தந்தை பெரியார், கருணானந்தம்/015-021

 13. பிரித்தார்
மணியம்மை திருமணம் - கழகம் பிளந்தது - ஜனவரி 26, 1950 துக்க நாள் - “பொன் மொழிகள்” தண்டனை - வகுப்புரிமைக்குத் தீங்கு - “அரசியல் சட்டம் ஒழிக” - சுரண்டல் தடுப்புப் போர் - 1949 முதல் 1951 முடிய,

திருக்குறள் மூடநம்பிக்கை குறைவாக உள்ள பழைய நூல். அதிலுள்ள முதலதிகாரமான கடவுள் வாழ்த்து கூடக் கடவுளுக்கு உருவமோ வடிவமோ கற்பிக்கவில்லை. புராணக் கற்பனைக் கதைகள் அதில் நிறைய இடம் பெற இல்லை. உரையாசிரியர்கள் வேண்டுமானால் பிற்காலத்தில் ஆரியக் கருத்துகளைப் புகுத்தியிருக்கலாம். மூல நூலில் வள்ளுவர் அறிவுக்குப் பொருத்தமாகவே எழுதி உள்ளார். அவர் தமிழனாக இருந்து விட்டதால், அதிலும் அவர் நூல் காலங்கடந்து, சிறப்புடன் பல தடைகளையும் தாண்டி, மங்காப் புகழுடன் விளங்குவதால், அந்த நூலாசிரியர் பார்ப்பானுக்குப் பிறந்தார் என்றும், கதை கட்டிவிட்டார்கள். ஆரிய நச்சுக் கருத்துகளுக்குப் பெரிதும் இடந்தராமல், வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எனினும் வள்ளுவர் குறளைப் புலவர்கள் - பண்டிதர்கள் - தமக்குள் அடக்கிக் கொண்டார்கள். இராமாயணம், பாரதம், பாகவதம், கீதை இவற்றைப் புறக்கணித்துவிட்டுத் தமிழர் திருக்குறளை ஏந்த வேண்டும். ஆரியப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும் - என்ற, தமது இனவுணர்வின் அடிப்படையில் எழுந்த வேட்கைக்குப், பெரியார் 1949 பொங்கல் திருநாள் வாரத்தில் நல்லதொரு விருந்து கண்டார். சென்னையில், சனவரி 15, 16 நாட்களில் வள்ளுவர் குறள் மாநாடு, பெரியார் நடத்தினார். தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், ச. சோமசுந்தர பாரதியார், திரு.வி.க., ஏ. சக்கரவர்த்தி நயினார் போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப், பாமரர் கையில் குறளை ஒப்படைக்கச் செய்தார் பெரியார். குடி செய்வார்க்கில்லை பருவம்; மடி செய்து, மானம் கருதக் கெடும்-என்ற குறள் பெரியாருக்கு மிகமிகப் பிடித்தமானதாகும். மார்ச் 12-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றமும், மே 24-ஆம் நாள் திருவரங்கம் நகர்மன்றமும் பெரியாருக்கு வரவேற்பளித்துப் பெருமை ஈட்டின.

பட்டுக்கோட்டை கே.வி. அழகர்சாமி 30 ஆண்டு தமிழ் மக்கள் மேன்மைக்குப் பொதுத் தொண்டாற்றி, மேடைதோறும் கதறிப், பணஞ்சேர்க்கத் தெரியாமலும், கிடைத்ததை ஒழுங்குடன் செலவு செய்யத் தெரியாமலும், உடல் மெலிந்து நலிந்து, 1949 மார்ச் 28-ஆம் நாள் தஞ்சையில் உயிர் நீத்தார். பெரியார் பெருந்துன்பமுற்றார். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனைக் கொண்டு தஞ்சையில் மே 29-ஆம் நாள் அழகிரி குடும்ப உதவிக்காக 6000 ரூபாய் நிதி வழங்கச் செய்தார். ஒவ்வோராண்டும் மார்ச் 28-ஆம் நாளை அழகிரி நினைவு நாளாகக் கொண்டாடுமாறும் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார்.

1948-ல் ராஜாஜி கவர்னர் ஜெனராலாகச் சென்னை வந்தபோது, கருப்புக்கொடி பிடிக்கத் திட்டமிட்ட பெரியார்; 1949 மே 14-ஆம் நாள் ராஜாஜி திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பாதாளலிங்கக் குகை திறப்பு விழாவுக்கு வந்தபோது, அங்கே சென்று. ராஜாஜி தங்கியிருந்த ரயில் சலூனில், காலை 6.46 முதல் 7.17 வரை சந்தித்துப் பேசினார். பின்னால் விளைந்த சில நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பெரியார், அவரிடம் ஆலோசனை பெற்றதாக ஓர் எண்ணம் கழகத் தோழர்களிடம் நிலவிற்று. அது உண்மையன்று.

ஓமந்தூர் ரெட்டியாரைப் பெரியார் பாராட்டுகிறார் என்று ராஜாஜியிடம் கோள் மூட்டிய காங்கிரஸ்காரரிடம், “அதுதான் நல்லது! அவர் ஒருவரையாவது நாயக்கர் பாராட்டுகிறாரே! அவருக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்”- என்று அறிவுரை கூறினார். ஆயினும் அது எடுபடாமல், போட்டி ஏற்பட்டு, ஓமந்தூரார் விலகிட, குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டுகளுக்கு இவரே நீடித்தார். எப்படியும் ஒரு பார்ப்பனர் வரமுடியவில்லை என்பதால் பெரியார் மகிழ்வு பூண்டார்.

“நம் நாட்டிலுள்ள பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் ஜெர்மானிய நாட்டு யூதர்களைப் போலத்தான் இருக்கிறார்கள். அவர்களை விரட்டியடிக்க என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே காரணங்கள் இங்குள்ள ஆரியர்களுக்கும் நாம் கூறமுடியும். இந்த நாட்டில் உள்ள ஆங்கிலோ இந்தியர்களைப்போல், நம்மையே கேவலமாக எண்ணிக்கொண்டு, இவர்கள் இங்கே வாழ்கிறார்கள். எனவே இவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று பெரியார் விளக்கந்தந்தார்.

கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்கள் அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றை அடைவதற்குள்ள தடைகளை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பது தவிரக், கடவுள், மதம் இவைகளைப் பற்றித் தமக்குச் சிறிதும் கவலையில்லை என்றார் பெரியார். விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத்தில் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். கடவுள் இல்லை என்று நாத்திகராகிய நாம் கூற முடிகிறதே, இது எப்படி? மதம், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்தத்தான் உதவிற்று மனிதனுக்குத் தானே சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவு மிகுதியாக இருக்கும்போது, ஏன் கடவுள் என்பதாக ஒன்று தேவைப்படுகிறது? ஆத்மாமீது நம்பிக்கை போனால் கடவுள் நம்பிக்கையும் தானாகவே போய் விடுமே! கடவுளை நம்புகிறவர்களைவிட நம்பாதவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள்? - என்று இப்படிப்பட்ட உயர்ந்த வகையான பிரகிருதிவாதம், தத்துவ விளக்கங்களையெல்லாம் மிகச் சாதாரணப் படிப்புள்ள படிப்பில்லாத- பாமர மக்களுக்கும் விளங்குமாறு பெரியார் எடுத்து வைத்து உதாரணங்களுடன் உரைத்து வந்தார்.

கோவை மாவட்ட ஏழாவது திராவிடர் கழக மாநாடு 1949 மே 28-ஆம் நாள் கோயமுத்தூரில் நடைபெற்றது. தி. பொ. வேதாசலம் தலைமையில், அண்ணா திறந்து வைக்க, மூவலூர் இராமாமிர்தத் தம்மையார் கொடி உயர்த்தினார். “கடந்த ஆண்டு அக்டோபரில், ஈரோடு மாநாட்டில், அண்ணாவிடம் பெட்டிச் சாவி தரப் போவதாகக் கூறினீர்களளே! அப்படியிருக்க, அவருக்கும் தெரியாமல் திருவண்ணாமலையில் ஆச்சாரியாரைச் சந்தித்த மர்மம் என்ன? அங்கு பேசிய ரகசியம் என்ன?” என்று பெரியாரை ஜி.டி. நாயுடு வினவினார். ஆனால் பெரியார் அங்கு எந்த விவரத்தையும் கூற விரும்பவில்லை . ஐயமும், திகைப்பும், ஆத்திரமும் பலருடைய முகங்களில் பிரதிபலித்தன; பலனேதுமில்லை !

ஓமந்தூராருக்குத் தாம் இளைத்தவரில்லை எனக் குமாரசாமி ராஜா காட்டிக் கொண்டார். “திராவிட நாடு“ இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 3.6.49 அன்றும், ”விடுதலை”ஏட்டுக்கு ஜாமீனாகப் பத்தாயிரம் ரூபாய் 18.6.49 அன்றும், “குடி அரசு” இதழுக்கு ஜாமீனாக மூவாயிரம் ரூபாய் 2.7.49 அன்றும், கேட்கப்பட்டன!

இயக்கத்தைத் தொடர்ந்து நடத்திடத் தமக்கு நம்பிக்கையுள்ளவராக ஒரு வாரிசு வேண்டுமென்றும், சொத்துப் பாதுகாப்புக்கும் ஏற்பாடு ஒன்று செய்யப்பட வேண்டும் என்றும், பெரியார் கூறிவந்ததற்கிணங்க, 1949 ஜூன் 9-ஆம் நாள் சென்னை தியாகராய நகர் செ.தெ. நாயகம் இல்லத்தில் மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தடுத்து நிறுத்திட கே.கே. நீலமேகம், என்.வி. நடராசன், எஸ். குருசாமி, வேலூர் திருநாவுக்கரசு போன்றோர் முயன்று பார்த்தனர். பெரியார் இணங்கவில்லை. அண்ணா இதைக் கேள்வியுற்றுக் காஞ்சியில் போய்ப் படுத்து விட்டார். தீவிரவாதிகள் சிலர் இயக்கச் சொத்துகளைக் கைப்பற்றுவோம் என்றனர். சுமார் இரண்டு வாரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தோழர்கள், அவரவர் விருப்பத்திற்கேற்ப இரு கூறுகளாகப் பிரிந்தனர். பெரியார் செய்தது சரியே என்று கைவல்ய சாமியார் எழுதினார். சண்முக வேலாயுதம், தி.பொ. வேதாசலம் ஆகியோர் பெரியார் முடிவைப் பாராட்டினர். இதற்கிடையில் யாரோ குறும்பு செய்து, பெரியார், தாம் திருமணம் புரிந்த செயலுக்கு வருந்துவது போல, அவர் கைழுெத்திட்ட வெறுந்தாளின் மேற்புறத்தில், ஓர் அறிக்கை தயாரித்து, வருத்தமும் விஞ்ஞாபனமும் என்ற தலைப்பில், 28-7-49 “விடுதலை” நாளேட்டிலேயே வெளிவரச் செய்தனர். இது 30.7.49 “குடி அரசு” இதழிலும் மறுபதிப்புப் பெற்றது. அண்ணா , அன்பழகன், கருணாநிதி ஆகியோரது நடவடிக்கைகளில் அதிருப்தி கொண்டு, அவர்கள் பெயர் “விடுதலை”யில் வரக்கூடாது என்று பெரியார் கூறியும், அது நிறைவேறவில்லை . “விடுதலை” அலுவலகத்தில் சம்பத், கணேசன், அரங்கண்ணல், கோலிந்தசாமி ஆகியோர்மீது பெரியாரின் சந்தேகம் படர்ந்தது. தம்மைக்கொல்ல யாரோ சதி செய்கிறார்கள். சம்பத்தும் சூதனாகி விட்டான் - என்று பெரியார் 13.7.49 “விடுதலை”யில் எழுதினார். பெரியார்மீது அண்ணாவும் சம்பத்தும் வழக்குத் தொடுத்தபோது, பெரியார் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டதால், வழக்கைத் திரும்பப் பெற்றனர்.

இராம. அரங்கண்ணல் 1946-ல் திருத்துறைப்பூண்டியில் திராவிட மாணவர் மாநாடும், முதலாவது கருப்புச் சட்டை மாநாடும் நடத்தியவர்களில் ஒருவர். “விடுதலை”, “குடி அரசு “இதழ்களில் சில காலம் பணியாற்றிப் பின்னர் காஞ்சியில் ”திராவிட நாடு” அலுவலகத்திலிருந்தார். 1962, 1967-ல் மயிலாப்பூர், 1971-ல் எழும்பூர் தொகுதிகளின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வாரியத் தலைவராக அரும்பணி புரிந்தவர். இன்று அ.இ.அ.தி.மு.க. கழகத்தில் உள்ளார். திருவாரூரில் கலைஞர், தென்னன், பி.எஸ். இளங்கோ , மா.செங்குட்டுவன் ஆகியோர் இவருக்குப் பள்ளித் தோழர்கள்,

பெரியார் மணியம்மை திருமணச் செய்தி வெளியானதும் அண்ணா தந்த அறிக்கையும், பின்னர் திருமணம் ஆனவுடன் தந்த அறிக்கையும் முக்கியமானவை. 3.7.49 அன்று வெளியிடப்பட்டது. பெரியார் மணியம்மை திருமணத்தை இனித்தடுத்து நிறுத்திட முடியாது என்பது உறுதியாகிவிட்ட பின்னர் சென்ற ஆண்டு நாம் பெரியாரின் 77-வது பிறந்தநாள் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் தமது திருமண வைபவத்தைக் காணும்படி அழைக்கிறார்; இல்லை , அறிவிக்கிறார்... ஐந்தாறு ஆண்டுகளாகப் பெரியாருடைய உடலைக் கவனித்துக் கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துக் கொண்டிருந்த மணியம்மையாரைத் தான் பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார். பெரியாருக்கு வயது 72. மணியம்மையாருக்கு வயது 24.

இதனால் நமக்குக் கோபம், கொதிப்பு ஏற்படலாம் என்று தமது 28.6. 1949 “விடுதலை” அறிக்கையில் பெரியாரே குறிப்பிடுகிறார். அவை மட்டுமா? இந்தச் சேதியாலே ஏற்பட்ட கண்ணீர்! இந்தக் கண்ணீரை அவர் எதிர்பார்த்திருப்பாரா, அல்லது மதிப்பாரா என்பது ஒருபுற மிருக்க, எதற்கும் கலங்கா உள்ளம் படைத்த இளைஞர்கள் இந்தச் சேதிகேட்டுக் கண்ணீர் வடிப்பது போல் வேறு எப்போதும் நடைபெற்றதில்லை. உலகச் சம்பவங்களிலேயே இதற்கு இணையானதாக வேறு ஒன்றைக் காட்டவும் முடியாது.

நாம் பெரியாரை அரசியல் கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. குடும்பத் தலைவராக வாழ்வுக்கு வழிகாட்டியென, மானத்தை மீட்டுத் தரும் மகான் என, அடிமை ஒழிக்கும் வீரரென மரியாதையுடனும் அன்புடனும் பேணி வந்தோம். பொருந்தாத் திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு என அவர் ஆயிரமாயிரம் மேடைகளில் முழங்கினார். இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர் தமது 72-ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைத் காணிக்கையாகத் தருவதைத் தவிர வேறென்ன நிலைமை இருக்கும்.

பொருந்தாத் திருமணம்; புனிதத் தலைவரின் பொருந்தாத் திருமணம்! பல நெடிக்கடிகள் ஆபத்துகள் பார்த்திருக்கிறோம். இந்தப் பேரிடியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை; எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்பட வேண்டும்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து. எங்கள் தன்மானத்தை அறுத்தெறிவது ஏன்? எப்படித் தாங்குவோம் இந்த இழிவை? எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும் இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதோ!

“பெரியாரே இப்படி ஒரு பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீர்களே, இது சரியா?” என்று கேட்கிறோம். "போடா போ! நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன். இயக்கத்தையே மணியம்மையிடம்தான் ஒப்படைக்கப் போகிறேன் என்று கூறுகிறார் அறிக்கையில். நடைபெறப் போவது பொருந்தாத் திருமணம் மட்டுமல்ல; புதிய மகுடாபிஷேகம். ஒரு தவறு இன்னொரு தவறுக்குக் காரணமாகக் காட்டப்படுகிறது. பொருந்தாத்திருமணத்தால் ஏற்படும் இழிவையும் பழியையும் நாம் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல, இந்தத் தகாத முறையினால் தலைவி ஆகப்போகும் மணியம்மையின் கீழிருந்து நாம் எதிர்காலத்தில் பணியாற்றவும் தயாராக வேண்டும். “என் ஆயுள் வரையும், கூடுமானவரை என் ஆயுளுக்குப் பின்னும், ஒழுங்காக இயக்கத்தை நடத்தும் தகுதி இந்த மணியம்மைக்கு உண்டு” என்று கூறிவிட்டாரே!

ஓர் இயக்கத்துக்கு வாரிசு முறை எதற்கு? ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? நடைமுறையிலே வெற்றி தரக் கூடியதுதானா? “இயக்கத்திலே உள்ள எவரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. என் நம்பிக்கைக்கு உரியவர்களாக யாரும் தென்படவில்லை. இயக்கத்தை நடத்திச் செல்லும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் எண்ணவில்லை” என்கிறார். ஏதோ கோபத்தால் பேசுகிறார் என்றெண்ணிச் சும்மா இருந்து வந்தோம். இயக்கத்திலுள்ள யாராவது துரோகி, கேடு நினைப்பவன் என்று நிரூபிக்க முடியுமானால், விரட்டி விடலாமே!

நம்மை நம்பாதவரை இனி நாம் எப்படி நம்புவது? “உன்னிடம் நம்பிக்கை அற்றவரிடம் இராதே! அவர் தலைமையில் பணியாற்றாதே! ஓடு ஓடு! என்று விரட்டுகிறதே அவர் அறிக்கை! பொருந்தாத் திருமணம் என்று கேள்வியுற்றும் வெட்கப்பட்டோம். இதற்குப் பெரியாரின் அறிக்கை, நமக்கு வேதனையும் ஊட்டுகிறது. இதோ, விரட்டப்படுகிறோம்! தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறோம்?”

அண்ணா என்ன எழுதினால் என்ன? எப்படிக் கண்ணீர் சிந்தினால் என்ன? தத்தம் குடும்பத்தோடு பெரியாருக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட பெருமக்கள் தமிழகத்தில் நிறையப் பேர் இருந்தனர். நிலக்கிழார்களாகவும், வணிகர்களாகவும் வசதி படைத்தவர்களாகவும் பலர் சுய மரியாதை இயக்கத்தில் பெரியாருக்காக மட்டுமே எதையும் செய்யச் சித்தமாயிருந்தனர். அப்படிப்பட்டோர் மீண்டும் பெரியார்பால் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டு, முன்பைவிட ஆழமாகப் பற்றுதல் காட்டத் தொடங்கினர்,

நீடாமங்கலம் அ. ஆறுமுகம், பெண்ணாகரம் எம்.என். நஞ்சையா, திருச்சி டி.டி. வீரப்பா, குடந்தை டி.மாரிமுத்து, பட்டுக் கோட்டை ரத்தினசாமி சகோதரர்கள், சொரக்குடி வாசுதேவன், திருச்சி பிரான்சிஸ், சேலம் குகை கே.ஜெகதீசன், ரொ.சு. அருணாசலம், குனியமுத்தூர் (கோவை) சதாசிவம், மதுரை பழனிவேலு, நெல்லை தியாகராஜன், கன்னியாகுமரி வழக்கறிஞர் கிருஷ்ணன், சிவகங்கை வழக்கறிஞர் இரா. சண்முகநாதன், காரைக்குடி என்.ஆர். சாமி, சிதம்பரம் கு.கிருஷ்ணசாமி, பண்ணுருட்டி நடேசன், திருப்பத்தூர் ஏ.டி. கோபால், ஆம்பூர் பெருமாள், திருவத்திபுரம் வேல். சோமசுந்தரம், காஞ்சிபுரம், சி.பி. இராஜமாணிக்கம், சென்னை எஸ்.பி. தட்சணாமூர்த்தி, பலராமன், மு.பொ, வீரன், வில்லிவாக்கம் தியாகராஜன், சி.டி.டி. அரசு, பெங்களூர் நாராயணசாமி, கொடையரசன், டி.டி. அரசு, ஜனகம்மாள்... என்று இந்தப் பட்டியல் மிக நீண்டு கொண்டே போகும். உயிருள்ளவரை பெரியாரிடம் காட்டிய அன்பில் இம்மியும் குன்றாத சான்றாண்மையாளர்கள் இவர்கள்.

இவர்கள் மீது வைத்த அசையா நம்பிக்கையினால்தான் பெரியார், அண்ணாவும் பிறரும் சென்றதை வெகுவாகப் பொருட்படுத்தாமல் தன் பயணத்தைத் தொடர்ந்தார்! கட்டுப்பாடு காப்பாற்றாதவர்களைத் தனியே பிரித்தார் பெரியார், என்றும் சிலர் கருதினர்.

“திராவிடநாடு” பெரியாரின் செயலுக்கு வருந்துவோர் பட்டியலை 24.7.49 இதழிலிருந்து, கண்ணீர்த்துளிகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அண்ணாவின் அணியிலும் எண்ணிக்கை பெருகியது.

குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைத்த காங்கிரஸ் ஆட்சி, - ஏராளமான கழக நூல்களைத் தடைசெய்தது: நாடகங்களுக்குத் தடைகள் விதிக்கப்பட்டன. அண்ணாவின் இலட்சிய வரலாறு என்ற நூல் தடை விதிக்கப்பட்டுப் பறிமுதலும் செய்யப்பட்டது.

10.9.49 “குடி அரசு” இதழில் ஈ.வெ.ரா. மணியம்மை என்று - சட்டப்படிப் பெயர் திருத்தப்பட்ட செய்தி அறிக்கையாக வெளிவந்தது. திருச்சி மாவட்டத் திராவிடர் கழகம், புவனகிரி, நாகை இப்படிப் பல கழகங்கள் பெரியார் பக்கம் இருப்பதைக் காட்டிக் கொண்டன. 5.11.49 அன்று பெரியார், துரோகப்படலம் என்ற தலைப்பில், அண்ணாமீது குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கழக நிதி வசூலுக்கு எதிராகப் பாரதிதாசனுக்கு நிதி வசூலித்தது போன்ற பல சம்பவங்களை நினைவு கூர்ந்தார். குடம் குடமாய்க் கண்ணீர் துளிகளை இப்போது சிந்துகிறார்களே - என்றார். தம் நிலையைத் தெளிவுபடுத்த, அண்ணா , டி.எம். பார்த்தசாரதியைக் கொண்டு, “மாலைமணி” நாளேடு, 10.8.49 முதல் துவக்கினார். சென்னையில் செப்படம்பர் 17-ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கினார். ஆலமரத்துக்கு விழுது போல், திராவிடர் கழகத்துக்குத் திராவிட முன்னேற்றக் கழகம் விளங்கு மென்றார்.

உடுமலைப்பேட்டையில் 1949 ஏப்ரல் 16-ஆம் நாள் 144 தடையுத்தரவைப் பெரியார் மீறியதாக, அரசு ஒரு வழக்குப் போட்டது. பலமுறை பெரியாரை வரச்சொல்லி, நீதிமன்றம் வழக்கை ஒத்திப் போட்டுக், கடைசியில் 2.8.49 அன்று அந்த வழக்கை, அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. அதாவது, கழகம் பிளவுபடுமுன்னர் தொடரப்பட்ட வழக்கு: பிளந்தபின் முடிந்தது! அதில் பெரியாருடன் வழக்கில் சம்பந்தப்பட்ட உடுமலை நாராயணன், பின்னாளில் தி.மு.க. மாவட்டச் செயலாளரானார். மதியழகனும் தி.மு.க. ஆனார்.

சரியான பிரதிநிதித்துவம் வாய்ந்ததல்ல என்று பெரியாரால் துவக்க முதலே எதிர்க்கப்பட்டு வந்த அரசியல் நிர்ணய சபை சுமார் மூன்றாண்டுகள் கூடி, இந்திய அரசியல் சட்டத்தை, 1949 நவம்பர் 26-ஆம் நாள் ஒருவாறாகச் செய்து முடித்திருந்தது. அது அடுத்த ஆண்டு சனவரி 26-ஆம் நாள் அமுலுக்கு வருமென அறிவிக்கப்பட்டது!

“சமஸ்கிருதமாகிய வடமொழி மூலமாக ஆரியக்கலாச்சாரம் தமிழ் நாட்டில் முன்னரே புகுத்தப்பட்டது. திராவிட மக்கள் ஆரியச் சூதினை நல்ல வண்ணம் உணர்ந்து கொண்டார்கள். எனவே வெள்ளையன் வடவரிடம் பேரம் பேசி நம்மை விற்றுவிட்டுப் போய் விட்டதால், இப்போது அரசியலின் பேரால், இந்தி தேசிய மொழி என்ற போர்வையில், மீண்டும் ஆரியக் கலாச்சாரமே நம் மீது திணிக்கப்படுகிறது. இந்தி தேசிய மொழி என்பதையே நாம் மறுக்கிறோம். கட்டாயமில்லை என்பது மாய்மால வார்த்தை.

நாம் நம்பமாட்டோம். எனவே 1950 சனவரி 10-ஆம் நாள் இந்தி எதிர்ப்பு . நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்” என்று சென்னையில் பெரியார் முழங்கினார். அத்துடன், வரவிருக்கும் சனவரி 26-ஆம் நாள் குடியரசு தினமும், நமக்குத் துக்க நாளே என்றும் அறிக்கை விட்டார்.

“புதிய குடி அரசுத் தலைவராக டாக்டர் ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இராசகோபாலாச்சாரி தமது கவர்னர் ஜெனரல் பதவியை முடித்துக்கொண்டு தென்னாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவது நமக்கு வெற்றிதான். பார்ப்பனரானாலும் கூடத் தென்னாட்டுக்காரர் தேவையில்லை வடநாட்டார்க்கு, என நிரூபிக்கப்படுகிறதல்லவா? மேலும், விரைவில் சுமையை இறக்கி வைத்து விட்டு இங்கே வந்து விடுவதாக ஆச்சாரியார் முன்பே கூறிச் சென்றாராம். வந்தபின் நமக்குப் பயன்படுகிறாரா பார்க்கலாம்! ஏனென்றால் பார்ப்பனர் நமக்கு அந்நியரல்லவே ” என்றார் பெரியார். சிதம்பரத்தில் பேசும்போது. நாம் சுயமரியாதைக் கொள்கைகளில் ஒன்றைக் கூடக் கைவிடவில்லை. நீதிக்கட்சியின் கொள்கைகள் தாம் சில நமது சு.ம. இயக்கக் கொள்கைகளோடு இணைந்துள்ளன! திராவிட நாட்டின் எல்லை இப்போதுள்ள சென்னை மாகாணத்தோடு நின்று விடாது; மேலும் வடக்கு நோக்கி வளரும். இத்தோடு அடங்காது!- என்றும் பெரியார் சொன்னார்.

சனவரி இறுதி வாரத்தில் சென்னையின் பல பகுதிகளில் பெரியார் சொற்பொழிவாற்றினார். ஆரிய-திராவிடப் போராட்டம் நீண்ட காலமாக நடக்கிறது. ஆரியக் கலாச்சாரத்தைப் பவுத்தர்கள் முயன்றும் அழிக்க முடியவில்லை ; மொகலாயர் முயன்றும் முடியவில்லை; இந்தக் கழகத்தாரால்தானா முடியப் போகிறது? என்று மமதையுடன் ஆரியம் மார் தட்டுகிறது! இளைஞர்கள் எழுச்சியினால் கழகம் கட்டாயம் செய்து காட்டும் என்றார். மேலும், குடி அரசு நாள் பற்றிப் பேசுகையில், இது வெள்ளையனுக்கு லஞ்சம் கொடுத்து, அவன் சுரண்டலுக்கு நிரந்தர வசதி செய்து கொடுத்துத், தங்கள் பேருக்கு மாற்றிக் கொள்ளப்பட்ட மேடோவர் ஆட்சிதான்! - என்றும் குறிப்பிட்டார் பெரியார்.

கான்பூரில் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டுக்குப் பெரியார் அழைக்கப்பட்டிருந்தார். உடல் நிலை இடந்தராததால் செல்ல இயலவில்லை . அன்று 29.1.50-ல் கடலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, சனவரி 26, தடியாட்சி நாள் என்பதுதான் உண்மை, என்பதாக ஆதாரங்களுடன் விளக்கினார்.

1950 பிப்ரவரி 4-ஆம் நாள் பெரியாரின் தமையனார் ஈ. வெ. கிருஷ்ணசாமி - வைத்திய வள்ளல் - தமது 74-ஆவது வயதில் காலமானார். அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுதாபக் கூட்டத்தில் பெரியார் கலந்து கொண்டு, அவர் தமது தமையனார் என்பதற்காகவோ, செல்வந்தர் என்பதற்காகவோ அல்லாமல்; தமக்கென வாழாமல் சித்த மருத்துவம் இலவசமாகத் தினம் 100, 150 பேருக்குக் குறையாமல் செய்தும், பொதுத் தொண்டில் ஈடுபட்டும், வாழ்ந்து வந்ததால்தான். இன்று பலராலும் பாராட்டப்படுகிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். பம்பாய் சென்று 11, 12 தேதிகளில் அங்கு திராவிடர் கழக இரண்டாவது மாநாட்டில் பெரியார் கலந்து கொண்டார்.

இச்சமயத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியினை அடக்கி ஒடுக்கிட அரசு மிகத் தீவிர நடவடிக்கையில் இறங்கியிருந்தது. முக்கிய மானவர்கள் தலைமறைவானதால், கிடைத்தவர்களைச் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தனர்; பலரை வேட்டையாடி ஒழித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத் தோழர்கள் மிகக் கடுமையான அடக்கு முறைக்கு ஆளாயினர். “தஞ்சை மாவட்டத்தில் தடியடி ஆட்சி” என்று பெரியார் “விடுதலை”யில் ஒரு தலையங்கமே எழுதினார். மேலும், தமிழகத்தையே உலுக்கி விட்ட கொலை வெறியாட்டம் அரசுக்கு மிகுந்த அவப்பெயரைத் தேடித் தந்தது. அதாவது, சேலம் மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டுக் கைதிகளை, உள்ளே வைத்தவாறே. 15.2.50 அன்று, போலீசார் துப்பாக்கியால் சுட்டு, 22 பேர் மரணமடையவும், 100 பேர் படுகாயமடையவும் நேரிட்டது. மார்ச் 5-ஆம் நாளன்று இதற்குத் திராவிடர் கழகம் கண்டன நாள் கொண்டாடுமாறு பெரியார் கேட்டுக் கொண்டார். “விடுதலை” ஏட்டின் மீது தொடரப்பட்ட வழக்கில், 9.3.50 அன்று வாதம் தொடங்கி, 24ந் தேதி பாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது! ஒவ்வொரு மாதமும் 10-ந்தேதி இந்தி எதிர்ப்பு நாள் கொண்டாடி, இன்னும் கட்டாய இந்தி ரத்து செய்யப்படாததைப் பெரியார் நினைவூட்டி வந்தார். கடைசியில் 18-ந்தேதி, கட்டாய இந்தித் தொல்லை ஒழிந்தது என்று 1950 ஜூலை 20-ம்நாள் “விடுதலை”யில் பெரியார் தலையங்கம் எழுதி மகிழ்ந்தார்.

மார்ச் 18, 19 நாட்களில் சென்னை மாவட்ட திராவிடர் கழக 15-ஆவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. பெரியாருடன் தி.பொ. வேதாசலம், ஏ.பி. சனார்த்தனம், எஸ். குருசாமி, சி.இலக்குவனார், எம்.ஆர். ராதா, திருவாரூர் தங்கராசு ஆகியோர் பங்கு பெற்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பெரியார் தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று, கட்டாய இந்தி, திராவிட நாட்டுப் பிரிவினை, வகுப்புவாரி உரிமை, காங்கிரசின் கொடுமை ஆகிய பொருள்கள் குறித்து நாட்டு மக்களுக்கு நல்ல வண்ணம் விளக்கி வந்தார். ஜூன் 22-ஆம் நாள் காய்ச்சலால் தாக்குண்டு, திருச்சியில் சில நாள் ஓய்வெடுக்க நேரிட்டது. பிறகு சென்னை சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டார் பெரியார். உடல் சிறிது நலம் பெற்றதும் புறப்பட்டு விட்டார். திருப்பூரில் இந்தி எதிர்ப்பு நாளில் கலந்து கொண்டார் பெரியார். நாம் பொதுவான சங்கதிகளில் மட்டும் காலத்துக்கேற்ற மாறுதல்களை ஒப்புக் கொள்கிறோம்; ஆனால் ஆத்மார்த்த, சமுதாயக் காரியங்களில் இன்னும் காட்டுமிராண்டிக் காலத்தில்தான் இருந்து வருகிறோம் - என்று பெரியார் தக்க மேற்கோளுடன் விரித்துரைத்து வந்தார். இந்த நேரத்தில் பஞ்சாபில் மாஸ்டர் தாராசிங் சீக்கிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு கேட்கத் துவங்கியதைப் பெரியார் வரவேற்று ஆதரித்தார். கவர்னர் ஜெனரல் பதவியிலிருந்து திரும்பி, பென்ஷன் பெற்று வந்த ராஜாஜி, மீண்டும் டெல்லி சென்று, இலாக்கா இல்லாத மந்திரியாக, நேரு மந்திரி சபையில் இணைந்தார்.

பெரியார் பொன் மொழிகள் என்ற நூல் ஆட்சேபகரமானது என்று மார்ச் மாதம் பெரியார் மீது தொடரப்பட்ட வழக்கு, 10 முறை ஒத்திப் போடப்பட்டு வந்தது. 22.7.50 அன்று கடைசியாக வாய்தா தந்தார்கள். அரசியலில் தமக்கு நாட்டம் எப்போதுமில்லை , சமுதாய இழிவு ஒழிப்பே முக்கியம் என்பதை அன்று ஈரோட்டில் பெரியார் வலயுறுத்தினார். அரசின் சில துறைகளில் கட்டாயம் கதர் உடைகள் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவை மாற்றிக் கைத்தறி உடைகளோ, மில்துணி உடைகளோ வழங்கலாம் என்ற நிலையைப் பெரியார் வரவேற்றார்.

சென்னை மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பார்ப்பனர் 2.7 சதவீதம் பேர்தான். ஆனால், 1949-50-ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைக் கல்லூரிக் கல்வியில் அவர்கள் எத்தனை சதவீதம் பெற்றிருந்தார்கள்? இண்டர்மீடியட் 33.8 சதவீதம்; பிஏ., பி.காம். 33.6 சதவீதம்; பி.எஸ்.சி. 46.6 சதவீதம்; பி.ஏ. ஆனர்ஸ் 48.5 சதவீதம். கல்வித் துறையிலும் உத்தியோகத் துறையிலும் (இங்குள்ள மத்திய சர்க்கார் அலுவலகங்களில் உட்பட) மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாசாரப்படி இவை மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றுதானே பெரியார் தமது அரசியல் வாழ்வு துவங்கிய நாள் முதல் போராடி வருகிறார்! திராவிடரின் உரிமைச் சாசனமான இந்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைச் செல்லாமல் செய்திட ஆரியம் கச்சை கட்டி இறங்கிவிட்டது. 1950-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவக் கல்லூரியிலும், பொறியியற் கல்லூரிகளிலும் இடங்கிடைக்கப் பெறாத இரு மாணவர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். சென்னை மாகாண அரசு நடைமுறைப்படுத்தி வரும் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சட்டத்துக்கே முரணானது என 28.7.1950 அன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. ஆலமரத்தின் ஆணிவேரில் வீழ்ந்த அரிவாள் வெட்டாக இது தோன்றியது. சென்னை மாகாண அரசு டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அரசுக்கு எதிராக, அந்த மாணவர்களைப் பாதுகாத்திட முனைந்து எழுந்து நின்றவர் யார் தெரியுமா? அரசியல் நிர்ணயசபை உறுப்பினரும், இந்திய அரசியல் சட்டத்தைச் செய்திடத் தென்னாட்டின் பிரதிநிதியாகச் சென்றவர்களில் ஒருவருமாகிய சர் கில்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வழக்குத் தொடுத்த இரு மாணவரில் ஒருவர், சென்னை உயர்நீதி மன்றத்தில் எழுத்து மூலமாகக்கூட மனுதாக்கல் செய்யவில்லை எனினும், அவருக்காக அல்லாடி மல்லாடினார் என்ற கில்லாடி அரசியல் மோசடி பின்னரே வெளியாயிற்று! சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மாத்திரம் எப்படியிருக்கும்? இது அரசியல் சட்த்திற்கு முரணானதுதான் என்றே உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்தது. இதனால் வகுப்பு வாரி உத்தரவை மாகாண அரசு நடைமுறைப் படுத்தக் கூடாது எனவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது; 1950 செப்டம்பர் திங்களிலேயே!

பெரியார் சீறி எழுந்தார். சிங்க ஏறுபோல் கர்ச்சனை புரிந்தார். தமது ஜீவ நாடியே போய்விட்டதாகச் சினந்து பொங்கினார். 1922-ல் உருவாக்கப்பட்டு1924-ஆம் ஆண்டும் உறுதி செய்யப்பட்டு, 1929-முதல் அமுலில் இருந்து வந்த பெருஞ்சலுகை ஒரு சிறிய தீர்ப்பின் மூலம் தூள் தூளாவதா? இதன் கர்த்தாவான எஸ். முத்தையா முதலியார் பெரியார் பக்கம் நின்று, அநியாயத்தை எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட சமுதாயமான மாணாக்கர்கள் கல்லூரிகளுக்குச் செல்லாமல் ஊர்வலமாகச் சென்று முழங்கினர். திருச்சியில் “தொண்டு” ஆசிரியர் வீராசாமி துவக்கிய அம்பேத்கர் மாணவர் இல்ல நன்கொடைக்காக, 1950 ஜூலை 31-ஆம் நாள், என். எஸ். கிருஷ்ணனின் கிந்தனார் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்ற பெரியார், அங்கும், மறுநாள் திருச்சி பொதுக்கூட்டத்திலும், வகுப்புவாரி உரிமை பறிபோன கொடுமையை நொந்த மனத்துடன் சுட்டிக் காட்டினார். 6.8.50 அன்று விடுத்த அறிக்கையில் கட்டாய இந்தி ஒழிப்புக்காக வெற்றிவிழாக் கொண்டாடுமாறும், அதே நேரத்தில் வகுப்புவாரி உரிமைக்காகக் கிளர்ச்சி துவக்குமாறும் கேட்டுக் கொண்டார். 13-ஆம் நாள் சென்னைப் பொதுக் கூட்டத்தில் முழக்கமிட்டார். 14-ஆம் நாள் பெரியார் வேண்டுகோளுக்கிணங்க, நேரடி நடவடிக்கை முழு வெற்றியளித்தது. கடையடைப்பும், கல்வி நிலையங்கள் புறக்கணிப்பும், தொழிற்சாலைகள் வேலை நிறுத்தமும், பெரியார் தலைமையில் உரிமை முழங்கிய ஊர்வலமும் பரிபூரண வெற்றி! புதிதாகத் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகமும் இவற்றில் முழு ஒத்துழைப்பு நல்கியது. பெரியாரும், அடுத்து நடக்கும் இது சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளுக்கும் அனைத்துக் கட்சியினரையும் அழைப்பதாகக் கருத்தறிவித்தார்.

சேலம் ஏ. இராமசாமிக் கவுண்டர் அவர்களின் திடீர் மறைவு கேட்ட பெரியார், மிகவும் துக்கம் மேலிட்டுச், சுற்றுப் பயணத்திலிருந்தவாறே, ஆகஸ்ட் 22-ஆம் நாள் சேலம் சென்று, இல்லத்தாரின் துயரத்தில் பங்கு கொண்டார். அடுத்து, மகிழ்ச்சி பெறத்தக்க சம்பவமாகப் பெரியார் கருதியது காமராசர் வெற்றி. அதாவது 1940-முதல் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக வீற்றிருந்த காமராசர், 29.8.50 அன்று நடந்த கட்சித் தேர்தலிலும், 155 வாக்குகள் பெற்று வென்றாராம். இவரை எதிர்த்த கோவை சி.பி. சுப்பையாவுக்கு 99 வாக்குகளாம்.

14.7.50 அன்று திருச்சி புத்தூரில் 50,000 ரூபாயில் கழகத்திற்கென ஒரு கட்டடம் வாங்கப்பட்டது. அதில் திராவிடர் கழக நிர்வாகக் குழு கூடி, அந்தக் கட்டடத்திற்குப் பெரியார் மாளிகை எனப் பெயர் சூட்டியது; 10.9.50 அன்று! வேலூர் ஈ. திருநாவுக்கரசு அதைத் திறந்து வைத்தார். வடநாட்டு ஆதிக்க ஒழிப்புக் கிளர்ச்சியாக, நமது நாட்டு நெசவாளர் துயர்துடைக்க, வட நாட்டுத் துணிக்கடைகள் முன்பாக மறியல் போராட்டம் துவக்குவது; ஒவ்வொரு மாதமும் 14-ந் தேதியன்று வகுப்புவாரி உரிமை நாள் கொண்டாடுவது என்று பல முடிவுகள் அன்று மேற்கொள்ளப்பட்டன. 10.9.50ல் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அமைச்சர் ஆர்.ஆர், திவாகருக்குக் கருப்புக் கொடி பிடித்தது. வகுப்புரிமை கோருவதன் நியாயத்தை இந்த ஒரு சிறிய புள்ளி விவரம் தெரிவிக்கும்; 1950-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில் மாணவர் நிலைமை: பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்

 மனுச் செய்தோர்  அனுமதி பெற்றோர்
1.  பார்ப்பனர்

458 பேர்

77 பேர்

2.  பார்ப்பனரல்லாதவர்

692

172

3.  கிறித்துவர்

144

22

4.  முஸ்லீம்

83

21

5.  ஆதித்திராவிடர்

17

17

பல்லாவரத்தில் வாழ்ந்த தனித் தமிழ்க் காவலர் மறைமலையடிகள் வாழ்வின் இறுதிக் கட்டத்திலிருப்பதைப் பெரியார் கேள்வியுற்றார். 14.9.1950 அன்று சென்னையில் திரு. வி. கல்யாண சுந்தரனாரையும் பார்த்து விட்டு, நேரே பல்லாவரம் சென்று மறைமலையடிகளையும் கண்ணுற்று, நெஞ்சம் துணுக்குற்றார்' பெரியார். மறுநாள் மறைமலை என்னும் அந்தத் தமிழ்ப் பெருமலை சாய்ந்தது!

1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் நாள் தந்தை பெரியாரின் 72வது பிறந்த நாள். ஆகா! தமிழர்க்கு எத்துணை மகிழ்ச்சி! அந்த ஒரு நாள் மட்டும் திருநாள்! மறுநாள்?

பெரியார் பொன்மொழிகள் வழக்கு, திருச்சி நீதி மன்றத்தில் 11.3.50 முதல் நடந்துவந்ததல்லவா? அரசினர்க்கு என்ன கருணையோ? அண்ணாவின் ஆரிய மாயை வழக்கும் அதே நீதி மன்றத்திலன்றோ நடந்தது! இரண்டு வழக்குகளுக்கும் 153A பிரிவில் ஒரே நாளில் ஒரே மாதிரியான தீர்ப்பு! ஆளுக்கு 500 ரூபாய் அபராதம்; கட்டத் தவறினால் ஆறுமாதம் சிறை! இருவருமே அபராதம் கட்டத் “தவறி” 18.9.50 அன்று, திருச்சி சிறைக் கோட்டம் புகுந்தனர். பெரியாருக்குப் பன்னிரண்டாவது முறையாகச் சிறை; இருவர்க்கும் பக்கத்து அறை! பத்து நாள் வாசம்; விழிகள் தாம் பேசும்; தின்பண்டங்கள்தாம் பரிமாற்றம்; வேப்ப மரத்து நிழல்தான் குளிர்விக்கும் என்ன வியப்பு இருவருக்குமே 28.9.50 அன்று காலை 10 மணிக்குத் திடீர் விடுதலை! ஏன்? வெளியில் பெரியாரை விடுதலை செய் அண்ணாவை விடுதலை செய்!' எனத் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஒரே குரலில் எழுப்பிய இடிமுழக்கம்! எங்கே மீண்டும் இணைந்து விடுவார்களோ என்ற அச்சமா?

அண்ணாவை அழைத்துச் செல்லத் தோழர்களோ, வாகனமோ வாரவில்லை பெரியாரின் வேனிலேயே அண்ணாவை எறிக் கொள்ளுமாறு பெரியார் கண்களால் ஆணையிடத் தலைவரின் கருணை மழையில் நனைந்த தளபதி, தலைதாழ்த்தி, வாய் மூடி, அமர்ந்து வர- அடடா; என்ன உருக்கமான காட்சி! தாம் முன்னதாகத் தம் மாளிகையில் இறங்கிக் கொண்டு, அண்ணாவைச் சங்கரம் பிள்ளை வீட்டில் இறக்கிவரப் பணித்தார் பெரியார்!

அக்டோபர் முதல் வாரம் பெரியாருக்கு உடல் நலிவு. அதனால், 8.10.50 அன்று சென்னை மாவட்ட நிர்வாகக் குழு கூடியது. வணிக நிலையங்களின் முகப்புப் பலகை விளம்பரங்களில் பிராமணர் அல்லது இந்து அல்லது முஸ்லிம் என்ற சாதி, மத ஆணவங்களைக் குறிக்கும் சொல்லை அகற்ற வேண்டும்; வரும் 16-ஆம் தேதி முதல் சென்னையிலுள்ள வடநாட்டார் துணிக்கடை மற்றும் உணவுக் கடைகளின் முன் மறியல் துவக்க வேண்டும் - என்பவை முக்கிய முடிவுகளாகும். சென்னையில் மறியல் களமாக சைனா பஜாரில் ஆரியபவான், கிஷின்சந்த் செல்லாராம் கடைகளின் முன் புறமும், முதல் தளபதியாக ஏ.பி. சனார்த்தனமும்- எனவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் எம்.கே. தங்கவேலரும், எம்.கே.டி. சுப்ரமணியமும், மறியல் நாள்தோறும் தொடர்ந்து நடக்க ஆவன செய்து வந்தனர். மறியல் நேரம் மாலை 5 மணி முதல் 7 மணி வரை, முதல் நாள் 8 பேர் கைதாகிப் பின்னர் விடுதலை, செய்யப்பட்டனர். 9.10.50 சேலம் சென்ற பெரியாரைப், புரட்சித் தலைவர் பெரியார் வருகை என வர்ணித்து வரவேற்றனர். சேலம் திராவிடர் கழகத்தினர்!

வடநாட்டார் ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சி தமிழ் நாடெங்கணும் கொழுந்து விட்டு எரிந்தது. ஆங்காங்கு உள்ள பெயர்ப் பலகைகளில் பிராமணாள் என்ற எழுத்துக்கள் அழிக்கப்பட்டன. ரயில் நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் தார்கொண்டு மறைக்கப்பட்டன. இவற்றை யார் செய்தார்கள் என எவர்க்குந் தெரியாது. அரசுக்கும் புரியாததால், அடக்குமுறை கோர தாண்டவமாடியது. அதனால், பெரியார் பொறுப்புடன் தாமே முன் வந்து, கழகத் தோழர்கள் இம்மாதிரி இரகசிய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். எனினும், யார் செய்தாலும், இப்படி இரகசிய அழிப்பு வேண்டாம், என்று அறிக்கை விடுத்தார், 17.10.50 “விடுதலை” நாளேடு வாயிலாக 24.10.50 அன்று சென்னைக்கு வருகை தந்த டெல்லி அமைச்சர் இராஜகோபாலாச்சாரியாருக்கு எதிர்ப்பாக தி.மு.க. பெரிய கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் போன்றோர் அடித்து உருட்டப்பட்டனர். மக்கள் குழுமியுள்ள இடங்களிலெல்லாம் போலீசார் புகுந்து தடியடி நடத்தினர். அநாவசியத் தலையீட்டைக் கண்டித்துப் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. 25-ம் நாள் சென்னையில் நடந்த மத்திய திராவிடர் கழக நிர்வாகக் குழுவில், நவம்பர் 1-ஆம் நாள் எல்லா ஊர்களிலும் வடநாட்டார் துணிக்கடை முன் மறியல் செய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

பெரியார் கடந்த 30 ஆண்டுகட்கு மேலாக லட்சக்கணக்கான கூட்டங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். கைத்தடியை ஊன்றிக் கொண்டோ, இல்லாமலோ, ஒலி பெருக்கி முன்னாலோ, இல்லாமலோ - நின்றவாறேதான் இதுவரை பேசியிருக்கிறார். 1950 அக்டோபர் 21-ஆம் நாளன்று செம்பனார்கோவில் பொதுக் கூட்டத்தில்தான் முதன்முதலில், நின்று பேச இயலாமல், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறே, பேசத் தொடங்கினார்.

சென்னையில் காந்தியார் நினைவு நாள் கூட்டம் காங்கிரசார் நடத்தினர். அதில் பேசிய காங்கிரஸ் தலைவர் காமராசர், வீணே திராவிடர் கழகத்தாரைத் தாக்கிப் பேசினார். குழப்பம் விளைவிப்பதாகவும், ஒழுங்கீனமான முறைகளில் நடப்பதாகவும், சர்க்கார் கடுமையாக இவர்களை அடக்க வேண்டும் என்னும் காமராசர் அரசினரைத் தூண்டி விட்டார். போலிசாருக்கு இந்த ஜாடை போதாதா? மறுநாள் 1.11.50 அன்று நாடு முழுதும் நடந்த வட நாட்டார் துணிக்கடை மறியலில் ஈடுபட்ட கழகத் தொண்டர்களைக் கடுமையாகத் தாக்கினர்; கைது செய்து, வழக்குப் போட்டு, தண்டனை தந்து, மகிழ்ந்தனர். அடக்குமுறைச் செய்திகள் அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தபோதே, 2.11.50 அன்று ஆங்கிலப் பேரறிவாளன் பெர்னாட்ஷா மறைவுச் செய்தியும் செவிகளில் தாக்கியது!

சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் பெரியார் வகுப்புரிமை, சுரண்டல் தடுப்புப் பிரச்சினை பற்றி 7.11.50 அன்று விளக்கவுரையாற்றினார். பி. பாலசுப்ரமணியம் ஆகியோர் ஒரு கூட்டத்தில் “இந்து”, “மித்திரன்” பத்திரிகைகளுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். காமராசர் தனக்குப் பிரதம தளபதியாக அப்போது சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம் அவர்களை ஏவி விட்டார். 1948-ல் இந்தி எதிர்ப்புப் பிரச்சினையில் கழகத்தின் பக்கமிருந்த ம.பொ.சி. 1950-ல் திராவிடர் இயக்கங்களை ஒழிப்பதே தம் முதற்கடமை எனச் சூளுரைத்தார்.

கண்ணகியின் வழக்குரை காதையினை விளக்கமாகக் கூறும் சிலம்புச் செல்வர் 1967-ல் தி.மு.க. தேர்தல் சின்னத்தில் வென்றதும், 1971-ல் தோற்றும், மேலவை உறுப்பினராகித், துணைத் தலைவர் பதவி பெற்றதும், 1977-ல் அ.இ.அ.தி.மு.கழகத்தின் ஆட்சியில் மேலவைத் தலைவர் பதவி ஏற்றதும், 1979-ல் டாக்டர் பட்டம் பெற்றதும் அந்தச் சூளுரையின் விளைவுகளோ என அரசியல் நோக்கர்கள் கேட்கின்றனர்

நவம்பர் 20-ஆம் நாள் திருச்சியில் மத்திய நிர்வாகக் குழுவினர் கூடினர். டிசம்பர் 2- ல் சுரண்டல் தடுப்பு மாநாடும், 3-ல் வகுப்புரிமை மாநாடும் அங்கே நடத்துவதென்றும், 25பேர் கொண்ட பிரச்சாரப் படை ஒன்று மதுரையில் புறப்பட்டுச் சென்னைக்குச் செல்வதென்றும் முடிவாயிற்று. 12.11.50 வரை சென்னை மறியலில் 107 பேர் கைதாகியிருந்தனர். மறியல் களத்தின் இடத்தை மாற்றலாமா என்றும் யோசிக்கப்பட்டது. திருச்சி மாநாடுகட்கு முதல் நாள் நள்ளிரவு, பெரியாரின் கார் ஜப்தி செய்யப்பட்டது. தொண்டர்களை வழியில் இறக்கிவிட்டு, 1 மணியளவில் போலீசார் காரைப் பறித்தனர். 9. 12.30 அன்று அண்ணாவின் “திராவிட நாடு” அலுவலகத்திலிருந்து காகிதக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சியில் இருவரும் அபராதம் கட்ட மறுத்துச் சிறை ஏகினரல்லவா? அதன் தொடர் நடவடிக்கையாம் இது!

டிசம்பர் 10-ஆம் நாள் “விடுதலை” ஆசிரியர் குருசாமி சென்னையில் மறியலில் குதித்துக் கைதாகிப், பின்னர் விடுதலை செய்யப்பட்டார் 14-ந் தேதி வகுப்புரிமை நாள் கொண்டாடி முடிக்கு முன், 15.12.50 அன்று மத்திய உள்துறை மந்திரி, இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல், காலமான துயரச் செய்தி கிட்டிற்று. பார்ப்பனரல்லாதவரென்பதால் அவரிடம் பெரியாருக்கு அளவற்ற மதிப்பு! மேலும், வகுப்புரிமை கோரிப் பெரியார் போராடுவது அறிந்து, அவரே முயன்று. அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தம் செய்து கொள்ள ஏற்பாடு மேற்கொண்டிருந்தார். பட்டேல் மறைவையொட்டி மறியல் போராட்டம் 3 நாளைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பட்டேல் இடத்துக்காகவே காத்திருந்தது போல் இராஜாஜி, 26-ஆம் தேதி உள்துறை அமைச்சரானார். இந்த நேரத்தில்தான் பெங்களூர் எல்.எஸ். ராஜா என்ற அய்யங்கார் வக்கீல் மீது சாட்டப்பெற்ற கிரிமினல் குற்றத்திலிருந்து அவரைத் தப்புவிக்க, அனந்தசயனம் அய்யங்காரும் ராஜாஜியும் தங்கள் பதவியைப் பயன்படுத்திக் கிரிமினல் புரொசீஜர்கோடையே திருத்துவதற்கு முயன்றனராம்.

அன்றைய தினம் பெரியாரின் கார் திருச்சியில் 835 ரூபாய்க்கு ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டது. கழகத் தோழர்கள் அந்த ரூபாய் கொடுத்து, அதைத் திரும்பவும் வாங்கி, மேலும் 750 ரூபாய் செலவில் பழுது பார்த்து, 14.1.51 பொங்கலன்று பெரியாரிடமே வழங்கினர். 1951-ஆம் ஆண்டின் துவக்க நாளே வடநாட்டுத் துணிக்கடை மறியலின் 73-வது நாள். அதுவரை சென்னையில் 312 பேரும் வெளியூர்களில் 20 பேரும் கைதாகியிருந்தனர். ஏராளமான வெளியூர்த் தோழர்கள் தமது சொந்தச் செலவில் சென்னை வந்து மறியலில் கலந்து கொள்ள முந்தினர். ஆனால் ஓரணிக்கு இரண்டிரண்டு பேர்தான் என்று திட்டமிடப்பட்டிருத்தது. பொங்கல் திருநாளை ஒட்டி மறியல் 5 நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் மறியல் போராட்டம் துவங்கியதும், பெரியாரே மறியலில் ஈடுபட்டுக் கைதாகிப், பின் விடுதலை செய்யப்பட்டார். திராவிடர் கழகத்தின் வெற்றி என்பதாக 20.3.51 “விடுதலை” ஒரு தலையங்கம் எழுதியிருந்தது கட்டாய இந்தி ஒழிக்கப்பட்டது; பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிக் காங்கிரஸ் அரசு பரிசிலனை செய்து வந்தது; கோயில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டது; ஜமீன்தார் முறை ஒழிந்தது; 6 அவுன்ஸ் அரிசியை 7 அவுன்சாக உயர்த்தியது; தஞ்சையில் சேரிகளில் மக்களை வேட்டையாடியதை நிறுத்தியது; நெசவாளர்கள் விழிப்படைந்து எழுந்தது; இறுதியாக சென்னைக் கடற்கரை மணற்பரப்பில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்தது. (திராவிடர் கழகந்தான் முதல் கூட்டம் நடத்தியதாகத் தெரிகிறது!)

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சங்கத்தின் தலைவரும். செயலாளரும் வடநாட்டிலிருந்து சென்னை வந்து, 3.2.51 அன்று பெரியாரைச் சந்தித்துக் கலந்து, ஆலோசனை செய்து, விடைபெற்றுத் திரும்பினர். வடநாட்டுக் கடை முன்பு, சைனா பஜாரில் நடைபெற்று வந்த மறியல் 1.3.51 முதல் நிறுத்தி வைக்கப்பட்டது. 500 பேர் அது வரை கைதாகியிருந்தார்கள். ஒரு வார இடைவெளிக்குப் பின்னர் 8.3.51 அன்று 128ஆவது நாளாக மவுண்ட் ரோட் செல்லாராம் கடை முன் மறியல் துவங்கிற்று; ஞாயிற்றுக்கிழமை கடைக்கும், மறியலுக்கும் விடுமுறை. இந்த மறியலின் முதல்நாள், “விடுதலை” ஆசிரியர் குத்தூசி குருசாமி தளபதி; ஒரே நிமிடத்தில் கைதாகி விட்டார். இங்கு மறியல் களம் மாற்றப்பட்ட பின்னர், அரசின் போக்கும் மாறியது. தண்டனை 6 மாதம் வரை போயிற்று. மறியல் செய்யத் தொடங்கியவுடன் அடுத்த நிமிடத்திலேயே கைது செய்யப்பட்டனர். பொது மக்களின் ஆவலும் பரபரப்பும் ஆதரவும் பெருகியதே காரணம்! முன்பு சைனாபஜார் மறியலில் கடைக்காரர்கள், வாயில் முன் கார்களை நிறுத்தி, மறியல் தொண்டர்களுக்கு இடையூறு விளைத்த போதுகூட, அரசு கண்டுங்காணாமல் நடந்தது.

வகுப்புரிமைப் போரில் பெரியார் பெருவெற்றி பெற்றார். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களும் மாநாடுகளும் ஏராளமான உணர்ச்சி எழுப்பின. சர்தார் வல்லபாய் பட்டேலின் முழு முயற்சி காரணமாக அரசியல் சட்டம் 15-வது விதியில் 4-வது உட்பிரிவு ஒன்று சேர்க்கப்பட்டது. அரசியல் சட்டம் ஏற்பட்ட ஓராண்டில் இதுதான் முதலாவது திருத்தமாகும். அதன்படி சமூக நிலையாலும் கல்வியாலும் பிற்படுத்தப்பட்ட குடிமக்கள், அல்லது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் ஆகியோரின் முன்னேற்றங்கருதி அரசு செய்யும் எந்தத் தனி ஏற்பாட்டையும் இந்த விதியின் ஒரு பிரிவோ; அல்லது 29-வது விதியின் 2-வது உட்பிரிவோ தடை செய்யாது; என்ற திருத்தம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1951 பிப்ரவரியில்,

இதுவரை காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுக் கண்ட பலன் பசியும், பட்டினியுந்தான்! வரவிருக்கும் 1952 பொதுத் தேர்தலில் யாரும் இனி காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் - என்று பெரியார் அணைக்கரைப் பொதுக்கூட்டத்தில் 13.3.1951-ல் முதல் முழக்கம் செய்தார். எங்களை உள்ளே போய்ச் சட்ட மன்றத்துக்குள் போராடச் சொல்கிறார்கள் சிலர்) அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது வெளியில் இருந்து கொண்டு தான் வீட்டை இடிக்க வேண்டுமே தவிர, வீட்டுக்குள் இருந்து இடித்தால், நம் தலை மீதுதான் விழும் - என்றார், ஈரோடு பொதுக் கூட்டத்தில் பெரியார்!

பகுத்தறிவின் இன்றியமையாமை குறித்து விளக்க வந்த பெரியார், மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து எவ்வளவோ மாறுபட்டு முன்னேற்றம் கண்டிருக்கிறான், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளால். ஆனால் ஆன்மிகத் துறையில் மட்டும் அறிவை உபயோகிக்கத் தவறுகிறான். ஒரு விருந்தாளிக்கு இலை போட்டுப் பதார்த்தங்கள் பரிமாறாமல் ஒரு உருண்டை சாணியை இலையில் வைத்தால், உடனே எழுந்து கோபித்துக் கொண்டு போய்விடுவான். அதே சாணி உருண்டைக்கு ஒரு பொட்டு வைத்து, இரண்டு அறுகம்புல்லை அதன் மேல் செருகினால், பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொள்வான். ஆரியம் அந்த அளவு அவன் புத்தியை மழுங்க அடித்துவிட்டது. இவை எல்லாம் இன்று நேற்று ஏற்பட்டவை அல்ல, புத்தர் கொள்கைகளை அழித்தொழிக்க, நமது மன்னர்களைத் தூண்டிவிட்டுத் தமிழ்நாட்டில் ஆரியர்கள் இவ்வளவு கோயில்களைக் கட்டினார்கள். இவ்வளவு தெய்வங்களை இறக்குமதி செய்தார்கள். இவ்வளவு வண்டி வண்டியாகப் புராணக்கதைகளைப் புகுத்தினார்கள். இவ்வளவு கோயில் கட்டியிருக்கிறார்களே, ஆரியன் எவனாவது ஒரு கல்லைச் சுமந்திருப்பானா? ஒரு ஆரியப் பெண் ஒரு கூடை மண்சுமந்திருப்பாளா? எந்த ஒரு ஆரியனாவது கோயிலுக்கென்று ஒரு காணி நிலம் எழுதி வைத்திருப்பானா? எல்லாம் திராவிடர் உழைப்பு, திராவிடர் சொத்து. ஆனால் திராவிடர் உள்ளேபோக உரிமையில்லை! என்ன நியாயம் - என்று பெரியார் வினாத் தொடுத்தார்.

நெடுங்காலம் விசாரணையின்றிச் சிறையிலிருந்த கம்யூனிஸ்டுத் தலைவர் ஏ.கே. கோபாலன் ஒரு ஹெபியஸ் கார்ப்பஸ் மனுக் கொடுத்துச் சென்னை ஐகோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். “விடுதலை” ஏடு இதில் பெரும்பங்கு ஏற்றது. அதே போல் தெலிங்கானா போராட்டத்தில் 12 இளைஞர்களுக்குத் தூக்குத் தண்டனை விதித்ததை மாற்றுமாறு “விடுதலை” கோரியது. பின்னர் தூக்குத் தண்டனை ரத்தாகி அவர்கள் உயிர் காக்கப்பட்டது.

வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியல் 151 நாள் நடைபெற்றது. 556 பேர் கைதாயினர். நெசவாளர் குரலுக்குச் செவிசாய்த்து, அரசு சில சலுகைகளை வழங்கியது. அதனால் மறியலை நிறுத்திக் கொள்ள, 1.4.51 திருச்சியில் கூடிய மத்திய செயற்குழு தீர்மானித்தது. காங்கிரஸ் மந்திரிகளுக்குக் கருப்புக் கொடி காட்டி, அவர்களை ராஜிநாமா செய்யக் கோருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழ் நாடெங்கும் காங்கிரஸ் ஒழிப்பு நாள் 1951 ஏப்ரல் 22- ல் கொண்டாடப்பட்டது. திருச்சிப் பொதுக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றார். சென்னைக் கடற்கரையில் நடந்த முதல் கூட்டத்திற்கு, மாலை 8 மணி வரையிலுமே அனுமதி தந்திருக்கும் லட்சக் கணக்கில் மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது. சா.குருசாமி, சி.வி. ராஜகோபாலாச்சாரி, எஸ். ராமநாதன், கே.டி.கே. தங்கமணி, மலேயா சாம்பசிவம் ஆகியோர் பேசினர். 14.4.51- ல் டாக்டர் அம்பேத்கரின் 59-வது பிறந்த நாள் விழா, தமிழகமெங்கும் திராவிடர் கழகத்தாரால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. மே திங்களில் கோவை மாவட்டத்திலும், மதுரை மாவட்டத்திலும் நடந்த வகுப்புரிமை, சுரண்டல் தடுப்பு மாநாடுகளில் பெரியார் கலந்து கொண்டார். இலங்கையில் தனிநாடு கேட்டுத், தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் உரிமைப்போர் தொடுத்ததைப் பெரியார் ஆதரித்தார். காஞ்சியில் அமைச்சர் பக்தவத்சலத்திற்கம், நாகை, மாயூரம் பகுதிகளில் கோபால் ரெட்டிக்கும் கழகத்தார் கருப்புக் கொடி காட்டினர். 17.5.51- ல் மத்திய அமைச்சர் ஜகஜீவன் ராமுக்குத் தி.மு.கழகம் கருப்புக்கொடி காட்டியது. பார்லிமெண்ட் தேர்தலில் பார்ப்பனருக்கு வாக்களிக்க வேண்டாம். காங்கிரசுக்கோ ஒரு பிடி மண்ணைப்போடுங்கள் - என்று கடுமையாகப் பேசி வந்தார் பெரியார். ஜூலையில் தி.க. மாகாண மாநாடு நடைபெற்றது.

சேலத்தில் 22.7.51- ல் நடைபெற்ற பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில், பெரியார் திராவிட நாடு பிரிவினை ஏன் அவசியம் என விளக்கினார்:- வெள்ளைக்காரன் இன்னும் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலை இங்கேயே விட்டு வைத்துச், சுரண்டிக் கொண்டிருக்கிறான். வடநாட்டான் கொள்ளையனாகவே மாறிச் சுரண்டுகிறான். இங்கேயிருந்து கொண்டே, பார்ப்பான் சுரண்டுகிறான். நாம் தனி நாடு கேட்டால், சிறிய நாடு; வாழ முடியுமா? என்கிறார்கள். பாக்கிஸ்தான் கேட்ட போதும், இப்படித்தான் சொன்னார்கள். நீயாகத் தருகிறாயா? நான் ரஷ்யாவை உதவிக்கழைத்து வாங்கிக் கொள்ளட்டுமா? என்று ஜின்னா கேட்டதும் பணிந்தார்கள். நமக்கு அத்தகைய மான உணர்ச்சி வேண்டும் - என்றார் பெரியார்.

அரசியல் சட்டம் நியாயமாகச் செய்யப்படவில்லை . அம்பேத்கார் தவிர, டி.டி.கே., அல்லாடி, திருமல்ராவ், ஒரு கிறிஸ்தவர், ஒரு முஸ்லிம் இருந்தார்கள். நமக்காக யார்? எனவே, சட்டப்படியோ, காங்கிரசார் தந்த வாக்குறுதிப் படியோ, அரசியல் சட்டம் இயற்றப்படவில்லை . அதை முதலில் ஒழிக்க வேண்டும். அதற்காக, வரும் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் - என்பதாகத் திருச்சியில் 17.9.51- ல் பெரியார் பேசினார்.

சமுதாயத் துறையில் வேலை செய்ய வேண்டுமானால் ஆட்சிக்குப் போய்ப் பயனில்லை. அதனால்தான் நாங்கள் ஒதுங்கி நிற்கிறோம். காந்தியார் கூடத் துவக்கத்தில் அப்படித்தான் கூறி வந்தார், பின்னர் அவரே மாறியதால்தான், அரசியல் நமக்கு வேண்டாமென, நான் காங்கிரசை விட்டு விலகினேன் - என்றெல்லாம் பாண்டமங்கலத்தில் பெரியார் தமது கருத்தைத் தெரிவித்தார். ராஜாஜி இப்போது தமது மத்திய மந்திரி பதவியை விட்டு விட்டு வந்திருந்தார். இது எதற்கோ என்று பெரியார் கூர்ந்து கவனித்து வந்தார். 30.10.51 அன்று கம்யூனிஸ்டுத் தலைவர் எஸ். ஏ. டாங்கே திருச்சிக்கு வந்து பெரியாரைச் சந்தித்தார். திராவிடர் கழகம் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு ஓட் செய்வதேன்? என்று பெரியார் 5.11.51 “விடுதலை”யில் எழுதினார். “காங்கிரஸ் எதிர்ப்பு முயற்சிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். எதிர்க் கட்சிகளுக்குள் கட்டுப்பாடு தேவை. சட்டசபைக்குச் செல்கிறவர்கள் திராவிட நாடு பிரிவினையில் நம்பிக்கை வைத்து, அதற்காகப் பாடுபடுவேன் என்று கையெழுத்துப் போட வேண்டும் என்பதில் அர்த்தமேயில்லை. அவர்கள் வாக்குத் தவற மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? தவறினால் எப்படி, என்ன, நடவடிக்கை எடுக்க முடியும்? “திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் நேரத்தில் தன்னிடம் ஆதரவு கேட்டவர்களுக்கு விதித்த நிபந்தனையைப் பெரியார் இவ்வாறாக விமர்சனம் செய்தார். அவர் கணிப்புச் சரியானதென்றே, பின்னாட்களில் மாணிக்கவேலரும், ராமசாமிப் படையாட்சியாரும் நிரூபித்தனர்.

காங்கிரஸ் தோல்விதான் முக்கியம் என்றார் பெரியார். 16.12.51-ல் காங்கிரஸ் தோல்வி நாள் கொண்டாடப் பெரியார் வேண்டுகோள் விடுத்தார். திருச்சியில், ரஷ்யா சென்று திரும்பிய என். எஸ். கிருஷ்ணனுக்கு அளித்த வரவேற்பில், 31.10.51 ல் பெரியார் கலந்து கொண்டு பாராட்டினார். திராவிடர் கழக மத்திய நிர்வாக சபைக் கூட்டம் திருச்சியில் 1951 நவம்பர் 25-ம் நாள் கூடியது. 25, 26, 27, தேதிகளில் கழகத் தோழர்களுக்குத் தேர்தல் பிரச்சார வகுப்பு நடத்தினார் பெரியார். திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் தத்தம் ஆதரவு தருவதற்கு வெவ்வேறு விதமான முடிவுகளை மேற்கொண்டது போல் தோன்றினாலும், உண்மையில் இரு கழகங்களின் முயற்சியும் காங்கிரசைத் தோற்கடிப்பத்திலேயே இருந்தது. இறுதியில் தேர்தல் முடிவுகளும் அப்படித்தானே வந்தன? சில தொகுதிகளில் இரு கழகங்களும் ஒரே வேட்பாளரை ஆதரித்த சூழ்நிலையும் ஏற்பட்டது.