தந்தை பெரியார், நீலமணி/காசியில் கற்றுக் கொண்ட பாடம்

14. காசியில் கற்றுக் கொண்ட பாடம்

"பாமரனின் ஞான சூனியம், சுயநலக் காரனின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே இனிவரும் உலகச் சிற்பிகளாக முடியும்."

- தந்தை பெரியார்

'துறவுக்குத் துணை எதிரி' என்பதை இராமசாமி கற்றுக் கொண்டார்.

அவருடன் கூட வந்த தங்கை புருஷனும் மற்ற நண்பரும் சென்னையை அடைந்ததும் நாம் எதற்காகக் காசிக்குப் போகிறோம்? என்று கேட்டனர்.

"காசிக்குச் சென்று கொஞ்ச காலம் சாமியாராக வாழ்ந்து பிறகு துறவி ஆகிவிடலாம்” என்று கூறினார்.

இதைக் கேட்டதும் இருவரும் திடுக்கிட்டும் போனார்கள்.

"எங்களுக்குத் துறவியாக விருப்பம் இல்லை; உடனே ஊருக்குப் போக வேண்டும்" - என்றனர்.

இராமசாமி மறுப்பு ஏதும் கூறாமல் உடனே அவர்களை ஈரோட்டுக்கு அனுப்பி வைத்தார். மறு ரயிலிலேயே,தனியாக அவர் காசிக்குப்புறப்பட்டு விட்டார்.

இரயிலில், இராமசாமிக்கு இரண்டு பிராமணர்களின் துணை கிடைத்தது. அவர்களும் அவரைப் போலவே காசிக்குச் செல்வதாகக் கூறினார்கள்;

வழியில் பெஜவாடாவில் சில நாள் தங்கி விட்டு, பிறகு காசி போகலாம் என்று இரு பிராமணர்களும் கூறினர். இராமசாமியும் சம்மதித்து பெஜவாடாலில் இறங்கினார்.

அந்த இரு பிராமணர்களும், வீதிதோறும் பஜனை பாடல்கள் பாடி யாசகம் செய்தனர். இராமசாமியும் அவர்களுடன் செம்பு ஏந்திச் செல்வார். அதன் மூலம் கிடைக்கிற அரிசியைக் கொண்டு மூவரும் சமைத்து உண்டனர்.

அவ்வூரிலுள்ள அரசாங்க உத்தியோகஸ்தரான முருகேச முதலியார், இந்த பிராமணர்களின் பஜனையையும், கதை சொல்லும் திறமையையும் கண்டு "இனி நீங்கள் யாசகம் எடுக்க வேண்டாம். இங்குள்ள தமிழர்கள் வீட்டில் ஒருநாள் வீதம் சாப்பிடலாம்," என்று ஏற்பாடு செய்தார்.

ரங்கநாத நாயுடு என்பவர் அவ்வூரில் பெரிய செல்வந்தர் அவருடைய வீட்டில் மூவரும் விருந்துண்டனர். மாலை பிராமணர் இருவரும் இராமாயணம் படித்தனர்.

இரவு நாயுடு இராமசாமியைத் தனியே அழைத்து, "நீ இந்த பிராமணர்களை நம்பி காசிக்குப் போக வேண்டாம். இவர்கள் உன்னைக் கைவிட்டு விடுவர்." என்று எச்சரித்தார். இராமசாமி இசையவில்லை.

"சரி அப்படியானால் தாங்கள் அணிந்திருக்கும் நகைகளையாவது என்னிடம் பத்திரமாக வைத்துவிட்டுச் செல்லுங்கள், காசியிலிருந்து திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறினார்.

இராமசாமிக்கு இந்த ஏற்பாடு பிடித்தது. இராமசாமி, தான் அணிந்திருந்த தங்கக் காப்பு, வைரக் கடுக்கன், வைரமோதிரம், தங்கச் சங்கிலி, தங்க அரைஞாண் இவை அனைத்தையும் ஒரு பெட்டியில் வைத்து நாயுடுவிடம் ஒப்புவித்தார்.

இவற்றில், ஒரே ஒரு தங்க மோதிரத்தை மட்டும், போட்டுக் கொண்டு, மற்றவர்களுடன் காசிக்குப் புறப்பட்டார்.

போகிற வழியில் கல்கத்தாவில் சில நாள் தங்கினார்கள்.

காசியை அடைந்தவுடன், அந்த இரு பிராமணர்களும், புரோகிதர்களுடன் சேர்ந்து கொண்டு, இராமசாமியை விட்டு விட்டனர்.

காசியில் அன்ன சத்திரங்கள் ஏராளமாக இருந்தன. ஆயினும் இராமசாமி பிராமணராக இல்லாததால், அவருக்கு ஒரு சத்திரத்திலும் உணவும் கிடைக்க வில்லை; தங்க இடமும் கிடைக்கவில்லை.

செல்வத்திலே புரண்டு வளர்ந்தவர். வெள்ளித்தட்டில், வேளைக்கு விதம் விதமான உயர் ரக உணவு வகைகளை உண்டு வாழ்ந்தவர்; தாங்க முடியாத பசியோடு சத்திரத்து வாசலில் உட்கார்ந்திருந்தார். உள்ளே பிராமணர்கள் சாப்பிட்ட பந்தி முடிந்ததும், எச்சில் இலைகளைக் கூடையில் எடுத்து வந்து வெளியே கொட்டினார்கள்.

இராமசாமி பசியின் கொடுமை தாளாமல் அந்த எச்சில் இலைகளில் மீதமிருந்த உணவுகளை எடுத்து உண்டு பசியாறினார்.

மரத்தடியிலும், தெருவோரங்களிலும், கங்கைப் படித் துறைகளிலும், குளிரில் உடம்பு நடு நடுங்க படுத்து உறங்கினார்.

விடிந்ததும் கங்கைக் கரையில் புண்ணிய காரியம் செய்ய வருபவர்கள் போடுகிற அரிசி, பழம், சோறு இவற்றை உண்டு சில நாள் தள்ளினார். பசியின் கொடுமையையும் வறுமையின் நிறத்தையும் காசி அவருக்குக் கற்றுக் கொடுத்தது. காசியில் துறவியாய் வாழ முடியாது என்று தெரிந்து கொண்டதை விட -

காசி இந்துக்களின் புண்ணியத் தலம். அங்கு உன்னத வாழ்வு கிட்டும் என எண்ணியது பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.

அங்கு அவர் கண்ட காட்சிகள் மனதை துன்புறுத்தின. பிறரிடமிருந்து பணத்தை அபகரிப்பதற்காகப் பொய் சொல்லுபவர்களையும், துறவியைப் போல் தோற்றமளித்த ஒழுக்கங் கெட்டவர்களையும் கண்டு மனம் வருந்தினார். காசி அவருக்குக் கசந்தது.

தன்னிடமிருந்த மோதிரத்தை விற்றார். எல்லூரில் தனது நெருங்கிய நண்பர் ஒருவர் இருப்பது நினைவிற்கு வந்தது.தன்னிடமிருந்த மோதிரத்தை விற்று எல்லூருக்கு ரயில் ஏறினார்.

அங்குதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.