தனித் தமிழ்க் கிளர்ச்சி/முன்னுரை

முன்னுரை

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே"

"தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்"

"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும்."


என்பன கவிக்குயில் சுப்பிரமணிய பாரதியாரின் மணிமொழிகள். இத்தகைய அறிவுரைகளைப் புலவர் விடுத்ததற்குக் காரணம் தமிழின் அன்றைய சீர்கேடே.

அப்பப்பா! அன்று தமிழைத் தாழ்த்தியவர்களின் கொடுமைகளை எண்ணினால் இன்றும் வயிறு எரிகின்றதே! தமிழர்களும் தமிழைத் தாழ்த்தி வந்ததுதான் பெரிய வியப்பு, வெட்கக் கேடுங்கூட!

ஆனால், அறிஞர் பலரின் அரிய முயற்சியால், கிளர்ச்சியால் தமிழின் பெருமையை இன்று உணர்ந்தனர் சிலர். இச்சிலருங்கூட இன்னும் செயல் முறையில் காட்டவில்லை. இந்நிலை போதுமா ?

எனவே, எழுதுதல், பேசுதல், திருமணம், திருக்கோயில் வழிபாடு, அரசியல் அலுவல்கள் முதலிய பல துறைகளிலும் தமிழையே கையாண்டு, தமிழ்க்கே முதன்மையளிக்க வேண்டும். இந்நோக்கத்துடன் எழுந்த "தனித்தமிழ்க் கிளர்ச்சி" என்னும் இந்நூலை விழிபடைத்த தமிழுலகம் விரும்புமென எதிர்பார்க்கின்றேன்.

அருள்கூர்ந்து சிறப்புரை வழங்கிய உயர்திரு கவிஞர் பாரதிதாசன் அவர்கட்கு என் நன்றியும் வணக்கமும் உரியன.

இங்ஙணம்,

பைந்தமிழ்ப் பதிப்பகம்,

சுந்தர சண்முகன்

புதுச்சேரி.

ஆசிரியன்