தந்தை பெரியார், நீலமணி/முட்டையிலிருந்து பிறந்த முதல் குஞ்சு

31. முட்டையிலிருந்து பிறந்த முதல் குஞ்சு

"சுயமரியாதைத் திருமணம் என்பது அறிவு ஆராய்ச்சியின் காரணமாய் ஏற்பட்டது.

கணவன்- மனைவி என்பது கிடையாது. ஒருவருக்கொருவர் அடிமை ஆண்டான் என்பது கிடையாது. இருவருமே சம தகுதியுள்ளவர்கள் ஆவார்கள்.

திருமணம் என்பது மணமக்களை மட்டும் பொறுத்ததல்ல, நாட்டின் முன்னேற்றத்திலும் தொடர்பு கொண்டிருக்கிறது."

- தந்தை பெரியார்

சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டு, அதை அகிம்சை முறையில் வாங்கித் தந்தவர் அண்ணல் காந்திஜி.

நாடே நன்றிக் கடன் செலுத்த வேண்டிய அந்த மகானின் மார்பை, நாதுராம் விநாயக் கோட்சே என்னும் கொடியவன், இரக்கமின்றித் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தான்.

காந்திஜி கொலையுண்டதும், நாட்டிலுள்ள பல இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.

அப்போது தமிழக முதல்வராக இருந்த ஒமந்தூர் இராமசாமி, மீண்டும் இந்தியைக் கொண்டுவந்தார்.

நாடெங்கும், இந்தித் திணிப்பை எதிர்த்து கிளர்ச்சி மூண்டது.

1948-ம் ஆண்டு மறைமலை அடிகள் தலைமையில், இந்தி எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில், சென்னைக்கு வரும் இராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டுவதென்று முடிவாயிற்று.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரியார் கைது செய்யப்பட்டு; பிறகு விடுதலையானார்.

1948 -ம் ஆண்டு, மீண்டும் பெரியார், கும்பகோணத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் கலந்து கொண்டார். அரசு அவரைக் கைது செய்தது.

பொது வாழ்வில் பெரியார் கைதானது, இது பத்தாவது தடவையாகும். ‘விரும்பும்வரை, இந்தி திணிக்கப்பட மாட்டாது' என்று நேருஜி வாக்களித்தார்.

விடுதலையடைந்து வந்த பெரியார், செயற்குழுவைக் கூட்டினார். திராவிடர் கழகத்தின் எதிர்காலம் குறித்தும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்தும் மணியம்மையாரைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார்.

இச்செய்தியைக் கேட்டுக் கழகத்தினர் கலங்கிப் போயினர். இன்னது செய்வது என்று புரியாமல் திகைத்தனர்.

பெரியாருக்கு அப்போது வயது 70.

மணியம்மையாருக்கு வயது 26.

மணியம்மையாருடைய குடும்பத்துடன் பெரியாருக்கு நீண்டகால உறவு உண்டு.

மணியம்மையார் அருடைய சிறுவயது முதலே பெரியாரின் கொள்கைகளினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர்.

கட்சியில், பெரியாருக்கு உறுதுணையாக வாழ்வதோடு அவரது வாழ்விலும் பங்கேற்கவே விரும்பினார்.

இது 'பொருந்தாத் திருமணம்' என்று திராவிடக் கழகத்திலிருந்த பல பிரமுகர்களும், பேச்சாளர்களும் தொண்டர்களும் கூட எண்ணினார்கள்.

தயவுசெய்து அத்திருமணத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

ஆனால் பெரியார் எதையும் பொருட்படுத்தவில்லை. எப்பொழுதுமே, அவர் தம் மனசாட்சிக்குச் சரி என்று பட்டதைத் தயங்காமல் செய்வார்.

பிறகு யாருக்காகவும் அதிலிருந்து பின்வாங்க மாட்டார். மணியம்மையார் திருமண விஷயத்திலும் பெரியார் அப்படியே நடந்து கொண்டார். 'சுயமரியாதைத் திருமணம்' செய்து கொண்ட மணியம்மை பெயரில் - ஈ.வெ.ரா. மணியம்மை என்று சட்டப்படி பதிவுத் திருமணம் செய்தார்.

இந்தச் செய்தியினை தமது குடியரசு பத்திரிகையிலும் பிரசுரித்து வெளியிட்டார்.

பெரியாரின் இச்செயல், திருமணத்தை எதிர்த்தவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும், வேதனையையும் அளித்தது.

அண்ணா ஆடிப்போனார்.

ஏற்கனவே சுதந்திரதின கருத்து வேறுபாடுகள் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் பலருக்குமிடையே நீரு பூத்த நெருப்பாகவே இருந்தது.

இப்போது -

மணியம்மையாரின் திருமணம் அதை ஊதிப் பெரிய காட்டுத் தீயாக்கி விட்டது.

பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு, திராவிடர் கழகத்தில் ஏராளமான இளைஞர்கள் சேர்ந்து தொண்டாற்ற முன் வந்தனர்.

அண்ணாவின் உவமைகளும், அடுக்குச் சொல் அழகும், பேச்சும் அவ்விளைஞர்களை மகுடி இசைக்கு மயங்கும் நாகமாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட கழகத்தின் கண்மணிகளும்; அதுவரை பெரியாரோடு கருத்து வேறுபாடின்றி ஒன்றியிருந்த பலரும் வேறுபட்டனர்.

அறிஞர் அண்ணாவின் நிலையை நியாயப்படுத்தி அண்ணாவின் கரங்களுக்கு வலுவேற்றினர். இதன் விளைவாக தாய்க்கழகம் பிளவுண்டது.

17.11.1949 -ம் ஆண்டு அண்ணாவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று ஓர் புதிய இயக்கத்தை ஆரம்பித்தார்கள்.