தமிழின்பம்/தமிழ்த்திருநாள்
தலைமையுரை
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக இன்று இலங்கையில் தமிழ்த் திருவிழா நடைபெறுகின்றது. இது நான்காம் தமிழ் விழா. முதல் ஆண்டிலே தமிழ் விழா மதுரையம்பதியில் நடைபெற்றது. மதுரை மாநகரம் பாண்டி நாட்டின் தலைநகரம்; செந்தமிழை உருவாக்கிய திருநகரம். இத்தகைய மதுரை மாநகரம் முதலாண்டு விழாவினை நடத்தியது மிகப் பொருத்த மாயிருந்தது. அடுத்த ஆண்டு விழா சோழநாட்டின் பழந் தலைநகராகிய திருவாரூரில் நிகழ்ந்தது. சோழ வளநாட்டின் செழுமைக்கு ஏற்ற முறையில் எடுப்பாக நடந்தது அம்மகாநாடு. மூன்றாம் மகாநாடு பண்டைச் சேரநாட்டின் ஒர் அங்கமாக விளங்கிய கொங்கு நாட்டிலே சீரும் சிறப்பும் உற்று விளங்கும் கோயம்புத்தூரில் நடைபெற்றது. நான்காம் மகாநாடு யாழ்ப் பாணத்தில் நடைபெறுகின்றது. இம் மகாநாட்டின் இலக்கியப் பகுதியில் என்னையும் பங்கு பெறுமாறு பணித்த அன்பர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம் உரியதாகும்.
அன்பர்களே! தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் பழமையான தொடர்புண்டு. தமிழ் இலக்கியமே இதற்குச் சான்று. பண்டமாற்று முறையிலும், பண்பாட்டு முறையிலும் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும். இடையேயிருந்த உறவு சங்கநூல்களிலும் பிற்காலத்துப் பெருநூல்களிலும் பேசப்படுகின்றது. சங்கத்தமிழில் ஈழநாடு என்பது இலங்கையின் பெயர். பட்டினப் பாலை என்னும் பழந்தமிழ்ப் பாட்டிலேயே சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இருந்த வாணிக உறவு குறிக்கப்படுகின்றது. அந் நாளில் பட்டினம் என்றால் தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமே! சோழ நாட்டை ஊட்டி வளர்க்கின்ற காவிரியாறு கடலோடு கலக்கு மிடத்தில் காவரிப்பூம்பட்டினம் என்னும் திருநகரம் அமைந்திருந்தது. அதன் செழுமையையும் அழகையும் கண்டு மகிழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் பூம்புகார் என்றும் அதனைப் போற்றுவராயினர். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், "பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்" என்று பாடினார். அந்நகரத்தின் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இயைறாது நிகழ்ந்தன. கடல் கடந்து பிற நாடுகளிலிருந்து அங்கு வந்திறங்கிய பண்டங்களைப் பட்டினப்பாலை தொகுத்துக் கூறுகின்றது. அந்த வரிசையில் ஈழ நாட்டுப் பண்டமும் இடம் பெற்றுள்ளது. "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்” பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய பண்டங்களென்று அப்பாட்டு கூறுகின்றது. ஈழநாட்டிலிருந்து என்ன உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாயின என்று இப்போது தெளிவாகத்தெரியவில்லை. ஆயினும் பண்டமாற்றுமுறையில் சோழவள நாடு விரும்பி யேற்றுக்கொண்ட உணவுப் பொருள்கள் இலங்கை யிலிருந்து வந்தன என்பது ஒரு பெருஞ் சிறப்பன்றோ?
இனி, சேரநாடு என்று பழங்காலத்தில் பெயர் பெற்றிருந்த மலையாள நாட்டிற்கும், ஈழ நாட்டிற்கும் பல வகையான தொடர்பிருந்தது. மலையாள நாட்டில் இன்று ஈழவர் என்று அழைக்கப்படுகின்ற வகுப்பார் இலங்கையிலிருந்து அந்நாட்டில் குடியேறியவரேயாவார். ஈழவவர் என்ற சொல்லே அவர் ஈழநாட்டி லிருந்து வந்தவர் என்பதை உணர்த்துகின்றது.
செங்குட்டுவன் என்னும் சிறந்த சேரமன்னன் மலையாள நாட்டில் அரசு வீற்றிருந்த பொழுது தமிழ் நாட்டில் அரும்பெருஞ் செயலொன்று நிகழ்ந்தது. கற்பின் செல்வியாகிய கண்ணகி, பாண்டிய மன்னனைத் தன் கற்பின் திண்மையால் வென்று, சேர நாட்டையடைந்து தெய்விகமுற்றாள். இந்த நிகழ்ச்சி மூன்று தமிழ் நாட்டையும் அதிரச் செய்தது. சேர நாட்டு அரசன் தன் நாட்டில் வந்து தெய்விகமுற்ற வீரபத்தினியாகிய கண்ணகிக்குச் சிறந்த திருக்கோயில் ஒன்று அமைத்தான். அக்காட்சியைக் காண்பதற்கு அயல்நாட்டு ம்ன்னர் பலரைச் செங்குட்டுவன் அழைத்திருந்தான். அன்னவருள் ஒருவன் ஈழநாட்டு மன்னன், "கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன்' என்று சிலப்பதிகாரத்தில் அவ்வரசன் குறிக்கப்படுகின்றான். இலங்கை வரலாற்றில் கஜபாகு என்ற பெயருடைய மன்னர் இருவர் இருந்தனர் என்றும், அவருள் முதல் கஜபாகு மன்ன்னே செங்குட்டுவன் அழைப்பையேற்றுக் கண்ணகிவிழாவிற் கலந்து கொண்டவன் என்றும் வரலாற்று நூலோர் கூறுவர். தமிழகத்திற் கோயில் கொண்ட கண்ணகியின் பெருமையையும் கருணையையும் கண்கூடாகக் கண்ட கஜபாகு மன்னன் இலங்கையிலும் அத்தேவிக்கு ஆலயமமைத்து,
சிறப்பொடு பூசனை செய்தானென்றும், அதனால் மழை தவறாமல் பெய்து, ஈழநாடு, 'வளம் பல பெருகிப் பிழையா விளையுள் நாடாயிற்' றென்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. இன்றும் கண்டி முதலிய பல இடங்களில் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது. முன்னமே வாணிகத்தால் இணைக்கப்பெற்றிருந்த தமிழகமும் இலங்கையும் கண்ணகி காலந்தொட்டு வழிபாட்டு முறையிலும் இணக்கமுற்றன.
இன்னும் இலங்கைக்கும், தமிழகத்திற்கும், ஆன்மநேய ஒருமைப்பாடும் உண்டு. சிவ மணமும், தமிழ் மணமும் ஒருங்கே கமழும் தேவாரம் பாடிய பெரியோர்கள் இலங்கையில் உள்ள சிறந்த சிவஸ்தலங் களைப் பாடியுள்ளார்கள். கடலருகேயுள்ள திருக்கோண மலையைப் பாடினார் திருஞான சம்பந்தர். மாதோட்டம் என்னும் நன்னகரில் அமைந்த மாதொரு பாகனைத் தொழுது பாமாலை அணிந்தனர் திருஞான சம்பந்தரும் சுந்தரரும். தமிழ்நாட்டிலுள்ள முருகனடியார்கள். இலங்கையரிலுள்ள கதிர்காமத்தை நினைக்குந் தொறும் காதலாகிக் கசிந்து கண்ணிர் பெருக்குவர். அப்படியே ஈழநாட்டிலுள்ள சிவனடியார்க்குச் சிதம்பரமே சிறந்த திருக்கோயில், அன்னார் தில்லைமன்றிலே திருநடம்புரியும் 'செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்' எனச் சிந்தையாரப் போற்றுவர்; தமிழகத்தில் முருகப் பெருமானுடைய படை வீடுகளாகப் போற்றப்படும் ஆறு பதிகளையும் அகனமர்ந்து ஏத்துவர்; அவற்றுள், "உலகம் புகழ்ந்த ஒங்குயர் விழுச்சீர் அலைவாய்” என்று திருமுருகாற்றுப் படையில் புகழப்பெற்ற திருச்செந்தூரை நினைந்து நெக்கு நெக்குருகுவர்.
இன்னும், ஈழநாட்டிலே பிறந்து, தமிழ்நாட்டிலே வாழ்ந்து, தமிழ்த்தொண்டு புரிந்த பேரறிஞர் பலராவர். மெய் வருத்தம் பாராது பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிறந்த இலக்கண நூல்களையும் இலக்கிய நூல்களையும் முதன்முதலாக அச்சிட்டுத் தமிழகத் தார்க்கு உதவிய பெருமை யாழ்ப்பாணத்தில் தோன்றிய தாமோதரம் பிள்ளையவர்களுக்கே உரியதாகும். நற்றமிழ்ப் புலமையும் நாவன்மையும் ஒருங்கே வாய்ந்து தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அரும்பெருந் தொண்டு செய்த ஆறுமுக நாவவலரை அறியாதார் தமிழ்கறு நல்லுகத்தில் உளரோ? இந்நாவலர் பெருமான் யாழ்ப் பாணத்து நல்லூரிலே பிறந்து தில்லையம்பதியிலே வாழ்ந்து எல்லையற்ற புகழெய்தினார். இன்னும் முத்தமிழில் நடுநாயகமாக விளங்கும் இசைத்தமிழுக்கு விழுமிய தொண்டு செய்த விபுலானந்த அடிகளும் இந்நாட்டவரேயாவர். பழந் தமிழ்நாட்டில் சிறந்த இசைக்கருவியாக விளங்கிய யாழின் திறத்தையும் தமிழிசையின் நலத்தையும் ஆராய்த்து யாழ்நூல் என்னும் பெயரால் இசையுலகத்திற்கு அரியதொரு விருந்த ளித்த அறிஞர் பெருமானை அறியாதார் அறியாதாரே.
இலங்கை நாட்டிலே, யாழ்ப்பாணம், தமிழர் வாழும் தொன்னகரம்; தமிழ்மணங் கமழுந் திருநகரம். தமிழர் பண்பாடு யாழ்ப்பாணம் என்ற சொல்லிலே விளங்குகின்றது. யாழ்ப்பாணர் என்பார் பழந்தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒரு வகுப்பார். பண்ணோடு இசை பாட வல்லவர் பாணர் என்று முன்னாளில் அழைக்கப் பெற்றனர். அவருள் யாழிலே வல்லவர்கள் யாழ்ப் பாணர் என்று பெயர் பெற்றார்கள். சிலப்பதிகாரத்தில்
இவர் பெருமை குறிக்கப்படுகின்றது. கண்ணகி வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில்,
"குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபின் பெரும்பாண் இருக்கையும்"
என்று அவர் இருந்த வீதி புகழப்படுகின்றது. தேவாரம் எழுந்த காலத்தில் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் சிவனடியார் ஒருவர் பாழிசயிைல் வல்லவராயிருந்தார். அவர் திருஞான சம்பந்தரோடு பல தலங்களுக்கும் சென்று அவர் பாடிய தமிழ்ப் பாட்டை யாழிலே இசைத்துக் கேட்டோர் செவிக்கும் சிந்தைக்கும் இனிய இசை விருந்து அளித்தாரென்று திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது. இத்தகைய சிறந்த மரபு இப்பொழுது தமிழகத்திலே துார்ந்து போயிற்று. பாணர் என்ற இனத்தார் இன்று தமிழ்நாட்டில் இல்லை. அன்னார் கையாண்ட இசைக் கருவியாகிய யாழும் இப்பொழுது காணப்படவில்லை. எனவே, முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மறைந்து போன ஒர் இன்னிசைக் கருவியையும், அக்கருவியிலே தமிழ்ப் பாட்டிசைத்த ஒரு பழங்குலத்தின் பெயரையும் இக்காலத்தார்க்கும் பாதுகாத்து வைத்திருப்பது யாழ்ப்பாணமேயாகும்
நமது தாய்மொழியாகிய தமிழ் இவ்வுலகிலுள்ள, செம்மை சான்ற தொன்மொழிகளுள் ஒன்று. மன்னரும் முனிவரும் அம்மொழியைப் பேணிவளர்த்தார்கள். அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நலத்திற்கும் சாதனமாகிய நூல்கள் தமிழ் மொழியிலே சாலச் சிறந்து விளங்குகின்றன. இத்தகைய விழுமிய மொழியைத்தாய்மொழியாகப் பெற்றுள்ள நாம், இவ்வுலகிலுள்ள எந்நாட்டார்க்கும் எவ்வாற்றானும் குறைந்தவரல்லோம். ஆதலால், எந்நாட்டிலிருந்தாலும் எத்தொழில் செய்தாலும் தமிழ் மக்கள் நெஞ்சில் தமிழார்வம் குடிகொண்டிருத்தல் வேண்டும். இன்று தமிழினம் பல வேறு நாடுகளிற் பரவியுள்ளது. இவ்வுண்மையையறிந்து பாடினார் பாரதியார்
“சிங்களம் புட்பகம் சாவகம் ஆகிய
தீவு பலவினும் சென்றேறி-ஆங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”
என்ற பாட்டிலே விரிந்து பரந்த தமிழகம் குறிக்கப்படுகின்றது. இன்று பர்மா, மலேயா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய அயல்நாடுகளிலும் தமிழர் வாணிகம் புரிந்தும் வளம் பெருக்கியும் வாழ்ந்து வருகின்றார்கள். அன்னவர் அனைவரும் தமிழ்த் தாயின் சேய்கள் என்று உணர்ந்து ஒன்றுபடல் வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் நாட்டு மொழிகள் தலையெடுத்து வளரத் தொடங்கியுள்ளன. நாமிருக்கும் நாடு நமது என்ற உணர்ச்சி தமிழ் மக்களிடம் பெருகி வருகின்றது. "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்; யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்ற பாரதியார் பாட்டின் உண் மையை உணர்ந்து பண்டைத் தமிழ்ப் பனுவல்களைத் தமிநாட்டு இளைஞர்கள் பாராட்டிப் படிக்கின்றார்கள். இத்தகைய ஆர்வம் தமிழ் வழங்கும் நல்லுலகெங்கும் பரவுதல் வேண்டும். 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவற்கொரு குண முண்டு' என்று பாடினார் ஒரு புலவர். அவர் பாடிய தமிழ்ப் பண்பு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பரக்கப் பேசப்படுகின்றது. ஆதலால், தமிழிலக்கியம் தமிழினத்தார்க்குத் தனிப் பெருஞ் செல்வம். அச்செல்வத்தை நாமும் துய்த்துப் பிறர்க்கும் வழங்குதலே இம் மாநாட்டின் நோக்கமாகும். இந்நோக்கம் நிறைவேறுமாறு தமிழ்ப் பெருந்தெய்வம் திருவருள் புரிக. 'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்' என்னும் உண்மையை உணர்ந்து, இம்மா நாட்டில் நிகழும் சொல் விருந்தை நுகர்வதற்குப் பல்லாயிரக் கணக்காகக் குழுமியுள்ள மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம் உரியதாகுக.
- ↑ தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக யாழ்ப்பாணத்தில் 30-4-1951-இல் நடைபெற்றது. நான்காம் தமிழ்த் திருநாள்.