தந்தை பெரியார், நீலமணி/தமிழ்நாட்டை ஆட்சி செய்த முதல் தமிழர்
முதல் தமிழர்
"சோறு இல்லாதவனுக்குச் சோறும், உடை இல்லாதவனுக்கு உடையும், வீடு இல்லாதவனுக்கு வீடும் கொடுக்கப்பட வேண்டியது எவ்வளவு நியாயமோ, அதுபோல, கல்வி இல்லாதவனுக்குக் கல்வி கொடுக்க வேண்டும்."
- தந்தை பெரியார்
இந்தியாவின் இரண்டாவது பொதுத் தேர்தல், 1957 -ம் ஆண்டு நடைபெற்றது.
அப்பொழுது -
திராவிட முன்னேற்றக் கழகம் மக்களிடையே மிகுந்த செல்வாக்குடன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு இணையாக முன்னேறி வந்து கொண்டிருந்தது.
காங்கிரசு கட்சியின் வேட்பாளராக காமராசர் களத்தில் இறங்கினார். தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காமராசர் தமிழக முதல்வராகப் பதவி ஏற்றார்.
ஒரு தமிழர் என்கிற முறையில் காமராசர் ஆட்சியைப் பெரியார் பெரிதும் வரவேற்றார்.
பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வியும்; உணவும் அளிக்க வேண்டும் என்று பெரியார் அரசுக்குக் கோரிக்கை விடுத்து மேடை தோறும் பேசினார்.
சாதிமுறைகளுக்கும்; அதன் சம்பிரதாயங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் இந்திய அரசியல் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார்.
அதற்காகப் பெரியார் 1957 -ம் ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.
காமராசர் ஏழைகளின் நலனை மனதில் கொண்டு ஆட்சி செய்தார்.
1958 -ம் ஆண்டு. டிசம்பர் மாதம்; எஸ்.எஸ்.எல்.சி. வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வியும்; மதிய உணவும் வழங்கப்படும் என்று காமராசர் அறிவித்தார். 110 உயர்நிலைப் பள்ளிகள் புதிதாகத் தொடங்கப் பட்டன.
பெரியாரின் கோரிக்கையை காமராசர் மதித்துச் செயல்பட்டார்.
பெரியார் காமராசரைத் 'தமிழர் நலம் காக்கும் தமிழர்' என்று பாராட்டினார்.
காமராசரின் கரத்தை வலுப்படுத்த அவரது ஆட்சிக்குப் பெரியார் பேராதரவு கொடுத்தார். தமிழர்களின் முன்னேற்றத்திற்கு உதவும் காமராசரை ஒரு விடிவெள்ளி என்று புகழ்ந்தார்.
1960 -ம் ஆண்டு பெரியார் தனித் தமிழ்நாடு பிரிவினை கோரினார். இதற்காகத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள தேசப் படத்தை எரித்தார்.
அரசு பெரியாரைக் கைது செய்தது.