தமிழ் இலக்கிய வரலாறு (ரா. சீனிவாசன்)/நாயக்கர் காலம்


6. நாயக்கர் காலம்
(கி.பி. 1350—1750)


சோழப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டில் வீழ்ச்சியுற்றது; பாண்டியர் தலையெடுத்தனர்; பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அலாவுதின் கில்ஜியின் படைத் தலைவன் மாலிக்காபூர் படையெடுத்து வந்து பாண்டியரை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றினான். அதனால், தமிழகத்தில் மகமதியர் ஆட்சி கால்கொள்ளத் தொடங்கியது.

ஆந்திர நாட்டில் விசயநகர ஆட்சி ஏற்பட்டபின் மகமதியர் ஆட்சி வலிமை குன்றியது. விசயநகர வேந்தர்களின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் மதுரையில் ஆட்சி செலுத்தினர். அவர்கள் ஆட்சி நானூறு ஆண்டுகள் நிலவியது.

சைவசித்தாந்த நூல்கள்

பல்லவர் காலத்தில் தேவாரமும், திவ்வியபிரபந்தங்களும் தோன்றிப் பக்தி உணர்வை வளர்த்தன. நாயக்கர் காலத்தில் சைவ சித்தாந்த சாத்திரங்கள் தோன்றின. அவை பதி, பசு, பாசம் பற்றிய விளக்கங்களைத் தருகின்றன.

அவற்றுள் குறிப்பிடத்தக்கன திருவுந்தியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், உண்மை விளக்கம் முதலியனவாகும். இவற்றின் காலம் 11 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை எனலாம்.

இலக்கண இலக்கிய உரையாசிரியர்கள்

இளம்பூரணர்

தொல்காப்பியம் முழுவதற்கும் முதன் முதலில் உரை எழுதியவர் இளம்பூரணரே ஆவர். அதனால் இவரை ‘உரையாசிரியர்' என்று அழைப்பர். இவர் உரை தெளிவும், எளிமையும். அழகும், சுருக்கமும் வாய்ந்ததாகும். இவர் காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

பேராசிரியர்

இவர் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இறுதி நான்கியல்களுக்கும் உரை எழுதியுள்ளார். இவரது காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டாகும்.

சேனாவரையர்

இவர் வடமொழி, தமிழ்மொழி எனும் இருமொழிப் புலமையும் உடையவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் இவர் உரை எழுதியுள்ளார். ‘வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்' எனும், தொடர் இவர் பெருமையைப் பறைசாற்றும், இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு.

நச்சினார்க்கினிரியர்

‘உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியார்’ என இவரைப் பாராட்டுவர் தொல்காப்பியம் முழுமைக்கும் இவர் உரை எழுதினார் என்பர், இறுதி நான்கியல்களுக்கும் இவரது உரை கிடைக்கவில்லை. பத்துப்பாட்டு, கலித்தொகை, சீவக சிந்தாமணி முதலாய இலக்கியங்களுக்கும் சிறந்த உரைகளைத் தந்துள்ளார். இவர் காலம் பதினான்காம் நூற்றாண்டு.

அடியார்க்கு நல்லார்

சிலப்பதிகாரத்திற்குச் சிறந்த விரிவுரை ஒன்றனை இவர் எழுதியுள்ளார். இசை, நாடகம், வானநூல் முதலியவற்றைப் பற்றிய குறிப்புகள் பல இவர் தந்துள்ளமையிலிருந்து இவரது பல்கலைப் புலமை புலனாகிறது. இவர் காலம் கி. பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

சிலப்பதிகாரத்திற்கும் பழைய குறிப்புரை ஒன்றும் உள்ளது. அதனை எழுதியவர் அரும்பத உரையாசிரியர் என்பர்.

பரிமேலழகர்

திருக்குறளுக்கு அமைந்த பதின்மர் உரைகளுள் பரிமேலழகர் உரையே சிறந்ததாகப் போற்றப்படுகிறது. பரிமேலழகர் வடமொழி, தமிழ்மொழி இரண்டிலும் புலமை பெற்றவர். இலக்கண மரபு தவறாமல் உரை எழுதுவதிலும், சொற்களுக்குத் தக்க வகையில் நயமும் விளக்கமும் தருவதிலும் இவர் வல்லவர். இவர் காலம் கி.பி. பதின் மூன்றாம் நூற்றாண்டு.

சிற்றிலக்கியங்கள்

அறம், பொருள், இன்பம், வீடு எனும் உறுதிப் பொருள்கள் நான்கனுள் ஒன்றோ பலவோ குறைந்து வருவது சிற்றிலக்கியமாகும். இது வடமொழிப் பிரபந்த வகையினைச் சார்ந்ததாகும். கோவை, உலா, அந்தாதி, தூது, கலம்பகம், பரணி, பிள்ளைத் தமிழ், குறவஞ்சி முதலியன இதனுள் அடங்கும். இவற்றுள் சில சோழர் காலத்தில் தோன்றின. நாயக்கர் காலத்தில் மிகுதியாகத் தோன்றின.

கோவை

கடவுளரையோ, வேந்தரையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, அகப்பொருள் துறைகளைக் கோவை படக் கூறுவது கோவையாகும், இதன் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைவது இயல்பு. திருக்கோவையார் மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.

நாயக்கர் காலத்து வாழ்ந்த பொய்யாமொழிப் புலவர் எழுதிய கோவை நூல் தஞ்சைவாணன் கோவை என வழங்குகிறது.

உலா

இறைவனோ வேந்தனோ நகர்க்கண் உலா வருவதாகவும், அவர்களைக் கண்டு பருவமடைந்தவர் காதல் கொள்வதாகவும் பாடப்படுவது உலா என்னும் நூல் வசையாகும். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் எனும் ஏழு பருவ மகளிரின் நிலையை உள்ளவாறு விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாகும்.

சேரமான் பெருமாள் நாயனார் பாடிய திருக்கைலாயஞான உலாவே தமிழில் தோன்றிய முதல் உலாவாகும். இது பல்லவர் காலத்தில் எழுந்தது. ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலா மிகச் சிறந்ததாகப் பாராட்டப்படுகிறது.

திரிகூடராசப்பக் கவிராயரின் திருக்குற்றால நாதர் உலாவும், இரட்டைப் புலவர்களின் ஏகாம்பர நாதர் உலாவும், அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் திருவாரூர் உலாவும் பிற்காலத் தெழுந்த உலாக்களுள் குறிப்பிடத்தக்கனவாகும்.

அந்தாதி

ஒரு பாடலின் ஈற்றிலுள்ள எழுத்தோ, அசையோ சீரோ, அடியோ அடுத்த பாடற்கண் முதலாக அமையப் பாடுவது அந்தாதித் தொடை எனப்படும். நூல் முழுவதும் இத்தொடை அமையின் அஃது அந்தாதி எனும் நூல் வகையைச் சாரும்.

அந்தம் முதலாகத் தொடுப்பது அந்தாதி எனக் கூறுகிறது யாப்பருங்கலக் காரிகை. இந்நூலை வெண்பா அல்லது கட்டளைக் கலித்துறையால் பாடுவர்.

காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதியும், கம்பர் பாடிய சரசுவதி அந்தாதியும், சடகோபர் அந்தாதியும் சோழர் காலத்தில் எழுந்தவை: சைவ எல்லப்ப நாவலரின் திருவருணை அந்தாதி, பிள்ளைப் பெருமாளையங்காரின் திருவரங்கத்து அந்தாதி, அருணகிரி அந்தாதி முதலியன நாயக்கர் காலத்தைச் சாந்தவை. கலம்பகம், உலா, தூது முதலியவற்றின் பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைவதுண்டு.

தூது

அகப்பொருள் இலக்கியங்களுள் துாது எனும் சிற்றிலக்கியம் குறிப்பிடத்தக்கதாகும். பிரிவுத் துயரால் வருந்தும் தலைவி, தலைவனிடம் அன்னம், குயில், கிளி, மேகம், பாங்கி, குயில், நாகணவாய்ப்புள், நெஞ்சு, தென்றல், வண்டு முதலாய பொருள்களுள் ஒன்றனைத் தூதனுப்புவதாகப் பாடப்படும் நூல் துாது எனப்படும். முறையே தூது எனப்படும். இது தூதுப் பொருளையும் தலைவனையும், செல்லும் நெறியையும், தலைவனைக் காணும் நிலையையும் சிறப்பித்துக் கூறி இறுதியில் தலைவனின் மாலையை வாங்கி வருமாறு பாடுதல் தூதின் இயல்பாகும்.

உமாபதி சிவாச்சாரியார் எழுதிய நெஞ்சுவிடு துதே தூதிலக்கியங்களுள் முதலாவதாகும். பல பட்டடைச் சொக்சுநாதப் புலவர் எழுதிய கிள்ளைவிடு தூது தூதிலக்கியங்களுள் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. அடுத்ததாகக் குறிப்பிடத்தக்கது தமிழ் விடு தூதாகும்.

“இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”

-தமிழ்விடுதூது

கலம்பகம்

பலவகை மலர்களால் தொடுக்கப்பட்ட கதம்பமாலை போலப் பலவகைப் பாக்களால் பாடப்படுதல் பற்றிக் கலம்பகம் என்ற பெயரைப் பெற்தென்பர் சிலர், சிலர் கதம்பம் என்பதன் மரூஉ மொழியே கலம்பகம் என்பர். கலம்+பகம்; கலம் 12, பகம்-அதில் பாதி 6 ஆக 18 உறுப்புகள் கலந்துவரப் பாடப்படுவது கலம்பகம் என்பர். வேறு சிலர். புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதாயம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்பன பதினெட்டு உறுப்புகளாகும்.

பிள்ளைப் பெருமளையங்காரின் திருவரங்கக் கலம்பகமும், சைவ எல்லப்ப நாவலரின் திருவருணைக் கலம்பகமும், குமரகுருபரரின் மதுரைக் கலம்பகமும் கலம்பக நூல்களுள் குறிப்பிடத்தக்கனவாகும். கலம்பகத்திற்கு இரட்டையர் எனும் தொடர் கலம்பகம் பாடுவதில் இரட்டையர் வல்லவர் என்பதைக் குறிப்பிடுகிறது. தில்லைக் கலம்பகம் இவர்கள் பாடியதாகும்.

பிள்ளைத் தமிழ்

தான் போற்றும் கடவுளரையோ, அரசரையோ, பெரியோரையே குழந்தையாகப் பாவித்துப் பத்துப் பருவம் அமையப்படுவது பிள்ளைத் தமிழ் எனப்படும். இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும். காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில். சிறுபறை, சிறுதேர் என்பன பத்துப் பருவங்களாகும். இறுதி மூன்றனுக்குப் பதிலாகக் கழங்கு, அம்மானை, ஊசல் என்பன வந்து ஏனைய ஒத்து வருதல் பெண்பாற் பிள்ளைத் தமிழின் இலக்கணமாகும்.

ஒட்டக் கூத்தர் பாடிய குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழே இவ்வகையில் முதல் நூல் என்பர். அது சோழர் காலத்தைச் சார்ந்தது. குமர குருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், முத்துக்குமாாசாமிப் பிள்ளைத் தமிழ், பகழிக் கூத்தர் பாடிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பாடிய அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், சேக்கிழார் பிள்ளைத் தமிழ் முதலியன பிள்ளைத் தமிழ் நூல்களுள் சிறந்தன என்பர் இவற்றுள்ளும் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே சிறந்ததென்பர் சிலர்.

பரணி

ஆயிரம் யானைகளை வீழ்த்தி வெற்றி கண்ட தலைவனைப் புகழ்ந்து பாடுவது பரணி என்னும் இலக்கியமாகும்.

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி"

செயங்கொண்டார் சோழவேந்தன் குலோத்துங்கன் மீது பாடிய கலிங்கத்துப் பரணி கற்பனை வளனும், ஓசை நலமும் கொண்டது; ஒட்டக்கூத்தர் தக்கயகப் பரணியைப் பாடியுள்ளார். இவை இரண்டும் சோழர் காலத்தில் தோன்றியவை.

சூரன் வதைப் பரணி, இரணியவதைப் பரணி, பாசவதைப் பரணி, திருச்செந்தூர் பரணி முதலியன நாயக்கர் காலத்தனவாகும்.

குறவஞ்சி

இஃது ஒரு நாட்டிய நாடகமாகும். பவனிவரும் தலைவனைக் கண்டு மயங்கிக் காதல் கொள்ளும் தலைவியின் கையைப் பார்த்துக் குறத்தி குறிசொல்லிப் பரிசில் பெறுதலும், குறத்தியைத் குறவன் தேடி வருதலும், இருவரும் கலந்து உரையாடி மகிழ்தலும் இதில் கூறப்படும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். நாடு, நகர், மலை, தலம் முதலியவற்றின் வருணைணைகள் இதில் இடம் பெறும், குறவஞ்சிகளுள் திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய திருக்குற்றாலக் குறவஞ்சி தலைசிறந்ததாகும்.

சைவ மடங்களின் தமிழ்த் தொண்டு

சைவ மடங்கள் தமிழுக்குச் செய்த தொண்டுகள் அளப்பரியன. இம் மடங்களால் பெரும்புலவர்கள் பலர் ஆதரிக்கப் பெற்றனர்.

தருமபுர மடத்தைச் சார்ந்த குமரகுருபரர் பல அரிய தமிழ் நூல்களை எழுதினார்: வடநாடு சென்று தமிழ் பரப்பினார். மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கயிலைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், சகலகலாவல்லி மாலை, நான்மணி மாலை முதலியன இவர் பாடியனவாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் பிரபுலிங்க லீலை முதலாய பல நூல்களை எழுதியுள்ளார், பிரபுலிங்க லீலை சிவபெருமானைத் தலைவனாக்கித் தத்துவக் கொள்கைகளுக்கு உருவவடிவு கொடுத்துக் கற்பனை நயம் விளங்கப் பாடப்பட்டதாகும். இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.

திருவாடுதுறையைச் சார்ந்த ஈசான தேசிகர் இலக்கணக் கொத்து என்னும் நூலை இயற்றினார். அவர் மாணவர் சங்கர நமசிவாயர் நன்னூலுக்கு விருத்தியுரை ஒன்று எழுதினார். இவர் மாணவர் சிவஞான முனிவர் இவரது நன்னூலுரையை மேலும் விரிவுபடுத்தினார். இவர் காலம் 18ஆம் தூற்றாண்டு.

தாயுமானவர்

இவர் திருமறைக் காட்டில் சைவ வேளாளர் குலத்தில் தோன்றினார். தமிழ் வடமொழி. இரண்டையும் நன்கு. கற்றார். சமரச சன்மார்க்க நெறியைப் புகுத்தியவர் இவரே. இவர் பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் எனும் பெயரில் புத்தகமாகி வெளிவந்துள்ளன. அவை சைவசமய உண்மைகளையும், சித்தாந்தக் கொள்கைகளையும் விளக்கு கின்றன

“எல்லோரும் இன்புற் றிருக்க நினைப்பதுவே
அல்லால் வேறு ஒன்று அறியேன் பராபரமே”

எனும் தொடர். இவரது பரந்த மனப்பான்மையை விளக்குகின்றது. காலம் 18ஆம் நூற்றாண்டு.

முகம்மதியப் புலவர்கள்

இசுலாமியப் புலவர் பலர் அரபுமொழிப் பயிற்சியோடு: தமிழ்மொழிப் புலமையும் பெற்றுப் பல அரிய நூல்களைப் படைத்துள்ளனர். காப்பியம், புராணம், சிற்றிலக்கியம், நாடகம் முதலியவற்றை இயற்றியதோடு பல புதிய இலக்கிய வகைகளையும் அவர்கள் தமிழில் புகுத்தியுள்ளனர். கும்மி, ஒப்பாரி, தாலாட்டு, ஏசல், சிந்து முதலாய பாமரர் இலக்கிய வகைகளிலும் அவர்கள் நூல்கள் பல யாத்துள்ளனர்.

உமறுப்புலவர், பீர்முகமது, குணங்குடி மஸ்தான் வண்ணக் களஞ்சியப் புலவர், செய்குத்தம்பிப் பாவலர், அப்துல்காதர் புலவர் முதலியோர் இசுலாமியப் புலவர்களுள் குறிப்பிடத் தக்கவர்களாவர்.

1. உமறுப் புலவர்

இவர் முகம்மது நபிகளின் வரலாற்றைச் “சீறாப் புராணம்” என்னும் காப்பியமாகத் தந்துள்ளார். இதில், 900 பாடல்கள் உள்ளன; இவர் இந்நூலைக் கம்பரைப் பின்பற்றிப் பாடியுள்ளார்.

2 பீர் முகமது

திருநெறிகீதம், ஞானக்குறம் ஞானப்பாட்டு முதலான பல நூல்களை இவர் இயற்றியுள்ளார். இவர் 1809 பாடல்களுக்குமேல் பாடியுள்ளார்.

3 குணங்குடி மஸ்தான்

ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார். முகதீன் சதகம் முதலானவை இவர் பாடியனவாகும். இவர் பாடல்கள் மிகுதியாகத் தத்துவக் கருத்துகளைக் கொண்டவை.

4 வண்ணக் களஞ்சியப் புலவர்

இவர் 'இராச நாயகம்' எனும் பெருநூல் ஒன்றனையும், ‘அலிபாதுஷா நாடகம்' எனும் நாடகம் ஒன்றனையும் இயற்றியுள்ளார்.

5 செய்குதம்பிப் பாவலர்

இவர் சதாவதானம் செய்வதில் வல்லவர்; கோட்டாற்றுப் பிள்ளைத் தமிழ், திருநாகூர் திரிபந்தாதி, நீதி வெண்பா, காரணமாலை முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.

6 அப்துல்காதிர் புலவர்

சந்தத் திருப்புகழ், திருமதீனத்து மாலை, நவமணி தீபம், மெய்ஞ்ஞானக் கோவை, கண்டிக் கலம்பகம் முதலாக முப்பதுக்கு மேற்பட்ட நூல்கள் இவர் இயற்றினவாகும்.

தனிப் புலவர் சிலர் [சோழர் காலம்]

ஒட்டக்கூத்தர்

இவர் கவிச்சக்கரவர்த்தி எனப் பாரரட்டப்படுகிறார். விக்கிரமசோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகியோர்மீது உலாக்கள் பாடியுள்ளார். இவற்றின் தொகுப்பு மூவருலா என வழங்குகிறது. தக்கயாகப் பரணி, குலோத்துங்க சோழன் உலா முதலியனவும் இவர் இயற்றியனவே. இராமாயண உத்தர காண்டத்தை இவர் பாடியதாய்க் கூறுவர். இவர் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டு.

புகழேந்திப் புலவர்

"வெண்பாவிற் புகழேந்தி" எனும் தொடர் இவரது செய்யுளியற்றும் திறத்தை வெளிப்படுததும். இவர் பாடிய நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலி நீங்கு காண்டம் எனும் மூன்று பகுதிகளை உடையது இவர் காலம், கி பி. 13ஆம் நூற்றாண்டு.


நாயக்கர் காலம்

வில்லிபுத்தூரார்

இவர் வடமொழி வியாச பாரதத்தைத் தமிழில் சுருக்கமாகப் பாடினார் அது வில்லிபுத்தூரார் பாரதம் என வழங்குகிறது. இது 433 விருத்தப்பாக்களால் ஆனது. இவர் திருமுனைப்பாடி நாட்டில் சனியூரில் பிறந்தார். வக்கைபாகை வரபதி ஆட்கொண்டானின் அவைக்களப் புலவராக விளங்கினார். இவர் காலம் கி.பி. 14ஆம் நூற்றாண்டு.

காளமேகப் புலவர்

கும்பகோணம் அருகிலுள்ள நந்திபுரத்தில் இவர் பிறந்தார். ஆசுகவி பாடுவதில் இவர் வல்லவர்; வசை பாடுவதிலும் இணையற்றவர். 'வசை பாடக் காளமேகம்' எனும் தொடர் இதனை விளக்கும். இவர் காலம் 15 ஆம் நூற்றாண்டு.

அருணகிரிநாதர்

இவர் திருவண்ணாமலையில் பிறந்தார்; தலங்கள் தோறும் சென்று இறைவன் புகழ்பாடி வழிபட்டார். இவர் முருகன் மீது பாடிய பாடல்களே திருப்புகழ் என வழங்குகிறது. திருவகுப்பு, கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூதி, வேல்விருத்தம், மயில் விருத்தம் முதலியன இவர் பாடிய பிற நூல்களாகும். இவர் பாடல்கள் சந்த இன்பம் மிக்கனவாகும். இவர் காலம் கி. பி. 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி.

பரஞ்சோதி முனிவர்

இவர் சோழ நாட்டுத் திருமறைக்காட்டில் பிறந்தார்; இவர் பாடிய நூல் திருவிளையாடற் புராணமாகும். இது மதுரை சொக்க நாதரின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் அழகுபெற எடுத்தியம்புகிறது. மதுரைக் காண்டம், கூடற்காண்டம், திருவாலவாய்க் காண்டம் எனும் மூன்று பிரிவுகளைக் கொண்டது. இதன் நடை எளிமையும். இனிமையும் பெற்று விளங்குகிறது. இவரது காலம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டு.

அருணாசலக் கவிராயர்

இவர் சோழ நாட்டில் தில்லையாடி என்னும் ஊரில் பிறந்தார்; இராம நாடகம், அசோமுகி நாடகம், சீர்காழித் தல புராணம், சீர்காழிக் கோவை, அனுமார் பிள்ளைத் தமிழ் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார். இராம நாடகம் கம்பராமாயண்த்தைப் பின்பற்றியதாகும். எளிய சொற்களால் இயன்று பாமர மக்களையும் கவர்வதாக இதன் பாடல்கள் அமைந்துள்ளன. இவர் காலம் கி.பி. 18 ஆம் நூற்றாண்டு.