தந்தையும் மகளும்/38
38அப்பா! தீப்பற்றவைக்க தீக்குச்சியைக் கிழிக்கிறோம், தீக்குச்சி வருமுன் என்ன செய்தார்கள்?
அம்மா! எதையாவது பலமாகத் தேய்த்தால் அந்த உராய்தலில் உஷ்ணம் உண்டாய் விடுகிறது. ஊசியைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்தால் அது சூடாய் இருப்பது உனக்குத் தெரியும் அல்லவா? அப்படி உண்டாகும் சூட்டில் எந்த வஸ்துவேனும் தீப்பிடிக்கச் கூடுமானால், அப்படித் தேய்த்து தீ உண்டாக்கிவிட முடியும் அல்லவா? அதனால், தீக்குச்சி வருவதற்கு முன் ஒரு மரக்கட்டையில் குழிசெய்து அந்தக் குழியில் மற்றொரு கட்டையை வைத்துக்கொண்டு தயிர் கடைவது போல் கடைவார்கள். அப்படி உண்டாகும் உஷ்ணத்தில் பஞ்சோ சருகோ வைத்துத் தீப்பிடிக்கச் செய்துகொள்வார்கள். இதற்குத் 'தீக்கடைதல்" என் பெயர்.
பண்டைக் காலத்தில் வேறு விதமாகவும் தீ உண்டாக்குவது உண்டு. சக்கிமுக்கிக் கல் என்று ஒருவிதமான கல் வைத்திருப்பார்கள். அதன்மீது எஃகுக் கம்பியைப் பலமாகத் தட்டுவார்கள். அப்பொழுதும் தீப்பொறி உண்டாகும். அதைக்கொண்டு பஞ்சிலோ சருகிலோ தீ உண்டாக்கிக் கொள்வார்கள். இந்த முறை நம் நாட்டில் மட்டுமன்று, அமெரிக்கா, ஐரோப்பாவிலும் இந்த முறை தான் நடந்து வந்தது.
1827-ம் ஆண்டில் முதன் முதலாகத் தீக்குச்சி செய்யப்பட்டது. அதைப்பற்றி உன் அண்ணனுக்குச் சொன்ன "அப்பாவும் மகனும்" என்ற புஸ்தகத்திலுள்ள 241-ம் கேள்விக்குரிய பதிலைப்படித்துத் தெரிந்துகொள்.