தந்தை பெரியார், நீலமணி/நெஞ்சிலே பட்டவடு

9. நெஞ்சிலே பட்ட வடு...

"மனிதன் உலகில் தன் சுயமரியாதையை, தன்மானத்தை, உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.

பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும். நான் ஒரு பகுத்தறிவுவாதி என்று கருதிக் கொண்டிருக்கிறேன். பகுத்தறிவுக்கு ஒத்த எதுவும் எனக்கு விரோதம் அல்ல. பகுத்தறிவுக்கு ஒவ்வாத எதுவும் எனக்கு நட்பும் அல்ல. இதுதான் எனது நிலை."

- தந்தை பெரியார்
செந்தாமரைப் பூவின் அழகையும், மணத்தையும் மனிதன் நேசிக்கிறான். அந்தப் பூவும் அவனுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் - அது பிறந்த சேற்றையும், சகதியையும் மட்டும் கேவலமாக வெறுக்கிறான்; அசிங்கமாகக் கருதுகிறான்.

சேரியைக் கடந்து வெகுதூரம் வந்த பிறகும் அவரால் காளியையும், அவன் தாயாரையும் மறக்க முடிய வில்லை.

காளியும், அவன் அம்மாவும் அவர் கண் முன் மாறிமாறித் தோன்றிக் கொண்டிருந்தனர். வழியெல்லாம் அவர்களைப் பற்றிச் சிந்தித்தபடியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

எவ்வளவு புத்திசாலியான பெண்மணி காளியின் அம்மா. 'வாதம் பேசினா நாங்க வாழ முடியாது'ன்னு வாழ்க்கையின் எதார்த்தத்தை - தங்களின் இயலாமையை, எவ்வளவு இயல்பாய், இரண்டே வார்த்தைகளில் கூறிவிட்டாள்.

இந்த சாதிப்பிரிவு, இவர்களை எவ்வளவு கொடுமையாய் அடக்கி வைத்திருக்கிறது;

அவள் கட்டியிருந்த கிழிந்த நூல் சேலைக்குப் பதில் - பட்டுப் புடவையும்; பொன் நகைகளையும் பூட்டித் தன் வீட்டுக் கூடத்தில் கொண்டு போய் நிறுத்தினால் -

அழகிலும், அறிவிலும், காளியின் தாயார், தன் தாய்க்கு எந்த விதத்தில் தாழ்ந்து நிற்பாள்?

தன் ஆசை மகனைக் கைவலிக்க அடித்து விட்டு; அப்படி யாருக்காகவோ, எதற்காகவோ அடிக்க நேர்ந்ததை எண்ணி, அந்தத்தாய் தன் மகனைக் கட்டிக் கொண்டு அழுதாளே!

தன் தாயார் தங்களிடம் செலுத்துகிற அன்பிற்கு இது எந்த விதத்தில் குறைந்து போயிற்று. சிந்திக்கத் தெரிந்த இப்படியொரு அம்மாவைப் பெற்ற காளி அதிர்ஷ்டக்காரன்தான்.”

அந்தத் தாயைக் கையெடுத்துக் கும்பிட வேண்டும் போலிருந்தது இராமசாமிக்கு.

இப்படிப் பலவாறு எண்ணியபடி, கால்கள் போன போக்கில் சென்று கொண்டிருந்த இராமசாமிக்கு அப்போதுதான் புரிந்தது - தன்னுடைய வகுப்பு வாத்தியார் வசிக்கும் தெருவழியே போய்க் கொண்டு இருக்கிறோம் என்பது.

அந்தத் தெருவிற்கே வரக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர் இராமசாமி.

ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில், சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ராமசாமியைப் பார்த்துவிட்டு,"பள்ளிக்கூடம் போகாமல்; நாயக்கர் பிள்ளை ஊரைச் சுத்திட்டுப் போறான் பாரு" என்று அவர்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டது அவர் காதில் தெளிவாக விழுந்தது.

அதை இலட்சியம் செய்யாமல் அவர்களைத் தாண்டி, தன்னுடைய வாத்தியார் வீட்டு வாசலைக் கடக்கும்போதும் - இராமசாமி ஒரு கணம் அந்த வீட்டையே வெறிக்கப் பார்த்தபடி நின்றார்.

விட்டின் கதவு சாத்தப்பட்டிருந்தது. விசாலமான திண்ணை வெறிச்சோடிக் கிடந்தது. மாலை வேளைகளில், சில பணக்கார வீட்டுப் பிள்ளைகள், தனியாகப் பணம் கொடுத்து அந்தத் திண்மையில் அமர்ந்து ஆசிரியரிடம் பாடம் கற்றுக் கொள்வதுண்டு.

அந்த வீட்டைப் பார்க்கப் பார்க்க இராமசாமியின் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கி எழுந்தது. தன் இதயத்தை யாரோ பலம் கொண்ட மட்டும் கசக்கிப் பிழிவது போலிருந்தது.

அந்த வீட்டைக் கோபமாகப் பார்த்தபடி வேகமாகக் கடந்து மேலே சென்றார்.

எத்தனை முயன்றாலும் நெஞ்சிலே பட்ட வடுவாக அன்று நடந்த சம்பவத்தையும் -

அதனால் தன் மனம் அனுபவித்த மிகப் பெரிய வேதனையையும், அவரால், ஒதுக்கித் தள்ளி விடவோ; மறக்கவோ முடியவில்லை. அந்தச் சம்பவம் இதுதான் -

- ஒரு நாள்

எங்கேயோ போய்விட்டு அந்தத் தெரு வழியாக இராமசாமி வந்தபோது வாத்தியார் வீடு திறந்திருந்தது. இராமசாமிக்கு அப்போது மிகவும் தாகமாயிருந்ததால், வீட்டினுள் சென்றார்.

குடிக்கத் தண்ணிர் கேட்டார். வாத்தியாரின் மகள் செம்பு நிறைய நீர் கொண்டு வந்து டம்ளரில் ஊற்றினாள். இராமசாமி அதை வாங்கக் கை நீட்டியபோது, டம்ளரைக் கையில் கொடுக்காமல் தரையில் வைத்தாள். இராமசாமி தண்ணீரை எடுத்துக் குடிக்கத் துவங்கும் போது, "எச்சில் பண்ணாமெத் தூக்கிக் குடிங்க," என்றாள் ஆசிரியரின் மகள்.

இராமசாமி அப்படியே செய்தார்.

அதன்பிறகு, இராமசாமி குடித்த டம்ளர் மீது இரண்டு மூன்று முறை நீர் ஊற்றிக் கழுவி சுத்தமானதாக எண்ணிய பிறகே அந்த டம்ளரை உள்ளே எடுத்துக் கொண்டு சென்றாள். ஆசிரியரின் மனைவி இதையெல்லாம் அருகிலிருந்து சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள்.

இராமசாமி அப்படியே குன்றிப் போனார்.

அந்த அம்மாளின் இந்தச் செய்கை, அவரது சுயமரியாதையை வெகுவாகப் பாதித்ததுடன்; மிகுந்த அவமானத்திற்கு ஆளாக்கப்பட்டது போலவும் மனதை வெகுவாக வருத்தியது.

பள்ளி ஆசிரியர் வைதீகர், ஓதுவார் வகுப்பைச் சேர்ந்த சைவப் பிள்ளைமார். அவர் மற்றவர்களைவிடத் தங்கள் சாதியே உயர்வு என எண்ணுபவர்.

இப்படிப்பட்ட ஆசிரியர் வீட்டில்; கேட்டுத் தண்ணீர் வாங்கிக் குடிப்பதைவிட, காளியின் வீட்டில் மொண்டு குடித்து விட்டு வந்ததே அவர் மனதிற்கு மகிழ்ச்சி ஊட்டுவது போல் தோன்றியது.

அதன் பிறகு -

அந்த ஆசிரியர் வீட்டை மட்டுமல்ல; அந்த உயர் சாதிக்காரர்கள் வசிக்கும் தெருவையே இராமசாமி புறக்கணித்தார். ஆனால், இன்று எப்படியோ வழிதவறி வந்துவிட்டார். இதையெல்லாம் எண்ணிப் பார்த்தபோது,

இராமசாமிக்கு வேடிக்கையாகவும் - மறுபுறம் வருத்தமாகவும் இருந்தது.

ஒருகணம் அவர் தங்கள் குடும்பத்தையே எண்ணிப் பார்த்தார்.

இராமசாமியின் தாயார், மற்றெவரையும் விட வைணவ பக்தர்களான, தங்கள் சாதிதான் உயர்வானது என்று எண்ணுபவர். அதையே, மகனிடம் கூடப் பலமுறை கூறி உபதேசம் செய்திருக்கிறார்.

ஆனால் -

ஆசிரியரின் மனைவியோ, 'ஒதுவார் சாதியே உயர்வு', என்று அவரை அங்கீகரிக்கவில்லை.

இராமசாமிக்கு இவை எல்லாமே வேடிக்கையாகத் தோன்றியது.

ஒவ்வொரு பிரிவினரும், மேல் மட்டத்தில் தங்களையே உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தாலும் உள்ளுர அவர்களுக்குள்ளும் வேற்றுமை இருந்தது.

ஆனால் -

ஆதிதிராவிடர்களை அன்னியர்களாக எண்ணித் தள்ளி வைப்பதிலும்; தீண்டத்தகாதவர்கள் என்று தெருவுக்குள் விடாமலிருப்பதிலும் மட்டும்; அனைத்து மேல் சாதியினருமே ஒற்றுமையாயிருந்தனர். இதற்கு இராமசாமியின் குடும்பமும் விதிவிலக்கல்ல.

இராமசாமியின் அம்மா, விரதம், தெவசம், நோன்பு, காலங்களில் வேற்று சாதியினருடன் பேசவோ; அவர்கள் கண்ணில் படவோ கூட மாட்டார். தன் வீட்டில் வேற்று சாதிக்காரர்களைச் சேர்க்க மாட்டார்.

அவர்களுக்குத் தண்ணீரோ - உணவோ கொடுக்க வேண்டியிருந்தால் கூட, 'ஆசிரியரின் மனைவிக்குத் தான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை’ என்பது போல் நடந்து கொள்வார்.

இவற்றையெல்லாம் வெறுப்போடும்; வேதனையோடும் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர, அந்த வயதில் அவரால் என்ன சீர்திருத்தம் செய்துவிட முடியும்? இதனால் -

தங்களை மட்டும் உயர் சாதியினர் என்று கூறிக் கொள்கிறவர்கள் அனைவர் பேரிலுமே நாளுக்கு நாள் இராமசாமியின் உள்ளத்தில் ஒரு தார்மீகமான வெறுப்பும், கோபமும் வேகமாக வளர்ந்து பெருகிக் கொண்டே வந்தது.

குமுறிக் கொண்டிருக்கிற எரிமலை எனறாவது ஒரு நாள் வெடிக்காமலா போகும்! அதற்கான காலம், நேரத்திற்காகவே அன்றிலிருந்து இராமசாமி காத்துக் கொண்டிருந்தார். தாழ்ந்த சாதியினர் என்று மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களிடம் முன்னிலும் அதிகமாக ஒட்டுறவுடன் பழகினார்.

சலீமைத் தொடர்ந்து இராமசாமிக்குப் பல முஸ்லிம் இளைஞர்கள் நண்பர்களானார்கள்.

காளியைப் போல பல பிள்ளைகளைத் தேடிப் பிடித்து கொண்டார்.

கையில் உள்ள தன் காசுக்குச் சேரிப்பிள்ளைகளுக்கு எதையாவது வாங்கிக் கொண்டு போய்க் கொடுப்பார். வீட்டில் அம்மா, தன் குழந்தைகளுக்கென்று ஆசையாய்ச் செய்து வைத்திருக்கும் இனிப்புப் பண்டம், பலகாரங்கள் எல்லாம் இரகசியமாக இராமசாமி மூலம் சேரிக் குழந்தைகளை வந்து அடையும்.

அவர்கள் கனவு கூடக் கண்டிராத அந்த நெய்ப் பண்டங்களை - சேரிக் குழந்தைகள் ரசித்து உண்பதைக் கண்டு மகிழ்ந்தார்.

இப்படியெல்லாம் நடந்து கொள்வதின் மூலம் உயர் சாதியினருக்குத் தான் ஏதோ தண்டனை கொடுத்து விட்டது போன்ற ஓர் ஆத்ம சந்தோஷத்தை இராமசாமி தனக்குள் அனுபவித்தார்.

அந்த மகிழ்ச்சியைத் தன் சக மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் -

இராமசாமியின் இந்த அல்ப சந்தோஷமும், சுதந்திரமும் திடீரென்று ஒரு நாள் பறிக்கப்பட்டு விட்டது.

ஆம்!

உயர்சாதியினருக்குத் தலைக் குனிவு ஏற்படுத்தும் இராமசாமியின் செய்கைகள் எல்லாம் - சேரியிலிருந்து; சலீம் வீடு சென்று வருவது வரை - ஒன்று விடாமல் இராமசாமியின் தாயாரிடம் வந்து அறிந்தவர்கள் பலரும், ஒப்பாரி வைப்பது போல், புகார் செய்து புலம்பித் தீர்த்தனர்.

மகன் திருந்தி விட்டதாக எண்ணிக் கொண்டிருந்த சின்னத் தாயம்மையார், மிகுந்த வேதனைக்குள்ளாகி, எல்லாவற்றையும் ஒன்று விடாமல், தன் கணவரிடம் கூறிவிட்டார், அதன் விளைவு?