தமிழ்மொழி இலக்கிய வரலாறு/கலித்தொகை

14. கலித்தொகை

கலித்தொகையின் புதுமைகள்

1. ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு ஆகிய நான்கு நூல்களும் அகவற்பாவில் அமைந்த அகப்பொருள் செய்யுட்களைக் கொண்டவை. மேலும் அவை அனைத்தும் அகத்திணை பற்றிய செய்திகளையே கொண்டவை. தொல்காப்பியருடைய களவியலுக்கும் கற்பியலுக்கும் பெரும்பாலும் இலக்கியமாக அமைந்தவை. கலித்தொகைப் பாடல்கள் கலிப்பாவில் அமைந்தவை. இவற்றுள் சில 80 அடி நீளமும் உடையவை; தொல்காப் பியர் பொருளியலில் கூறியுள்ள விதிகட்கு இலக்கியமாக அமைந்தவை; அதனால் கைக்கிளை, பெருந்திணை பற்றிய பாடல்களும், மடலேறுதல் பற்றிய பாடல்களும், இழிந்தோர் காதல் பற்றிய பாடல்களும் மிகுதியாக இடம்பெற்றுள்ளன.

2. நற்றிணை முதலிய அகநூல்களில் தலைவியின் முகம். கூந்தல், உடல்வளம், அவளது நலம் முதலிய வற்றிற்குத் தமிழ் நாட்டுப் பகுதிகள், நகரங்கள் முதலி யனவே உவமைகளாய் வந்துள்ளன. கலித்தொகையில் வந்துள்ள உவமைகளுள் பெரும்பாலன, நற்றிணை முதலிய நூல்களில் காணப்பெறாத இதிகாச புராண கதைகளாகவே அமைந்துள்ளன.

3, நற்றிணை முதலிய பாடல்களின் நடை மிடுக் குடையது. கலித்தொகைப் பாடல்களின் நடைமிடுக்குத் தளர்ந்தது.

4. நற்றிணை முதலிய நூற்பாக்களில் பேரரசர், சிற் றரசர் நாடுகளும் நகரங்களும் மலைகளும் ஆறுகளும் இடம் பெற்றுள்ளன. ஆயின், கலித்தொகைப் பாக்களிற் 236 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பாண்டியன் (57) , கூடல் (66,91,92), வையை (97), பொதியில் (57) மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டியர்களோ அவர்தம் ஊர்களோ பிறவோ குறிக்கப்படவில்லை. இது கவனிக்கத்தகும் செய்தியாகும்.

5. ஒவ்வொரு கலியிலும் ஒரே துறை அமைந்த பல பாடல்கள் சுவையற்ற நிலையில் பாடப்பட்டுள்ளன. சான்றாக, தலைவன் மடலூர்தல் பற்றி நான்கு பாடல்களும் (138-141), காமவெறி கொண்ட தலைவி பிதற்றல் பற்றி ஆறு பாடல்களும் (143-148) வந்துள்ளன.

6. சில செய்யுட்கள் தோழி-தலைவி உரையாடல் (60) தலைவி-தலைவன் உரையாடல் (64), தோழிதலைவன் உரையாடல் (61) முறையில் அமைந்துள்ளன.

7. பிற அகநூல்களில் காணப்பெறாத "நின்றித்தை" (98),'போசீத்தை'(93), பாடித்தை" (130), இஃதொத் தன் (84) போன்ற சொற்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

8. நற்றிணை முதலிய நூல்களில் காமக்கிழத்தி பேசுவ, தாகச் செய்யுள் இடம் பெறவில்லை. ஆயின், இந்நூலில் சில செய்யுட்கள் (69, 72, 73) இடம் பெற்றுள்ளன.

9. கலிப்பாக்களில் வரும் பெரும்பாலரான தலைவன் தலைவியர் வினைவல பாங்கர் ஆதலால் தலைவி, தலை வனை ஏடா என்றும் தலைவன் தலைவியை ஏடி’ என் றும் அழைப்பதைக் காண்கிறோம் (87, 90).

10. மருதக் கலியில் வந்துள்ள கூனி-குறளன் காதல் உரையாடல் (94) நற்றிணை முதலிய நூல்களில் காணுமாறு இல்லை. -

11. வியாழனும் வெள்ளியும் வடமொழியில் அற நூல்கள் எழுதியுள்ளனர். அந்நூல்களின்படி நாடாண் டவனே' என்று தலைவன் ஒரு செய்யுளில் (99) அழைக்கப் படுகிறான். இத்தகைய செய்தி வேறு தொகை நூல்களில் இல்லை என்பது கவனிக்கத்தகும், டாக்டர் மா. இராசமாணிக்கனார் 287

12. சிவபெருமான் முப்புரம் எரித்தது (1,150), துரி யோதனன் பாண்டவரை அரக்கு மாளிகையில் கொல்ல முயன்றமை (25) , முருகன்-சூரபதுமன் போர் (27), இரா வணன் கயிலை மலையைப் பெயர்த்தது (38) , வீமன் துரியோ தனனைத் துடையில் அடித்தது (52) . கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட மல்லரை அழித்தது (52, 134), வீமன் துச்சா தனன் நெஞ்சைப் பிளந்தது (101), சிவன் எமனை உதைத் தமை (101) , அசுவத்தாமன் தன் தந்தையைக் கொன்ற சிகண்டியைக் கொன்றமை (101) கண்ணன் கம்சனால் ஏவப்பட்ட குதிரை உருவத்தில் வந்த அசுரனைக் கொன்றமை (103) , கண்ணன் தன் ஆழியால் மறைத்த சூரியனை மீட்டமை (104), கன்னன் சூரியனுக்கு மகன் (108), ஊர்வசி திலோத்மை பற்றிய செய்தி (109), யயாதி அரசன் கதை (189) , சிவன் தன் சடையில் கங்கையை மறைத்தமை (150), இவற்றுள் சிவன் முப்புரம் எரித்தமை யும், முருகன் சூரபதுமனை அழித்தமையும் பிறநூல்களில் இடம் பெற்றுள்ளன. ஏனையவை முதன் முதலாக இந்நூலில் தாம் கூறப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தகும். இவை அனைத்தும் இந்நூலிற்கே உரிய புதுமைகளாகும்.

கலித்தொகை ஆசிரியர்

 கலித்தொகை என்பது கடவுள் வாழ்த்து உட்பட 150 கலிப்பாக்களைக் கொண்டதாகும். இவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் ஒழுக்க வகையில் அமைந்துள்ளன. பாலைத்திணை பற்றி 35 செய்யுட்களும், குறிஞ்சித்திணை பற்றி 29 செய்யுட்களும், மருதத்திணை பற்றி 35 பாக்களும், முல்லைத்திணைபற்றி 17 பாடல்களும், நெய்தல் திணைபற்றி 37 பாடல்களும் இதன்கண் அமைந்துள்ளன.

ஏறத்தாழக் கி.பி.14 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கருதத்தகும் நச்சினார்க்கினியர் என்ற உரையாசிரியர் இந்நூலுக்கு அழகிய உரை எழுதியுள்ளார். அவர் கடவுள் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

வாழ்த்துப் பகுதியில்,"ஆதலால் ஈண்டுப் பாலைத் தினை யையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக;" என்றும், நூலின் இறுதியில், "முல்லை, குறிஞ்சி, மருதம் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்புழிச் சொல்லாத முறையால் சொல்லவும் படும் என்றலின் இத்தொகையைப் பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என இம் முறையே கோத்தார் கல்லக் துவனார்,"என்றும் கூறியுள்ளார். அவரே நெய்தற்கலி 25 ஆம் செய்யுள் உரையில், "சொல்லெச்சமும் குறிப்பெச்ச முமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் கல்லந்துவனார் செய்யுள் செய்தார், என்பதையும் குறித்துள்ளார்.

இக் கூற்றுகளை நோக்க, நல்லந்துவனார் நெய்தற் கலியை மட்டும் பாடினவர் என்பதும், அத்துடன் தம் காலத்தில் இருந்த பிற கலிப்பாக்களைக் கோத்து முறைப் படுத்தியவர் என்பதும் நச்சினார்க்கினியர் கருத்தாதல் தெளி வாகும். ஆயின், நச்சினார்க்கினியர் தமது உரையில் பிற கலி களை இயற்றிய ஆசிரியர் பெயர்களைச் சுட்டவில்லை. இதனால் அவர் காலத்திலேயே பிற கலிகளைப் பாடிய ஆசிரியர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது தெளி வாகும்.

கலித்தொகையை முதலில் வெளியிட்ட திரு சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள். இந்நூல் இயற்றியோர் ஒருவரே எனக் கருதினர். அதன் பின்,

"பெருங்கடுங்கோன் பாலை கபிலன் குறிஞ்சி மருதனிள நாகன் மருதம்-அருஞ்சோழன் கல்லுருத் திரன்முல்லை கல்லக் துவனெய்தல் கல்விவலார் கண்ட கலி. ’’

என்னும் வேண்பா வெளிப்பட்டது. அது முதல், ஐந்து கலியும் புலவர் ஐவரால் பாடப்பட்டவை எனத் தமிழறிஞர் கருதலாயினர் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழாராய்ச் சித்துறைப் புலவராய் இருந்த திரு. K. M. சிவராசப்பிள்ளை

அவர்கள் 'கலித்தொகை ஆசிரியர் ஒருவரே' என முடிவு கட்டினர்.

ஐவர் அல்லர்: காரணங்கள்

(1) கலித்தொகை ஆசிரியர் ஐவரே என்பதற்கு மேற் காட்டிய வெண்பாவைத் தவிர வேறு சான்று இல்லை. எனவே, அவ்வெண்பா நம்பத்தக்கதா என்பதை முதற்கண் ஆராய்தல் வேண்டும்.

1. பாலைக் கலியைப் பாடியவர்-பெருங்கடுங்கோன்

2. குறிஞ்சிக் " " -கபிலர்

3. மருதக். " " -மருதன் இளநாகனார்

4. முல்லைக் " " -சோழன் நல்லுருத்திரன்

5. நெய்தற். " " நல்லந்துவனார்

என்பது அவ்வெண்பாவில் உள்ள செய்தி. ஏனைய தொகை நூல்களில் பாலைத்தினை பற்றிப் பல செய்யுட்களைக் கடுங் கோன் பாடியிருத்தலாலும், குறிஞ்சித்திணை பற்றிப் பல. செய்யுட்களைக் கபிலர் பாடியிருத்தலாலும், முதலிரண்டு. கலிகளை இவர்கள் பாடினார்கள் எனக் கொள்ளினும், ஏனைய மூன்றையும் பிற புலவர் மூவரும் பாடத் தகுதி வாய்ந்தவர் என்பதற்குரிய சான்று ஏனைத் தொகை நூல் களில் காணக் கூடவில்லை. மருதன் இளநாகனார் பிற நூல் களில் பாடியனவாகக் காணப்படும் 39 செய்யுட்களில் பாலை பற்றி 17ம், குறிஞ்சி பற்றி 9-ம், முல்லை பற்றி 5ம், நெய்தல் பற்றி 5ம், மருதம்பற்றி மூன்றுமே உள்ளன. இவர் மருதக்கலியைப் பாடினார் என்பது பொருந்துவதாக உள்ளதா? சோழன் நல்லுருத்திரன் புறநானூற்றில் ஒரு செய்யுளே (190) பாடியதாகத் தெரிகிறது. அவன் பாடிய பா ஒன்றும் வேறு தொகை நூல்களில் இல்லை. அவன்முல்லைக் கலியைப் பாடினான் என அவ்வெண்பா கூறு தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கிறது. நல்லந்துவனார் நெய்தற்றிணையில் ஒரு செய்யுளும் செய்திலர். அவர் நெய்தற்கலியைப் பாடியதாக வெண்பா விளம்புகிறது.1

(2) முல்லைக் கலியில் கூறப்படும் முல்லை நில மக்கள் பாண்டிய நாட்டவராகக் காணப்படுகின்றனர். அவர்கள் பாண்டியனை வாழ்த்துவதாகச் செய்யுள் கூறுகிறது. சோழ வேந்தன் தனது நாட்டு முல்லை நில மக்களைப் பாடாதது வியப்பே அன்றோ? சோழ அரசன் தனது நாட்டு மக்களைப் பற்றிப் பாடாமல், பாண்டிய நாட்டு முல்லை நில மக்களைப் பற்றி மட்டும் தனது முல்லைக் கலியில் பாடினான் என்னல் சற்றும் பொருந்தாது. முல்லை நிலம் பாண்டியர்க்கே உரிமை யுடையதும் அன்று. பாண்டியனை வாழ்த்திப் பரவும் ஒரு குறிப்பிட்ட முல்லை நிலத்தாரைப் பற்றிச் சோழ வேந்தன் நூல் பாடினான் என்பது அறிவிற்கும் அநுபவத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும்.

(3) நெய்தற் கலியைப் பற்றி ஒரு சிறு செய்யுளும் ஏனைய தொகை நூல்களுட் பாடியிராத ஒருவர், நெய்தற் கலியைப் பாடினார் என்பது, கருக்கொள்ளாது மகப்பேறு தோன்றினாற் போலாகும் அன்றோ?

(4) கலித்தொகை முழுமையையும் நன்கு ஆராயின், செய்யுட்கள் ஒரே ஆசிரியர் இயற்றியன என்பது புலனாம். இதனை ஒப்புக்கொள்ள மனமற்றவர் இவ்வெண்பாவினை வெளிக்கிளம்ப விட்டனர். இவ்வெண்யா எந்தக் கலித் தொகை ஏட்டிலும் இல்லை; வேறு நூல் ஏட்டுப் படிகளிலும் இல்லை; மாயமாய் வந்ததாகும். இதனை நன்கு எண்ணாது புலவர்கள் கலித்தொகையை ஐவர் பாடியதாகக் கொண்டு விட்டனர்.2 இது முற்றும் ஆதாரமற்ற-இக்காலப் புலவர்

1. K.N. Sivaraja Pillai, The Chronology of the Early Tamils, p. 35.

2. lbid. p. 225.

எவரோ கட்டிவிட்ட வெண்பா ஆகும் என்பதே பேராசிரியர் திரு எஸ். வையாபுரிப்பிள்ளை, திரு வித்துவான் வே. வேங்கடராஜூலு ரெட்டியார் முதலியோர் கருத்துமாகும்.

(5) திருநெல்வேலி - சுவர்ணம் பிள்ளை அவர்கள் தமக்குக் கிடைத்ததாகக் கூறிய "ஊசி முறி” என்னும் நூலைத் தமிழ்ப் பேராசிரியர் திரு கா. நமச்சிவாய முதலியார் அவர்கள் பொருள் கொடுத்து வாங்கி ஆராய்ந்தார்கள், அது போலி நூல் - பொருளுக்காக இக்காலப் புலவர் பாடிய பொய்ந்நூல் - என்பதை அறிந்து கிழித்தெறிந்தார்கள், இங்ங்னம் பொருளுக்காகவும் விளையாட்டாகவும் பலர் தாமே கட்டிய பாக்களைப் 'பழம்பாடல்கள்' எனக்கூறி ஏமாற்றல் உண்டு. இவ்வெண்பாவின் படைப்பு அத்தகையோருள் ஒருவர் செயலாக இருக்கலாம் எனக் கோடலே பொருந்தும்.

  கலித்தொகைப் பாக்களின் நடை, மொழி அமைப்பு, சொல் அமைப்பு, நூல் முழுமையும் புராண இதிகாசக் கதைகள் விரவிக் கிடத்தல், பிற அகப்பொருள் நூல்களில் குறிக்கப் பெற்ற சிற்றரசர் பேரரசர் பெயர்களுள் ஒன்றேனும் குறிக்கப்படாமை முதலியவை, இந்நூல் கபிலர் பரணர் முதலிய புலவர்களுக்குப் பிற்பட்ட ஒருவரால் பிற்காலத்தில் (பெரும்பாலும் சங்க இறுதிக் காலத்தில்) பாடப்பட்ட நூலாக இருத்தல் வேண்டும் என்று நினைக்க இடம் தருகின்றன. இப்பாடல்களை ஐவரோ, பலரோ பாடினர் என்பதை உணர்த்தும் சான்று இப்பாக்களின் நடையில் இல்லை.2

3.பேராசிரியர் S. வையாபுரிப் பிள்ளை, தமிழ் மொழி இலக்கிய வரலாறு பக். 17, 51, 57,

ஐவர் பாடியவராயின் அவர்தம் பெயர்கள் ஏடுகளில் இடம் பெற்றிருக்கும்; பாடியவர் பலராயினும் பிறநூற் பாடல்களில் உள்ளவாறு புலவர் பெயர்கள் குறிக்கப்பட்டிருக் கும்.

த-16 தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

கலித்தொகையின் காலம்

1. கலித்தொகைச் செய்யுட்கள் பெரும்பாலும் பொருளியல் சூத்திரங்களுக்கு இலக்கியமாய் அமைந்தவை: கைக்கிளை, பெருந்திணைச் செய்யுட்களை உடையவை.

2. "மையின் மதியின் விளங்க

                       முகத்தாரை
    வவ்விக் கொளலும் அறனெனக் 
                      கண்டன்று."
              --குறிஞ்சிக்கலி - 26.

பெண்டிரை வெளவிக்கோடல் 'இராக்கத மணம்' எனப்படும். இராக்கத மணத்தைத் தொல்காப்பியர் கூறிலர். 'பெருந்திணை-ஒவ்வாத காமம்' எனத் தொல்காப்பியர் கூறினரே அன்றி, இராக்கத மணமுறையாகிய வெளவிக் கோடலைத் தமிழ் மக்கள் கையாண்டனர் என்று கூறிலர். 'இராக்கத மணம் அறன்' எனத் தொல்காப்பியரோ சங்க நூற் புலவரோ யாண்டும் கூறிலர். ஆரியருடைய எண் வகை மணங்களுள் 'இராக்கத மணம்' ஒன்றாகும். தமிழர்க்கு இம்மணம் உண்டெனக் கூறச் சங்க இலக்கியச் சான்றில்லை. அடியோர் தலைவராகக் கொள்ளினும், தமிழகத்துள் அடிப்பட்ட பழக்கத்துக்கு மாறாகச் சங்கத்துச் சான்றோர் செய்யுள் செய்யார். ஆகவே, இராக்கத மணம் அறன்’ எனக் கூறும் இச் செய்யுளும் இதுபோன்ற கலிச் செய்யுட்களும் கடைச் சங்கப் புலவருக்குப் பிற்பட்ட காலத்தனவாகும் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

3. குறிஞ்சிக்கலிச் செய்யுள் ஒன்றில் தலைவி, "தோழி, நீ தெருவில் போவார்க்கெல்லாம் இரங்குதல் வாரணவாசியில் (காசியில்) பிறர் வருத்தம் தம் வருத்தமாகக் கருதும் அருளுடையார் செயலை ஒத்துள்ளதே," (24) எனக் கூறியுள்ளது கருதற்பாலது. ஏனைய தொகை நூல்களுள், இச்செய்தி காணப்பட்டிலது. வாரணவாசி (காசி) நகர மாந்தர் செய்தி எந்த அளவு தமிழகத்தில் பரவி இருந்தால், அதனைத் தலைமகள் சொல்வதாகப் புலவர் பாடியிருப்பர் என்பது சிந்திக்கத் தக்கது. ஏனைய பழம்பாடல்களில் காணப்பெறாத இவ்வடநாட்டுச் செய்தி சங்க காலத்தின் இறுதியில் அல்லது பிற்பட்ட காலத்தில் தமிழகத்தாரால் அறியப்பட்டதாதல் வேண்டும்.

4. குறிஞ்சிக் கலியுள் ஐந்திணை பற்றிக் கூறற்குரிய அரிய செய்திகளை, ஏனைச் சான்றோரைப் பின்பற்றிக் கூறுதலை ஒழித்து அவரால் கனவிலும் கருதப்படாதவையும் சொல்லப்படாதவையுமான கைக்கிளை பெருந்திணைச் செய்திகளையும், இழிந்தோர் களவினையும், மருதக்கலியுள் கூனும் குறளும் உறழ்ந்து கூறலும் புணர்தல் (29) போன்ற செய்திகளையும், “தேள் கொட்டி ஏறும் விஷம் போலக் காமம் தலைக்கேறுகிறதோ?” என்றாற்போலக் கூறப்படும் முல்லைக்கலிச் செய்திகளையும், இவைபோன்றே ஏனைய கலிகளிலும் வெறுக்கத்தக்க–பண்டைப் புலவர் நெறிக்கு மாறாகக் கூறப்படும் அச்சங்ககாலப் புலவரோடு இருந்த சான்றோர் பாடியிரார் என்பது அறிவும் நடுவு நிலைமையும் உடையார் நன்கறிதல் கூடுமன்றோ? இவற்றுக்கு இலக்கணம் தொல்காப்பியத்துள் காணப்படினும், இவற்றைப் பிற்காலத்துப் புலவர் பாடினர் எனக் கோடலே அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாகத் தெரிகிறது. அறிஞர் மேலும் ஆய்வாராக.

5. காமன் ஆரியக்கடவுள். அவன், ‘காமனார்’ எனவும், ‘சாமனார்க்கு மூத்த காமனார்’ எனவும் மருதக் கலியுள் (29] கூறப்பட்டாற் போலப் பிற தொகை நூல்களுட் கூறப்பட்டிலன்.

6. கலித்தொகை முழுமையிலும் எந்த அரசன் பெயரும் சுட்டப்படவில்லை. மூவேந்தருள் பாண்டியனே சுட்டப்படுகின்றான். வையை, கூடல் இவையே சுட்டப்படுகின்றன. ஏனைய தொகை நூல்களிற் கூறப்படும் வள்ளல்களோ புலவர்களோ சுட்டப்படவில்லை. மேற்கோள் காட்டத்தகும் இடங்களில் ‘வாரணவாசிப் பதம்’ போன்ற வட நாட்டுச் செய்திகளும், உவமைகள் கூறப்பட்டுள்ள இடங்கள் தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

பலவற்றில் புராணக் கதைகளும், தெய்வங்களுமே குறிப்பிடப் பட்டுள்ளன. ஏனைய அகப்பாட்டுகளில் பெரும்பாலான செய்யுட்களில் வந்துள்ள தமிழ்ப்புலவர் பெயர்கள், வள்ளல் களின் பெயர்கள், அரசர்கள் பெயர்கள், போர்கள் முதலியன போன்ற தமிழகச் செய்திகளுள் ஒன்றேனும் 149 செய்யுட் களைக் கொண்ட கலித்தொகையில் பயின்றுவராமை நன்கு கவனித்தற்குரியது. இத்தகைய காரணம் கொண்டே கலித் தொகைச் செய்யுட்கள் பிற அகப்பொருள் நூல்கட்குப் பின்னரே செய்யப்பட்டவை எனக் கூறலாம். -

கபிலர், பரணர், நக்கீரர் போன்ற சங்கத்துச் சான்றோர் அகனைந்திணை பற்றிய பாடல்களையே பாடியுள்ளனர்; தொல்காப்பியப் பொருளியல் விதிகட்குரிய பாக்களைப் பாட வில்லை. அக்குறையை நீக்கவே அப்புலவர்கட்குப் பின்பு தோன்றிய புலவர் ஒருவர் இந்நூலைப் பாடியிருத்தல் கூடும். இந்நூலில் பாண்டியநாடு ஒன்றே குறிக்கப்பட்டுள்ளது: பாண்டியனே பாராட்டப்பட்டுள்ளான். எனவே, கலித் தொகை பாடிய புலவர் பாண்டிய நாட்டினராயிருத்தல் கூடும்.

கலித்தொகையில் பாண்டியன், அவன் தலைநகரான மதுரை, வையை ஆறு, பொதியில்மலை, அவனது நேர்மை யான ஆட்சி என்பன இடம் பெற்றுள்ளன. இவற்றுடன் பாண்டியர் வளர்த்த தமிழ்ச் சங்கம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. முன்பு குறிப்பிட்டதுபோல் சேர, சோழர் பற்றியோ புகழ்பெற்ற குறுநில மன்னரைப் பற்றியோ ஒரு சிறு குறிப்பும் இந்நூலில் இடம் பெறவில்லை. இவை அனைத்தையும் நடுவு நிலையிலிருந்து நோக்க, பிற புலவர்கள் பாடாது விட்ட பொருளியல் விதிகட்கேற்ற பாடல்களைக் கொண்ட இக்கலித்தொகை என்னும் நூல், சங்க காலத்தின் இறுதியில்-களப்பிரர் படையெடுப்புக்குச் சிறிது முற்பட்ட காலத்தில்-பாண்டியன் மீதும் அவனது நாட்டின் மீதும் அளவற்ற பற்றுக்கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர் ஒருவரால் பாடப்பட்டிருத்தல் வேண்டும் என்று கொள்வது டாக்டர் மா. இராசமாணிக்கனார் 245

மிகவும் பொருத்தமாகும்.4 இப்புலவர், நச்சினார்க்கினியர் தம் உரையில் குறிப்பிட்ட ஆசிரியர் நல்லந்துவனார் ஆயின் இந்நல்லத்துவனார் பிற நூல்களிலுள்ள பாடல்களைப் பாடிய நல்லந்துவனாரினும் வேறுபட்டவர் எனக் கொள்ளலே பொருத்தமுடையது. எனவே, கலித்தொகையின் காலம் சங்க இறுதிக்காலம், அஃதாவது, ஏறத்தாழக் கி.பி. 300 என்னலாம்.

    நூற் செய்திகள் சில
 ஏறு தழுவல்: காடும் காடு சார்ந்த இடமும் முல்லை எனப்படும். ஆயர் என்பவர் முல்லைநில மக்கள். பிடவம், கோடல், காயா, கொன்றை, வெட்சி, தளவம், குல்லை, குருந்தம், பாங்கர் முதலிய மலர்கள் முல்லை நிலத்திற் குரியவை. இவை தனித்தனியே கட்டப்பட்டும், கலவையாகக் கட்டப்பட்டும் ஆயரால் அணியப்பெறும் (101, 103) .
 முல்லைக்கலியுள் ஆயர் ஏறுதழுவல் பற்றிய விவரங்கள் அழகுற அமைந்துள்ளன. ஆயர் சிவபெருமான் மழுவைப் போல எருதுகளின் கொம்புகளைச் சீவுவர் (101) . எருது களுள் பலதேவனைப் போன்ற வெண்ணிறம் கொண்டவை சில; கண்ணனைப்போலக் கரியவை சில: சிவனைப் போலச் செம்மையும் கருமையும் கலந்தவை சில; முருகனைப்போலச் சிவந்தவை சில [105) ; இந்திரனைப்போல் பல புள்ளிகளை உடையவை சில; முருகனது வெள்ளிய துகிலைப்போல வெள்ளிய கால்களையுடையவை சில; எமனைப்போன்ற வலிமையுடையவை சிலவாகும் (106). இவை அனைத்தும் தொழுவத்தில் விடப்படும்.

4. இங்ங்னம் கொள்வதே மிக்க பொருத்தமாகும். இங்ங்னம் கொள்ளின், 'கலித்தொகை' என்னும் பெயர் தவறாகும்; தொகை நூல்கள் ஏழாகும். பலர் பாடினர் என்னும் தவறான கருத்தில் இதற்குக் (கலித்) 'தொகை' என்னும் பெயர் கொடுக்கப்பட்டது போலும்! தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

 முல்லைநில இளைஞர்கள் அத்தொழுவில் பாய்வதற்கு முன்பு நீர்த்துறையிலும், ஆலமரத்தின் கீழும், மாமரத்தின் கீழும், உறையும் தெய்வங்களை வழிபடுவர் (102,103 ). கன்னிப்பெண்கள் பரண்மீது நின்று வேடிக்கை பார்ப்பர் [102, 103}.
 வீரர்கள் தொழுவத்துள் பாய்ந்தவுடன் ஏறுகளைத் தழுவி அடக்க முற்படுவர். அவை சில வீரர்களைக் குத்திச் சாய்க்கும்; சிலர் குடல்களை வெளியே தள்ளச் செய்யும். குடில்கள் சில எருதுகளின் கொம்புகளில் சுற்றிக்கொள்வதும் உண்டு. ஏறுகளை அடக்கும் வீரர்கள் ஆயராலும் ஆய்ச்சிய ராலும் பாராட்டப்படுவர், இறுதியில் வீரரும் மங்கையரும் ஊர் மன்றத்தில் கைகோத்துக் குரவைக்கூத்து ஆடுவர். அப்பொழுது ஆய்ச்சியர் சில பாடல்களைப் பாடி ஆடுவர் (101-1041; இறுதியில் அரசனை வாழ்விக்கும்படி திருமாலை வேண்டுவர் (108-106).
 ஏறு தழுவலில் ஈடுபடாத இளைஞனை ஆயர்மகள் கணவனாக ஏலாள் (103). ஆயருள் ஆடுமாடுகளை மேய்த்தவர் ஆட்டிடையர் எனப்பட்டனர்; 'புல்லினத்தார்’ அல்லது 'குறும்பர்’ எனவும் அழைக்கப்பட்டனர். பசு இடையர் 'கோ இனத்தார்’ என்றும் "நல்லினத்தார்’ என்றும் கூறப்பட்டனர் [107, 1131.
 தலைவியின் தந்தையோடு அவள் தமையன்மாரும் உடனிருந்து அவளது திருமணத்திற்கு இசைவு தருவர் (107). -
 வினைவல பாங்கனான தலைவன், தலைவியின் தமையலனுக்கு உணவு கொண்டு செல்வான்; பசுக் கூட்டத்திலிருக்கும் தலைவியின் தந்தைக்குக் கறவைக்கலம் (பால் கறக்கும் பாத்திரம் ) கொண்டு செல்வான்; கன்றுகளை மேய்ப்பான் (108); திருமாலை எண்ணித் தலையினாலே வணங்கி, கையால் தொட்டுச் சூள் உரைப்பான் (108). 
 ஆயர் தம் வீட்டைச் செம்மண்ணால் அலங்கரித்துத் தரையில் மணலைப் பரப்புவர்; பெண் எருமையின் கொம் பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணம் செய்வர். அத்திருமணம் 'பெருமணம்'எனப்படும் (113).
 தமிழ்ச் சங்கம்: இளவேனிற் காலத்தில் சான்றோர் நாவிற் பிறந்த கவிகளின் புதுமையை மதுரை மக்கள் கொண்டாடுவர் என்று ஒரு செய்யுள் (35) கூறுகிறது. இதனை நோக்க, இளவேனில் என்னும் இன்பந்தரும் காலத்தில்தான் புலவர்கள் புதிய செய்யுட்களை இயற்றிக் கொண்டு மதுரையில் கூடினர் என்று நினைப்பது பொருத்தமாகும.
 வையையாறு மதுரையைச் சூழ்ந்து வந்தது. அத்தோற்றம் நிலமகள் ஒரு பூமாலையைச் சூடியிருந்த தன்மையை ஒத்திருந்தது. கார்காலம் முதிர்ந்தமையால் கொத்துக் கொத்தாக மலர்கள் வையை நீரில் படிந்து வத்தன. வையை நீர் கோட்டை மதில் மீது மோதிக் கொண்டிருந்தது. அவ் வையை புலவரால் பாராட்டப்பட்டது (67). புலவர்கள் தம் செவிகளை வயலாகவும் தமக்கு முற்பட்ட சான்றோர் கூறிய செய்யுட்கள் தம் சொல்லை வளர்க்கும் நீராகவும் கொண்டு, தமது அறிவுடைய நாவாகிய கலப்பையால் உழுது உண்பவர். அத்தகைய புலவர் பெருமக்களின் புதிய கவிகளைப் பாண்டியன் கொள்ளைகொண்டு மகிழும் இயல்புடையவன் (68} . இக் கூற்றுகளை நோக்க, மதுரையில் புலவர்கள் மிக்கிருந்தமையும் பாண்டியர் அவர் செய்யுட்களைக் கேட்டு அநுபவித்தமையும் அப்புலவர் பெருமக்கள் புதிய கவிகள் இயற்றினமையும் இனிது புலப்படுகின்றன அல்லவா? -
 குறிஞ்சி நிலத் தலைவன் தன்னை நாடி வந்த புலவர்களுக்குத் தேர்களையும் களிறுகளையும் கொடுத்தான் என்று ஒரு செய்யுள் கூறுகிறது (50) . கலித்தொகைப் பாக்கள் சில: பாண்டியனையே தலைவனாகக் கொண்டு பாடப்பட்டிருப்ப 248 தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
 தால், இங்குக் கூறப்பட்டுள்ள தலைவனைப் பாண்டியனாகக் கருதுதல் பொருத்தமாகும் "தமிழ் கெழுகூடல்" என்றும் "தமிழ் வையை" என்றும் தமிழுக்கும் கூடலுக்கும். தமிழுக்கும் வையைக்கும் தொடர்புடைமையைப் பிறநூற் பாக்களும் உணர்த்தலாலும், பாண்டியரே சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர் என்று களவியலுரையும் பிற நூல்களும் கூறலானும், கலித்தொகைப் பாக்களும் அவ்வுண்மையையே புலப்படுத்துகின்றன என்பது இங்கு அறியத்தகும்.
 கல்வி: கல்வி பற்றிய செய்தி மூன்று செய்யுட்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு தலைவன் மெய்ப்பொருள் கூறும் நூல் களைக் கூறவல்லவர்களை வழிபட்டு அப்பொருளை அறிந்தவன் போல நன்மக்களைக் கண்டால் தோன்றும் மன அடக்கம் உடையவன் (47) . ஒன்றையும் கல்லாமல் மூத்தவன் அறிவுக்கண் இல்லாத நெஞ்சம் உடையவன் (130) பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியன் தன்பால் ஒன்று பெறாமல் மனம் வருந்தும்படி, கற்றவன் விடலாகாது. அவன் தன் கைப்பொருளை அக்கல்விப் பொருளுக்குக் கைம்மாறாகக் கொடுக்க வேண்டும். தான் கற்ற கல்வியிடத்தே தவறு செய்பவனது கல்விப் பொருள் நாள்தோறும் தேயும். அவனும் தானாகத் தேய்ந்துவிடுவான் (சிறப்பிழப்பான்) [149].
 அணிகள்: இந்நூலில் மிகப்பல அணிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இழை, முத்துவடம், கண்ணி, மேகலை, தொடி, மகரக்குழை, வரிக்குழை, கணங்குழை, தெள்ளரிச் சிலம்பு, இடபக்குறி பொறித்த தாயத்து, பவளவடம், பொன்மணி வடம், சதங்கை, வயந்தகம், வல்லிகை, புல்லிகை, கன்ன சாமரை, தெய்வ உத்தி, கண்டிகை முதலியன, பரத்தையர் அணியும் அணிகள் சில செய்யுட்களில் (95, 96, 135) கூறப்பட்டுள்ளன,
 சமயச் செய்திகள்: முக்கோல்பகவர் என்பவர் உறியிலே தங்கின. கமண்டலத்தை யுடையவர்; அரி, அயன், அரன் டாக்டர் மா. இராசமாணிக்கனார் 249

என்னும் மூவரும் ஒருவரே என்பதை அறிவிக்கும் அடையாளமாக முக்கோலைத் தோளிலே வைத்தவர்; குடையை உடையவர்; காட்டிடத்தே போதல் இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர் (9) ; பிரணவத்தை எப்பொழுதும் நினைத்திருப்பவர் (126).

 திருமால், பலராமன், சிவன், முருகன் ஆகிய நால்வரும் சிறப்புடைக் கடவுளராய் மதிக்கப்பட்டனர். உயிர் களைப் படைக்கும் பிரமன் முதல்வன் எனப்பட்டான் (129). திருமாலின் மகனான காமன் (109), அவன் தம்பி சாமன் (26) குறிக்கப்பட்டுள்ளனர், ஆயர் மகள் தெய்வத்திற்குப் பாலை வழங்கக் கோவிலுக்குப் போவாள் (109) குறப் பெண்கள் நேர்த்திக் கடன் செய்வது வழக்கம் (46) . கோவில் ‘கடவுள் கடிநகர்' எனப்பட்டது (84): 'புத்தேளிர் கோட்டம்' என்றும் பெயர் பெற்றது (82). மக்கள் கோவிலை வலம் வருதலும் சிறு பிள்ளைகளை வலம் வரச் செய்வித்தலும் வழக்கம் (82).
 கன்னிப் பெண்கள் தைத்திங்களில் நீராடி நோன்பிருந்து பிறர் மனையின்கண் ஐயமேற்றுப் பாடி அங்குப் பெற்றவற்றைப் பிறர்க்குக் கொடுத்தனர்; அங்ங்னம் கொடுப்ப தால் தமக்கு நற்பயன் உண்டாகும் என்று நம்பினர் (59). இது பிற்காலத்தில் 'மார்கழி நோன்பு' எனப்பட்டது.
 இருடிகள் மாலையில் அழலை ஆவுதி பண்ணி எழுப்புவர் (180). இவர்கள் மனைவியரோடு வாழ்ந்துகொண்டே தவம் செய்பவர். இவர்கள் கடவுளர் எனப்பட்டனர் (98).
 அரிய தவங்களைச் செய்தவர் பேரின்பத்தை அடைவர் என்பது நம்பப்பட்டது (80) நூற் கேள்வியினையுடைய அந்தணர் யாகம் செய்தனர் (86). அவர்கள் மாலையில் தம் சமயக் கடமைகளைத் தவறாது செய்தனர் (119) .
 சில உண்மைகள் : எந்த நாட்டு மனித இனத்திற்கும் பொதுவான பல உண்மைகள் இந்நூலில் இடம் பெற் 

றுள்ளமை இந் நூலுக்கென்று அமைந்த சிறப்பியல்புகளுள் சிறந்தது என்னலாம், அவ்வுண்மைகள் தலைவன் கூறுவன போலவும், தோழி கூறுவன போலவும், முக்கோற் பகவர் போன்ற பெரியோர் கூறுவன போலவும், வினைவல பாங்கர் கூறுவன போலவும் இந்நூலில் அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றை இங்குக் காண்போம்:

1. செல்வம் நிலையில்லாப் பொருள் [8].

2. வறியவனது இளமை சிறப்பை அடையாது; கொடைக்குணம் இல்லாதவனுடைய செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாவாது [10].

3. யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் உறவினர் இன்றி, நண்பர் இன்றிக் கெட்டு ஒழிவான் [10].

4. இளமையும் காமமும் நாள்தோறும் கழியும் இயல்பின [12].

5. அறிவில்லாதவர் தமக்கு இறுதி உண்டு என்பதையும் மூப்பு உண்டு என்பதையும் மறந்துவிடுவர் [12].

6. நேர்மையற்ற முறையில் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையாகும் [14].

7. முழுமதி நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும் [17].

8. நற்குணமுடையவர் சொல் தவறார் [22].

9. நிலையாமையை உணர்பவர் கொடை புரிவர் [32].

10. சோம்பலில்லாதவன் செல்வம் வளர்ச்சி அடையும் [35].

11. மனிதயாக்கை பெறுதற்கு அரியது [141].

12. பொருள் இல்லாதவர் நிகழ்த்தும் இல்லறம் இன்பத்தைத் தராது [148].

உவமை முதலியன : கலித்தொகைப் பாக்களில் உவமைகள் மிகப் பலவாகும். அவற்றுள் சில இதிகாச புராணக் கதைகளைக் குறிப்பவை [101]; சில அரசியல் செய்திகள் பற்றியவை [70]; வேறு சில உலகியல் பற்றியவை [69] . உரு வக அணி சில செய்யுட்களில் [61, 96, 97, 149] அமைந்துள்ளது. உள்ளுறை உவமம் பல செய்யுட்களில் [39, 123, 132 முதலியன] அமைந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணியும் இடம் பெற்றுள்ளது [74]. இறைச்சிப் பொருளும் இடம் பெற்றுள்ளது [40]. மேற்கோள்

    கலித்தொகைப் பாக்களில் திருக்குறள், அகநானூறு, சிலப்பதிகாரம் முதலிய சங்க கால நூல்களின் கருத்துகளும் தொடர்களும் சொற்களும் மிகுதியாகப் பயின்று வருகின்றன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காணலாம்.

1. "அளியென உடையேன்யான் அவலங்கொண் டழிவலோ" 20,

"அறனெனும் மடவோயான் அவலங்கொண் டழிவலோ" -சிலம்பு, காதை 18 , வரி 41.

2. "வென்வேலான் குன்றின்மேல் விளையாட்டும் விரும்பார்கொல்" 27.

"வென்வேலான் குன்றில் விளையாட்டு யானக லேன்" -சிலம்பு, காதை 29, செ. 10,

3. "பாடல்சால் சிறப்பிற் சினையவும் சுனையவும்" 28

"பாடல்சால் சிறப்பிற் பட்டினப் பாக்கமும்" சிலம்பு, காதை 5, வரி 58.

4. "காதலர்ப் புணர்ந்தவர் கவவுக்கை நெகிழாது" -33.

"காதலற் பிரியாமல் கவவுக்கை நெகிழாமல்" - சிலம்பு, காதை 1, வரி 61. தமிழ்மொழி-இலக்கிய வரலாறு

5. "ஓர்வுற்று ஒருதிறம் ஒல்காத நேர்கோல்" 42

  "சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல்"      -திருக்குறள், 118 

6. "காதல்கொள் வதுவை நாட் கலிங்கத்துள் ஒடுங் கிய மாதர்" 69.

  "கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள்" அகம். 86

7. "முகந்தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு" 95

  "அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
  கடுத்தது காட்டும் முகம்" 
                -திருக்குறள், 706 
    கலித்தொகைப் பாக்களில் காணப்படும் சில கருத்து களும் தொடர்களும் சொற்களும் திரிகடுகம், தேவாரம் முதலிய பின் நூல்களில் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் சிலவற்றைக் கீழே காண்க :

1."கோளாளர் என்னொப்பார் இல்லென நம்மானுள்

  தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கொருநாள் 
  கோளாளன் ஆகாமை இல்லை. அவற்கண்டு 
  வேளாண்மை செய்தன

காண்."101

"தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் 
கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் 
கேளாக வாழ்தல் இனிது".
                -திரிகடுகம், 13. 2. "அன்னையும் அத்தனும் இல்லரா, யாய்கான"-115 
  "அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்." - -அப்பர் தேவாரம்.

வட சொற்கள் : ஐங்குறுநூறு முதலிய அகப்பொருள் நூல்களில் வடசொற்கள் மிகக் குறைந்து காணப்படுகின்றன.

கலித் தொகைப் பாக்களில் அவற்றைவிடச் சில சொற்கள் மிகுதியாக இடம் பெற்றுள்ளன. இந்நூற்பாக்களில் வட நூற் கதைகளும் பிறவும் மிகுதியாக இடம் பெற்றிருத்தல் முன்பே குறிக்கப்பட்டதன்றோ? கடவுள் வாழ்த்து நீங்கிய இந்நூற்பாக்களில் காணப்படும் வடசொற்களுள் சிரகம்-பாத்திரம் [51] , காரணம் [60] , தம்பலம் [65] , பிசாசர் [65], குணங்கள் [71], வயந்தகம்-ஒருவகை அணி [79] , ஆரம்-மாலை [79] , நூபுரம்-சிலம்பு [83], வச்சிரம் [105], நேமி [105] சாமன்; காமன் [94] , மேகலை [96], உத்தி [97] , விச்சை-வித்தை [148], என்பவை குறிக்கத் தக்கவை.

காலம் செல்லச் செல்லத் தமிழர் வாழ்வில் வடசொற்களும் வடநூற் செய்திகளும் பிறவும் எங்ங்ணம் படிப்படியாக மிகுந்துவந்துள்ளன என்பதை இக் கலித்தொகைச்செய்திகள் நன்கு புலப்படுத்தல் காண்க.