரான திருமலை ரகுநாத சேதுபதி மன்னரைப் போன்று வைணவ திருத்தலமான திருப்புல்லாணித் திருக்கோயிலின் பூஜை திருவிளக்கு. நந்தவனம், ஆடித்திருவிழா போன்ற திருப்பணிகளுக்காக இராமநாதபுரம், முதுகளத்துர், பரமக்குடி வட்டாரங்களில் உள்ள இருபத்தி ஏழு கிராமங்களை இந்த மன்னர் அந்தக் கோயிலுக்குத் தானமாக வழங்கியிருப்பது வியப்பிற்குரிய செய்தியாக உள்ளது.[2] அதுவரை சேதுபதி மன்னர் எவரும் ஒரு கோவிலுக்கு ஒரே நேரத்தில் இவ்வளவு எண்ணிக்கையிலான கிராமங்களைத் தானம் வழங்கியது வரலாற்றில் காணப்படவில்லை. இன்னொரு வைணவத் திருத்தலமான திருக்கோட்டியூரில் எழுந்தருளியுள்ள செளமிய நாராயணப் பெருமாளுக்கும் சில அறக்கொடைகளை வழங்கி உதவினார். அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பாரிவேட்டைத் திருவிழாவிற்கு வழங்கியுள்ள கிராமங்கள் பற்றிய கல்வெட்டு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3] இந்த அரிய நிகழ்ச்சி இந்த சேதுபதி மன்னர் தம்மைச் சார்ந்துள்ள சைவ சமயத்தைப் போன்று வைணவம், சமணம், இஸ்லாம் ஆகிய சமய நிறுவனங்களுக்கு இயல்பான சமயப் பொறையுடன் அறக்கொடைகளை வழங்கியிருப்பதை அவரது செப்பேடுகளும், கல்வெட்டுக்களும் தெரிவிக்கின்றன.

இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வட்டத்தில் உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் தர்மத்திற்காக உத்தார நாட்டு கானுர் கிராமத்தைத் தானமாக வழங்கியிருப்பதை அங்குள்ள கி.பி. 1696ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு தெரிவிக்கின்றது.[4] மேலும் இந்த மன்னர் கீழ்க்கண்ட திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளை வழங்கியிருப்பதைச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. திருச்சுழியல் வட்டம் காரேந்தல் கிராமத்து முஸ்லிம் மக்களது தொழுகைப் பள்ளியைப் பராமரிப்பதற்காக இந்த மன்னர் அந்த ஊரினைப் பள்ளிவாசல் தர்மமாக வழங்கியதை இராமநாதபுரம் சமஸ்தானம் நில மானியக் கணக்கு தெரிவிக்கின்றது.

  1. . சேதுபதி மன்னர்களது ஆட்சியில் குத்தகை நாடு என வழங்கப்பெற்ற அறந்தாங்கிப் பகுதியில் இயங்கி வந்த முருகப்பன் மடம் தர்மத்திற்காகப் பகையணி, பிராந்தணி, திருப்பொற்கோட்டை ஆகிய மூன்று ஊர்களை கி.பி. 1692ல் தானமாக வழங்கினார்.
  2. . சேது நாட்டின் வடக்கே கிழக்குக் கடற்கரைப் பட்டினமான சுந்தரபாண்டியன் பட்டினத்தில் அக்கிரகார தர்மத்திற்காகவும். அந்த ஊரின் தென்மேற்கே உள்ள திருவேகம்பத்து ஏகாம்பர நாதர் சாமி கோயிலுக்கும் ஆக கி.பி. 1695ல் கொந்தாலன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான், சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் ஆகிய ஏழு கிராமங்களைத் தானமாக வழங்கினார்.
  3. . சேது நாட்டின் வடபகுதியில் உள்ள தென்னாலை நாட்டில் அமைந்துள்ள எழுவன் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் எழுவாபுரீஸ்வரர், அகிலாண்ட ஈஸ்வரி ஆகியவர்களின் பூஜை, அபிஷேகம், நைவேத்தியம் ஆகியவைகளுக்காக இடையன்வயல், கள்ளிக்குடி, புதுக்கோட்டை ஆகிய மூன்று கிராமங்களை கி.பி. 1694ல் தானமாக வழங்கினார். 4. இராமநாதபுரத்தை அடுத்த மிகச்சிறந்த சைவத் திருத்தலமாகிய திரு உத்தரகோசமங்கை திருக்கோயிலுக்கு திருஉத்தரகோசமங்கை கிராமத்தையும், அதனை அடுத்துள்ள கிராமங்களையும் கி.பி. 1678ல் தானமாக வழங்கியுள்ளார்.

5. சேதுநாட்டின் சிறந்த பழம்பெரும் துறைமுகமான கீழக்கரையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்திற்கு ஏற்கனவே திருமலை சேதுபதி மன்னர் புல்லந்தை முதலிய கிராமங்களை வழங்கியதை முன்னர் பார்த்தோம்.

இந்தக் கோயிலில் பணியாற்றிய இராமலிங்க குருக்களுக்குத் தகுந்த வருவாய் இல்லாததை உணர்ந்த ரெகுநாத கிழவன் சேதுபதி மன்னர் அந்த ஊரின் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி ஆகின்ற பொருள்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை மகமையாகக் குருக்கள் பெற்றுக் கொள்வதற்கான உரிமை வழங்கியதை கி.பி. 1678 அவரது செப்பேடு தெரிவிக்கின்றது.

இத்தகைய தெய்வீகத் திருப்பணிகளில் முனைந்திருந்த சேதுமன்னர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் தக்க துணையாக வாழ்ந்து வந்தார். மிதிலைப்பட்டி, அழகிய சிற்றம்பலக் கவிராயரை ஆதரித்துச் சிறப்பித்தார். திருமருதூர் என்னும் நயினார் கோவிலில் எழுந்தருளியுள்ள நாகநாத சுவாமி செளந்தரவள்ளி அம்மன் ஆகியோர் மீது அந்தாதி இலக்கியம் ஒன்றை இயற்றிய கார் அடர்ந்த குடி தலமலைகண்ட தேவர் என்ற புலவரைப் பாராட்டிப் பல சிறப்புக்களைச் செய்தார். இன்னும் பல புலவர்கள் இந்த மன்னரால் பொன்னும், பொருளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அறியத்தக்கனவாக இல்லை.

இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் சேதுநாட்டைச் சூழ்ந்திருந்த மதுரை நாயக்க அரசு தஞ்சாவூர் மராட்டிய அரசு ஆகியவைகளுடன் நட்பும், நல்லிணக்கமும் கொண்டு நல்ல அரசியல் உறவுகளை வளர்த்து வந்தார். ஆனால் நாயக்க மன்னரும், மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னருடன் நேர்மையான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்க வில்லை என்பதை வரலாறு தெரிவிக்கின்றது.

கி.பி. 1680ல் திருச்சியிலிருந்த மதுரைச் சொக்கநாத நாயக்கரை, அவர் கோட்டையைவிட்டு உலவுவதற்காக வெளியே சென்றபோது, கோட்டைத் தளபதியான ருஸ்தம்கான் என்பவன் அவரைக் கைது செய்து சிறையிலிட்டான். அடுத்து அவரது உடன்பிறப்பான அலகாத்திரி நாயுடுவை திருச்சி ஆட்சிபீடத்தில் அமரச் செய்து அவரது மேல்பிரதிநிதியாக ருஸ்தம்கான் மதுரை அரசியலை நடத்தி வந்தான். இதனைத் தனது நண்பரும் கன்னிவாடி பாளையக்காரருமான சின்னக் கத்திரி நாயக்கரது மூலம் தெரிந்த சேதுபதி மன்னர், மிகவும் வேதனை அடைந்தார். மேலும் கன்னிவாடி பாளையக்காரர் வேண்டுதலின்படி, இராமநாதபுரம் சீமையிலிருந்த திறமையான போர் வீரர்களது அணியுடன் கன்னிவாடி சென்று அவரையும் அழைத்துக்கொண்டு திருச்சி கோட்டைக்குச் சென்றார். இவர்கள் இருவரும் திட்டமிட்டபடி ருஸ்தம்கானை மரியாதை நிமித்தமாகச் சந்திப்பதுபோல் அவரைச் சந்தித்தபோது, அவர் எதிர்பாராத நிலைமையில் சேதுபதி மன்னரது வீரர்கள் ருஸ்தம்கானைத் தாக்கி ஒழித்தனர். அடுத்துச் சிறையிலிருந்த மன்னர் சொக்கநாத நாயக்கரையும் விடுதலை செய்து மீண்டும் திருச்சியின் ஆட்சிபீடத்தில் அமர்த்தினார். அதனால் மனம் நெகிழ்ந்த சொக்கநாத நாயக்க மன்னர், சேதுபதி மன்னருக்குப் பல பாராட்டுக்களைச் செய்ததுடன் பரராஜகேசரி (எதிரிகளுக்கு சிங்கம் போன்றவர்) என்ற சிறப்பு விருதையும் வழங்கிச் சிறப்பித்தார்.[5] மேலும் சேதுபதிச் சீமை அரசியல் நிர்வாகம் செவ்வனே நடப்பதற்குத் தமது பிரதானிகளில் ஒருவரான குமாரப் பிள்ளையையும் இராமநாதபுரம் கோட்டைக்கு அனுப்பி வைத்தார்.

மதுரை தஞ்சை மன்னர்களது படையெடுப்பு

இந்தப் புதிய பிரதானி சேதுபதி மன்னருக்குத் தக்க உதவிகளைச் செய்தவற்குப் பதிலாக மன்னரது சொந்த நடவடிக்கைகளை மிகவும் உன்னிப்பாக நோட்டமிட்டு வந்தார். நாளடைவில் சேதுபதி மன்னரைத் திடீரெனத் தாக்கிக் கைது செய்து திருச்சிக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்தார். இதனையறிந்த சேதுபதி மன்னர் அந்தப் பிரதானி சிறிதும் சந்தேகப்படாத முறையில் அவரைக் கொன்றழித்துவிடும்படி செய்தார். சொக்கநாத நாயக்கர் இவ்விதம் சேதுபதி மன்னரை ஒழித்துக்கட்டத் தீட்டிய இந்தச் சதித் திட்டம் நிறைவேறவில்லை. ஆனால் அந்த மன்னரையடுத்து மதுரையின் அரசியாக பொறுப்பேற்ற இராணி மங்கம்மாள் எவ்வித காரணமும் இன்றி சேதுநாட்டின் மீது கி.பி. 1702ல் படையெடுப்பை மேற்கொண்டார். இந்த படையெடுப்பை எதிர் கொண்ட சேதுபதி மன்னர் மதுரைப் படைகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கினார். திருமலை நாயக்கர் மன்னர் காலம் முதல் மதுரை நாயக்க மன்னரிடம் மறைந்திருந்த பொறாமையும், பகைமையும் அறிவதற்கு இந்தப் போர் இறுதிக் காலமாக அமைந்தது. இதனைப் போன்றே தஞ்சை மராட்டிய மன்னரும் சேதுபதி மன்னரிடம் நண்பராக நடித்து வந்தவர். கி.பி. 1709 ஆகஸ்டு மாதம் திடீரென ஏற்பட்ட புயல்மழை வெள்ளத்தினால் சேதுநாட்டுக் குடிமக்கள் சொல்லொனாத துன்பங்களினால் அல்லல் பட்டுக்கொண்டிருந்த சமயத்தில் சேதுநாட்டின் வடபகுதி வழியாகச் சேதுநாட்டை ஆக்கிரமிக்கப் பெரும் படை ஒன்றை அனுப்பினார் தஞ்சை மன்னர். அந்தப் படையெடுப்பையும் சேதுபதி மன்னர் நசுக்கி அழித்தார். இவ்விதம் எதிரிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கிய சேதுபதி மன்னருக்கு உறுதுணையாக இருந்தது வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஆவார். ஒருபுறம் தெய்வீகப் பணிகளும், இன்னொரு புறம் தமிழ் வளர்ச்சிப் பணிகளையும் தொடர்ந்த சேதுபதி மன்னர் தமது நாட்டில் வேளாண்மையும், வணிகமும் செழித்து வளருவதற்கு ஆவன செய்த காரணத்தினால் மக்களது பொருளாதார வசதியைக் கொண்டு எதிரிகளை எளிதாகச் சமாளித்து வெற்றிபெற முடிந்தது.

வள்ளல் சீதக்காதியின் தோழமை

மன்னரது சாதனைகளுக்கு மூலபலமாக விளங்கியவர் மன்னரது நண்பரும் வணிக வேந்தருமான கீழக்கரை சீதக்காதி மரைக்காயரே ஆவார். வள்ளுவரது வாக்கின்படி சீதக்காதி மரைக்காயரை நட்பு பாராட்டித் தமது உடன்பிறப்பிலும் மேலாக மன்னர் மதித்து நடந்து வந்தார். கீழ்த்திசை நாடுகள் பலவற்றுக்கும் வணிகம் நிமித்தமாகச் சென்றுவந்த சீதக்காதி மரைக்காயரது அனுபவ முதிர்ச்சியும் நிர்வாகத் திறனும் சேதுபதி மன்னரது சிறந்த ஆட்சிக்குப் பயன்பட்டன என்றால் அது மிகையாகாது.

முதலாவது சடைக்கன் சேதுபதி முதல் சேதுநாட்டின் தலைநகராகப் போகலூர் என்ற கிராமம் இருந்து வந்ததை மாற்றி இராமநாதபுரம் கோட்டையைச் சேது மன்னர்களது தலைநகராக விளங்கும்படி செய்தது சீதக்காதி மரைக்காயர் தான். மேலும் அதுவரை மண்கோட்டையாக இருந்து வந்த இராமநாதபுரம் கோட்டையை மிகச்சிறந்த கற்கோட்டையாக மாற்றியதும், மன்னருக்கு எனக் கோட்டைக்குள் கொலு மண்டபம் ஒன்றையும் அமைத்து அரண்மனை நிர்வாக நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தவரும் சீதக்காதி மரைக்காயரே ஆவார். மேலும் இவரது வணிகக்கப்பல்கள் கீழ்த்திசை நாடுகளான இலங்கை, வங்கம், கடாரம், மலாக்கா, இந்தோனேஷியா, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று பலவகையான வணிகப் பொருள்களைச் சேதுபதிச் சீமைக்குக் கொண்டு வந்து சேர்த்ததுடன் பாண்டியநாட்டுப் முத்துக்கல், சோழநாட்டு தானியங்கள். கைத்தறி ஆடைகள், கேரளத்து மிளகு, இலங்கை நாட்டுக் கொட்டைப்பாக்கு ஆகியவைகளைப் பெருமளவில் அந்த நாடுகளுக்கெல்லாம் அவரது கப்பல்கள் எடுத்துச் சென்றன. சேதுநாட்டின் முக்கிய துறைமுகங்களாக கீழ்க்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டியும் செழித்து விளங்கின. இத்தகைய வியாபாரச் செழுமையில் ஈடுபட்டிருந்த பல ஊர்களைச் சேர்ந்த முஸ்லீம் வணிகர்கள் சேதுமன்னரது குடிகளாக இந்த நாட்டில் நிலைத்து வாழ்ந்தனர். இவர்களைப் போன்றே டச்சுக்கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனியாரும், சேது நாட்டில் அவர்களுக்குத் தேவையான கைத்தறிகள், தானியங்கள், மிளகு ஆகிய பொருள்களைக் கொள்முதல் செய்து வந்ததால் அவர்களது நாணயங்களும் சேது நாட்டின் செலாவணியில் இடம் பெற்றன.

இவ்விதம் சேது நாட்டின் அரசியல் வலிமையையும், வணிகச் செழுமையையும், சமுதாய அமைதியையும் மிக நீண்ட ஆட்சிக்காலமாக முப்பத்திரண்டு ஆண்டுகள் நீடித்த ரெகுநாத கிழவன் சேதுபதி ஆட்சி கி.பி. 1710இல் அவரது மரணத்துடன் முடிவு பெற்றது.


  1. Sathya Natha Ayyar - History of Madurai Nayaks (1928)
  2. Dr.S.M. கமால் - சேதுபதி மன்னர் செப்பேடுகள் (1994)
  3. கமால் S.M. Dr - சேதுபதி மன்னர் கல்வெட்டுக்கள் (2002)
  4. Dr. S.M. கமால் - சேதுபதி மன்னர் கல்வெட்டுகள் (2002)
  5. Sathya Natha Ayyar. A - History of Madurai Nayaks (1928)