3அப்பா! சூரிய உஷ்ணத்தைக் கொண்டே இயந்திரங்களை ஓட்டலாம் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! இப்போது இயந்திரங்களை ஓட்டுவதற்கு நிலக்கரியேனும் மண்ணெண்ணெயேனும் மின்சாரமேனும் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்றுமில்லாமல் ஓட்டக்கூடிய இயந்திரங்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவற்றை "சூரிய மோட்டார்" என்று கூறுவார்கள்.

நீராவி இயந்திரத்தில் நிலக்கரியை எரித்து நீராவியை உண்டாக்குகிறார்கள். நிலக்கரியை எரியாமல் சூரிய உஷ்ணத்தைக் கொண்டே நீரைக் கொதிக்கவைக்கும் முறையை ஜான் எரிக்ஸன் என்னும் அமெரிக்க எஞ்சினியர் சென்ற நூற்றாண்டில் கண்டு பிடித்தார். அவருடைய எஞ்சின் நான்கு குதிரைகள் செய்யும் வேலையைச் செய்யக்கூடியதாக இருந்தது. அதற்குப்பின் 1901-ம் ஆண்டில் செய்த எஞ்சின் நிமிஷத்துக்கு 300 குடம் ஜலம் வீதம் தண்ணீர் இறைத்தது. 1935-ம் ஆண்டில் சார்லஸ் அபட் என்பவர் செய்த இயந்திரம் எண்ணெய் ஊற்றி ஓடும் இயந்திரம் செய்யும் வேலையில் பாதி செய்யக் கூடியதாக இருந்தது.

ஆனால் இத்தகைய இயந்திரங்கள் இரவிலும் மழை காலத்திலும் இயங்க முடியாதாகையால் அவற்றைக்கொண்டு மின்சாரம் உண்டாக்கிச் சேமித்து வைத்துக்கொள்வதே நல்லமுறை என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/3&oldid=1538047" இலிருந்து மீள்விக்கப்பட்டது