தமிழியக்கம்/மங்கையர்
௪. மங்கையர் முதியோர் எழுக!
ஒருவானில் பன்னிலவாய்
உயர்தமிழ்ப்பெண்களெலாம்
எழுக! உங்கள்
திருவான செந்தமிழின்
சிறுமையினைத் தீர்ப்பதென
எழுக! நீவிர்,
பெருமானம் காப்பதற்கு
வாரீரேல் உங்கள்நுதற்
பிறையே நாணும்!
மறுமலர்வாய்த் தாமரையும்
கனியுதடும், நன்னெஞ்சும்
வாட்டம் எய்தும்! 16
நகர்நோக்கிப் பசுந்தோகை
நாடகத்து மாமயில்கள்
நண்ணி யாங்குப்
பகர்கின்ற செந்தமிழின்
பழிநீக்கப் பெண்களெல்லாம்
பறந்து வாரீர்!
மிகுமானம் காப்பதற்கு
வாரீரேல் வெண்ணிலவு
முகஞ் சுருக்கும்
மகிழ்வான மலர்க்கன்னம்
வாய்மையுளம் வாட்டமுறும்
மலர்க்கண் நாணும். 17
தண்டூன்றும் முதியோரே!
தமிழ்த்தொண்டென்றால் இளமை
தனை எய்தீரோ?
வண்டூன்றும் சிற்றடியால்
மண்டுநறும் பொடிசிதறும்
பொதிகை தன்னில்
பண்டூன்றும் திருவடியால்
பச்சைமயில் போல்வந்து
தமிழர்க் காவி
கொண்டூன்றி வருந்தமிழ்த்தாய்
கொண்டகுறை தவிர்ப்பதற்குக்
குதித்து வாரீர்! 18
பிரம்புவளை மெய்யுடையீர்
ஆருயிரில் வாரியிட்டுப்
பிசைந்த தான
உரம்பெய்த செந்தமிழுக்
கொன்றிங்கு நேர்ந்ததென
உரைக்கக் கேட்டால்
நரம்பெல்லாம் இரும்பாகி
நனவெல்லாம் உணர்வாகி
நண்ணி டீரோ!
இரங்குநிலை கொண்டதமிழ்
ஏற்றகுறை தவிர்த்திடநீர்
எழுச்சி கொள்வீர். 19
அன்னையினை எதிர்த்தார்க்கும்
அவள்மேன்மை மறந்தார்க்கும்
அயர்ந்த வர்க்கும்
மின்னைவிழி உயர்ந்ததுபோல்
மெய்யுயிரைப் பெற்றதுபோல்
தமிழ்ச்சாப் பாடு
தன்னையுணர் விப்பதற்குச்
சாரைச்சிற் றெறும்பென்னத்
தமிழ் நாட்டீரே,
முன்னைவைத்து காலைப்பின்
வையாமே வரிசையுற
முடுகு வீரே! 20