தந்தையும் மகளும்/4
4அப்பா! சூரிய கிரகணம் என்றைக்கு உண்டாகும் என்று முன்கூட்டிக் கூறிவிட முடியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?
அம்மா! எதுவேனும் முன் கூட்டிக் கூறிவிடக் கூடியதாக இருக்க வேண்டுமானால் அதுவும் அதனுடன் சம்பந்தமான நிகழ்ச்சிகளும் எப்பொழுதும் ஒழுங்காகத் தவறாமல் நடைபெறுவனவாக இருக்கவேண்டும். அது போல் சூரியன் முதலிய கோளங்கள். எப்பொழுதும் ஒழுங்காக இயங்கி வருவதால்தான் சூரிய கிரகணத்தை முன்கூட்டிக் கூறக் கூடியவர்களாக இருக்கிறோம்.
அம்மா! சந்திரன் சூர்யனுக்கும் பூமிக்குமிடையில் வந்து அவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் பொழுது, சந்திரன் சூரியனுடைய வெளிச்சத்தைப் பூமியில் படாதவாறு செய்து விடுகிறது. அதைத்தான் சூரிய கிரகணம் என்று கூறுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டிலும் பன்னிரண்டு அல்லது பதின்மூன்று தடவை சந்திரன் சூரிமனுக்கும் பூமிக்குமிடையில் வந்த போதிலும் அவை மூன்றும் ஒரே நேர்க் கோட்டில் இருப்பது 18 வருடத்திற்கு ஒரு தடவைதான். இன்று சூரிய கிரகணம் உண்டானால் 18 வருடங்கள் 10நாள் கழித்தே அடுத்த சூரிய கிரகணம் உண்டாகும். ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே இப்பொழுது இராக் என்று சொல்லும் சால்டீயா தேசத்து வானசாஸ்திரிகள் இதை அறிந்திருந்தார்கள். அவர்கள் கூறியபடியே தான் சூரிய கிரகணம் உண்டாய் வருகிறது. அதனால் தான் கிரகணம் உண்டாகும் தேதியை முன்கூட்டிக்கூறமுடிகின்றது..