தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் 2/004-007
முத்துச்சாமி சேர் சங்கரதாசர்
ஒரு புலவரை மற்றொரு புலவர் பாராட்டுவது அபூர்வமாக இருந்த அந்தக் காலத்தில் சுவாமிகளுக்கும் உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவர்களுக்கும் இருந்த அன்புத் தொடர்பைப்பற்றிப் பல பெரியார்கள் வியந்து கூறக் கேட்டிருக்கிறேன். இரு பெரும் புலவர்கள், அதுவும் ஒரே துறையில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒற்றுமையோடு பழகிய பான்மையைக் கண்டு எல்லோரும் அதிசயப் பட்டிருக்கிறார்கள்.
சுவாமிகள் காலஞ்சென்றபின் தத்துவ மீனலோசனி சபையில் கவிராயர் அவர்கள் சில மாதங்கள் ஆசிரியப் பொறுப்பை ஏற்று மதுரைவீரன், மன்மத தகனம் முதலிய நாடகங்களைப் பயிற்றுவித்தார். எங்களெல்லோரையும் கூட்டி வைத்துக்கொண்டு கவிராயர்அவர்கள் சுவாமிகளுக்கும் தமக்கும் உள்ள தொடர்பைப்பற்றி அடிக்கடி பேசுவதுண்டு.
கவிராயர் அவர்கள் பெரும்பாலும் பாட்டின் கடைசி வரியில் தனது பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதே இல்லை. அக்காலத்திலிருந்த புலவர்களிற் பலரும் இவ்வாறு ‘முத்திரை அடி’ பொறித்துத்தான் பாடலை முடிப்பது வழக்கம். சுவாமிகள் ஒருவர் மட்டும் இதில் மாறுபட்ட கருத்துடையவர். தமது பாடல் ஒன்றில்கூட பெயர் முத்திரை வைத்ததேயில்லை. பிற்காலத்தில் பெயர் விளங்குவதற்காகவாவது ஆசிரியன் பெயரைக் குறிப்பிட வேண்டியது அவசியமெனக் கவிராயர் அவர்கள் சுவாமிகளிடம் அடிக்கடி வற்புறுவத்துவாராம். சுவாமிகள் இதற்கு அடியோடு மறுத்துவிடவே கவிராயர் அவர்கள்தாம் எழுதிய இராமாயண நாடகப் பாடல்கள் சிலவற்றில், “முத்துச்சாமி சேர் சங்கரதாசர்” என்று இருவர் பெயரையுமே ‘முத்திரைஅடி’யாக வைத்துவிட்டார். இலங்காதகனம் நாடகத்தில் ‘அனுமான்’ பாடும் சில பாடல்கள் இவ்வாறு இருவர் பெயரையும் தாங்கி நிற்கின்றன.
புலமை விளையாட்டு
ஒரு முறை கவிராயர் அவர்கள் சுவாமிகளை நோக்கி, “சங்கரதாஸ் சுவாமிகளே! உம்முடைய பாடல்கள் முள்ளும் முரடும்போல் இருக்கின்றன” என்றாராம். உடனேசுவாமிகள் சிரித்துக்கொண்டே, “கவிராயர் பாடல்கள் கல்லும் கரடும்போல் இருக்கின்றனவே!” என்றாராம். புலவர்களின் விளையாட்டுப் பேச்சுக்களிலேகூட இனிமை சொட்டுவதைக் காண்கிறோம். முள்ளும் முரடும், கல்லும் கரடும் என்பவற்றை மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் முரட்டுத்தனமான பாடலென்றும் கடினமான பாடலென்றும்தான் பொருள் தோன்றும். ஆனால், உட்பொருள் அதுவன்று. முள்ளும் முரடும் போல் என்றால் பலாச்சுளையைப்போல் இனிக்கிறது என்றும், கல்லும் கரடும்போல் என்றால், ‘கற்கண்டைப் போன்றது’ என்றும் பொருள் கொள்ள வேண்டும்.
இருவரும் பாடிய பரதன் பாட்டு
கவிராயர் அவர்கள் ஒரு நாள் இராமாயணப் பாடல்களைப் புனைந்துகொண்டிருந்தார். கேகய நாடு சென்றிருந்த பரதன், தீய கனாக் கண்டு தம்பி சத்துருக்கனிடம் தான் கண்ட கனவைச் சொல்லுகிறான். பரதனுக்குப் பாடல் எழுதத் தொடங்கினார் கவிராயர் அவர்கள்.
நான் கண்டேன் பல தீங்கண்டும் கனவு
ஓங்கி எங்கெங்கும் உலகம்இருள
..................... பாடல் தடைப்பட்டது. அடுத்த வரி பொருத்தமாக வராததால் வெளியே சென்று உலவிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கே வந்த சுவாமிகள் கவிராயர் எழுதியிருந்த பாடலைப் பார்த்துவிட்டு அதன் கீழே,
உள்ளத் தொடர்பு
கவிராயர்அவர்களிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் சுவாமிகளையும், சுவாமிகளிடம் பாடம் கேட்கும் மாணாக்கர்கள் கவிராயர் அவர்களையும் தங்கள் குருநாதராகவே எண்ணிப் போற்றுவது வழக்கம்.
கவிராயரவர்களின் மாணாக்கர்களில் ஒருவராகிய உடுமலை நாராயணக் கவி அவர்கள் சுவாமிகளிடமும் வெண்பா, கலித்துறை முதலியவற்றைப் பாடம் கேட்டாராம்.
சுவாமிகளின் மறைவைக் கேட்டுக் கவிராயர் அவர்களும் அவரது மாணாக்கர்களான திருவாளர்கள் சந்தானகிருஷ்ண நாயுடு, சங்கரலிங்கக் கவிராயர் முதலியோரும் ‘இரங்கற் பாக்கள்’ எழுதியனுப்பியிருந்தனர். சுவாமிகளின் பெருமையை விளக்கும் அப் பெரியார்களின் உருக்கமான பாடல்கள் ஒன்று கூட இன்று நமக்குக் கிடைக்கவில்லை. கவிராயர் அவர்கள் பாடியவற்றில் இரண்டு வரிகள் மட்டும் எங்களுக்கு நினைவிலிருக்கின்றன.
“நான்சாக நீகாண வேண்டுமென
நினைத்திருந் தேன்
தான்சாக மருந்துண்ட
சங்கரதாஸ்ஐயனே”
என்ற அந்த இரண்டு வரிகளிலேயே கவிராயர் அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் இருந்த உள்ளத் தொடர்பு வெளிப்படுகிறதல்லவா?........
புலவனைப் போற்றிய புலவர்
சுவாமிகள் மிகுந்த உதார குணமுடையவர். எளியோர்க்கிரங்கும் உள்ளம் படைத்தவர். பொருள் திரட்டும் போக்கு அவரிடம் இறுதிவரை இருந்ததேயில்லை. தன்னிடம் இருப்பதை எல்லோருக்கும் கொடுத்து இன்புறும் பண்பு சுவாமிகளிடம் நிறைந்திருந்தது.
அந்தக் காலத்தில் தமிழகத்தின் வட பகுதியிலே நாடகாசிரியராகத் திகழ்ந்தவர் திருவாளர் ஏகை சிவசண்முகம்பிள்ளை அவர்கள். இராமாயணம், கண்டி ராஜா, ஹரிச்சந்திரன் முதலிய நாடகங்கள் இப்பெரியாரால் இயற்றப்பெற்றவை. வேலூர் தி. நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் கம்பெனி முதல் இன்றுவரை சம்பூர்ண இராமாயணத்தை நடிக்கும் எல்லாச்சபையினரும் திரு. சிவசண்முகம்பிள்ளை அவர்களின் பாடல்களையே பாடி வருகிறார்கள் என்பது இப்பெரியாருக்குப் பெருமை தருவதாகும்.
சுவாமிகள் ஒருமுறை இவரைச் சென்னையிலே சந்தித்தபோது இவருடைய கண்டி ராஜா நாடகத்திலுள்ள சந்தப்பாடல்களைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டினார். பிள்ளை அவர்கள் அப்பொழுது கையில் பொருளில்லாது மிகவும் வறுமைவாய்ப் பட்டிருந்தார். இதை அருகிலிருந்த அன்பர்களின் வாயிலாக அறிந்த சுவாமிகள், அந்த இடத்தில் அவரிடம் நேரில் பணம் கொடுத்தால் காசு வாங்கக் கூசுவாரென்றெண்ணி நூறு ரூபாய் நோட்டுக்களை ஓர் உறையில் வைத்துப் பிள்ளையவர்களின் பையில் போட்டு விட்டார். சுவாமிகளிடம் பேசிவிட்டு வண்டியேறிப் புறப்பட்ட திரு. சிவசண்முகம் பிள்ளை அவர்கள் சற்று தூரம் சென்றதும் எதற்கோ பையை எடுத்தவர் ‘சங்கரதாசனின் அன்புக் காணிக்கை’ என்றெழுதப்பட்ட உறையையும், அதனுள் வைக்கப்பட்டிருந்த நூறு ரூபாய் நோட்டுக்களையும் பார்த்துத் திரும்பி வந்து, “புலவனைப் புலவனே அறிவான்; ஆனால், புலவனைப் புலவன் போற்றுவதில்லை. தாங்கள் அதற்கு விதிவிலக்கு”என்று கண் கலங்கக் கூறிச் சுவாமிகளைத் தழுவிக் கொண்டார்.