தந்தை பெரியார், நீலமணி/பெண்மனம்

32. பெண்மனம்...

"உன் சொந்த புத்திதான், உனக்கு வழிகாட்டி; அதை நல்ல முறையில் பயன்படுத்து. பிறரிடமுள்ள அவநம்பிக்கையைக் கைவிடு.

முன்னோர் சொல்லிப் போனது அற்புதமல்ல; அதிசயமுமல்ல, அதை அவர்களிடமே விட்டு விடு. அதில் நீ சம்பந்தப் படாமல் நீயே செய்ய, கண்டு பிடிக்க, முயற்சிசெய். அறிவுக்கே முதலிடம் கொடு.

தியாகம் என்பது சுயநலத்துக்கான, பயன் எதிர்பாராது, பொது நலத்துக்காகப் பாடுபடுவதும், எவ்விதமான அவமானங்களையும் லட்சியம் செய்யாமல், பல இன்னல்களுக்கும் தயாராகித் தொண்டாற்றுவது."

- தந்தை பெரியார்

மணியம்மையாரின் மனம் மிகவும் வேதனைக் குள்ளாகியது.

'நான் பெரியாரை மணந்து கொண்டது தவறா?'

என் திருமணத்தால் ஒன்றாய் இருந்த கழகத் தொண்டர்கள் ஏன் பிரிந்து செல்ல வேண்டும்? நானும் தொண்டு செய்யவே தானே வந்துள்ளேன்.

நான் இவர்களுக்கு என்ன கெடுதல் செய்தேன்! பெறாமலே எனக்கு இவ்வளவு பிள்ளைகளும்; உடன் பிறவாமலே; எனக்கு இவ்வளவு சகோதரர்களும் இருக்கிறார்கள் என்று எண்ணி மகிழ்ந்தேனே -

எல்லாம் கசப்பாய்... கனவாகிவிட்டதே என்று எண்ணி மணியம்மையார் மனம் வருந்தினார்.

ஆனால் பெரியாரோ -

ஒன்றுமே நடவாதது போல - எதைப்பற்றியும் கவலைப்படாமலும், கலங்காமலும் இருந்தார்.

அவரது எண்ணமெல்லாம்- தமிழ்நாட்டு இளைஞர்களைப் பற்றியும், அவர்களைப் பாதிக்கும் இந்தியைப் பற்றியுமே இருந்தது.

சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதல்வராக ஒமந்துார் இராமசாமியும்; முதல் கவர்னர் ஜெனரலாக இராஜாஜியும் பதவி வகித்து வந்தனர்.

அந்த சமயம் -

பம்பாயிலிருந்து பெரியாருக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்த திராவிடர் கழக மகாநாட்டில் கலந்து கொண்டார்.

திராவிடர் கழகத்தின் இலட்சியத்தையும், அதன் முற்போக்குக் கொள்கைகளையும் பெரியார் விளக்கிப் பேசியபோது - அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.

பெரியார் சென்னை வந்ததும், இந்தி எதிர்ப்பு மகாநாட்டில் கலந்து கொண்டார்.

மத்திய அரசு கட்டாயமாக இந்தியை ஆட்சி மொழியாக்க முயன்றது. இதைக் கண்டித்துப் பெரியார் 'தேசியக் கொடியை எரிக்கும்' போராட்டத்தை அறிவித்தார்.

1950 - குடி அரசு நாளை துக்க தினமாக அறிவித்து அறிக்கை விட்டார்.

தமிழக மக்களின் இந்தி எதிர்ப்பு உணர்வை புரிந்து கொண்ட நேருஜி, "இந்தி மொழி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை; அவர்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது" என்று வாக்களித்தார்.

1950 - ஜூன் 20-ம் நாள் தமிழக அரசு இதை அறிவித்தது.

இந்தி எதிர்ப்பில் பெரியாரின் மகத்தான வெற்றி இது.