தமிழ் அகராதிக் கலை/நூன்முகம்
நூன்முகம்
முதல் பெரிய தொகுப்பு
அகராதிக் கலை ஒரு தனித் துறையாக மேலை மொழிகளில் இதுபோழ்து மிகவும் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழில் தொன்று தொட்டுப் பல்வகை அகராதி நூற்கள் தோன்றினும், எல்லாவற்றையும் பற்றிய விவரங்களைத் தன்னுள் அடக்கிய ஒரு தொகுப்பு நூல் இதுகாறும் தோன்றிலது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon), கலைக் களஞ்சியம், உயர்திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களின் சில ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றில், ஒரு சில அகராதித் துறை நூற்களைப் பற்றிய விவரங்களைச் சுருங்கிய அளவில் ஒருசேரக் காணலாம். எனக்குத் தெரிந்தவரைக்கும், தமிழ் மொழி தோன்றிய நாள் தொட்டு இந்நாள்வரை தமிழில் எழுதப் பெற்றுக் கிடைத்துள்ள அகராதித் துறை நூற்கள் அனைத்தையும் பற்றிய விவரங்களை இயன்ற அளவு விரிவாகத் தரும் முதல் பெரிய ஆராய்ச்சித் தொகுப்பு நூல் தமிழ் அகராதிக் கலை என்னும் இந்த வெளியீடுதான் என்று கருதுகிறேன். இந்நூல் எழுந்த வரலாறுயானே எதிர்பாராதது:–
நூல் வரலாறு
புதுச்சேரி பிரெஞ்சு கலைக் கழகத்தின் (French Institute) தமிழ்த் துறைத் தலைவரும் புதுவைக் கல்விக்கழகத்தின் தலைவருமாகிய உயர்திரு. ரா. தேசிகப் பிள்ளை, பி.ஏ., பி.எல். அவர்கள் மூன்றாண்டுகட்குமுன் ஒரு நாள் என்னிடம் வந்து, கல்விக் கழகத்தில் ‘நிகண்டு நூற்கள்’ என்னும் பொருள் பற்றிச் சொற் பொழிவாற்ற வேண்டும் எனக் கோரினர்கள். பேசுவதாக இசைவு தந்தேன் நான். சொற்பொழிவிற்குப் போதுமான அளவு ஒரு திங்கள் பொழுது இருந்தது.
‘நிகண்டு நூற்கள்’ என்னும் தலைப்பில் சொற் பொழிவாற்றுவதற்கு வேண்டிய குறிப்புக்களைத் திரட்டத் தொடங்கிய நான், செய்யுள் வடிவில் சொற்கட்குப் பொருள் கூறும் நிகண்டு நூற்களோடு மட்டும் நின்று விடாமல், சொற்களை ஒன்றன்பின் ஒன்றாக அகர வரிசையில் அடுக்கிப் பொருள் கூறும் இக்காலப் பலதுறை அகராதிகளிலுங்கூடக் கண்செலுத்தினேன். ஒரு திங்கள் பொழுது ஓடியாடி அயராது உழைத்து அளவற்ற குறிப்புக்களைத் திரட்டிவிட்டேன்.
அறிவு விருந்து
எனது அடங்காத அறிவுப் பசிக்கு விருந்தாகப் பல்வேறு நிகண்டுகளையும் அகராதிகளையும் அளித்து உதவிய அன்பர்களை இங்கே குறிப்பிடாமல் நன்றி மறந்து விட்டுவிடக் கூடாது. திரு. தேசிகப் பிள்ளையவர்கள், புதுவைத் தமிழறிஞர் திரு. குகா. இராச மாணிக்கம் பிள்ளையவர்கள், புதுவை மாநிலக் கல்வித் துறை இயக்குநர் திரு. ரொலான் பரஞ்சோதியவர்கள், கடலூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியாசிரியர் திரு. மகாலிங்க ஐயர் அவர்கள், புதுவை தாகூர் கலைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு. அ. பாண்டுரங்கன் அவர்கள், புதுவை சித்த மருத்துவ அறிஞர் திரு. பரமதயாளம் பிள்ளை யவர்கள், புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகப் புரவுலர் திரு. சிங்கார குமரேசனார் அவர்கள், புதுவை பெத்தி செமினர் உயர்நிலைப் பள்ளித் தலைமைத் தமிழாசிரியர் திரு. க. அப்பர் அவர்கள் ஆகியோர், நான் பல நாட்கள் வைத்துப் பயன்படுத்திக் கொள்ளும்படி சிற்சில நிகண்டுகளும் அகராதிகளும் தந்துதவினார்கள். ஏற்கெனவே என்னிடமும் சில நிகண்டுகளும் அகராதிகளும் இருந்தன.
எய்ப்பினில் வைப்பு
இவற்றை யெல்லாம் வைத்து ஆராய்ந்து கொண்டிருந்த காலை, உயர்திரு. வையாபுரிப் பிள்ளையவர்கள் உரிச்சொல் நிகண்டைப் பற்றிச் சொல்ல வந்த [1]ஓரிடத்தில், ‘கி.பி. 1840-இல் புதுவை குவெர்னமா அச்சுக்கூடத்தில் துத்தன் துரை என்பவர் உரிச்சொல் நிகண்டைப் பதிப்பித்திருக்கிறார்; அதில் எத்தனை தொகுதிகள் உள்ளன என்று அறியக்கூடவில்லை’ என்று எழுதியிருப்பதைக் கண்ணுற்றேன்.
உரிச்சொல் நிகண்டு புதுச்சேரியில் பதிப்பிக்கப் பெற்றிருக்கிறது என்றால் எப்படியும் அப்பதிப்பின் ஒரு படியாவது கிடைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் புதுச்சேரி வட்டாரத்தில் பலரை வினவிப் பலவிடங்களிலும் ‘சல்லடை போட்டுச் சலித்துத்’ தேடிப் பார்த்தேன். எங்கெங்கோ இருக்கலாம். ஆனால், நான் வினவிய–தேடிய இடங்களில் கிடைக்கவேயில்லை. சோர்ந்து போனேன். இந்நிலையில் ஒரு நாள் தற்செயலாக, காலஞ் சென்ற புதுவை மகாவித்துவான் பு. அ. பெரியசாமி பிள்ளையவர்களின் பேரன் முறையான திரு. சு. சோமு ஆசிரியர் அவர்கள், ‘வீட்டில் ஒரு நிகண்டு இருக்கிறது; பார்வையிடுகிறீர்களா?’ என்று என்னிடம் கூறினார்கள். உடனே அதை அவரிடமிருந்து பெற்றுப் பார்வையிட்டேன். நான் அவரை ஒரு நாளும் கேட்காதிருக்கவும், எய்ப்பினில் வைப்பென எதிர்பாராது எனக்குக் கிடைத்த அது, நான் எதிர்பார்த்துத் தேடிக்கொண்டிருந்த உரிச் சொல் நிகண்டின் புதுவைப் பதிப்பேதான்! இப்பதிப்பு குறித்து இந்நூலின் மூன்றாம் பாகத்தில் மிகவிரிவாகக் காணலாம்.
அடுத்து, வெளியில் எவரிடமும் கிடைக்காத-மிகப் பழைய பதிப்புக்களாக உள்ள சில நிகண்டுகளும் அகராதிகளும் புதுவை அரசின் பொது நூல் நிலையத்திலும், புதுவை பிரெஞ்சு கலைக் கழகத்திலும் (French Institute) கிடைத்தன. அவை யனைத்தும் பெறலருங் கருவூலப் பெட்டகங்கள். இவையே யன்றி, இன்னும் சில விடங்களிலிருந்தும் சில நூற்கள் பெற்றேன்.
இவ்வளவுக்கும், போதிய உடல்கலம் இல்லாதிருந்த நான், வேறெங்கும் செல்லாமல், கொண்டி மாந்தோப்பு காவல் காப்பதுபோல் புதுச்சேரியில் இருந்தபடியே நிகண்டுகளும் அகராதிகளும் தேடி ஆராய்ந்துகொண்டிருந்தேன். இன்னும், சென்னை நூல் நிலையங்கள், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தஞ்சை சரசுவதி மகால் முதலிய இடங்கட்குச் சென்று தேடியிருந்தால் இன்னும் என்னென்னவோ கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம். அது செய்யாதது என் குறைபாடுதான். அக்குறைக்குக் காரணம் என் உடல் நலக் குறைவே.
இப்படியாகச் சொற்பொழிவிற்காகத் திரட்டிய குறிப்புக்கள் மலையாக வளர்ந்துவிட்டன. கூட்டத்தில் இரண்டரை மணி நேரம் தொடர்ந்து பேசியும் பத்தில் ஒரு பங்கும் தீர்ந்தபாடில்லை. எனவே, பாடுபட்டுத் தேடிய குறிப்புக்களைப் பாழாக்கக் கூடாது என்று கருதி இந்நூல் வடிவத்தில் எழுதி யமைத்து விட்டேன். எனவே, இந்நூல் தோன்றியதற்குக் காரணம் உயர்திரு. தேசிகப் பிள்ளையவர்களே.
பல்லாயிரம் நிகண்டுகள்
வட மொழியில் உள்ளாங்கு தமிழிலும் எண்ணற்ற நிகண்டுகள் தோன்றின. இதனை,
[2]“பல்லாயிர நிகண்டிற் பண்டிதர்கள் சொன்னபொருள்
எல்லாம் எளிதாய் இனிதுணர...”
என்னும் சிவசுப்பிரமணியக் கவிராயரின் பாடலால் அறியலாம். அப் பல்லாயிர நிகண்டுகளுள் ஒரு சிலவே அழியாது கிடைத்துள்ளன. அவை பற்றிய குறிப்புக்களை மட்டுமே இந்நூலில் காணலாம். அகராதிகளைப் பொறுத்தமட்டில், 1965-ஆம் ஆண்டுவரையும் தோன்றியுள்ள அகராதிகள் பலவற்றோடு, இன்னும் முற்றுப் பெறாமல் வேலை நடந்துகொண்டிருக்கிற அகராதிகள் சிலவுங்கூட இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் சொல்லப்படாமல் விடுபட்டுப் போன நிகண்டுகளும் அகராதிகளும் இன்னும் எவ்வளவோ இருக்கலாம். அவற்றை அன்பர்கள் தெரிவித்தால் அடுத்த பதிப்பில் சேர்க்க முடியும்.
ஐந்து பாகங்கள்
இந்நூல் ஐந்து பாகமாகப் பகுத்து எழுதப்பட்டுள்ளது. தமிழ் அகராதிக் கலையின் வரலாற்றாராய்ச்சி முதல் பாகமாகவும், கிடைத்துள்ள நிகண்டுகளுக்குள் முதலாவதும் மற்ற நிகண்டுகளுக்கு முன்னோடியானது மாகிய சேந்தன் திவாகர நிகண்டைப் பற்றிய மிக விரிவான ஆராய்ச்சி விளக்கம் இரண்டாம் பாகமாகவும், பிங்கலம் முதலிய முப்பதுக்கு மேற்பட்ட பிற நிகண்டுகளைப் பற்றிய விவரங்கள் மூன்றாம் பாகமாகவும், நூற்றுக்கு மேற்பட்ட அகராதிகளைப் பற்றிய விளக்கங்கள் நான்காம் பாகமாகவும் இறுதியாகச் ‘சொல்லும் மொழியும்’ என்ற தலைப்பில் சொற்பொருள் பற்றிய மொழியாராய்ச்சி ஐந்தாம் பாகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
நன்றி
இந்நூல் உருவாவதற்கு வேண்டிய நிகண்டுகளும் அகராதிகளும் அளித்துதவிய அன்பர்கட்கும் நிறுவனங்கட்கும், உடனிருந்து அச்சுப் பிழை திருத்தியுதவிய நண்பர் பண்டித - வித்துவான் - திரு. மு. பெருமாள் அவர்கட்கும் நான் மிகமிக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.
கிடைத்தற்கரிய ஒவ்வொரு நொடிப் பொழுதையும் வீணாக்காது நன்முறையிற் பயன்படுத்தும் பேரறிஞர் உயர்திரு. டாக்டர். மு. வரதராசனார் அவர்கள், தமது பொன்னை நேரத்தில் ஒரு பகுதியை எனக்காகச் செலவிட்டுச் சிறந்த முறையில் அணிந்துரை எழுதியருளினமைக்காக அவர்கட்கு என் பெரு நன்றி உரியதாக.
மற்ற நூல்கள் போலவே இந்நூலும் உருவாவதற்குப் பல்லாற்றானும் துணைபுரிந்த புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகப் புரவலர் உயர்திரு. சிங்கார குமரேசனார் அவர்கட்கும் என் நன்றி உரித்து.
டாக்டர். மு. வ. அவர்கள் தமது அணிந்துரையின் இறுதியில் பரிந்துரைத்துள்ளாங்கு, கல்விக்கூடங்கள், நூலகங்கள், பல்கலைக் கழகங்கள் உட்படத் தமிழகத்தின் பேராதரவை இந்நூலுக்குப் பெரிதும் வேண்டுகிறேன்.
சுந்தர சண்முகன்