தந்தை பெரியார், நீலமணி/கண்ணீரும் தண்ணீரும்

8. கண்ணீரும் ... தண்ணீரும்

"மூடநம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே, உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வங்தது.

முன்னோர்கள் செய்து வைத்ததை மாற்றக் கூடாதே என்று கவலைப் படுகின்றவர்கள் கோழைகளேயாவார்கள். முன்னோர்களை விடக் கண்டிப்பாக நாம் அதிக புத்திசாலிகளாவோம்.

நம்மைவிட நமக்குப் பின்னால் வருகிறவர்கள் இன்னும் அனுபவசாலிகளேயாவார்கள்."

- தந்தை பெரியார்

இராமசாமிக்கு, நிமிச நேரத்தில் அங்கு நிலவிய, சூழ்நிலையின் இறுக்கம் புரிந்துவிட்டது - இரண்டு அன்பு உள்ளங்கள், நட்போடு ஒன்றாய்ப் பழகுவதற்குக் கூட ஒரு தகுதி வரையறுக்கப்பட்டிருந்தது.

உயர் சாதியினர், அவர்கள் அந்தஸ்துக்கு ஏற்பவும்: கீழ்ச் சாதியினர் அவர்களுக்குச் சமமானவர்களுடன்தான், நட்பும் உறவும் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் - கீழ்ச்சாதிக்காரனை மேல் சாதியினர் பாகுபாடின்றி - யார் வேண்டுமானாலும் தங்களுக்கு அடிமைபோல் ஆண்டு அனுபவிக்கலாம். இது எந்த விதத்தில் நியாயம்? - என்று இராமசாமி எண்ணிக் கொண்டிருக்கும் போதே -

காளி மகிழ்ச்சி பொங்கக் கூறினான்.

"அம்மா... இவருதாம்மா என்னோட சினேகிதரு நம்ம அப்பாரு கூட இவங்க பண்ணையிலேதாம்மா வேலை செய்யறாரு. சின்ன எசமான் ரொம்ப நல்லவரு அம்மா..."

காளியின் பேச்சைக் கேட்டு அவன் தாய் பதறிப் போனாள்.

"ஐயோ... பெரியநாயக்கரய்யா வீட்டுப் பிள்ளையா நீங்க?" என்று அலறியவள்

"சின்ன எசமான் நீங்க இந்தத் தெருவுக்குள்ளாறெ, எங்க வூட்டுக்கெல்லாம் வரலாமுங்களா? என் மவன் கூட நீங்கள்ளாம் சேரலாமுங்களா!" என்றாள் மிகவும் பயந்தபடி.

"இதில் என்ன அம்மா தப்பு இருக்கு? காளி, என்னோட சினேகிதன். நான் வலுவிலே, அவனோடு பழகினதுக்கு, சினேகமா இருந்ததுக்கு உங்க பிள்ளையைப் போட்டு ஏன் இப்படி அடிக்கறீங்க? அவன் மேலே என்னதப்பு இருக்கு?" என்று இராமசாமி கேட்டார்.

"எசமான்... நீங்க சின்னப் புள்ளே... உங்களுக்கு இந்த விசயமெல்லாம் புரியாது. நாங்க கீழ்ச்சாதிக்காரங்க. எங்க இடத்துக்கெல்லாம் நீங்க வரக்கூடாது. பெரிய எசமானுக்குத் தெரிஞ்சா எங்களைக் கொன்று போட்டுருவாரு.”

"நீங்க எல்லாம் கீழ்சாதின்னு யாரு சொன்னாங்க? அதெல்லாம் சுத்தப் பொய் நம்பாதீங்க.”

காளியின் அம்மா மெல்லச் சிரித்தாள்.

"எசமான்! அதை இந்த ஊரு சொல்லுது; உலகம் சொல்லுது. எல்லாத்துக்கும் மேலே காலங்காலமா, தீண்டப்படாதவன்னு வாழற எங்க பொறப்பைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? வாதம் பேசினாநாங்க வாழ முடியாது.

எசமான், சீக்கிரமா இங்கிருந்து போயிடுங்க; இனிமே என் மவன் கூடவும் சேராதீங்க. அவனை விட்டுருங்க. யாராவது உங்களோடு பார்த்துட்டா, காளியோட அப்பாவுக்குத்தான் கஷ்டம் வரும்." இதையெல்லாம் கூறும்போது, பயத்தால், காளியின் உடல் நடுங்கியது. மகனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

அதற்கு மேலும் அங்கிருந்து அவர்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க இராமசாமி விரும்பவில்லை.

“சரி... ரொம்பத் தாகமா இருக்கு... கொஞ்சம் தண்ணி குடுங்க... குடிச்சுட்டுப் போகிறேன்," என்றார்.

இதைக் கேட்டதும் காளியின் அம்மா, தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி,

"ஐயோ...தண்ணியா கேக்கறீங்க?" என்றாள். ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டதைப் போல.

"ஏன்? தண்ணி இல்லியா?" இராமசாமி தயங்கியபடிக் கேட்டார்.

காளியின் அம்மாவுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

இராமசாமியைப் பரிதாபமாகப் பார்த்தபடிக் கூறினாள்: "சின்ன எசமான்... வீட்டிலே பானை நிறையத் தண்ணி இருக்கு; ஆனாலும் தவிச்ச வாய்க்கு உங்களப் போல உள்ளவங்களுக்குத் தண்ணி கூட கொடுக்க இயலாத பாவிங்க நாங்க.

நீங்க என் கையாலெ தண்ணி வாங்கிக் குடிச்ச சேதி தெரிஞ்சா; உங்களவங்க என் குடிசையை மட்டுமில்லே; இந்த தெருவையே கொளுத்திடுவாங்க.

கஞ்சியையோ கூழையோ குடிச்சிட்டு உங்க காலுங் கீழே எங்களை உசிரோட வாழ விடுங்க. அதனாலே சொல்றேன், தயவு செய்து இங்கெல்லாம் வராதீங்க... என் மகன் கூடப் பேசாதீங்க... சேராதீங்க... அவனை விட்டுடுங்க.”

அந்தத் தாய் கையெடுத்துக் கும்பிட்டாள். இராமசாமி, காளியின் பக்கம் திரும்பினார்.

தாயின் நீண்ட பேச்சைக் கேட்ட அவன், இன்னும் அதிகம் பயந்து போய், பரிதாபமாக இராமசாமியைப் பார்த்தான். இராமசாமி குடிசையைச் சுற்று முற்றும் பார்த்தார். ஒரு மூலையில் தண்ணீர்ப் பானை இருந்தது. மூடியிருந்த அதன் மீதிருந்த அலுமினியக் குவளையால் தாகம் தீரத் தண்ணீரை மொண்டு குடித்தார்.

காளியும், அவன் தாயாரும் இந்தக் காட்சியை பயந்து நடுங்கிய உள்ளத்துடன் பார்த்துக்கொண் டிருந்தனர்.

இராமசாமி மெளனமாக அந்தக் குடிசையை விட்டு வெளியே வந்து விட்டார்.

வழியில் அவரை அடையாளம் கண்டு கொண்ட சிலர் சட்டென்று முண்டாசை அவிழ்த்துக் கக்கத்தில் வைத்துக் கொண்டனர்.

காலில் இருந்த செருப்பை உதறிவிட்டு; ஒரமாக ஒதுங்கி நின்றனர்.

இவர்களின் இந்தச் செய்கைகள், தன்னிடமோ; தன் குடும்பத்தின் மீதோ கொண்டுள்ள அன்பின் காரணமாக; அல்லது மரியாதையின் நிமித்தமானது என்றால் இராமசாமி சந்தோஷப்பட்டிருப்பார் -

ஆனால் இதற்குக் காரணம் அதுமட்டுமல்ல, அவர்களது அயராத முழு உழைப்பையும் அங்கீகரித்துக் கொண்டு; அவர்களை மட்டும், தீண்டத்தகாதவர்கள் என்னும் முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கும் மேல் ஜாதியாரிடம் அவர்களுக்குள்ள பயமே இதற்குக் காரணம், என்று எண்ணியபோது இராமசாமியின் நெஞ்சு துடித்தது.