தனித் தமிழ்க் கிளர்ச்சி/சுந்தர சண்முகனார் வாழ்க்கை வரலாறு

சுந்தர சண்முகனார்
வாழ்க்கை வரலாறு


தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டம் கடலூர் அருகேயுள்ள புதுவண்டிப்பாளையம் என்னும் ஊரில் சுந்தர சண்முகனார் 13.7.1922 ஆம் நாளன்று தோன்றினார். இவருடைய தந்தையார் பெயர் சுந்தரம். தாயார் பெயர் அன்னபூரணி அம்மாள். பெற்றோர் இவருக்கு இட்ட இயற்பெயர் சண்முகம் ஆகும். தன் தந்தையாரின் பெயராகிய சுந்தரத்தையும் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டு சுந்தர சண்முகனார் ஆனார். முதுபெரும்புலவர் அமரர் நடேச முதலியார், பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் முதலானோர் இவருடைய ஊரினர் மற்றும் உறவினர்கள் ஆவர். சில ஆண்டுகள் திருப்பாதிரிப்புலியூர் தூய வளனார் பள்ளியில் பயின்ற இவருடைய மாணவப் பருவத்தில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அந்தத் திருப்புமுனை இவருடைய ஆழ்ந்த தமிழ்ப்புலமைக்கு அடித்தளம் இட்டது. அந்தத் திருப்புமுனை இவர் திருப்பாதிரிப்புலியூர் சிவத்திரு ஞானியார் மடாலயத்தில் மாணக்கராகச் சேர்ந்தது. அதுவும் ஞானியார் அடிகளார்களிலேயே மிகவும் புகழ் பெற்றவரும் புலமை பெற்றவருமான ஐந்தாம் பட்டத்து அடிகளின் மாணாக்கராக. ஞானியார் அடிகளாரின் அறிவுரையின் பேரில் திருவையாறு அரசர் கல்லூரியில் தன்னுடைய பதினான்காவது அகவையிலேயே வித்துவான் படிப்பில் சேர்ந்தார். வித்துவான் படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு ஞானியார் அடிகளாரின் பரிந்துரையின் பேரில் மயிலம் சிவஞானபாலைய அடிகள் தமிழ்க் கல்லூரியில் 1940 ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய பதினெட்டாவது அகவையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தன்னுடைய இருபத்திரண்டாவது அகவையில் 26.5.1944 அன்று விருத்தாம்பிகை அம்மையாரைப் புதுச்சேரியில் திருமணம் செய்துகொண்டார். 1946- ஆம் ஆண்டு மயிலம் கல்லூரிப் பணியை விடுத்துப் புதுச்சேரி வந்தார். 1947 ஆம் ஆண்டு அவருடைய வாழ்க்கையில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டது. தன்னுடைய சட்டகர் புரவலர் சிங்கார குமரேசனார் உதவியுடன் பைந்தமிழ்ப் பதிப்பகம் என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்தைத் தொடங்கித் தன்னுடைய முதல் நூலான வீடும் விளக்கும் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் அ. சிதம்பரநாதச் செட்டியார் ஆவார்கள். 1947- ஆம் ஆண்டு ஏற்றப்பட்ட அந்த எழுத்து விளக்கு 1997- ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

1947-48 ஆம் ஆண்டுகளில் திருக்குறள் தெளிவு, தெவிட்டாத திருக்குறள் என்னும் மாதமிருமுறை இதழ்களை நடத்தித் தமிழகம் முழுவதும் அறிமுகம் ஆனார். 1948ஆம் ஆண்டு பாவேந்தரால் மதிப்புரை வழங்கப்பட்ட தனித்தமிழ்க்கிளர்ச்சி என்னும் அம்மானை நூலை எழுதி வெளியிட்டார். 1949 - ஆம் ஆண்டுமுதல் 1958 - ஆம் ஆண்டுவரை புதுச்சேரி பெத்திசெமினார் பள்ளியில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். இடையில் 1952-ஆம் ஆண்டுவாக்கில் சென்னை, சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் தேர்ந்தார். 1958 - ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை புதுச்சேரி அரசினர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை உருவாக்குவதில் பெரும் பங்காற்றினார். இவர் உருவாக்கிய ஆசிரிய மாணாக்கர்கள் மூலம் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பேராசிரியராகப் பணியாற்றிய போது "திருவள்ளுவர் தமிழ்ப் பல்கலைக்கழகம்" எனும் அமைப்பைத் தொடங்கி யாப்பதிகார வகுப்பும் திருக்குறள் வகுப்பும் நடத்தினார். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றனர். பலருக்குப் பாவலர் பட்டம் வழங்கினார்.


மயிலத்திலிருந்து புதுச்சேரிக்கு வந்த இவரைப் பல புதுச்சேரி பெருமக்கள் ஆதரித்து அரவணைத்தனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், அமரர்கள் உயர்திருவாளர்கள் தேசிகம் பிள்ளை (கல்விக் கழகம்), மக்கள் தலைவர் வ. சுப்பையா, கு. கா. இராசமாணிக்கம் பிள்ளை மற்றும் மேட்டுப்பாளையம் இராமலிங்கம் ஆவர். இவர்களை இறுதிவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டிருந்தார். புதுவையில் கவிஞரேறு வாணிதாசனார், மு. த வேலாயுதனார், திருமுடி சேதுராமன், புதுவைச் சிவம், கம்பவாணர் அருணகிரி, செந்தமிழ்த் தொண்டர் சிவ. கண்ணப்பர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்புகொண்டிருந்தார். தமிழகத்தில் பண்டிதமணி கதிரேசஞ் செட்டியார், தமிழ்த்தென்றல் திரு. வி. கலியாணசுந்தரம், முனைவர் மு. வரதராசனார், முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன், ஒளவை துரைசாமி பண்டிதர், லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார், முத்து.ராசா கண்ணனார், முதுபெரும்புலவர் ஆறுமுக முதலியார், முத்து சண்முகம் பிள்ளை, முனைவர் வ.சுப.மாணிக்கம் முதலிய பெருமக்களுடன் தொடர்பும் நட்பும் கொண்டிருந்தார்.


1980 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்று நூல்கள் எழுதும் தன்னுடைய பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தார். 1975 - ஆம் ஆண்டுக்குள் தன்னுடைய உன்னத நூல்களான தமிழ் அகராதிக்கலை, தமிழ் இலத்தீன் பாலம், கெடிலக்கரை நாகரிகம், தமிழ் நூல்தொகுப்புக் கலை முதலியவற்றை எழுதி வெளியிட்டுத் தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும் பேசப்படுவராக உயர்ந்தார். மேற்கூறிய நூல்கள் அனைத்தும் தமிழுக்கு முன்னோடி நூல்களாகும்.


திறமையைத் தேடி வாய்ப்புகள் ஓடிவரும் என்பதற்கேற்ப இவருடைய புலமைக்குப் பரிசாகத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் முனைவர் வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் இவருக்குப் பல்கலைக்கழகத் தொகுப்பியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் பதவியை வழங்கினார். 1982- ஆம் ஆண்டு இப்பணியில் சேர்ந்தவர் உடல்நலக் குறைவு காரணமாக 1983 - ஆம் ஆண்டு இப்பணியிலிருந்து விலகிவந்துவிட்டார். உடன் பிறந்தே கொல்லும் நோய் என்பது இவர் வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். மயிலம் தமிழ்க் கல்லூரிப் பணியை விட்டு விலகியதற்குக் காரணமே இவருடைய உடல்நலக் குறைவு தான்.


1946 - ஆம் ஆண்டிலிருந்து நோயுடன் போராடிப் போராடி வெற்றிகண்டு வந்த இவரை 1997 - ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30 - ஆம் நாளன்று நோய் இறுதியாக வென்றது.


இவர் எழுதிய நூல்கள் அறுபத்து ஒன்பது ஆகும். இவற்றுள் கவிதை நூல்கள் 9, காப்பியங்கள் 2, உரைநடை நூல்கள் 19, திருக்குறள் ஆய்வுகள் 5, கம்பராமாயண திறனாய்வுகள் 6, அறிவியல் ஆய்வுகள் 6, இலக்கணம் 2, மொழியியல் 3, தொகுப்பியல் 2, முழுஉரைநூல்கள் 7, புதினம் 2, சிலப்பதிகாரத் திறனாய்வு 1, வரலாற்று நூல்கள் 4, மற்றும் சிறுகதைத் தொகுப்பு 1 ஆகும். பல துறைகளிலும் நூல்கள் எழுதிய இவரின் சான்றாண்மையைப் பாராட்டி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் இவருக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்னும் பட்டத்தை 17.10.1991 அன்று வழங்கும் போது இவரைப் பற்றி அச்சடித்து வழங்கியக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "ஐம்பது ஆண்டுகளாகப் பாவேந்தர் பாரதிதாசன் பாடியது போல அன்னைத் தமிழ்மொழிக்குத் துறைதொறும் துறைதொறும்துடித்தெழுந்து அருந்தொண்டாற்றிய பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்களுக்குத் தமிழ்ப் பேரவைச் செம்மல் என்ற பட்டத்தினை வழங்கி மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் பெருமை கொள்ளுகிறது." காமராசர் பல்கலைக்கழகம் தங்கள் கல்விக் குழுவின் வாழ்நாள் உறுப்பினர் ஆகவும் இவரை நியமனம் செய்தது.


பாவேந்தர் பாரதிதாசரொடு பல ஆண்டுகள் நெருங்கிப் பழகிய இவர், பாரதிதாசரொடு பல ஆண்டுகள் என்று ஒரு நூல் எழுதியுள்ளார். இவர் தன் வாழ்நாளில் பல விருதுகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார். இவர் பெற்ற விருதுகளில் தலையாயது தமிழக அரசு 15.01.1991 - இல் வழங்கிய திருவள்ளுவர் விருதாகும். அடுத்த பெரிய விருது சென்னை எம்.ஏ.சி அறக்கட்டளை விருதாகும். இவர் பெற்ற பல பட்டங்களில் இவர் மிகவும் விரும்பிய பட்டங்கள் மூன்றாகும். ஒன்று இவருடைய குருபீடமான ஞானியார் மடாலயம் வழங்கிய "ஆராய்ச்சி அறிஞர்" என்ற பட்டம், இரண்டாவது இவருடைய செந்தமிழாற்றுப்படை என்ற நூலுக்காக நாவலர் சோமசுந்தர பாரதியாரால் வழங்கப்பட்ட "இயற்கவி" என்ற பட்டம், மூன்றாவது இவருடைய உற்ற நண்பர் புதுச்சேரி உயர்திரு அமரர் கு.கா. இராசமாணிக்கம் பிள்ளை அவர்கள் வழங்கிய "புதுப்படைப்புக் கலைஞர்" என்ற பட்டமாகும். இந்த வரலாற்றை எழுதும் அவருடைய மகனான நான் அவருக்குக் கிடைத்த பட்டங்களிலே மிகச் சிறந்ததாகக் கருதுவது, அவருடைய மாணாக்கர்கள் அவரை அன்புடன் "எங்கள் பேராசான்" என்று அழைப்பதையே ஆகும். இவர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் ஆய்வு நூல்களாக இருந்தாலும் இவருடைய சிறப்பு எல்லா நூல்களையும் அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய எளிய தமிழ்நடையில் எழுதியதாகும். இவருடைய ஆறு நூல்களுக்குத் தமிழக மற்றும் நடுவண் அரசுகள் பரிசுகள் வழங்கியுள்ளன. இவருடைய பல நூல்கள் பல பல்கலைக்கழகங்களில் பாடமாக அமைக்கப் பெற்றன. எடுத்துக்காட்டாக இவருடைய மிகச் சிறந்த நூல்களில் ஒன்றாகக் கருதப்படும் தமிழ் அகராதிக் கலை என்னும் நூல் சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் வித்துவான் மற்றும் முதுகலை வகுப்புகளுக்கும் புலவர் வகுப்புக்கும் பாடமாக அமைந்தது.


இவருடைய பண்பு நலன்களாக நேர்மை, வாய்மை மற்றும் தனி மற்றும் பொது வாழ்வில் தூய்மை என்பவற்றைக் குறிப்பிடலாம். நாமார்க்கும் குடியல்லோம் என்று பெயரெடுத்த இவர் தன் மனத்தில் பட்டதைத் தயங்காமல் வெளிப் படுத்தியவர். எந்த நிலையிலும் தன் கொள்கையிலிருந்து பிறழாதவர். தனக்கு மரணமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருப்பார். உண்மை தான் இவருக்கு மரண மென்பதில்லை. இறவாப் புகழ் பெற்ற தன்னுடைய நூல்கள் மூலம் தமிழ் உள்ளளவும் இவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.


இவருக்கு இரண்டு மக்கட் செல்வங்கள். ஆண் ஒன்று (சு.ச. அறவணன்) பெண் ஒன்று (அங்கயற்கண்ணி). தன்னுடைய மக்கட்செல்வங்களுக்குப் போதுமான செல்வங்களைச் சேர்த்து வைத்துவிட்டுச் சென்றுள்ளார். இவர், தன்னுடைய செல்வமாகச் சேர்த்து வைத்துச் சென்றுள்ளது தன்னுடைய நூல்களை மட்டுமன்று, தன்மீது தீராப்பற்றுள்ள நூற்றுக்கணக்கான மாணாக்கர்களையும் தாம்.

சு. ச. அறவணன்

15.1.1991 இல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவர் விருது பெறுகிறார் பேராசிரியர் சுந்தர சண்முகனார். மாண்புமிகு தமிழக முதல்வர். கலைஞர். மு. கருணாநிதி விருதினை வழங்குகிறார். உடன் பேராசிரியர் அன்பழகன், இயக்குநர் ஔவை. நடராசன்.