சொன்னார்கள்/பக்கம் 101-110

குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமாக இந்திய அரசு செய்து வரும் விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், இரண்டானால் எப்பொழுதும் வேண்டாம் ” எனக் கூறுகிறதல்லவா? இந்த விளம்பரம் சரியல்ல. ஏனெனில் நம் நாட்டில் பலருக்கு ஒன்றுக்கு மேல் அதிக மனைவிகள் உண்டு. ஆகவே இந்த விளம்பரம் “இப்பொழுது வேண்டாம், எந்த மனைவிக்கும் இரண்டுக்கு மேல் வேண்டாம்” என இருப்பதே மிகப் பொருத்தமாகும்.

—எம். சி. டாபர்

(அ. இ. கா. க. உறுப்பினர்)


இந்தியாவில் தற்காலம் எல்லாரையும் துன்புறுத்தும் பாபம் ஒன்று உள்ளதென்றால் அது அடிமைத்தனமேயாகும். ஒவ்வொருவனும் தலைவனாக இருக்க விரும்புகிறானே ஒழிய, கீழ்ப்படிந்து வேலை செய்ய ஒரு மனிதன்கூட விரும்பக்காணோம்.

—சுவாமி விவேகாநந்தர்


நம் நாட்டில் பெரும்பாலும் படிப்பற்றவர்களே வியாபாரம் செய்கின்றனர். மேல் நாடுகளில் நன்கு படித்தபின்னரே வியாபாரத்தில் இறங்குகின்றனர். சமுதாயத்தில் ஒவ்வொருவரும் 12-வயது வரையிலாவது படித்த பிறகே தொழிலில் இறங்க வேண்டும். புத்தி கூர்மையுள்ள இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டும்.

—எ. நாயனர், பி. ஏ. பி. எல். (8 - 7 - 1949)

(அருப்புக்கோட்டையில் நடைபெற்ற சாலியர் மகாஜன சங்க 2வது மாநாட்டில்)


குழந்தைகள் வாழக் குடும்பம் வாழும். இளமை நிலையாமை, வாழ்க்கை நிலையாமை பற்றியெல்லாம் எழுதாமல், வாழ்க்கையில் தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் குழந்தை நூல்கள் எழுத வேண்டும்.

—அன்பு கணபதி (5 - 12 - 1960)

உடல் வலிமையை நம்பிப் போர் செய்தவன் கல்லை எடுத்தவனுக்கு தோற்றான். கல்லை நம்பியவன் வில்லை எடுத்தவனுக்குத் தோற்றான்; வில் வாளுக்குத் தோற்றது; வாள் பீரங்கி துப்பாக்கிக்குத் தோற்றது. வெடிகுண்டு அணு குண்டுக்குத் தோற்றது. இனிமேல் அதுவும் அறிவுக்குத் தோற்றுவிடும்!

—டாக்டர் மு. வரதராசனார் (1962)


குடும்ப வருமானம் போதவில்லையானால், பெண்களும் அறவழியில் பொருளீட்டிக் குடும்ப நிலையைச் சீர்படுத்த முயலுவது இழுக்கல்ல. உத்தியோகத்திற்கு ஏற்ற கல்வி பெறாத பெண்கள் வீட்டில் ஓய்வு நேரங்களில் நூல் நூற்றல்’ தையல் வேலை செய்தல் போன்ற தூய தொழில்களைச் செய்து பொருள் தேடலாம்.

—திருமதி மரகதவல்லி சிவபூஷணம் B.A., B.T., (26-12-1953)

(சைவை மங்கையர் மாநாட்டு தலைமையுரையில்)

நமது தேசத்தில்-பொய்யான காரியங்களில் நம்பிக்கைக் கொண்டு மயங்கி ஏராளமான பணங்களைச் செலவழிக்கின்றனர். அவசியமான காரியங்களுக்கு எவ்வளவோ பணம் தேவையிருக்கப் பொய்யானவற்றிற்குப் பெரும் பணம் செலவு செய்யப்படுவதை எண்ணும் பொழுது வருத்தம் உண்டாகிறது. இப்பணம் நம் நாட்டிலுள்ள எல்லா சாதியாருக்கும் பயன்படுகிற தென்றாலும் பாதக மில்லை. குறிப்பிட்ட வகுப்பாருக்கே இப்பணம் செல்லுகின்றது. இதுவரையில் லாபமடைந்து வந்தவர்கட்கு என் பேரில் வருத்தமுண்டாகலாம். நீங்கள் நீதியை உணர்ந்து அதன்படி செய்யுங்கள். வெகு காலமாக திதி கொடுத்தல் என்னும் வழக்கத்தை நம்மவர்கள் கையாண்டு வருகின்றனர். இவ்வாறு செய்ய வேண்டுமென்று நம்தமிழ் நாற்களில் காணப்படவில்லை.

—வ. உ. சி. (3 - 3 - 1928)

(காரைக்குடியில்)

எனக்குப் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை கிடையாது. பதவி வகிப்பது எனக்குப் பெருஞ்சுமையாகவே இருக்கிறது. இந்த நெருக்கடி நேரத்தில் நான் தொடர்ந்து பதவியில் இருப்பதின்மூலம் நாட்டுக்குச் சிறிது சேவை செய்ய முடியும் என நினைக்கின்றேன்.

—நேரு (12 - 6 - 1963)


சுயேட்சை வேட்பாளர்கள் என்று கூறப்படுகிறவர்கள், அரசியல் கட்சிகளிலிருந்து மட்டுமல்லாமல், தங்கள் நாட்டிலிருந்தும், அதன் கொள்கைகளில் இருந்தும் ஒதுங்கி நிற்கின்றவர்கள்.

—இந்திரா காந்தி (8- 2 - 1969)


இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடிக்க வேண்டிய படங்களில் எல்லாம் நடித்துவிட்டு, நான் கல்கத்தாவுக்குச் சென்று மடத்தில் சேரப் போகிறேன்.

—நடிகை சரோஜாதேவி (8 - 3 -1962)


வைத்தியன் கட்டளைப்படி ஜீவிக்கும் வியாதியஸ்தன் எந்த நிலைமையிலிருப்பானோ அதே நிலையில் நாமுமிருக்கிரறோம். பூலோகத்தில் சுதந்திரத்தை விசேஷமாய் விரும்பும் தேசங்களில் ஒன்றின் ஆதீனத்தின் கீழ் பரீக்ஷை நிலையிலிருந்து வருகிறோம். இதுவரைக்கும் பரீக்ஷை செய்தது போதும். எங்கள் மூக்காங்கயிற்றை எடுத்து விடலாம். குழந்தைப் பருவத்தைத் தாண்டி, நாங்கள் பூரணவயதையடைந்து விட்டதால் எங்களுக்குச் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஒரு பாகத்தையாவது நாங்களே நடத்திக் கொள்ளும்படி விடவேண்டும் என்று நாம் இப்பொழுது கேட்கிறோம்.

—சுரேந்திர நாத் பானர்ஜி

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், மனைவியிடம் யோசனை கேட்க கணவன் ஓடத்தான் வேண்டியிருக்கிறது.

—வி. வி. கிரி (29 - 6 - 1960)


எந்த மனிதனும் தன் கையால் செய்யக்கூடியது கொஞ்சமே ஆனால், அவன் தன் வருவாய் மூலமாக பிறர் மனதில் புது எண்ணங்களைத் தோன்றச் செய்யலாம். விஞ்ஞான உணர்ச்சியையும் கிளறிவிட முடியும். இதுபோல் செய்தால் அவர்களும் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடுவர்

—டாக்டர் வில் (மேயோ சகோதரர்கள்)

நான் எப்போதுமே திறந்த மனம் படைத்தவள்.கள்ளம் கபடம் எதுவும் என்னிடம் கிடையாது. என் மனதில் பட்டதை அப்படியே பேசுவேன். அதுபோல் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவேன். அதற்காக என்னை நானே வெகுளி பெண் என்று எப்படி சொல்ல முடியும்? மற்றவர்கள் அதை சொல்ல வேண்டும்.

—வெண்ணிற ஆடை நிர்மலா


விலங்குகளிடம் அன்பாயிரு என்றால், புலியை முத்தமிடு என்று அர்த்தமல்ல. அதுபோல, ஓர் இலக்கிய இதழ் என்றாலே. அவ்விதழில்-செத்துப்போன நூற்றாண்டுகளின் சிந்தனைகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்பதல்ல. இன்றைய உலகின் சத்தங்களும், இருட்டறை முத்தங்களும் அதில் இடம் பெறலாம்.

—கவிஞர் சுரதா


எனது இரு மகன்களுக்கும் திருமணம் நடந்தது. அதில் தீப அலங்காரங்கள் கிடையாது. எந்தவிதமான வரதட்சணைகளும் இல்லை. நாங்கள் பரிசுகள் வாங்கிக் கொள்ளவில்லை. மற்றும் பல ஆடம்பரங்கள் இல்லை. இத்தனையும் பிரசுரமாகியிருக்கின்றன. இதையெல்லாம் எத்தனை பேர்கள்தான் பின்பற்றினார்களோ தெரியாது.

—இந்திரா காந்தி (19-2-1976)

விஞ்ஞானத்தையும், வரலாற்று நூலையும் பிரித்துப் பேசக் கூடாது. தனி மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இந்த இரண்டையும் கற்க வேண்டும்.

—நேரு (11-10-1962)


இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் உரிமையை வழங்கி, அவ்வுரிமையை இந்துக்களுக்கும் மகம்மதியர்களுக்கும் இல்லை என்பதால் ஏற்படும் பாரபட்சமான விதிகள், இங்கிலாந்து இந்தியாவிற்குச் செய்த வாக்குறுதிகளையும் பிரதிக்ஞைகனையும் மீறி நடக்கின்றனவென்பதைப் பற்றியும், அம்மாதிரி நடப்பதால் நமக்கு ஏற்படும் அவமானத்தைக் குறித்தும் அநீதியைக் குறித்தும் நான் பேசக்கூடும். எல்லாருக்கும் ஆயுதத்தை வைத்துக் கொள்ளும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. இராஜ பக்தியிலும்படிப்பிலும் பிரசித்தி பெற்ற படிப்பாளிகளுக்குத் தக்க நிபந்தனைகளுடனும் விதிகளுக்கடங்கியும் கொடுக்கப்பட வேண்டுமென்றே நான் கூறுகிறேன்.

—ராஜாராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்)

நான் அனேக கூட்டங்களுக்குத் தலைமை வகித்திருந்தாலும், இந்த மாதிரி மத சம்பந்தமான கூட்டங்களுக்கு நான் தலைமை வகித்ததேயில்லை. அன்றியும் எந்த மதத்தைப் பற்றியும் நான் விசேஷமாக ஏதும் தெரிந்தவனல்ல என்பதோடு, இஸ்லாம் மதத்தைப் பற்றி நான் ஒன்றுமே அறிந்தவனல்ல. நான் பொதுவாகவே எல்லா மதங்களையும் பெருமையாய் நினைப்பதுடன் எல்லா மதப் பெரியார்களிடத்திலும் நான் மரியாதையும் பக்தியும் காட்டுகின்றவன்.

திவான் பகதூர் C. S. இரத்தின சபாபதி முதலியார்

(1931-ல் கோவையில் நடைபெற்ற நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவில்)

நண்பர்களே! நான் சொல்ல விரும்பிய விஷயமெல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டேன். நமது மூதாதையர் மகத்தான காரியங்களைச் செய்திருக்கின்றார்கள். நாம் அவர்கள் செய்க காரியங்களை விட இன்னும் மேலான காரியங்களைச் செய்தல் வேண்டும். நீங்கள் வில்லிலிருந்து செல்லும் அம்புபோல் இருங்கள். பணையின் மேல் விழும் சம்மட்டிபோல் இருங்கள். தனக்கு இலக்காயுள்ள பொருளை பீறச் செய்கிற பட்டாக் கக்தியைப்போல் இருங்கள். குறி தப்பினால் அம்பு முணுமுணுப்பதில்லை. விழவேண்டிய இடத்தில் விழாவிட்டால் சம்மட்டி தன்னை வெறுத்துக் கொள்வதில்லை. பட்டாக்கத்தியானது அதனைச்சுழற்றுவோன் கையில் ஒடிந்துபோய் விட்டால் துக்கப்படுவதில்லை.இருந்தும் இவற்றைப் பயன்படுத்துவதனாலேயே ஒருவகை மகிழ்ச்சி ஏற்படுகின்றது. அவற்றை நீக்கி வைப்பதனாலும் அதே மகிழ்ச்சி உண்டாகின்றது.

—சிவானந்த சுவாமிகள் (1-4-1926)

(கல்கத்தாவுக்கு அருகேயுள்ள பேலூரில் நடைபெற்ற இராமகிருஷ்ண சங்கத்தின் முதல் மாநாட்டுத் தலைமையுரையில்.)

நான் சீட்டாடமாட்டேன். ஆனல் சீட்டாடுகிறவர்களை வேடிக்கை பார்ப்பதில் எனக்கு விருப்பம் அதிகம். நண்பர்களுக்காக எதையும் கொடுக்கவிடத் தயாராக இருப்பவர்கள்கூட, சீட்டாட்டத்தில், நண்பர்கள் சிறு பிழை செய்தாலும் சகிக்கமாட்டார்கள்.

—சி. சுப்பிரமணியம் (18-9-1952)


ஜனநாயகத்தின் முழுப்பலனையும், மக்கள் அனுபவிக்கவேண்டுமானல், நீதியும், நிர்வாகமும் தமிழில் செயல்பட வேண்டும்.

டாக்டர் ப. நடராசன், எம். எல். ஏ. (8-3-1962)

வேறு வழி எதுவும் இல்லை என்ற நிலையில்தான் “ராணுவ ஆட்சி” என்ற பிரச்னை தோன்ற முடியும். ஜனதிபதியோ அல்லது பிரதம மந்திரியோ முடிவு செய்து ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்துவிட முடியாது. மக்களே விரும்பி அவர்களை தக்க நடவடிக்கை எடுத்தால்தான் ராணுவ ஆட்சி வரமுடியும்.

—பி. பி. குமாரமங்கலம்

(இந்தியாவின் முன்னாள் தளபதி)


ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பு, பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் அடிப்படையிலான அரசியல் அமைப்பு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதார அமைப்பு ஆகிய மூன்றும் நீடிக்கும் வரையில் எந்த அரசாங்கத்தினாலும் ஊழலை ஒழிக்கமுடியாது. நமது வேதங்களும் உபநிஷத்துக்களும்கூட ‘சொத்து சேர்க்கக் கூடாது’ என்று கூறுகின்றன. ஆனல் உண்மையில் யார்தான் அதனைப் பின்பற்றுகிறார்கள்?

—தேவராஜ் அர்ஸ் (23-3-1975)

(கர்நாடக முதல்வர்)


தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான்.

—தாரகேஸ்வரி சின்கா (18-9-1960)

(மத்திய துணையமைச்சர்)


நான் வேதத்தைப் படித்திருக்கிறேன். அதில் நமது ஞானத்தை விருத்தியாக்குதற்கு ஒன்றுமே சொல்லவில்லை. மற்றும், நாம் தெரிந்து கொள்ளுதற்குரிய சிலாக்கியமான விஷயங்கள் ஒன்றுமேயில்லை என்றும் நான் தெரிந்து கொண்டேன்.

—சர். கே. வி. ரெட்டி (15-4-1927)

(கோவையில், மூன்றாவது அகில இந்திய நாயுடுமார் மாநாட்டில் பேசியது)

போதனா முறையென்பது சிறுவர்களுக்கு மட்டும் தானென்பது பழைய காலத்துச் சம்பிரதாயமாகும். பள்ளிக் கூடங்களில் வெகுவாய்ப் படித்தவர்களில் பெரும்பாலோர் நமது நாட்டில் தமது பிற்கால வாழ்வில் தமது கல்வியை அறவே மறந்துவிடுகிறார்களென்பது உண்மை. வயது வந்தவர்களுக்கும் கல்வியறிவூட்ட வேண்டியது கல்வி முறையின் முக்கிய லட்சியங்களில் ஒன்றாகப் பாவிக்கப்பட வேண்டும். நமது நாட்டில் கோடிக்காக்கான மக்கள் எழுத்து வாசனையறியாமல் இருப்பதற்குக் காரணம், வயது வந்தவர்களுக்கும் கல்வி கொடுக்கவேண்டும் என்ற கடமையை நாம் உணராததேயாகும். சில தொழிலாளர்களுக்கும், திண்டப்படாதார்களுக்கும் சிற்சில விடங்களில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால் பெருவாரியான மக்களுக்கு சினிமா, பேசும் படக்காட்சி ஆகாசவாணி முதலிய நவீன சாதனங்களின் மூலம் கல்வி கற்பிக்க நாம் தீவிரமாக முன் வரவேண்டும்.

—S இராமநாதன் M.A.,B.L.,

(1931-ல்ஈரோட்டில் நடைபெற்ற மகாஜன உயர்நிலைப் பள்ளி மாணவர் இலக்கியக் கூட்டத்தில்.)

நான் முதன் முதலிலே கோயம்புத்தூர் மில் ஒன்றிலே 3 அணா கூலிக்கு பங்கா இழுக்கிற வேலைக்குத் தான் போனேன்.

— சின்னப்பத் தேவர் (23-12-1971))


மன நிறைவுக்கு ஒரு வழி. இப்பொழுது உம்மிடம் இருப்பவை எல்லாவற்றையும் நீர் இழந்து விட்டதாக நினைத்துக் கொள்ளும். அவை மீண்டும் கிடைத்து விட்டதாக நினைத்துப் பாரும். உமக்கு உண்மையாகவே மகிழ்ச்சி ஏற்படும்.

— லியோனாட் எம். லியோனாட்


அரசியல் வாதிகளைவிடக் கல்வி நிபுணர்களே அதிகப்படியான பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.

— நெ. து. சுந்தரவடிவேலு (1-12-1960)

வெற்றி என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன்.

—ஜார்ஜ் பெர்னார்ட்ஷா

சாதாரணமாக நம் வீட்டுக்குச் சும்மா வந்து போகிறவர்களுக்கும் கூட காபி தேயிலை கொடுத்து உபசரிப்பதே இக்காலத்துக்குரிய வழக்கமாய் விட்டது. தேனீர்ப்பான விருந்துகள் (டீ பார்ட்டிகள்) மூலைக்கு மூலை நாள்தோறும் நடைபெறும் காலமாயிருக்கிறது. அரசப் பிரதிநிதி பதவியிலிருந்து கரிசன் காலம் முதற்கொண்டு இந்தியாவில் தேயிலை விருத்தியாகிக் கொண்டே வருகிறது. அவர்தம் தூண்டுதலும், முயற்சியும் சேர்ந்து வீடுதோறும் தேனீர்க் குடிப்பது அதிகமாகிவிட்டது. நோயாளிகளுக்கும், கூடக் காப்பியையும், தேனீரையும் நல்ல தாது விருத்திக்குரிய ஆகாரம் என்று எண்ணிக் கொண்டு, குடிக்கும்படியான காலமும் வந்துவிட்டது. ஆனாலும், காப்பி, தேனிர், கொக்கோ முதலிய பானங்கள் எல்லாம் உடல் நலத்தைக் கெடுப்பவை என்று தீர்மானமாய்ச் சொல்லுவேன்.

— காந்தி (1927)


நிரந்தரமாய் அமைக்கப் பெற்றிருக்கும் சேனையின் அபாரமான செலவினால் இந்தியா உண்மையில் தரித்திர தசையை அடைந்திருக்கிறது. விரைவிலோ, நாட்கழித்தோ இப்பெரிய செலவு தேசத்தையோ அரசாங்கத்தையோ அழித்துவிடும். இப்பொழுது வாலண்டியர்களைச் சேர்த்து யுத்தப் பயிற்சி கொடுத்தால், தாங்க முடியாத இராணுவச் செலவைக் குறைப்பதுடன், தேச பாதுகாப்பில் தற்போதைய பலத்தைவிட அதிகமாகவும் செய்யக்கூடும்.

—ராஜா ராம்பல் சிங்கு

(1886-ல் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரஸ் மாநாட்டில்.)

சின்னஞ்சிறு வயதிலேயே நான் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படிக்கையிலே எனது வாத்தியார் எனக்கு வெகு அருமையான செய்திகளைக் கற்றுக் கொடுத்தார். அவைகளை ஒரு நாளும் மறக்காமல் நினைவிலே வைத்துக் கொண்டே இருப்பேன். நானும் என்னேடு வாசித்த என் இணைப் பிள்ளைகளும் வாத்தியாரைப் போன்ற அறிவாளி உலகத்திலேயே இல்லை என்று மிகப் பெருமையுடன் பேசிக் கொள்ளுவோம். எங்கள் வாத்தியார் கையில் பிரம்பு இருந்தாலும் அவர் எங்களை அடித்ததில்லை.

— கோவை கிழார் (1951)


எந்தக் காலத்தில், எந்த நாளில், எந்த நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட வகுப்பார்களை மற்றையோரெல்லாம் வணங்கி மரியாதை செய்ய வேண்டுமென்று கட்டு திட்டம் செய்யப்பட்டதோ, அதே காலத்தில், அதே நாளில், அதே நிமிஷத்தில் இந்த நாட்டின் வீழ்ச்சியும், இந்திய நாட்டின் அடிமைத்தனமும் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு விட்டது என்று நான் அபிப்பிராயப் படுகிறேன்.

— சர். கே. வி. ரெட்டி (15-4-1927)

(கோவையில், மூன்றாவது அகில இந்திய தாயுடுமார் மாநாட்டில் பேசியது.)

என்னைக் கவி அரங்க நிகழ்ச்சிகளுக்கோ, இலக்கியக் கூட்டங்களுக்கோ இசை நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திரையுலக விழாக்களுக்கோ தலைமை வகிக்கவோ, துவக்கி வைக்கவோ அழைக்கும்போது எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்வேன். பணத்துக்குத் துதி பாடும் மக்களின் அறியாமையையும் முகஸ்துதியையும் எண்ணிப் பார்ப்பேன். உருதுக் கவிதைகளும், இசையும் எனக்கு உயிர். இதைப் பயன்படுத்திக் கொண்டு இதைப் போன்ற நிகழ்ச்சிகளுக்கு என்னை அழைக்கிறார்கள்.

— ஹாஜி மஸ்தான் (1975)

(கடத்தல்காரர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=சொன்னார்கள்/பக்கம்_101-110&oldid=1009833" இலிருந்து மீள்விக்கப்பட்டது