தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியாரடிகள்

ஞானியாரடிகள்
மறை. திருநாவுக்கரசு (1959)

திருக்கோவலூர் ஆதீனம், திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம் ஐந்தாம் பட்டம் ஸ்ரீல ஸ்ரீசிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய தேசிக சுவாமிகள் என்னும் ஞானியார் சுவாமிகள் தென் தமிழும் வடமொழியும் ஆய கடல்களைக் கடந்தவர்; பண்புகளால் ஆன்ற சான்றோர். நாவலருக்கு நாவலர்; அகத்துறவும் புறத்துறவும் பூண்ட புனிதர், காட்சிக்கினியர்; சிவவேடத்திற்கோர் இலக்கிய மாயமைந்த தோற்றத்தார், அருட்பொலிவினர். தீயோரும் போற்றும் செந்தன்மை கொண்டவர், தேளையும் விரும்பும் அன்பினர், முருகன் சேவடியில் உருகி நிற்கும் உயர்ந்தோர், புகழ் மொழிகளுக்கு அடங்குவதன்று; அவர் பெருமை.

நாள் முழுவதும் மாணவர்கட்குச் செந்தமிழ் கற்பிப்பதில் தணியாத வேட்கை கொண்டு அரும்பணியாற்றிக் கைம்மாறு பெருமாரியனையர், “பேசாத நாளெல்லாம். பிறவா நாளே” என்று கோட்பாடு கொண்ட இப்பிரான் தம் திருமடத்தும் செல்லு மிடங்களிலும் தவறாது மணிக்கணக்காக அருவிஎனப் பேருரை நிகழ்த்துவதே தம் வாழ்வின்பமெனக் கொண்டு தொண்டாற்றிய தூயோர் ஆவர்.

இப்பெருமானின் சிறப்பியல்களில் ஈடுபட்ட அடிகளார் சமாசம் தொடங்குவதற்கு முன் சில திங்களாக அவர்களோடு தொடர்ந்த கேண்மையுடையவராக இருந்தார். இடையிடையே திருப்பாதிரிப்புலியூர் சென்று தலைமையிலும், முன்னிலையிலும் பேசிப்பேசி அவர் பேரன்பையும் பெருமதிப்பையும் பெற்று முள்ளார். ஞானியார் அடிகளைப் பற்றி அடிகளின் 18.5.1905 நாட் குறிப்பு "திருப்பாதிரிப் புலியூர் மடம் அடைந்தேன். ஞானியாரைப் பார்த்தேன். அவர் என்பால் மிகவும் அன்பு கூர்ந்தார். அவர் நிறைந்த கல்வியாளர், குற்றமில்லா ஒழுக்கத்தினர்; நிறைந்த அன்பினர்" என்று கூறுகின்றது. இத்தகு நல்லோர் முன்னிலையில் அவர் வாழ்த்துடன் இசைவுடன் சமாசத்தைத் தொடங்குவது என்று முடிவு கொண்ட அடிகள் அக்கருத்தினை முன்கூட்டியே ஞானியார் அடிகட்கும் தம்மரிய நண்பர்கட்கும் கடிதம் வாயிலாக அறிவித்து 1907 ஜூலை 3ல் திருப்பாதிரிப் புலியூர்யடைந்து ஞானியாரடிகளைக் கண்டளவாளாவினர். மறுநாள் ஞானியார் மடத்தில் அடிகள் "முத்தி சாதனம்" என்று பேசினார்.

7.7.1907ல் மீண்டும் மடத்திலேயே அடிகள் “திருச்சிற்றம் பல விளக்கம்" என்று பேசினர். பேச்சினிறுதியில் சைவ சித்தாந்த மகா சமாஜம் அமைக்க உதவுமாறு அடிகள் வேண்டுகோள் விடுத்தார் கூட்டம் முடிவுற்றது. பின்னர் ஞானியாரடிகள் முன்னிலையில் அடிகளால் சைவசித்தாந்த மகாசமாஜம் நிறுவப்பட்டது. அப்போது அடிகளுடன் இருந்தவர்கள், ஞானியாரடிகள், தாசில்தார், பொன்னுசாமி பிள்ளை, ஓவர்சியர் சிங்காரவேல் முதலியார், வண்டிப்பாளையம் தமிழாசிரியர் கந்தசாமிமுதலியார் ஆகிய நால்வருமேயாவர். சமாசம் அமைக்க வேண்டும் என்னும் எண்ணத் தோற்றமும் அதற்கேற்ற முயற்சியும், முடிவும் திருவருளால் அடிகளின் ஆர்வ உள்ளத்தே எழுந்து உருப் பெற்றவை. சமாசத்தைத் தோற்றுவித்த தோடமையாது அதனை ஐந்தாண்டளவும் செயலாளராக அமர்ந்து சீரும் சிறப்பும் பெற வளர்த்து விட்டவரும் அடிகளாரேயாவர்.

சைவ சித்தாந்த மகா சமாஜம் நிறுவுதல்

சிவநெறியின் பெருமையை யாண்டும் பரப்பல் வேண்டுமென்ற அடிகள் உள்ளத்தே நாளும் வளர்ந்துவரும் உணர்ச்சியின் முடிவே “சைவ சித்தாந்த மகாசமாஜம்" என்னும் அமைப்பாக உருவெடுத்தது. சங்கம், கழகம், மன்றம் முதலிய சொற்களை விடுத்து அடிகள் “சமாஜம்" என்ற சொல்லை அமைக்கக் காரணம், வடநாட்டினர் இவ்வமைப்பினையறிய வேண்டும் என்பதற்கேயாம். நாளடைவில் இச்சமாசம் வட நாட்டிலும் ஆங்காங்குத் தோன்றிப் பணியாற்றவேண்டு மென்பதே அடிகளின் ஆர்வமாகும். இச்சமாசத்தினை எவர் தலைமையில் நிறுவது என்று அடிகள் கருதிவருகையில், பெருமலையை எண்ணின் இமயம் முன்னிற்பது போல் தவத்திரு ஞானியாரடிகளே நம் மடிகளின் மனத்திற்கு உகந்தவராயானார். அவரினுந் தக்கார் யாருளர்?

மறைமலையடிகள் வரலாறு