சோழர் வரலாறு/சோழர் எழுச்சி

2. சோழர் எழுச்சி
விசயாலய சோழன் - ஆதித்த சோழன் (கி.பி. 850 - 970)

திருப்புறம்பியப் போர்: விசயாலய சோழன் கி.பி. 850-இல் உறையூர் அரசு கட்டில் ஏறினான். அவன் தன் முன்னோரைப் போலப் பல்லவர்க்கு அடங்கியவனாகவே இருந்தான். அக்காலத்தில் பல்லவப் பேரரசனான மூன்றாம் நந்திவர்மன் தன் நாட்டைச் சிறிது சிறிதாக வென்று தெள்ளாறுவரை வந்துவிட்ட பாண்டியன் வரகுணனையும் சோழரையும் பிறரையும் தெள்ளாற்றுப் போரில் முற்றும் முறியடித்தான். இப்போரில் விசயாலயன் அல்லது அவனுக்கு முற்பட்ட சோழ மன்னன் பாண்டியனோடு சேர்ந்திருந்தனன். பிறகு பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் குடமூக்கில் போர் நடந்தது. அப்போரில் முதலாம் வரகுணன் மகனான ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் வெற்றிபெற்றான். பிறகு அரிசிலாற்றங் கரையில் நந்திவர்மன் மகனான நிருபதுங்க பல்லவன் ஸ்ரீமாறன் படைகளை வெற்றி கொண்டான். ஸ்ரீமாறனுக்குப் பின் கி.பி. 862-இல் அவன் மகனான இரண்டாம் வரகுணன் பல்லவர் மீது போர் தொடுத்தான். அப்பொழுது அபராசிதவர்மன் என்னும் பல்லவன், தன் பாட்டனான கங்க அரசன் பிருதிவீபதியோடு வந்து கடும்போர் செய்தான். அப்போரில் விசயாலயன் பல்லவன் பக்கமாக நின்று போரிட்டான். தஞ்சையை ஆண்ட முத்தரையர் (களப்பிரர் மரபினர்) பாண்டியன் பக்கம் நின்று போரிட்டனர். போரில் பிருதிவீபதி தோற்றான்; ஆயினும், பாண்டியன் தோற்றோடினான். அபராசிதன் வெற்றி பெற்றான். அதனால், அவனுடன் சேர்ந்திருந்த விசயாலய சோழன் முத்தரையருடைய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். திருப்புறம்பியப் போரில் பெரும் பங்கு கொண்ட விசயாலயன் மகனான ஆதித்த சோழன் சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரியவன் ஆனான். திருப்புறம்பியப் போர் ஏறக்குறைய கி.பி. 880-இல் நடந்ததென்னலாம்.[1]

இப்போரின் சிறப்பு: இப்போர் தமிழக வரலாற்றில் பெரிய மாறுதல்களைச் செய்து விட்டது. இப்போரில் தோற்ற பாண்டிய நாடு மீண்டும் உயிர்ச்சி பெற வழி இல்லாது போயிற்று. இதற்கு முன் தெள்ளாறு, அரசிலாறு முதலிய இடங்களில் ஏற்பட்ட படு தோல்விகளும் இத்தோல்வியுடன் ஒன்றுபடப் பாண்டியர் பலரது மதிப்பும் குறைந்தன. இவை ஒன்று சேர்ந்து பாண்டியர் பேரரசின் உயிர் நாடியைச் சிதறடித்துவிட்டது. பல்லவர் நிலைமை என்ன? ஒயாது மேலைச் சாளுக்கியருடனும் பிறகு இராட்டிரகூடருடனும் வடக்கில் போர்கள் நடந்த வண்ணம் இருந்தமையாலும், தெற்கில் முதலாம் வரகுணன் காலமுதல் மூன்று தலைமுறை ஒயாப் போர்கள் நடந்து வந்தமையாலும் பல்லவர் பேரரசு ஆட்டங்கொண்டது. பல்லவப் பேரரசின் வடபகுதியை இராட்டிரகூடர் கைப்பற்றிக் கொண்டனர், தென் பகுதியை, புதிதாக எழுச்சிபெற்ற ஆதித்த சோழன் பையப்பையக் கவரலானான். இது நிற்க.

விசயாலய சோழன் (கி.பி. 850 - 880); இவனே, இந்தியப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதத்தக்க பிற்காலச் சோழர் பேரரசைத் தோற்றுவித்த முதல்வன். இவன் முத்தரையரை வென்று தஞ்சாவூரைக் கைக்கொண்டான்; அங்குத் துர்க்கைக்குக் கோவில் கட்டினான் என்று திருவாலங் காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன.[2] (1) திருச்சிராப் பள்ளிக் கல்வெட்டொன்று ‘விசயாலயன் தன் பெயர்க் கொண்ட விசயாலயச் சதுர்வேதி மங்கலம்’ என்னும் சிற்றுரைப் பிரம்மதேயமாக விட்டான்” என்று கூறுகிறது. வடஆர்க்காடு கோட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துரரில் இவனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இருந்ததென்பது பிற்கால விக்கிரம சோழன் கல்வெட்டால் தெரியவருகிறது.[3] அதனால், இவனது ஆட்சி தொண்டை நாட்டின் ஒரு பகுதி வரை பரவியிருந்தது எனலாம். ஆயினும் இவ்வரசன் பல்லவ வேந்தனுக்கு அடங்கி இருந்தவன்; எனினும், தன் ஆட்சியாண்டைக் குறிக்கும் உரிமை பெற்றிருந்தான்.

ஆதித்த சோழன் (கி.பி. 880 - 907) . இவனது 24ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டுக் கிடைத்திருப்பதால், இவன் 24 ஆண்டுகள் அரசாண்டான் என உறுதியாக உரைக்  கலாம். இவன் முன்சொன்ன திருப்புறம்பியப் போரினால் மேலுக்கு வந்தவன். இவன் அபராசிதவர்மனைப் போரில் முறியடித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்’ என்று திரு ஆலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. “பெரிய யானைமீது இருந்த அபராசிதவர்மன்மீது ஆதித்தசோழன் பாய்ந்து அவனைக் கொன்றான்; கோதண்டராமன் என்னும் பெயர் பெற்றான்” என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது.[4] இவற்றால், ஆதித்த சோழன் அபராசிதனைத் தருணம் பார்த்து வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. இந்தக் காலம் ஏறக் குறைய கி.பி. 890 எனக் கொள்ளலாம்.

ஆதித்தனும் கங்க அரசனும்: கங்க அரசனான பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் ஆதித்தனுடன் இருந்து போரிட்டு இறந்தவன். அவன் மகனான பிருதிவீபதியார் என்பவன் ஆதித்த சோழனது உயர்வை ஒப்புக் கொண்டு நண்பன் ஆனான். அவன் இராசகேசரி ஆதித்த சோழனது 24ஆம் ஆட்சி ஆண்டில் தக்கோலப் பெருமானுக்கு வெள்ளிக் கெண்டி ஒன்றை அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டில், ஆதித்த சோழன் உயர்வைக் குறித்துள்ளான்.[5]

ஆதித்தனும் பல்லவரும்: ஆதித்தன் மனைவியின் தாயார் ‘காடுபட்டிகள்’ என்று ஒரு கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் சோழ மாதேவி பல்லவர் மரபினர் என்பது நன்கு தெரிகிறது.[6] இடைக்காலப் பல்லவ அரசனான கந்தசிஷ்யன் திருக்கழுக்குன்றத்துக் கடவுளுக்கு அளித்த தேவதானத்தை ஆதித்த சோழன் புதுப்பித்தான்.[7] மூன்றாம் நந்திவர்மன் மனைவியாகிய அடிகள் கண்டன் மாறம்பாவையார் என்பவள் நியமம் கோவிலுக்குச் சில தானங்கள் செய்துள்ளாள்.அவளே அங்குள்ள பிடாரிகோவிலுக்கு ஆதித்தனது 18-ஆம் ஆட்சியாண்டில் தானம் செய்துள்ளாள்.[8] ஆதித்தனும் கொங்குநாடும்: ஆதித்த சோழன் தஞ்சாவூரில் முடிசூடிக் கொண்டதும் கொங்குநாடு சென்று அதனை வென்றான். அதனைத்தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்; ‘தழைக்காடு’ என்னும் நகரத்தையும் கைப் பற்றினான்’ என்று ‘கொங்குதேசராசாக்கள்’ என்னும் நூல் நுவல்கிறது, ஆதித்தன் மகனான முதலாம் பராந்தகன் காலத்துப் பட்டயங்கள் கொங்குநாட்டில் காணப்படலாலும், தான் அந்நாட்டை வென்றதாகப் பராந்தகன் தன் பட்டயங்களிற் கூறாமையாலும், ஆதித்தனே கொங்குநாட்டைவென்றனன் என்பது தெரிகிறது. இஃதன்றி,‘ஆதித்தன் காவிரியின் கரை முழுவதும் (சகஸ்யமலை முதல் கடல்வரை) சிவன் கோவில்களைக் கட்டினான்’ என்று அன்பில் பட்டயம் கூறுதலும் இம்முடிவுக்கு அரண் செய்வதாகும்.

ஆதித்தனும் சேரனும்: ஆதித்தன் காலத்துச் சேரவேந்தன் தாணுரவி என்பவன்.அவன் ஆதித்தனுக்கு நண்பன் என்பதற்கு திருநெய்த்தானத்துக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது. அதில், ‘சேரனும்,ஆதித்தனும் கடம்ப மாதேவி என்பாள் கணவனான விக்கி அண்ணன் என்பானுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை முதலியன கொள்ளும் உரிமை அளித்தனர்’ என்பது கூறப்பட்டுள்ளது; ‘செம்பியன் தமிழவேள்’ என்ற பட்டமும் தரப்பட்டது.[9] இதனால் இவ்வீரன் சோழனும் சேரனும் விரும்பத்தக்க முறையில் ஏதோ வீரச்செயல்கள் செய்தனனாதல் வேண்டும். ஆதித்தன் மகனாக பராந்தகன் சேரன் மகளை மணந்தவன் தாணுரவி என்பவன் கோக்கந்தன் ரவி என்பவன் என்று ஆராய்ச்சி யாளர் கூறுவர். கொங்கு நாட்டைப் பாண்டிய அரசனிட மிருந்து சேரன் படைத் தலைவனான விக்கி அண்ணன் சோழனுக்காகக் கைப்பற்றி இருத்தல் வேண்டும். அதனாற்றான் சோழனும் சேரனும் சேர்ந்து அவனுக்குச் சிறப்புச்செய்தனர் என்பது தெரிகிறது.[10]

ஆதித்தேசுவரம்: ஆதித்தன் தொண்டை நாட்டில் காளத்திக்கு அருகில் இறந்தான். அவன் மகனான பராந்தகன் அவன் இறந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினான். அது ‘கோதண்ட ராமேச்சரம்’ எனவும், ‘ஆதித்தேச்சரம்’ எனவும் வழங்கியது. விழாக் காலங்களில் ஆயிரம் பிராமணர்க்கு அன்னமிட ஏற்பாடு செய்தான்.[11]

சோழர் சமய நிலை: சோழர் வழிவழியாகச் சைவராகவே இருந்தவர் ஆவர். விசயாலயன் மரபினரும் அங்ஙனமே இருந்தனர். விசயாலயன் தஞ்சாவூரில் துர்க்கைக்குக் கோவில் கட்டினான். அவன் மகனான ஆதித்தன் பல சிவன் கோவில்களைக் கட்டினான். அவன் மகனான முதற் பராந்தகன் முதலில் தந்தைக்கே கோவில் கட்டிய சிறந்த மகனானான். இப்பிற்காலச் சோழ ராற்றான் சமயாசிரியர் போற்றி வளர்த்த சைவ சமயம் தமிழ்நாடு முழுவதும் - ஏன்? கோதாவரி வரையும் பரவி இருக்கும் பெருமை பெற்றது.


  1. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom,’ pp.76-71.
  2. S.I.I. Vol. 3. No 205
  3. 164 of 1915.
  4. 675 of 1909
  5. 5 of 1897
  6. 167 of 1894
  7. 161 of 1928
  8. 13 of 1899
  9. S.I.I. vol 3. part 3, 221; 286 of 1911.
  10. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol, 1.pp. 138-139.
  11. 286 of 1906