தந்தை பெரியார், நீலமணி/தொழிலாளர்களின் தோழர்
"எந்தக் காரணத்தைக் கொண்டும் பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும், பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், அவர்கள் ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான், தொழிலாளர் கிளர்ச்சியின் முக்கியத்துவமாக இருக்க வேண்டும்."
- தந்தை பெரியார்
பொது மக்களுக்கு உண்மையான தொண்டு செய்ய எண்ணுபவர்களுக்கு எந்தக் கட்சியோ அரசியல் சார்போ எதுவும் தேவையில்லை என்பது ஈ.வெ.ராவின் கருத்து.
இரயில்வே தொழிலாளர்கள், வேலை நிறுத்தம் செய்தார்கள். சட்ட விரோதமானது என்று அதை அரசாங்கம் அறிவித்தது.
தொழிலாளர் ஆத்திரம் கொண்டு, பலாத்காரத்தில் ஈடுபட்டார்கள்.
அரசின்தடை உத்தரவைக் கேட்டு, அதுவரை தொழிலாளரை ஆதரித்த கட்சிகள் பேசாமல் இருந்து விட்டன.
ஈ.வெ.ரா. தடையுத்தரவை மீறி தொழிலாளர்களுக்காகப் பல கூட்டங்களில் பேசினார். அவர்களது கோரிக்கைகள் நியாயமானவை; ஏற்கப்பட வேண்டியவை என்று குடியரசு பத்திரிகையில் எழுதினார். தொழிலாளர்களுக்காக கூட்டம் போட்டு பொது மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
அரசு அவரைக் கைது செய்தது. பல குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் முன் வைத்தது.
ஈ.வெ.ரா. எதிர் வழக்காட மறுத்துவிட்டார்.
சிறை தண்டனை ஏற்கத் தயாராயிருந்த ஈ.வெ.ராவை அரசு விடுதலை செய்து விட்டது.
அதன்பிறகு, சுயமரியாதை இயக்க மகாநாடுகளைக் கூட்டி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படப் பாடு பட்டார்.
சாதியை ஒழிக்க, கலப்புத் திருமணம் ஒன்றுதான வழி என்று திடமாகக் கூறினார்.
விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு உண்டு என்று வலியுறுத்தினார்.
1909 - ல் பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் தனது தங்கை மகளுக்கு விதவா மறுவிவாகம் செய்து வைத்தவர் ஈ.வெ.ரா.
எதற்கும், எதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ஈ.வெ.ரா.
தமிழ்நாட்டில் அவரது சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. தமிழர்களின் உள்ளங்களில் தந்தை பெரியார் இடம் பெற்றார்.
ஈ.வெ.ராவின் புகழ், கடல் கடந்தும்; அன்னிய மாநிலங்களுக்கும் பரவி; அழைப்புகள் வந்தன. மலேயாவில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை மாநாட்டிற்கு வரவேண்டும் என ஈ.வெ.ராவை அழைத்தார்கள்.
1929 - ம் ஆண்டு, டிசம்பர் 15ம் நாள் தன் மனைவி நாகம்மையாருடனும், தன் நண்பர்கள் சிலருடனும் ஈ.வெ.ரா. மலேயா புறப்பட்டார்.
மலேயாவிலுள்ள தமிழர்கள் ஈ.வெ.ராவை அன்புடன் வரவேற்றார்கள்.
சாதி ஒழிப்பு, கலப்புத் திருமணம், சுயமரியாதை ஆகியவை பற்றிய ஈ.வெ.ராவின் சீர்திருத்தக் கருத்துக் களைக் கேட்ட மலேயா மக்கள், அறியாமையிலிருந்து விடுபட்டார்கள்.
ஈ.வெ.ராவின் பேச்சில் ஒரு புதிய உலகத்தை அவர்கள் கண்டார்கள். பகுத்தறிவுவாதிகளாக மாறினார்கள்.
மலேயாவில் ஈ.வெ.ரா ஒருமாத காலம் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள பல ஊர்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்துத் தமது கொள்கையைப் பரப்பினர்.
1930-ம் ஆண்டு ஜனவரி மாதம், தமிழகம் திரும்பிய ஈ.வெ.ராவுக்கு சென்னையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து -
1930, மே மாதம் 10,11 தேதிகளில், ஈரோட்டில் இரண்டாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இம்மகாநாட்டின் விசேஷம் என்னவென்றால், வந்திருந்த அனைவருக்கும் உணவு சமைப்பது முதல் பரிமாறுவது வரை, எல்லா வேலைகளையும் அரிசன தொண்டர்களைக் கொண்டுதான் ஈ.வெ.ரா செய்வித்தார். இந்தியாவில் இதுவே முதலாவதாகும்.