தந்தை பெரியார், நீலமணி/இந்தி எதிர்ப்புப் போர்
"ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவது தான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம்."
- தந்தை பெரியார்
காமராசர் தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு பற்பல நன்மைகளைச் செய்தார்.
மக்கள் அவரை 'கர்ம வீரர்' காமராசர் என்று போற்றிப்புகழ்ந்தனர்.
காமராசரின் வெற்றிக்குப் பெரியார் பெரிதும் பின்புலமாக உதவினார்.
மக்களிடையே 'காமராசரின் ஆட்சி தமிழ் மக்களுக்குக் கிடைத்த மாபெரும் அதிர்ஷ்டம் அவரால் தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் ஏற்றம் ஏற்படும்' என்று தமது பிரசாரத்தின் போதெல்லாம் பெரியார் தவறாது கூறிவந்தார். 1962 - ம் ஆண்டு தமிழ் நாட்டில் காங்கிரசின் மூன்றாவது பொதுத் தேர்தல் நடந்தது.
முதல் தடவையாக காங்கிரசை எதிர்த்து திராவிட முன்னேற்றக் கழகமும் தேர்தலில் போட்டி இட்டது.
காஞ்சிபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக அறிஞர் அண்ணா போட்டி இட்டார்.
பெரியாருக்கு அண்ணாவிடம் உள்ள ஆரம்பக் கோபம் தணியவே இல்லை.
அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரையும், காமராசரையும், காங்கிரசையுமே பெரியார் முழு மூச்சோடு ஆதரித்து தீவிரப் பிரசாரம் செய்தார்.
காமராசர் வெற்றி பெற்றார்.
அண்ணாவை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு வேட்பாளரும்; காங்கிரசுமே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
காமராசர் இரண்டாவது தடவையாக முதல்வரானார். இந்த சமயம் -
சீனா திடீரென்று இந்தியாவைத் தாக்கியது. நாடு முழுதும் நிதி திரட்டப்பட்டது.
அறிஞர் அண்ணா நாட்டிற்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை உணர்ந்தார். ஆட்சியைப் பிடிக்க முடியாமற் போனதை அறவே மறந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏராளமாக நிதி திரட்டி நேருஜிக்கு அனுப்பி வைத்தார். காமராசர் ஆட்சி தமிழகத்தில் ஓர் பொற்காலத்தை உருவாக்கி வந்தது.
மத்திய அரசோ; மீண்டும் கட்டாயமாக இந்தியை ஆட்சிமொழியாக்க முயன்றது.
அப்போது காமராசர் ஆட்சிப் பொறுப்பை பக்தவத்சலனாரிடம் ஒப்படைத்திருந்தார்.
1965, ஜனவரி 29-ம் நாள் முதல் இந்தியே ஆட்சி மொழியாகும் என்று மத்திய அரசு அறிவித்தது.
1965 குடியரசு தினத்தை துக்க நாளாக அறிவித்தார் பெரியார். இந்தி திணிப்பை எதிர்த்து போர்ப் பிரசாரம் தொடங்கினார்.
அத்தனை ஆண்டுகாலம் பொறுத்திருந்த பொது மக்கள் பொங்கி எழுந்தனர்.
முன் எச்சரிக்கையாக அண்ணா கைது செய்யப்பட்டார். போராட்டம் இன்னும் சூடு பிடித்தது. மாணவர்கள் படை திரண்டு எழுந்தனர்.
மதுரையில் பெருங்கலவரம்; சிதம்பரத்தில் துப்பாக்கிச் சூடு; பள்ளிகள் கடைகள் மூடப்பட்டன.
இந்தியை எதிர்க்க தேசியக் கொடி எரிப்புப் போராட்டத்தை பெரியார் அறிவித்தார்; ஆயினும் நாட்டின் மோசமான நிலையை உணர்ந்த பெரியார் போராட்டத்தை பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளி வைத்தார்.
ஆயினும் மொழிப் பிரச்சினை; மக்கள் மனதில் காங்கிரசின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை பெரிதும் துண்டி விட்டுவிட்டது. காங்கிரசின் வீழ்ச்சிக்கு நாட்டில் நிலவிய கடுமையான அரிசிப் பிரச்சினையோடு இந்தியும் சேர்ந்து முக்கிய காரணங்களாக விளங்கின.
எல்லையில் எழுந்த சீனப்போரை அடக்கிய மத்தியஅரசு; தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரை சமாளிக்க முடியாமல் திணறியது.