தாய்/11
மறுநாள் புகின், சமோய்லவ், சோமவ் முதலியவர்களையும் வேறு ஐந்து பேர்களையும் கைதுசெய்துவிட்டதாகத் தெரியவந்தது. அன்றிரவில் பியோதர் மாசின் பாவெலின் வீட்டிற்கு வந்தான். அவனது வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. அந்தச் சோதனையால், தான் ஒரு வீரனாகிவிட்டதாகக் கருதி மிகவும் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தான்.
“நீ பயந்துவிட்டாயா, பியோதர்?” என்று கேட்டாள் தாய்.
அவன் வெளிறிப் போனான்; முகம் கடுகடுத்தது; மூக்குத் துவாரங்கள் நடுநடுங்கின.
“அந்த அதிகாரி என்னை அடித்து விடுவான் என்று நான் பயந்தேன். அவன் பூதாகாரமாக இருந்தான். கரிய தாடி மயிரடர்ந்த கைகள். கண்களே இல்லாது போனவன்மாதிரி கறுப்பு மூக்குக் கண்ணாடி வேறு மாட்டியிருந்தான். அவன் ஆங்காரமாகச் சத்தமிட்டு, தரையைக் காலால் மிதித்தான், ‘உன்னை நான் சிறையில் போடுவேன்’ என்று கத்தினான். என்னை இதுவரையிலும் யாரும் அடித்ததில்லை. என் தாயும் தந்தையும் கூட அடித்ததில்லை. நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை, செல்லப்பிள்ளை.”
அவன் கண்களை ஒரு கணம் மூடினான்; உதடுகளைக் கடித்துக்கொண்டான்; இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பின்புறமாகத் தள்ளிவிட்டுக்கொண்டான். பிறகு செக்கச் சிவந்த கண்களோடு பாவெலைப் பார்த்துச் சொன்னான்.
“எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் - நான் ஒரு வாளைப்போல் அவன்மீது பாய்ந்து. சாடுவேன்; என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!
“நீ ஒரு நோஞ்சான். சண்டைக்கே லாயக்கில்லை” என்றாள் தாய்.
“இருந்தாலும் சண்டை போடத்தான் செய்வேன்!” என்று அடி மூச்சுக் குரலில் பதிலளித்தான் பியோதர்.
பியோதர் போன பிறகு தாய் பாவெலை நோக்கிச் சொன்னாள்: “எல்லோரையும்விட இவன்தான் முதலில் ஓடப்போகிறான்.”
பாவெல் பதில் பேசவில்லை.
சில நிமிஷ நேரத்தில், சமையலறைக்கு அடுத்துள்ள வாசற் கதவு திறக்கப்பட்டது. ரீபின் உள்ளே வந்தான்.
“வணக்கம்!” என்று இளஞ்சிரிப்போடு சொன்னான் அவன். “நான் பழையபடி வந்துவிட்டேன். நேற்று ராத்திரி அவர்கள் என்னைக் கொண்டு வந்தார்கள்; இன்று நானாக வந்திருக்கிறேன்.” அவன் பாவெலின் கையைப் பிடித்துக் குலுக்கினான்; பெலகேயாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.
“எனக்குத் தேநீர் கிடைக்குமா” என்று கேட்டான்.
அடர்ந்து வளர்ந்த கரிய தாடியும், கறுத்த கண்களும் கொண்ட அவனது அகன்ற பழுப்பு முகத்தைக் கண்களால் மெளனமாய் அளந்து நோக்கினான் பாவெல். அவனது அமைதியான பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் தொனித்தது.
தாய் தேநீருக்குத் தண்ணீர் போடுவதற்காக அடுக்களைக்குச் சென்றாள். ரீபின் உட்கார்ந்து, தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி பாவெலையே பார்த்தான்.
“சரி” என்று ஏதோ ஒரு சம்பாஷணையில் குறுக்கிட்டுப் பேசும் தோரணையில் பேச ஆரம்பித்தான் அவன், “உன்னிடம் நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல விரும்புகிறேன். உன்மீது கொஞ்ச காலமாய் எனக்கு ஒரு கண்தான். நானும் உனக்குப் பக்கத்து வீட்டிலேதான் குடியிருக்கிறேன். உன் வீட்டுக்கு நிறையப்பேர் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குடிப்பதைக் காணோம்; கூச்சலையும் காணோம். அதுதான் முதல் காரணம். கலாட்டா பண்ணாமல் இருக்கிறவர்களை எல்லாரும் உடனே கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனடா இப்படி இருக்கிறார்கள்? என்று அதிசயப் படுகிறார்கள். நான் ஒதுங்கி வாழ்கிறேனா, அது அவர்கள் கண்களை உறுத்திவிட்டது!" அவனது பேச்சு அமைதியாகவும் அழுத்தமாகவும் ஒலித்தது. பேசும்போது அவன் தனது கரிய கரத்தால் தாடியை வருடிவிட்டுக்கொண்டே, பாவெலின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.
“ஊரில் உன்னைப்பற்றி எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். உதாரணமாக, என் எஜமான் உன்னை ஒரு மதத் துரோகி என்கிறார். நீ தான் தேவாலயத்துக்கே போவதில்லையே, நானும் போகவில்லை பிறகு அந்தப் பிரசுரங்கள் வந்து சேர்ந்தன. அதுவும் உன் வேலையா?”
“ஆமாம்” என்றான் பாவெல்.
“நீ என்ன சொல்கிறாய்?” என்று சமையலறையிலிருந்தவாறு தலையை நீட்டிக்கொண்டு வந்து கேட்டாள் அவனது தாய், “அதை நீ மட்டுமே செய்யவில்லை!”
பாவெல் சிரித்தான்; ரீபினும் சிரித்தான்.
“ரொம்ப சரி” என்றான் ரீபின்.
தனது வார்த்தைகளை அவர்கள் மதியாததைக் கண்டு மனம் புண்பட்ட மாதிரி சிணுங்கிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் தாய்.
“அந்தப் பிரசுரங்கள் இருக்கிறதே, ‘அருமையான வேலை. மக்களைத் தூண்டிவிட்டுவிட்டன. மொத்தம் பத்தொன்பது இல்லை?”
“ஆமாம்” என்றான் பாவெல்.
“அப்படியென்றால் நான் அத்தனையையும் படித்துவிட்டேன். அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவாக இல்லை; சில தேவையில்லாதவை. ஆனால், எவ்வளவோ விஷயங்களை ஒரு மனிதன் சொல்ல வேண்டியிருக்கும்போது இப்படி ஒன்றிரண்டு தப்பிப்போவது சகஜம்தான்.”
ரீபின் தனது வெள்ளைப் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் புன்னகை செய்தான்.
பிறகு தான் சோதனை நடந்தது. அதுதான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நீயும் அந்த ஹஹோலும் நிகலாயும் நீங்கள் எல்லாரும்........”
சொல்வதற்குச் சரியான வார்த்தை வாய்க்கு வராமல், அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்; மேஜை மீது கைவிரல்களால் தாளம் கொட்டினான்.
“நீங்கள் எல்லாரும் உங்கள் உறுதியைக் காட்டிவிட்டீர்கள்மூமூஓ, பெரியவர்களே, உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சொல்வது மாதிரி இருந்தது. அந்த ஹஹோல் ரொம்ப அருமையான ஆசாமி. தொழிற்சாலையிலே அவன் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன்— இந்த ஆசாமியை எதுவும் அசைக்க முடியாது. சாவு ஒன்றுதான் இவனைச் சரிக்கட்டும். உருக்கினாலான பிறவி இவன்! பாவெல், நான் சொல்வது உண்மைதானே?”
“ஆமாம்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல்.
“நல்லது! என்னைப் பார். எனக்கு நாற்பது வயதாகிறது. உன்னை விட இரட்டை வயது, உன்னை விட இருபது மடங்கு அனுபவம் எனக்கு உண்டு. மூன்று வருஷத்திற்கு மேல் நான் பட்டாளத்தில் வேலை பார்த்தேன். இரண்டு தடவை கல்யாணம் பண்ணினேன்: முதல் தாரம் செத்துப்போனாள். இரண்டாவது பெண்டாட்டியை நானே விரட்டியடித்துவிட்டேன். காகஸஸிலும் இருந்திருக்கிறேன். துகபர்த்சி[1]களையும் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியாது. தெரியவே தெரியாது, தம்பி”
அவனது நேரடியான பேச்சை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். இத்தனை வயதான ஒரு மனிதன் வந்து தனது மகனிடம் அவனது உள்ளத்தில் கிடந்ததையெல்லாம் திறந்து கொட்டிப் பேசுவதைக் காண்பது அவளுக்கு இன்பம் அளித்தது. ஆனால், பாவெல் நடந்துகொள்ளும் முறையோ சுமூகமாகமாற்றியிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எனவே தானாவது அவனுக்கு அன்பு காட்டி, அந்த வயோதிகனின் பேச்சுக்கு ஈடுகட்ட வேண்டும் என்று நினைத்தாள்.
“மிகயீல் இவானவிச்! ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டாள்.
“கேட்டதே போதும், அம்மா, நான் சாப்பிட்டாயிற்று. பாவெல், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை என்பதுதானே உன் எண்ணம்?”
பாவெல் இடத்தைவிட்டு எழுந்து, கைகளை முதுகுப்புறமாகக் கட்டிக்கொண்டு மேலும் கீழும் நடந்தான்.
வாழ்க்கை சரியான பாதையில்தான் போகிறது” என்று பேச ஆரம்பித்தான் பாவெல்; உங்களைக்கூடத் திறந்த மனத்தோடு இங்கு கொண்டு வந்து சேர்க்கவில்லையா? வாழ் நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் நம்போன்றவர்களை அது கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்க்கிறது; நம் அனைவரையும். ஒவ்வொருவரையும் ஒன்று சேர்க்கும் காலமும் வந்தே தீரும். வாழ்க்கை என்பது நமக்கு இன்று ஒரு பெரும் பாரமாகவும் அதீதமாகவும் இருக்கிறது, ஆனால் அதே வாழ்க்கைதான் தனது கசப்பான உண்மையை நமது கண்ணுக்கு முன்னால் காட்டுகிறது: வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எப்படி விரைவில் தீர்ப்பது என்பதற்கும் அதுவே வழிகாட்டுகிறது.”
“அப்படிச் சொல்லு, அதுதான் உண்மை ” என்றான் ரீபின். “மக்கள் அனைவரையும் பரிபூரணமாகச் சீர்படுத்தியே ஆகவேண்டும். ஒரு மனிதன் அசுத்தமாயிருந்தால், அவனைக் கொண்டுபோய்க் குளிப்பாட்டி, துடைத்துத் துவட்டி, அவனுக்குச் சுத்தமான ஆடைகளை அணிவித்தால் சரியாகிவிடுவான். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பான். இல்லையா? ஆனால், அவன் உள்ளத்தைச் சுத்தப்படுத்துவது எப்படி அதுதான் சங்கதி!”
பாவெல் தொழிற்சாலையைப் பற்றியும், தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றியும், உலகின் பிற பாகங்களிலுள்ள தொழிலாளர்கள் எப்படித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பது பற்றியும் உணர்ச்சிமயமாகப் பேசினான். சில சமயங்களில் பாவெலின் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பது மாதிரி ரீபின் மேஜை மீது குத்துவான். இடையிடையே அவன் சொன்னான்.
“ஆமாம். அதுதான் சங்கதி!”
ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான்:
“நீ இன்னும் சின்னப்பிள்ளை. மனிதர்களைச் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லை.”
“சின்னவன் பெரியவன் என்று பேசவேண்டாம்” என்று ரீபினின் முன்னால் வந்து நின்றுகொண்டு கடுமையாகச் சொன்னான் பாவெல்: “யார் சொல்வது சரி என்பதைப் பார்ப்போம்!”
“அப்படியென்றால்—நீ சொல்கிறபடி பார்த்தால் நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் கடவுளைக்கூட உண்டாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது. இல்லையா? ஹும். எனக்கும் அப்படித்தான்படுகிறது. நமது மதம்-ஒரு போலி, பொய்.”
இந்தச் சமயத்தில் தாய் வந்து சேர்ந்தாள். அவளுக்கோ கடவுள் நம்பிக்கை அதிகம். அந்த நம்பிக்கை அவளைப் பொறுத்தவரையில் புனிதமானது; உயிருக்குயிரானது. எனவே தனது மகன் கடவுளைப் பற்றியோ கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ ஏதாவது பேச ஆரம்பித்தால், அவள் தன் மகனைக் கூர்ந்து பார்ப்பாள், கூரிய நாத்திக வார்த்தைகளால் தன் இதயத்தைக் கீற வேண்டாம் என்று தன் மகனிடம் மெளனமாய்க் கெஞ்சுவதுபோல இருக்கும் அந்தப் பார்வை. எனினும் அவனது நாத்திகத்திற்குப் பின்னால் நம்பிக்கை ஒன்றிருப்பதாக அவளுக்குப்படும்: அந்த எண்ணமே அவளை ஓரளவு சாந்தப்படுத்தும்.
“அவன் எண்ணங்கள் எனக்கு எப்படிப் புரியும்?” என்று தனக்குள் நினைத்துக்கொள்வாள் தாய்.
பாவெலின் பேச்சு, வயதான ரீபினின் மனதைக்கூடப் புண்படுத்தி இருக்கும் என்று அவள் கருதினாள். ஆனால், ரீபினே அமைதியுடன் பாவெலை நோக்கி அதுபற்றிக் கேட்டதைக் கண்டு அவளால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
“கடவுளைப் பற்றிப் பேசும்போது மட்டும், கொஞ்சம் ஆற அமரப் பேசு, அப்பா!” அவள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு விட்டு அதிகமான உத்வேகத்தோடு பேசினாள்: “நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் நானோ கிழவி. எனக்கோ, என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மட்டும் போய்விட்டால், என் துயரத்தைச் சொல்லியழக்கூட ஒரு துணையிராது!”
அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது; தட்டுக்களைக் கழுவும்போது அவளது கைவிரல்கள் நடுங்கின.
“நீங்கள் எங்களைப் புரிந்துகொள்ளவேயில்லை, அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.
“எங்களை மன்னித்துக்கொள், அம்மா” என்று மெதுவாக ஆழ்ந்த குரலில் சொன்னான் ரீபின்; லேசாகச் சிரித்துக்கொண்டே பாவெலைப் பார்த்தான்.
“இத்தனை வருஷமாய் ஊறிப்போன உன் நம்பிக்கையைப் பிடுங்கியெறிய முடியாது என்பதை நான் மறந்துவிட்டேன்.”
“நீ நம்புகிற இரக்கமும் அன்பும் நிறைந்த கடவுளைப்பற்றி நான் பேசவில்லை” என்று தொடர்ந்தான் பாவெல்; “ஆனால் நமது குருக்கள் குண்டாந்தடி மாதிரி காட்டி நம்மைப் பயமுறுத்துகிறார்களே அந்தக் கடவுளை, ஒரு சிலரின் கொடுமைக்கு மக்களெல்லாம் பணிந்து கொடுக்க வேண்டும் என்று எந்தக் கடவுளின் பேரால் நம்மை நிர்ப்பந்தப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளைப் பற்றித்தான். அம்மா, நான் பேசுகிறேன்.” அதுதான் சங்கதி!” என்று மேஜையை அறைந்துகொண்டே சொன்னான் ரீபின். “அவர்கள் உண்மையான கடவுளைக்கூட நம்மிடமிருந்து பிடுங்கிக்கொண்டுவிட்டார்கள்! நம்மைத் தாக்குவதற்கு, எல்லாவற்றையும் தமது கைக் கருவியாக மாற்றிக்கொண்டுவிட்டார்கள்! அம்மா, ஒரு கணம் சிந்தித்துப்பார். கடவுள் தன் உருவம்போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார், மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை. காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது; நாம் நமது கடவுளை மாற்றியாக வேண்டும்; புனிதப்படுத்தியாக வேண்டும்; அவர்கள் கடவுளைப் பொய்யாலும் புனை சுருட்டாலும் மூடி மறைத்துவிட்டார்கள், நமது உள்ளங்களைக் கொன்று குவிப்பதற்காக, அவர்கள் கடவுளது திரு உருவத்தையே பாழாக்கிவிட்டார்கள், அம்மா !”
அவன் அமைதியாகவே பேசினான்; எனினும் அவனது பேச்சின்- ஒவ்வொரு வார்த்தையும் காதில் பலத்த அறைபோலத் தாக்கி ஒலித்தது. கறுத்த தாடிக்குள்ளாக தெரியும் அவனது முகத்தின் நிழலாடிய துயரத்தைக் கண்டு பயந்தாள் அவள். அவனது கண்களின் இருண்ட ஒளியை அவளால் தாங்க முடியவில்லை ; அந்த ஒளி அவளது இதயத்தில் ஏதோ ஒரு வேதனையை எழுப்பியது.
“இல்லை, இல்லை. நான் இங்கிருந்து போய்விடுகிறேன்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய்; “இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கவே எனக்குச் சக்தி போதாது, போதாது!”
அவள் சமையலறைக்குள் விரைந்து சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் ரீபின் பாவெலை நோக்கிச் சொன்னான்: “பார்த்தாயா, பாவெல்? இந்த விஷயங்களுக்கு ஆதாரம் இதயமே தவிர, மூளை அல்ல. மனித மனத்தில், வேறு எதுவும் இல்லாத ஓர் இடத்தில், இந்த இதயம் இருக்கிறது!”
“அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்” என்று {{SIC|உறுதியோடு|உறதியோடு} சொன்னான் பாவெல்.
“ஆனால் அறிவு மனிதனுக்குப் பலம் தருவதில்லை ” என்று உரக்கச் சொன்னான் ரீபின். “இதயம்தான் மனிதனுக்குப் பலம் தருகிறது. அறிவு அல்ல.”
தாய் தன் ஆடையணிகளைக் களைந்து மாற்றிவிட்டு பிரார்த்தனைகூடச் செய்யாமல் படுக்கப் போய்விட்டாள். அவளுக்குக் குளிராகவும், வெறுப்பாகவுமிருந்தது. ஆரம்பத்தில் புத்திசாலியாகவும், மனதுக்குப் பிடித்தவனாகவும் தோன்றிய ரீபின் மீது இப்போது பகைமை உணர்ச்சி உண்டாயிற்று.
அவன் பேசுவதைக் கேட்ட சமயத்தில் தனக்குள் நினைத்துக்கொண்டாள்:"மதத்துரோகி! குழப்பவாதி! இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?”
ஆனால் அவனோ நம்பிக்கை தோய்ந்த குரலில் அமைதியுடன் பேசிக்கொண்டே போனான்.
“அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது பாவெல், மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால், அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும். எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும். அது தான் சங்கதி.”
“கிறிஸ்து இருந்தாரே!” என்றான் பாவெல்.
“கிறிஸ்துவுக்கு ஆத்மபலம் கிடையாது, ‘இந்தக் கோப்பை என் கையைவிட்டுப் போகட்டும்’ என்றார் அவர். அவர் சீசரை ஆமோதித்து ஒப்புக்கொண்டார். மனிதர்களிடையே மனித ஆட்சியைக் கடவுள் எப்படி ஆமோதிக்க முடியும்? கடவுள்தான் சர்வ வல்லமையும் பொருந்தியவராயிற்றே. அவர் தமது ஆத்மாவைத் துண்டுபடுத்திப் பேசமுடியாது. இதுதான் கடவுள் சித்தம். இதுதான் மனித சித்தம் என்று பாகுபாடு செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவோ வியாபாரத்தை ஒப்புக்கொண்டார்; திருமணத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அத்தி மரத்தை அவர் சபித்தது இருக்கிறதே—அது தவறான காரியம். கனி தராதது மரத்தின் தவறா? அது போலவே மனத்தில் நலம் விளையாததற்கு அந்த மனம் பொறுப்பல்ல. எனது இதயத்தில் நானாகவா, விதையூன்றித் தீமையை வளர்த்தேன்?”
இருவரது பேச்சுக்களும் ஒன்றையொன்று கவ்விப்பிடிப்பது மாதிரி உணர்ச்சி வசமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பாவெல் மேலும் கீழும் நடந்துலாவும்போது தரையில் காலடி ஓசை எழும்பியது. பாவெல் பேசும்போது வேறு எந்தச் சப்தமும் ஓங்கி ஒலிக்கவில்லை. அவனது குரலே உயர்ந்து ஒலித்தது. ரீபினோ அமைதியும் ஆழமும் நிறைந்த குரலில் பேசினான். அவன் பேசும்போது, கடிகாரப் பெண்டுல ஓசைகூட, வெளியே சுவர்களில் விழுந்து வழியும். பனிமழையின் ஓசையும்கூட தாயின் செவியில் நன்றாகக் கேட்டன. “நான் என் பாஷையிலே, ஒரு கொல்லனின் பாஷையிலேயே பேசுகிறேன். கடவுள் ஒரு நெருப்பு! அவர் இதயத்தில்தான் வாழ்கிறார். ‘பூர்வத்தில் சொல்தான் பிறந்தது; அந்தச் சொல்தான் கடவுளாயிருந்தது’ என்கிறார்கள். எனவே சொல்தான் பரிசுத்த ஆவி!” என்றான் ரீபின்.
“இல்லை, சொல்தான் அறிவு” என்று அழுத்திக் கூறினான் பாவெல்.
“ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார்; அறிவிலும் குடியிருக்கிறார்— ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!”
தாய் தூங்கிப் போய்விட்டாள்: ரீபின் போனது அவளுக்குத் தெரியாது.
ஆனால் அது முதற்கொண்டு ரீபின் அங்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வரும் சமயத்தில் பாவெலின் பிற தோழர்கள் யாரேனும் இருந்தால், அவன் தன் பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்து ஒன்றுமே பேசாமலிருப்பான். எப்போதாவது இடையிலே “அதுதான் சங்கதி!” என்று ஒரு வார்த்தையை மட்டும் போட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடுவான்.
ஒரு நாள் அவன் அங்குக் கூடியிருந்த கூட்டத்தைத் தனது இருண்ட பார்வையால் நோட்டம் பார்த்துவிட்டுச் சோர்ந்த குரலில் பேசினான்:
“நிலைமை இன்று இப்படி இருக்கிறது என்பதைப்பற்றித்தான் நாம் பேசவேண்டுமே ஒழிய, அது நாளை எப்படி இருக்கும் என்பதைப்பற்றி அல்ல, நிலைமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், அவர்களே தங்களுக்கு எது நல்லது என்பதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அவர்களைக் கேட்காமலேயே அவர்கள் தலைமீது வேண்டாத விரும்பாத விஷயங்களையெல்லாம் புகுத்தியாயிற்று. அவை போதும்! இனி அவர்களாகவே சிந்தித்துப் பார்க்க அவகாசம் கொடுப்போம். வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை, கல்வியை, கற்ற அறிவை, உதறித் தள்ளிவிட்டுப் போகட்டும்; தேவாலயத்திலுள்ள கடவுளைப்போல, எல்லாமே தமக்கு எதிராகத்தான் அணிவகுத்து நிற்கின்றன என்பதை அவர்களே உணரட்டும். புத்தகங்களை அவர்கள் கையிலே கொடுங்கள். அவர்களே விடை கண்டுகொள்ளட்டும். ஆமாம்!” ரீபினும் பாவெலும் தனியாக மட்டும் இருக்க நேர்ந்தால், அவர்கள் மூச்சுவிடாமல், முடிவில்லாமல் விவாதம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எனினும் விவாதம் செய்யும்போது அவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து உணர்ச்சி வசப்படுவதில்லை. தாய் விவாதத்தை ஆர்வத்தோடு கேட்பாள்; அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை அறிய அரும்பாடுபட்டுக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்பாள். சமயங்களில் அகன்ற தோளும் கரிய தாடியும்கொண்ட ரீபினும், நெடிது வளர்ந்த பலசாலியான தன் மகனும் கண்மூடித்தனமாக, குருடாகப் போவதாக அவளுக்குப் படும். அவர்கள் முதலில் ஒரு திசையில் செல்வார்கள். பிறகு மறு திசைக்குச் செல்வார்கள். போக்கிடம் தெரியாது. பிரச்சினைக்கு மார்க்கம் காணாது அவர்கள் கையால் நிலந்தடவிச் செல்வதாக, ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு மாறுவதாக, தாம் செல்லும்போது தமது கைப்பொருளைத் தவறவிட்டு, அவற்றைக் காலால் மிதித்துக்கொண்டு நடப்பதாகத் தோன்றும். அவர்கள் எங்கெங்கோ மோதிக்கொண்டார்கள், எதை எதையோ தொட்டு உணர்ந்துகொண்டார்கள்; தங்களது கொள்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் எதை எதையோ தூக்கிவிட்டெறிந்தார்கள்...
அவர்கள் எத்தனை எத்தனையோ பயங்கரமான, துணிச்சலான வார்த்தைகளைக் கேட்டுப் பழகுவதற்கு அவளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். என்றாலும், அந்த வார்த்தைகள் ஆரம்பத்தில் அவளைத் தாக்கி உலுக்கியதுபோல், பின்னர் உலுப்பவில்லை. அந்த வார்த்தைகளை உதறித்தள்ள அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். சமயங்களில் கடவுளை மறுத்துச் சொல்லும் வார்த்தைகளில்கூட, கடவுள் நம்பிக்கை தொனிப்பதை அவள் கண்டாள். அப்படிக் காணும்போது அவள் அமைதியாக, எல்லாவற்றையும் மறந்து, மன்னித்துத் தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள். அவளுக்கு ரீபினைப் பிடிக்காவிட்டாலும், இப்போது அவள் உள்ளத்தில் அவன் பகைமை உணர்ச்சியைக் கிளப்பவில்லை.
ஒவ்வொரு வாரமும் அவள் வெளுத்த துணிமணிகளையும், புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு, ஹஹோலிடம் கொடுப்பதற்காகச் சிறைக்குச் செல்லுவாள். என்றாலும் ஒரே ஒரு தடவைதான் ஹஹோலைக் கண்டு பேச அவளை அனுமதித்தார்கள்.
திரும்பி வந்தபோது அவனைப்பற்றி அன்போடு அவள் பேசினாள். “அவன் கொஞ்சங்கூட மாறிவிடவில்லை, எல்லோரிடமும் நல்லபடியாகவே பழகுகிறான்; அனைவரும் அவனிடம் தமாஷாகப் பேசுகிறார்கள். அவனுக்குக் கஷ்டமாய் மிகவும் கஷ்டமாய்த் தானிருக்கிறது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை.”
“அதுதான் சரி” என்று பேச ஆரம்பித்தான் ரீபின். “நம்மையெல்லாம் சோகம்தான் மூடிப் போர்த்தியிருக்கிறது; நாம் சோகத்துக்குள் தான் இருக்கிறோம். இருந்தாலும், சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்துகொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள். அதுதான் சங்கதி! நாம் முட்டாள்தனமாயிருந்தால், நாம்தான் அதன் பலாபலனை அனுபவித்துத் தீர வேண்டும்!”
குறிப்பு
தொகு- ↑ துகபர்த்சி–ஒரு சமயக் கட்சியினர்–மெ-ர்.