தனித் தமிழ்க் கிளர்ச்சி/பதிப்புரை
தன்னுடைய இருபத்தாறாவது அகவையிலே தனித்தமிழ்க் கிளர்ச்சி என்னும் இந்த அம்மானை நூலைப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய அணிந்துரை பெற்றுப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அவர்கள் பைந்தமிழ்ப் பதிப்பகம் சார்பில் 1948 ஆம் ஆண்டு மாசித்திங்களில் வெளியிட்டார். சரியாக ஐம்பது ஆண்டுகள் கழித்து 1998 ஆம் ஆண்டு சித்திரைத் திங்கள் முதல் நாள் இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்படுகிறது.
இந்நூல் வெளியாவதற்கு இரண்டு தூண்டு கோல்கள் : ஒன்று, பேராசிரியரின் மாணாக்கர்கள் நடத்திய சுந்தர சண்முகனார் நினைவுக் கருத்தரங்கு நிகழ்ச்சி, மற்றொன்று பெருந்தகையாளர் புலவர் சு. இராமசாமி அவர்களின் தமிழ்ப்பற்று. 22.3.1998 அன்று நடந்த கருத்தரங்க நிகழ்ச்சியில் பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் மூன்று நூல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றுள் ஒன்று ஆசிரியர் மா. தன. அருணாசலம் அவர்களால் ஆய்வு செய்யப்பட்ட தனித்தமிழ்க்கிளர்ச்சி நூலாகும். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த புலவர் சு. இராமசாமி அவர்கள் இந்நூலை ஏற்கனவே படித்து அதன் சிறப்பை உணர்ந்தவர். இந்நூலால் கவரப்பட்ட இவர் கருத்தரங்க முடிவில் இந்நூலை வெளியிடப் பொருளுதவி புரிவதாக மனமுவந்து கூறினார். அவ்வாறே அன்னாரின் பொருளுதவியுடன் இந்நூல் வெளியிடப்படுகிறது. கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருந்த நூலாசிரியரின் மாணாக்கர்களான சொல்லாய்வுச் செல்வர். சு. வேல்முருகன், பாட்டறிஞர். இலக்கியன், புலவர். திருவேங்கடம், பாவலர். ஆ. மு. தமிழ்வேந்தன் ஆகியோர்களுக்கும் நூலை வெளியிட்ட புலவர். சு. இராமசாமி அவர்கட்கும் புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்தரங்கத்திற்குத் தலைமை தாங்கிய புலவரேறு அரிமதி தென்னகனார் கூறியது போல ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எந்தச் சூழ்நிலையில் இந்நூல் எழுதப்பட்டதோ, அந்தச் சூழல் இன்னும் மாறவில்லை. அப்படியே இருக்கிறது. எனவே, இந்நூல் இன்றும் மிகப் பொருத்தமானதாகப்படுகிறது. பேராசிரியர் சுந்தர சண்முகனாரின் நூல்களுக்கு எப்போதும் தமிழன்பர்களின் பேராதரவு இருக்கும். அது போல் ஆசிரியரின் மறைவுக்குப் பிறகு வரும் முதல் வெளியீடான இந்நூலையும் ஆதரிக்க வேண்டுகிறோம். நூலை அழகுற அச்சிட்ட கம்பன் மறுதோன்றி அச்சகத்தார்க்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்,
புதுச்சேரி.
வேங்கடநகர்,
புதுச்சேரி - 11.
14.4.1998
பேராசிரியர் முனைவர்
சுந்தர சண்முகனார் அவர்கட்குப்
பல பட்டங்களும் விருதுகளும்
வழங்கிய பல்கலைக்கழகங்களுக்கும்
நடுவண், தமிழக, புதுவை அரசுகளுக்கும்
சான்றோர் பெருமக்களுக்கும்
இந்நூல் காணிக்கை
நல்லாசிரியர் புலவர். சு. இராமசாமி
அவர்களுக்கு
நன்றி! நன்றி! நன்றி!
சிறப்புக்கவி
"தனித்தமிழ்க் கிளர்ச்சி" எனுமொரு நூலைத்
தனித்தமிழ்ச் செய்யுளால் உள்ளம்
இனித்திடத் தந்தார் புலவர்சண் முகனார்
இத்தமிழ் நாட்டினர் இதனில்
மனைக்கொரு படிஎன வாங்குக! நாளும்
மணிக்கொரு முறைஅதைப் படிக்க!
தினைத்துணை உழைப்பில் பனைத்துணைப் பயனைச்
சேர்க்கும்.இந் நூல்எனல் மெய்யே!