தமிழ் அகராதிக் கலை/அணிந்துரை
அணிந்துரை
உயர் திரு. பேராசிரியர். டாக்டர். மு. வரதராசனார்,
M. A., M, 0. L., Ph. D. அவர்கள்,
தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்,
சென்னை.
தமிழ் அகராதிகளின் வரலாறு பற்றிய நூல் இன்றியமையாதது ஆகும். தமிழில் அகராதிகள் பல தோன்றின ; அவற்றுள் மறைந்தவை சில ; இருப்பவை சில, எதையுமே செய்யுள் வடிவத்தில் எழுதும் வழக்கம் இருந்த காலத்தில், அகராதிகளும் அவ்வடிவத்தில் தோன்றி வளர்ந்தன ; நிகண்டுகள் எனப் பெயர் பெற்று நிலவின. அக்காலத்து அவை மனப்பாடம் செய்து நினைவில் வைத்துப் பயன்படுத்தற்கு உரிய வகையில் அமைந்தன. இன்று நூல்களை வாங்கி நூலகந்தோறும் வீடுதோறும் அடுக்கி வைத்துத் தேவையானபோது பயன்படுத்தும் வகையில் அமைந்து வருகின்றன.
‘தமிழ் அகராதிக் கலை’ என்னும் இவ்வாராய்ச்சி நூலில், திரு, சுந்தர சண்முகனார் அவர்கள், அகராதிகளின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி விரிவாக ஆராய்ந்து பற்பல குறிப்புக்களை உதவியுள்ளார். அவர் தம் ஆராய்ச்சி தொல்காப்பியத்திலிருந்து தொடங்குகிறது ; சேந்தன் திவாகரம், சூடாமணி நிகண்டு, பிங்கல நிகண்டு முதலிய நிகண்டுகள் பற்றி விரிவாக அமைகிறது; பிற்காலத்துக் கைலாச நிகண்டு, ஆசிரிய நிகண்டு, தொகை நிகண்டு, பொதிகை நிகண்டு, கந்த சுவாமியம் முதலியன பற்றிக் குறிப்புக்கள் தருகிறது.
நிகண்டுகள் எவ்வெவ்வாறு அமைந்துள்ளன என்பன பற்றி இந்நூலில் போதிய விளக்கங்கள் உள்ளன. அவற்றின் பாகுபாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கிடையே, ஆங்காங்குச் சிலவற்றின் கால ஆராய்ச்சிகளும் காணப்படுகின்றன. முன்னோர்களின் காலத்து ஆண்டுத் தொடக்கம் ஆவணித் திங்களாக இருந்தமை, கழகம் என்னும் சொல்லின் பழம் பொருள் முதலியன பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்களும் உள்ளன.
மருத்துவத் துறையில் தோன்றிய அகராதிகள் தனியே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நிகண்டு என்னும் சொல்லின் பொருள் பற்றிய குறிப்புக்கள் சிந்தனையைத் தூண்டுவன. ககராதிப் பேர்த் தொகுதி, தகராதிப் பேர்த் தொகுதி என்னும் பழைய தலைப்புக்களின் விளக்கம், அகராதி என்னும் சொல்லின் பொருளைத் தெளிவுபடுத்துகிறது.
இந்நூலாசிரியர், புலவர் திரு. சுந்தர சண்முகனாரின் உழைப்பும் ஆராய்ச்சித் திறனும் பாராட்டுக்கு உரியன. தமிழகம் இவ்வரிய நூலை வரவேற்றுப் போற்றுவதாக.
மு. வரதராசன்