தந்தை பெரியார், நீலமணி/வாழ்வே மாயம்
"சிந்திப்பீர்! சிந்திப்பதில் கெடுதியில்லை. சிந்திப்பதால் நீங்கள் பாவிகளாகிவிட மாட்டீர்கள்; சிந்தித்தால் தான் உங்கள் இழிவினுடைய துன்பத்தினுடைய அஸ்திவாரம், ஆணிவேர் எங்கிருக்கின்றது என்று உங்களுக்குப் புரியும்."
- தந்தை பெரியார்
வாழ்க்கையில் ஒருவருக்கு நல்ல மனைவி அமைவதற்கும்; நல்ல மனைவிக்கு அன்பான கணவன் கிடைப்பதற்கும் பாக்கியம் செய்ய வேண்டும் என்பார்கள்.
அந்த வகையில் நாகம்மை இராமசாமி இருவருமே அதிர்ஷ்டசாலிகள்தான்.
இளம் வயதிலிருந்தே இருவரும் ஒன்றாய்ப் பழகி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வளர்ந்தவர்கள். இத்தகையவர்களைத் திருமணத்தின்போது பெற்றோர்கள் பிரித்து தங்கள் குழந்தைகளுக்கு வேறு வரன் தேடி முடிக்க எண்ணினார்கள்.
ஆனால் நாகம்மையோ -
மணந்தால் இராமசாமியைத்தான் மணப்பேன். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்? என்று உறுதியாகப் பெற்றோரிடம் கூறிவிட்டார்.
ஒரு பெண் ஒருவரை விரும்புவது பெரிதல்ல. ஆனால் திருமணத்தின்போது அதற்கு எதிர்ப்பு வந்ததும், 'நான் விரும்பியவரைத்தான் மணந்து கொள்வேன்' என்று போராடி - ஒரு பெண் வெற்றி பெற்றாள் என்றால் அதற்கு அவரது உள்ளத்தில் எவ்வளவு உறுதி இருந்திருக்கி வேண்டும்!
நாகம்மையார் பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கவில்லையே தவிர பொது அறிவும், பொறுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் அவரிடம் இயற்கையாகவே இருந்தது.
இப்படியொரு பொறுப்புள்ள அருமையான மனைவி கிடைத்ததினால்தான் இராமசாமிக்கு இஷடப்படி பொதுவாழ்வில் ஈடுபட்டு உழைக்க முடிந்தது.
திருமணமான ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1904-ம் வருடம் நாகம்மையார் ஓர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
அனைவருடைய அன்புக்கும் ஆசைக்கும் பாத்திரமாயிருந்த அந்தக் குழந்தை ஐந்தே மாதங்களில் இறந்து போய் விட்டது. அதற்குப் பிறகு இராமசாமி தம்பதியருக்குக் குழந்தையே பிறக்கவில்லை. இந்த சோகம் நாகம்மையைப் பெரிதும் வருத்தியது.
இராமசாமி எதைப் பற்றியும் கவலைப் படாதவராகவே வாழ்ந்து வந்தார். நினைத்த போது கடைக்குப் போவார். மற்ற நேரங்களில் நண்பர்களுடனேயே பொழுதைக் கழிப்பார்.
எப்பொழுது பார்த்தாலும் எதைப் பற்றியாவது யாருடனாவது வாதம் செய்து கொண்டிருப்பார். வீட்டில் தனக்காக ஒரு மனைவி காத்திருக்கிறாளே என்கிற நினைப்பே அவருக்கு இருக்காது. நாகம்மையோ எது நடந்தாலும் அதை அப்படியே ஏற்று சகித்துக் கொள்வார். கணவரது எந்த நடவடிக்கை பற்றியும் மாமனார் மாமியாரிடம் குறை கூறவே மாட்டார்.
ஆனால் நாகம்மை இப்படித் தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு வாழ்வதை வெங்கடப்பரால் தாங்க முடியவில்லை.
இரவு வெகு நேரம் கழித்து வந்த இராமசாமியை மிகவும் கடுமையாகக் கோபித்துக் கொண்டார். அப்போது நாகம்மையும் அருகில் இருந்தார். வெங்கடப்பர் இதுபோல் நடந்து கொண்டதில்லை.
பதில் ஏதும் பேசாது மாடிக்குப் போய் விட்ட இராமசாமிக்கு மனது சரியில்லை. இரவு முழுதும் யோசித்தபடி தூங்காமல் விழித்திருந்தார்.
வாழ்க்கையே அவருக்குக் கசந்தது. 'காசிக்குப் போய், பேசாமல் துறவி ஆகிவிடுவது' என்று அவர் மனம் முடிவிற்கு வந்து விட்டது.
எவரிடமும் சொல்லாமல் இரவோடு இரவாக தன் தங்கை கண்ணம்மாவின் கணவருடனும், வேறொரு நண்பருடனும் ஈரோட்டை விட்டு காசிக்குப் புறப்பட்டு விட்டார்.
பொழுது விடிந்தது. தன் கணவரை வீட்டில் காணவில்லை என்றதும் நாகம்மை பதறிப் போனார். உடனே போய் தன் மாமனார் மாமியார் இவர் களிடமும் விபரம் கூறினாள்.
மகனைக் காணோமென்றதும் சின்னத்தாயம்மையார் துடித்துப் போனார். வெங்கடப்பர் ஊர் முழுது தேடினார். நாலா பக்கங்களுக்கும் ஆட்களை அனுப்பி தேடினார். பயன்தான் இல்லை. மனமுடைந்து போனார்.