தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்/ஞானியார் அடிகள்

ஞானியார் அடிகள்

உவமைக் கவிஞர் சுரதா


கண்ணிரண்டும் கல்விக்கண் ஒன்றும் பெற்றுக்
காலமெல்லாம் தமிழுக்கும் சைவத்திற்கும்
தொண்டுசெய்தோர் பலராவர்; அவருள் காமச்
சுவைவிலக்கிச் செயற்கைச்சுகம் விலக்கிவாழ்ந்த
பண்டையநாள் சமணரைப்போல் செந்தமிழ்க்கும்,
பரஞ்சோதி முனிவரைப்போல் சைவத்திற்கும்,
எண்ணிறந்த பெருந்தொண்டு புரிந்து, கீர்த்தி
ஏந்தியவர் ஞானியார் அடிக ளாவர்!


ஓரைந்து மொழியறிந்த புலியூர் ஞானி
ஓய்வின்றிப் பெருஞ்சைவம் பேசி வந்தார்!
ஈரஞ்செய் கின்றதமிழ் மொழிநுட் பத்தை
எழுத்தெழுத்தாய்ச் சொல்சொல்லாய் விளக்கி வந்தார்.
வீரஞ்செய் புறப்பொருளின் விளக்கம்; ஆதி
வேதாந்தம், சித்தாந்தம் இவற்றை யெல்லாம்
காரஞ்செய் யாத்குரல் இனிமை யாலும்,
கனிந்தெழுந்த பேச்சாலும் பாய்ச்சி வந்தார்!


கைச்சங்கம் எடுத்துதும் கூட்டத் தார்க்கும்
கால்நடைகள் மேய்ப்பார்க்கும், மற்ற வர்க்கும்
மெய்ச்சங்கம் எதற்காக? எங்கட் கன்றோ
வித்தைவரும்? என்றுசிலர் பேச்சைக் கேட்டுத்
தச்சன் கை உளிபதிந்த விரல்போ லானார்;
தமிழ்ச்சங்கம் தோன்றுதற்குத் துணையாய் நின்றார்!
பொய்ச்சிந்தை மனுநீதி மயக்கம் தீர்த்துப்
பொய்யாத குறள்நீதி கூறி வந்தார்!


வெல்லுஞ்சொல் இதுவேயன் றறிந்து பேசி
வியப்பினிலே ஆழ்த்தியவர்; பிறையைப் போன்ற
பல்லக்கின் மீதேறி இந்த நாட்டிற்
பவனிவந்த திருநீற்றுச் சைவர்! பாராங்
கல்லொக்கும் நெஞ்சத்தார் தம்மைத் தேமாங்
கனியொக்கும் அறிவுரையால் கனியச் செய்தார்!
முல்லைப்பூ மாலைக்கோ பாராட் டுக்கோ
மூதறிஞர் மயங்கியதே இல்லை கண்டீர்!


இளந்திரையன் என்பானோ பெரும்போர் வீரன்;
இருண்டகடல் நீந்தியவன் வீரங்காட்டி
வளர்ந்தபுகழ் பெற்றுயர்ந்த வேந்தன் அந்த
மாவீரன் நம்மவர்நெப் போல்யன் ஆவான்!
தளர்ந்தசெயல் செய்தறியாப் புலியூர் ஞானி
தமிழகத்தின் சாலமனே யாவார் நுட்பம்
அளந்தமனம் கொண்டவராம்! அவர்போற் பேசும்
ஆற்றல் பெற்றார் இன்றிங்கே யாருமில்லை


நன்றி :
சுரதாவின் தேன்மழை