தமிழியக்கம்/வரிப்புலியே


௩. வரிப்புலியே, தமிழ் காக்க எழுந்திரு!

ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்
    முன்னேற்றம் ஒவ்வொன்றும்
        உன்முன் னேற்றம்!
கண்டறிவாய்! எழுந்திருநீ!
    இளந்தமிழா, கண்விழிப்பாய்!
        இறந்தொ ழிந்த
பண்டைநலம் புதுப்புலமை
    பழம்பெருமை அனைத்தையும்நீ
        படைப்பாய்! இந்நாள்
தொண்டுசெய்வாய்! தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
        துடித்தெ ழுந்தே! 11

உயர்தமிழ்த்தாய் இந்நிலத்தில்
    அடைகின்ற வெற்றியெலாம்
        உன்றன் வெற்றி!
அயராதே! எழுந்திருநீ!
    இளந்தமிழா, அறஞ்செய்வாய்!
        நாம டைந்த
துயரத்தைப் பழிதன்னை
    வாழ்வினிலோர் தாழ்மையினைத்
        துடைப்பாய், இந்நாள்
செயல்செய்வாய் தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
        சீறி வந்தே. 12

வாழியநீ! தமிழ்த்தாய்க்கு
    வரும்பெருமை உன்பெருமை!
        வயிற்றுக் கூற்றக்
கூழின்றி வாடுகின்றார்;
    எழுந்திருநீ இளந்தமிழா!
        குறைத விர்க்க
ஆழிநிகர் படைசேர்ப்பாய்!
    பொருள்சேர்ப்பாய்! இன்பத்தை
        ஆக்கு விப்பாய்!
ஊழியம்செய் தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
        உணர்ச்சி கொண்டே. 13

உணர்ந்திடுக தமிழ்த்தாய்க்கு
    வருந்தீமை உனக்குவரும்
        தீமை அன்றோ!
பிணிநீக்க எழுந்திருநீ
    இளந்தமிழா, வரிப்புலியே,
        பிற்றை நாளுக்
கணிசெய்யும் இலக்கியம்செய்!
    அறத்தைச்செய்! விடுதலைகொள்
        அழகு நாட்டில்!
பணிசெய்வாய் தமிழக்குத்
     துறைதோறும் துறைதோறும்
        பழநாட் டானே.14

எதுசெய்ய நாட்டுக்கே
    எனத்துடித்த சிங்கமே!
        இன்றே, இன்னே,
புதுநாளை உண்டாக்கித்
    தமிழ்காப்பாய் புத்துணர்வைக்
        கொணர்வாய் இங்கே
அதிர்ந்தெழுக! தமிழுக்குத்
    துறைதோறும் துறைதோறும்
        அழகு காப்பாய்!
இதுதான்நீ செயத்தக்க
    எப்பணிக்கும் முதற்பணியாம்
        எழுக நன்றே. 15