தந்தை பெரியார், நீலமணி/உலகம் சுற்றிய ஈ.வெ.ரா.
"நமது மக்களும், சமுதாயமும் மற்ற நாட்டு மக்களைப் போன்று முன்னேற்றமடைய வேண்டுமென்று நான் தொண்டாற்றுகிறேன்.
அதனாலேயே நம் மக்களுக்கு நன்மை செய்யக் கூடியவர்களையும், நம் சமுதாய முன்னேற்றத்திற்காகக் காரியங்கள் செய்யக்கூடிய ஆட்சியாளரையும், சமுதாயத்தின் நலன் கருதியே ஆதரிக்கிறேன்."
- தந்தை பெரியார்
தமிழ்நாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் பெருகியது.
1931 - ம் ஆண்டு விருதுநகரில், மூன்றாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், சுயமரியாதை இயக்கம் சமதர்மக் கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தத் திட்டம் வகுத்தது.
ஈ.வெ.ரா. சமதர்மக் கொள்கையுடைய நாடுகளைக் காணவும்; மேலைநாட்டு அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை நேரில் கண்டறியவும், மேலைநாடுகள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார்.
1931, டிசம்பர் 31ம் நாள் ஈ.வெ.ரா சென்னையிலிருந்து புறப்பட்டார். தமது சுற்றுப் பயணத்தில், ரஷ்யா, துருக்கி, கிரீஸ், எகிப்து, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்ச், போர்ச்சிகல் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.
அங்குள்ள தொழிலாளர் நிலை; சமூக நிலை, அரசியல் நிலை இவைகளைப் பற்றி விரிவாக அறிந்து கொண்டார்.
13.12.1931 முதல் 11.11.1932 வரை 11 மாதகால சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் வந்த ஈ.வெ.ரா. நாகம்மையாருடன் சேர்ந்து இலங்கைச் சுற்றுப் ப்யணத்தை மேற்கொண்டார்.
இலங்கைத் தமிழர்கள் ஈ.வெ.ராவின் பேச்சை; கொள்கைகளை அறிந்தவர்கள். பல பொதுக் கூட்டங்களிலும், இலங்கைத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும்பேசினார்.
தமிழ் மக்கள் அவரது பேச்சை ஆர்வமுடன் கேட்டதுடன்; அவரது கருத்துக்களை, அச்சிட்டு விநியோகம் செய்தனர்.
1932 - ம் ஆண்டு நவம்பர் மாதம் ஈ.வெ.ரா. தமிழகம் வந்து சேர்ந்தார்.
ஈரோட்டில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுப் பயணத்தின்போது வளர்ந்த தாடியை, பெரியார் நிரந்தரமாக்கினார்.
இரவு பகல் பாராமல், சதா பொதுத் தொண்டு, மேடைப் பேச்சு, சுற்றுப் பிரயாணம் என்று உற்சாகமாகச் செயல்பட்டு வந்தார் ஈ.வெ.ரா.