தமிழின்பம்/வேளாளப் பெருமக்கள் மகாநாடு

3. வேளாளப் பெருமக்கள் மகாநாடு[1]

திறப்புரை

பெரியோர்களே ! தாய்மார்களே !

பழம் பெருமை வாய்ந்த மதுரையம்பதியில் வேளாளப் பெருமக்கள் மகாநாடு இன்று நடைபெறுகின்றது. வேளாண்குல மாந்தர் பல்லாயிரவர் இங்கே குழுமி யிருக்கின்றார்கள். முன்னாளில், வேளாளர் குலம் இந்நாட்டில் மிக்க மேன்மையுற்றுத் திகழ்ந்தது. வேளாளருக்குரிய பயிர்த்தொழிலைப் புகழாதார் தமிழ் நாட்டில் எவருமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது" என்பது இந்நாட்டார் கொள்கை. மேழியே வேளாண்மையின் சின்னம். அம்மேழிக்கொடி இந்த மகாநாட்டுக் கொட்டகையில் அழகுற மிளிர்கின்றது. அதனை 'வாழி வாழி!' என்று வாழ்த்துகின்றோம்.

முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலே ஒரு திருமணம்; மன்னரும் முனிவரும், பாவலரும் நாவலரும், குடிகளும் படைகளும் மணமாளிகையில் நிறைந்திருந்தார்கள். ஒளவையாரும் அங்கே வந்திருந்தார். மன்னன் திருமகனே மணமகன். மணம் இனிது முடிந்தது. மங்கல வாழ்த்துத் தொடங்கிற்று. முனிவர் ஒருவர் எழுந்தார்; 'மணமக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!' என்று வாழ்த்தினார். 'இளவரசு வாழையடி வாழையென வையகத்தில் வாழ்க' என்று வாழ்த்தினார் மற்றொரு முனிவர். ஔவையார் எழுந்தார்; 'அரசே, உன் நாட்டில் வரப்பு உயர்க!' என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்துரையின் பொருத்தமும் பொருளும் அறியாத சபையார், ஒருவரை ஒருவர் வெறித்து நோக்கினர். அது கண்ட ஒளவையார், தம் வாழ்த்துரையின் கருத்தை விரித்துரைப்பாராயினர்; “சபையோரே! 'வரப்பு உயர்க!' என்று இளவரசை நான் வாழ்த்தினேன். விளை நிலத்தின் வரப்பு உயர, நீர் உயரும்; நீர் உயர, நெல் உயரும்; நெல் உயர, குடி உயரும்; குடி உயர, கோன் உயர்வான்" என்று விளக்கம் கூறினார்.

தமிழ் நாட்டாரது கொள்கையை இவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் ஔவையார். 'உழவனே நாட்டின் உயிர்நாடி; அவன் ஊக்கமே அரசனது ஆக்கம்; அவன் கையால் நட்ட நாற்று முடி தழைத்தால், மன்னன் முடி தழைக்கும்' என்று புலவர் கள் பாடினார்கள். அரசனது செங்கோலை நடத்தும் கோல், 'உழவன் ஏரடிக்கும் சிறு கோல்' என்றார் கம்பர். 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி' என்றார் வள்ளுவர். இதனாலன்றோ உழவன் கையைப் புகழ்ந்தனர் கவிஞர்?

“மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும் கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை”.

என்ற பாட்டின் ஒவ்வொரு சொல்லும் உண்மை என்பது இன்று நாட்டுக்குப் படியளக்கும் அரசாங்கத்தார்க்கும் நன்கு தெரியுமன்றோ? சுருங்கச் சொல்லின் பயிர்த் தொழிலே நாட்டின் உயிர்த் தொழில். அத்தொழிலே பொல்லாப் பசியைப் போக்கும்; நல்லறத்தைக் காக்கும்.

இத்தகைய சிறந்த தொழிலைச் செய்யும் உழவன் பெருமை யெல்லாம் அவன் உழைப்பின் பெருமையேயாகும். உழவன் எந்நாளும் உழைப்பவன்; நெற்றி வேர்வை நிலத்தில் விழ வஞ்சமின்றிப் பாடுபடுபவன்; விளைநிலத்தை உழுது பண்படுத்தி, பருவத்தே பயிர் செய்து, கண்ணுங் கருத்துமாய்க களை பறித்து, நீர் பாய்ச்சி, பயன் விளைக்கும் உழவன் பணியைப் பற்றிய பழமொழிகள் தமிழ்நாட்டிலே பல உண்டு. 'உழுகின்ற காலத்தில் ஊர்வழி போனால் அறுவடைக் காலத்தில் ஆள்தேட வேண்டா' என்பது ஒரு பழமொழி. 'வயலில் மோட்டை போனால் கோட்டை போச்சு' என்பது மற்றொரு பழமொழி. கண்ணினைக் காக்கும் இமை போல் பயிரினைக் காத்துப் பயன் விளைவிப்பவன் உழவன் என்பது இப்பழமொழிகளின் கருத்து.

'உழவன் உழைப்பாளன்' என்பது அவன் தொழிலைக் குறித்து வழங்கும் ஒரு சொல்லாலே விளங்கும். இக்காலத்தில் விவசாயம் என்பது உழவுத் தொழிலைக் குறிக்கிறதல்லவா? அச்சொல் வடசொல், உழைப்பு என்பதே அச்சொல்லின் பொருள். மற்றத் தொழில்களைவிட்டுப் பயிர்த்தொழிலை மட்டும் விவசாயம் என்ற சொல் ஏன் குறிக்கின்றது? தமிழ் நாட்டார் உழவனது உழைப்பே உழைப்பு என்று கருதியதாலன்றோ உழவுத் தொழிலுக்கு விவசாயம் என்று பெயரிட்டனர்?

பயிர்த்தொழிலைக் குறிக்கும் மற்றொரு சொல் வேளாண்மை. பயிர்த்தொழில் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அவ்வளவு பழமை வாய்ந்தது. வேளாண்மை என்ற சொல்லும். வேளாண்மை செய்பவர் வேளாளர். இந் நாட்டிலே, அன்றும் இன்றும் வேளாளருக்குத் தனிச் சிறப்புண்டு. வேளாளர், தம் நிலத்தைப் பண்படுத்தியவாறு மனத்தையும் பண்படுத்தினார்கள்; தம் உழைப்பால் வந்த உணவுப் பொருள்களைத் தங்கு தடையின்றி எல்லோருக்கும் தந்தார்கள்; அற்றாரையும் அலந்தாரையும் ஆதரித்தார்கள்; பசித்தோர்முகம் பார்த்துப் பரிவு கூர்ந்தார்கள்; வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து, அவர் திருந்திய முகம் கண்டு மகிழ்ந்தார்கள். அதனால் வேளாண்மை என்ற சொல்லுக்கே உபகாரம் என்னும் பொருள் வந்தது. திருக்குறளிலே அப் பொருளைக் காணலாம்.

“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு”

என்று திருக்குறள் பாடிற்று. இக்குறளில் வேளாண்மை என்ற சொல்லுக்குப் பரோபகாரம் என்பது பொருள். திருவள்ளுவர் காலத்திலேயே வேளாண்மை என்ற சொல் பரோபகாரம் என்னும் பொருளில் வழங்கியிருக்குமானால் அதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்னமே வேளாளரிடம் அப்பண்பாடு தோன்றி வளர்ந்து சிறப்பாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரத்தக்கது. “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று பழைய நீதி நூல் பாடியதும் இக் கருத்துப் பற்றி யன்றோ? திருஞானசம்பந்தரும் வேளாளருடைய பண்புகளைத் தேவாரத் திருப்பாட்டிலே கூறுகின்றார்:

"வேளாளர் என்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்”

என்பது அவர் தேவாரம். இப் பாட்டால் வேளாளர் சிறந்த உழைப்பாளர் என்பதும், கொடையாளர் என்பதும் நன்கு தெரிகின்றன.

பயிர்த் தொழில் செய்வதற்கு ஏர் இன்றியமை. பாதது. ஏரில்லாத உழவனுக்கு ஏற்றமில்லை.

"ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வர அணித்தாய் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது".

என்ற பாட்டு, சிறு குடியானவனுக்கு வேண்டுவனவற்றைக் கூறுகின்றது. குடிகளுக்குச் சீரும் சிறப்பும் ஏரால் வரும் என்பது தமிழ்நாட்டார் கொள்கை. 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' என்று பணித்த நாடு தமிழ்நாடு. ஏரே நிலத்தைச் சீர்படுத்துவது, ஏரே பசிப்பிணியை வேரறுப்பது, ஏரே இனிமை தருவது, இன்பம் பயப்பது.

இத்தகைய ஏரை அழகிய பொருளாகக் கண்டனர் பழந்தமிழர், ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும், பொருள் பண்டைத் தமிழில் உண்டு, அழகுடைய இளங்கிளியை 'ஏர் ஆர் இளங்கிளியே' என்று அழைத்தார் மாணிக்கவாசகர். ஏரில் என்ன அழகு உண்டு? கோணல் மாணலாக, கட்டை நெட்டையாக, கரடு முரடாக இருப்பதன்றோ ஏர்? இத்தகைய கருவியில் அழகைக் கண்டதுதான் தமிழர் பெருமை! தமிழர் பண்பாடு!

கண்ணுக்கு இன்பம் தருவது ஒன்றே அழகு என்று கொண்டாரல்லர் பண்டைத் தமிழர். கருத்துக் கினிய குணங்களின் அழகையும் அவர்கள் கொண்டாடினார்கள்; பயனுள்ள பொருள்களின் பண்பறிந்து பாராட்டினார்கள்; மழை பொழியும் மேகத்தை ஒர் அழகிய பொருளாகக் கண்டார்கள்; எழிலி என்று அதற்குப் பெயரிட்டார்கள்; எழில் என்பது அழகு. அழகுடைய பொருள் எழிலி எனப்படும். அமிர்தம் போன்ற மழையைப் பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகத்தின் கருணை அழகியதன்றோ? அவ்வாறே, உழுகின்ற ஏரின் சீரை அறிந்து, அதனால் விளையும் பயனை உணர்ந்து, ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும் பொருளைத் தந்தனர் பழந்தமிழர்.

முன்னாளில் ஏருக்கு இருந்த ஏற்றமும் எடுப்பும் வேறு எதற்கும் இருந்ததாகத் தோன்றவில்லை. படை எடுக்கும் வீரனையும், பாட்டிசைக்கும் புலவனையும் ஏரடிக்கும் உழவனாகவே கண்டது பண்டைத் தமிழ் நாடு. வில்லாளனையும் இனிய சொல்லாளனையும் ஏராளனாகத் திருவள்ளுவர் காட்டுகின்றார்.

"வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை"

என்ற திருக்குறளில் வில்லையும் சொல்லையும் ஏராக உருவகம் செய்தருளின்ார் திருவள்ளுவர். அப்படியே வாளேந்திய வீரனை 'வாள் உழவன்' என்றும், வேல் ஏந்திய வீரனை 'அயில் உழவன்' என்றும் தமிழ்க் கவிஞர்கள் போற்றுவாராயினர்.

ஏரால் விளையும் உணவுப் பொருள்களை யெல் லாம் ஒரு சொல்லால் உணர்த்தினர் தமிழ் நாட்டார். இக்காலத்தில் மளிகைக் கடை என்பது பலசரக்குக் கடையின் பெயராக வழங்குதல் போன்று, முற்காலத்தில் கூலக்கடை என்பது பலவகைத் தானியங்களும் விற்கும் கடைக்குப் பெயராக அமைந்தது. நெல்லும் புல்லும், வரகும் தினையும், எள்ளும் கொள்ளும், அவரையும் துவரையும், பயறும் உளுந்தும், சாமையும் பிறவும் கூலம் என்ற ஒரு சொல்லாலே குறிக்கப்பட்டன. பெரிய நகரங்களில் கூலவீதிகள் சிறந்திருந்தன. சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் 'கூலங்குவித்த கூல வீதிகள்' இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்றும் கூலவீதியைத் திருநெல்வேலியிலே காணலாம். மேலரத வீதியை அடுத்துள்ள தெரு, 'கூலக்கடைத் தெரு’ என்றே இது காறும் வழங்கி வருகின்றது. மதுரை மாநகரில் கூலக் கடை வைத்திருந்த சாத்தனார் 'கூலவர்ணிகன் சாத்தனார்' என்று பெயர் பெற்றார். அவரே மணிமேகலைக் காவியம் இயற்றிய கவிஞர் என்பர். அந்நாளில் இசையரங்குகளிலும், நடன சாலைகளிலும் உழவரை வாழ்த்தும் வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது. நாடாளும் மன்னனை வாழ்த்திய பின்பு, உணவளிக்கும் உழவனை வாழ்த்துவர் இசைவாணர். 'பதினெண் கூலமும் உழவர்க்கு மிகவே' என்னும் வாழ்த்துரை ஒரு பழைய இசை நூலிற் காணப்படுகின்றது. -

உழவுத் தொழிலால் மேன்மையுற்ற நாடொன்று 'நாஞ்சில் நாடு' என்று பெயர் பெற்றது. நாஞ்சில் என்பது ஏர். மலையாள மன்னருடைய ஆட்சியில் அமைந்துள்ளது நாஞ்சில் நாடு. அந் நாட்டை ஏராலே சீராக்கி, உழைப்பாலே சிறப்பாக்கியவர் தமிழ் நாட்டு உழவரே என்பதில் சிறிதும் ஐயமில்லை. முன்னாளில், 'சொன்ன சொல் தவறாதவர்' என்ற பெருமை வேளாளருக்கு இருந்தது. "ஊழி பேரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்" என்று வேளாளரைப் புகழ்ந்து பாடினார் கம்பர். அன்னார், வாய்மையை உயிரினும் அருமையாகப் போற்றி வாழ்ந்தனர். இதற்கு ஒரு சான்று கூறுவன்:

    தொண்டை நாட்டுத் திருவாலங்காட்டுக்கு அருகே பழையனூர் என்ற மூதூர் உள்ளது. அங்கே எழுபது வேளாளர் முற்காலத்தில் அறநெறி வழுவாது வாழ்ந்து வந்தனர். அவர்கள், வழிப்போக்கன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் நெருப்பில் இறங்கி உயிர் நீத்தார்கள். அச்செய்தி தமிழக முழுவதும் பரவியிருந்தது. 

"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
             வஞ்சனையால் வணிகன் உயிரிழப்பத் தாங்கள்
            கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக்
              குழியில்எழு பதுபேரும் முழுகிக் கங்கை
            ஆறணிசெஞ் சடைத்திருஆ லங்காட் டப்பர்
              அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
            பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
               பிரித்தளவிட்(டு) இவளவெனப் பேச லாமோ”

என்ற ஆன்றோர் பாட்டிலே இவ் வரலாறு குறிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் இப்பொழுது நாம் மறந்து விட்டோம். தமிழ் நாட்டு மாணவன் ஒருவனை நோக்கி, "சொன்ன சொல் தவறாதவர் யார்” என்று வினவினால், 'பழையனுார் வேளாளர்' என்ற பதில் வருமா? அவர் பெருமைதான் அவனுக்குத் தெரி யாதே! அரிச்சந்திரன் பெயர் தெரியும்; அவன் கதை தெரியும். ஆதலால், தான் படித்த கதைப் பாடத்திலுள்ள அரிச்சந்திரனையே அவன் எடுத்துக் கூறுவான். அப்படியே, "வரையாது பொருள் கொடுத்த வள்ளல் யார்?" என்று கேட்டால், 'பாரி' என்று சொல்ல, நம் பள்ளி மாணவர்  படித்தாரில்லையே! கொடைக்குக் கர்ணன் என்பதுதானே அவர் படித்த பாடம்! இந்தப் பாண்டி நாட்டிலேயுள்ள மலைக் கோமானாகப் பாரி என்ற தமிழ் வள்ளல் விளங்கினான் என்பதும், "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" என்று தேவாரமே அவன் பெருமையைப் பாடிற்று என்பதும் அறியாமல் நம் பிள்ளைகள் படிக்கும் நூல்களிலும் கேட்கும் கதைகளிலும், பழையனுார் வேளாளரும், பாரி வள்ளலும், இவர்போன்ற பெருமக்களும் இடம் பெறல் வேண்டும் என்பது என் ஆசை.

இந் நாட்டிலே உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் ஒற்றுமையாலும் நம் முன்னோர் சிறப்புற்று வாழ்ந்தார்கள். அப்பண்புகளைப் பாதுகாத்து வளர்த்தல் வேண்டும். வருங்கால வாழ்க்கைக்கு இம்மாநாடு வழிகாட்டுதல் வேண்டும். பல துறைகளிலும் நம் வேளாளர் முன்னேற்றமடைவதற்குரிய முறைகளை வகுத்தல் வேண்டும். இவ்வரும்பெருஞ்செயல்களெல்லாம் நடைபெறப்போகின்ற வேளாளப் பெருமக்கள் மகாநாட்டை வாழ்த்துகின்றேன். மகாநாட்டின் தோற்றுவாயாக இது காறும் நான் பேசிய மொழிகளைக் கேட்டருளிய பெருமக்கள் அனைவரையும் மனமாரப் போற்றுகின்றேன்.


  1. 1-6-1947-இல் மதுரையில் நடைபெற்ற மகாநாடு இது.