12

விலாசவ் குடும்பத்தின் சின்னஞ் சிறிய வீட்டின்மீது மக்களின் கவனம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தக் கவனத்தால் அவர்களது மனத்திலே சிறுசிறு சந்தேகங்களும், காரண காரியம் தெரியாத பகைமை உணர்வும் ஏற்பட்டாலும்கூட, ஏதோ ஓர் இனந்தெரியாத நம்பிக்கை நிறைந்த ஆர்வக் குறுகுறுப்பும் ஏற்படத்தான் செய்தது. சில சமயங்களில் யாராவது ஒருவன் பாவெலைச் சந்தித்து அவனைச் சிரத்தையோடு பார்த்துக்கொண்டு. கேட்பான்:

“தம்பி! நீ புத்தகங்களையெல்லாம் படிக்கிறாய். உனக்குச் சட்டங்களெல்லாம் தெரியும். அப்படியென்றால் எனக்கு இதை விளக்கிச் சொல்லேன்....”

அவன் சொல்லுகின்ற விஷயம் போலீஸின் அநியாயத்தைப் பற்றியோ, அல்லது தொழிற்சாலை நிர்வாகத்தின் அநீதியைப் பற்றியோதான் இருக்கும், மிகவும் சிக்கலான விஷயமானால் தனக்குப் பழக்கமான நகரத்து வக்கீல் ஒருவருக்கு ஒரு சீட்டு எழுதிக்கொடுத்து அனுப்புவான் பாவெல். ஆனால், அவனது சக்திக்கு உட்பட்டதாயிருந்தால், அவனே அதற்குரிய சட்ட விஷயங்களை விளக்கிச் சொல்லுவான்.

வரவர ஜனங்கள் சிரத்தையுள்ள இளைஞனை மதிக்கத் தொடங்கினார்கள். எளிமையாகவும் துணிவாகவும் பேசிய இந்தப் பலசாலியான இளைஞனை எதையும் கூர்ந்து கவனித்து, காது கொடுத்துக் கேட்கும், பிரச்சினையின் ஆழத்துக்குச் சென்று ஆராயும் இந்த இளைஞனை, எல்லாப் பிரச்சினைகளிலும் ஊடுருவிச் செல்லும் ஏதோ ஒரு நூலிழை அனைத்து மக்களையும் இணைக்கிறது என்று காணும் பாவெலை அவர்கள் மதிக்கத் தொடங்கினார்கள்.

இதன் பின்னர் பாவெலின் மதிப்பு மேலும் உயர்வதற்குக் காரணமாயிருந்தது ஒரு நிகழ்ச்சி, அதுதான் “சதுப்புக் காசு” சம்பவம்.

தொழிற்சாலையைச் சுற்றி அழுகல் வட்டமாய் ஒரு பெரிய சதுப்பு நிலம் பரவியிருந்தது. அங்கே பிர் மரங்களும், பிர்ச் மரங்களும் மண்டி வளர்ந்திருந்தன. வேனிற்காலத்தில் அந்தச் சதுப்பு நிலத்திலிருந்து மஞ்சள் நிறமான நுரை கொப்புளித்துப் பெருகும்; இந்தச் சாக்கடை நுரையிலிருந்து படைப்படையாகக் கொசுக் கூட்டம் உற்பத்தியாகிக் கிளம்பும். அந்தக் கொசுக்களின் உபத்திரவத்தால், தொழிலாளர் குடியிருப்பில் காய்ச்சலும் ஜுரமும் உண்டாகும். அந்தச் சதுப்பு நிலம் தொழிற்சாலைக்குச் சொந்தமானது. தொழிற்சாலையின் புதிய மானேஜர் அந்தச் சதுப்பு நிலத்தைத் தூர்ப்பதன் மூலம் எரு எடுத்து அதன் மூலம் லாபம் அடையத் திட்டமிட்டார். அந்தச் சதுப்பு நிலம் தூர்க்கப்பட்டால் தொழிலாளர்களின் ஆரோக்கியமும், குடியிருப்பின் சுகாதாரமும்தான் மேம்பாடு அடையும் என்று காரணம் கூறி, அந்தச் சதுப்பு நிலத்தைச் சீர்படுத்துவதற்காக தொழிலாளர்களின் சம்பளத்தில் ரூபிளுக்கு[1] ஒரு கோபெக்[2] பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.

இந்த உத்தரவைக் கண்டு தொழிலாளர்கள் கொதிப்படைந்தார்கள். அவர்கள் இந்த உத்தரவை எதிர்த்ததற்குரிய முக்கிய காரணம், தொழிற்சாலைக் காரியாலயத்தின் குமாஸ்தாக்களுக்கு மட்டும் அந்தச் சம்பள வெட்டிலிருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மானேஜர் இந்தக் கூலிக்குறைப்பு உத்தரவைத் தொழிற்சாலை விளம்பரப் பலகையில் ஒரு சனிக்கிழமையன்று வெளியிடச் செய்தார். அன்று பாவெலுக்கு உடல் நலமில்லாததால் அவன் வேலைக்குச் செல்லவில்லை; வீட்டில் இருந்தான். எனவே, அவனுக்கு அந்த உத்தரவைப்பற்றி எதுவும் தெரியாது. ஆனால், மறுநாள் வயதும், கண்ணியமும் நிறைந்த பாத்திரத் தொழிலாளி சிலோவும், நெட்டையான பூட்டுத் தொழிலாளி மாகோதினும் பாவெலைப் பார்க்க வந்தபோது மானேஜரின் தீர்மானத்தைப்பற்றிச் சொன்னார்கள்.

“நாங்கள், வயதானவர்கள் இந்த விஷயத்தைப்பற்றிக் கலந்து பேசினோம்” என்று மனங்கவரும் முறையில் பேசத் தொடங்கினான் சிஸோவ். “நீ விஷயம் தெரிந்தவன் என்பதால், உன்னிடம் இது பற்றிப் பேசுவதற்காக எங்களை அனுப்பியுள்ளார்கள் தோழர்கள். கொசுக்களுடன் போராட, நம்மிடம் பணம் பறிக்க மானேஜருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் ஏதாவது இருக்கிறதா?”

“யோசித்துப்பார்” என்று தனது குறுகிய கண்களில் பிரகாசம் தெறிக்கப் பேசினான் மாகோதின், “நாலு வருஷத்துக்கு முன்னால், இந்த முடிச்சுமாறிப் பயல்கள் என்னமோ குளியல் அறை கட்டப் போவதாகச் சொல்லி, நம்மிடம் காசு பிடுங்கினார்கள். மூவாயிரத்து எண்ணூறு ரூபிள்களைப் பிடுங்கிச் சேர்த்தார்கள். அந்தப் பணம் எல்லாம் எங்கே? அந்தக் குளிக்கிற இடம்தான் எங்கே? இதையும் காணோம்; அதையும் காணோம்!”

அந்தக் கூலிக் குறைப்பு அநீதியானதுதான் என்பதை பாவெல் விளக்கினான்; மேலும் அதன் மூலம் தொழிற்சாலைக்குக் கிடைக்கக்கூடிய லாபத் தொகையையும் குறிப்பிட்டான். அந்த இரு மனிதர்களும் முகத்தைச் சுழித்துக்கொண்டே திரும்பிப் போனார்கள், அவர்கள் போனவுடன் லேசாகச் சிரித்துவிட்டு, பாவெலின் தாய் சொன்னாள்:

“பாவெல், கிழவர்கள் கூட உன்னிடம் யோசனை கேட்கக் கிளம்பிவிட்டார்கள்!”

அவளுக்குப் பதில் சொல்லாமல் பாவெல் கீழே உட்கார்ந்து ஏதோ எழுத ஆரம்பித்தான். சில நிமிஷம் கழித்து, அவன் தன் தாயைப் பார்த்துச் சொன்னான்:

“அம்மா, நீ எனக்காக ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நகர் வரையிலும் போய்வர வேண்டும்.”

“அதென்ன, ஆபத்தான இடமா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம், நமக்காக அங்கொரு பத்திரிகை நடக்கிறது. அங்கு தான் உன்னை அனுப்பப்போகிறேன். அடுத்த இதழில் இந்தக் கூலிக் குறைப்பைப் பற்றிய செய்தி வெளிவந்தாக வேண்டும்.”

“சரி, இதோ போகிறேன்” என்றாள் அவள்.

இதுதான் மகன் அவளது பொறுப்பில் விட்ட முதல் பணி. அவன் நிலைமையைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லிவிட்டது அவளுக்கு மகிழ்ச்சி அளித்தது.

“பாஷா! எனக்கும் புரிகிறது” என்று உடை உடுத்திக்கொண்டே பேசினாள் அவள். “அவர்கள் மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள். ஆமாம்! சரி — அந்த மனிதனின் பெயர் என்ன சொன்னாய்? இகோர் இவானவிச், இல்லையா?”

அவள் மாலையில் வெகு நேரங் கழித்துக் களைத்து ஓய்ந்து திரும்பி வந்து சேர்ந்தாள்; எனினும் அவள் உள்ளத்தில் களிப்பே நிறைந்திருந்தது.

“நான் சாஷாவைப் பார்த்தேன்” என்று தன் மகனைப் பார்த்துச் சொன்னாள். “அவள் உனக்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கச் சொன்னாள். அந்த இகோர் இவானவிச் படாடோபமே இல்லாத பேர்வழி; சிரிக்கச் சிரிக்க வேடிக்கையாகப் பேசுகிறான். அவன் பேசுவதே ஒரு விநோதமாயிருந்தது!”

“அவர்களை உனக்குப் பிடித்துப் போனதுபற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“அவர்கள் எல்லாருமே ஆடம்பரம் இல்லாதவர்கள்தான், “பாஷா தடபுடல் இல்லாதபடி பழகுவதுதான் நல்ல குணம் இல்லையா? உன்மீது அவர்களுக்கு ஒரே மதிப்பு”

திங்கட்கிழமையன்றும் பாவெலுக்கு உடல்நிலை சீராகவில்லை; எனவே அன்றும் அவன் வீட்டிலேயே தங்கிவிட்டான். மத்தியானச் சாப்பாட்டு வேளையில் பியோதர் மாசின் குதூகலம் பொங்கும் உணர்ச்சியோடு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க, ஓடோடியும் வந்து சேர்ந்தான்.

“புறப்படு உடனே புறப்படு! தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள். அவர்கள் உன்னை உடனே அழைத்து வரச்சொன்னார்கள், நீ வந்தால்தான் எல்லாவற்றையும் விவரமாக எடுத்துச் சொல்லுவாய் என்று சிஸோவும் மாகோதினும் கூறினார்கள். வந்து பார்!”

பாவெல் பதிலொன்றும் பேசாமல், உடைமாற்றிக்கொள்வதில் முனைந்தான்.

“பெண்களும் கூடக் கூடிவிட்டார்கள்; அவர்கள் அனைவரும் ஒரே கூச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

“நானும் வருகிறேன்” என்றாள் தாய். “அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இரு, நானும் வருகிறேன்.”

“வா சீக்கிரம்!” என்றான் பாவெல்.

அவர்கள் மூவரும் தெருவழியே விரைவாகவும் மௌனமாகவும் நடந்தனர். தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பரவசத்தினால், தாய்க்கு மூச்சுக்கூடத் திணறித் தவித்தது. ஏதோ ஒரு மகத்தான முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழப்போவதாக அவள் உணர்ந்தாள். தொழிற்சாலையின் வாசலில் பெண்களின் ஒரே கூட்டம்; அவர்கள் சண்டையிட்டுக்கொண்டும் சலசலத்துக்கொண்டும் இருந்தார்கள், தொழிற்சாலையின் முற்றத்துக்குள் அவர்கள் மூவரும் நுழைந்தவுடனேயே அவர்களைச் சுற்றிலும் உணர்ச்சிப் பரவசத்தோடு இரைந்து கொண்டிருக்கும் இருண்ட மாபெரும் ஜனக்கூட்டத்தைக் கண்டார்கள். தொழிற்சாலையின் உலைப் பட்டறைச் செங்கற் சுவருக்குப் பக்கத்தில் கிடந்த பழைய இரும்புச் சாமான்களின் குவியல் மீது சிஸோவ், மாகோதின், வியாலவ் முதலியவர்களும், செல்வாக்குள்ள ஐந்தாறு தொழிலாளிகளும் நின்றுகொண்டிருந்தார்கள். தொழிலாளர்களின் கவனம் முழுவதும் அவர்கள் பக்கமே திரும்பியிருந்தது என்று தாய் கண்டாள்.

“இதோ பாவெல் விலாசவ் வந்துவிட்டான்!” என்று யாரோ சத்தமிட்டார்கள்.

“சத்தம் போடாதீர்கள்!” என்ற குரல் பல திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் ஓங்கி ஒலித்தது.

எங்கோ பக்கத்திலிருந்து ரீபினின் நிதானமான குரல் கேட்டது: “நாம் வெறும் கோபெக்குக்காகப் போராடப் போவதில்லை; நியாயத்துக்காகவே போராட வேண்டும்! ஆமாம்! நாம் இந்தக் கோபெக் காசைப் பிரமாதப்படுத்தவில்லை. நமது கோபெக்கும் மற்ற காசுகளைப்போலவே வட்டக் காசுதான். ஆனால், மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம், அவ்வளவுதான். ஆனால், மானேஜரின் ரூபிளில் இருப்பதைவிட நமது கோபெக்கிலுள்ள மனித இரத்தம் அதிகம்! நாம் வேறும் காசை மதிக்கவில்லை; அந்தக் காசிலுள்ள இரத்தத்தை, நியாயத்தைத்தான் மதிக்கிறோம்! ஆமாம்!”

அவனது பேச்சுக் கூட்டத்தினிடையே பரவி ஒலித்தது. உடனே பல குரல்கள் எழும்பின.

“ரொம்ப சரி, ரீபின்!”

“பாவெல் இதோ வருகிறான்!”

தொழிற்சாலை யந்திரங்களின் கர்ஜனை, நீராவியின் இரைச்சல், யந்திரச் சக்கரங்களின் மீது ஓடும் நாடாக்களின் படபடப்பு முதலிய சகல ஓசைகளையும் அமுங்கடித்து, ஓங்காரமிடும் சுழற்காற்றாக ஒன்று கலந்தது. அத்தொழிலாளர்களின் குரல்கள். எட்டுத் திசைகளிலிருந்தும் ஜனங்கள் தங்கள் கைகளை ஆட்டிக்கொண்டும், ஒருவருக்கொருவர் உணர்ச்சிமயமான கொதிப்படைந்த வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டும் திரண்டு ஓடி வந்தார்கள். ஓய்ந்து களைத்த அவர்களது உள்ளங்களில் பதுங்கிக்கிடந்த அதிருப்தி உணர்ச்சி உயிர் பெற்றெழுந்து. போக்கிடம் தேடி முட்டி மோத ஆரம்பித்தது. எனவே அந்த அதிருப்தி உணர்ச்சி தனது அகன்ற இறக்கைகளை வீசியடித்து மேலே பறந்தெழுந்தவாறு தன்னோடு அந்த மக்களையும் கட்டிப் பிணைத்து இழுத்தோடிக்கொண்டு, அவர்களை ஒருவருக்கொருவர் மோதிச் சாடவிட்டுக்கொண்டு, வெற்றிகரமாக வெளிப்பட்டது. அந்த உணர்ச்சியினால், அவர்கள் மனத்தில் வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் சுவாலை வீசிக் கனன்றது. ஜனசமுத்திரத்துக்கு மேலாக புகைக்கரியும் செந்தூளும் பறந்து கவிந்தன. அவர்களது உணர்ச்சிவசப்பட்ட முகங்களில் வியர்வை பூத்து மினுமினுத்தது: கன்னங்களில் கறுத்த வியர்வை நீர் வழிந்திறங்கியது; அவர்களது கரிய முகங்களில் கண்களும் பற்களும் மட்டும் பிரகாசமாகப் பளிச்சிட்டன.

சிஸோவும் மாகோதினும் நின்றிருந்த இரும்புக் குவியலின் மீது பாவெலும் ஏறி நின்றான்.

“தோழர்களே!” என்று அவன் கத்தினான்.

அவனது முகம் எவ்வளவு தூரம் வெளுத்துப்போய்விட்டது. உதடுகள் எப்படி நடுங்குகின்றன என்பதையெல்லாம் தாய் கவனித்துக்கொண்டிருந்தாள். தன்னையுமறியாமல், அவள் கூட்டத்தினரை இடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறிச் சென்றாள்.

“யாரம்மா நீ? ஏன் இப்படி இடித்துக்கொண்டு போகிறாய்?” என்று அவளை நோக்கி எரிந்து விழுந்தார்கள் தொழிலாளர்கள்.

அவர்களும் அவளைப் பதிலுக்கு இடித்துத் தள்ளினார்கள். என்றாலும் அதனாலெல்லாம் அவள் பின் தங்கிவிடவில்லை. தோளாலும், கையாலும் இடித்து மோதிக் கூட்டத்தைப் பிளந்துகொண்டு அவள் முன்னேறினாள்; தன்னுடைய மகனுக்குப் பக்கத்தில் சென்று தானும் நிற்கவேண்டும் என்ற உணர்ச்சியே அவளை உந்திப் பிடித்துத் தள்ளிக்கொண்டு முன்னேறச் செய்தது.

‘தோழர்களே’ என்ற அந்த வார்த்தை அவனது நெஞ்சிலிருந்து வெடித்துப் பிறந்தபோது.. அவனைப் பொறுத்தவரையில் பரிபூரண அர்த்த பாவம்கொண்டிருந்த அந்த வார்த்தையைச் சொன்னபோது அவனது தொண்டைக்குழி போராட்ட உணர்ச்சியின் ஆனந்த வெறியால் அடைபட்டுத் திணறுவதுபோலிருந்தது. உண்மையாலும், உண்மையைப் பற்றிய கனவுகளாலும் கனன்றெரிந்துகொண்டிருந்த தனது இதயத்தை, அந்த மக்களுக்குச் சமர்ப்பித்துவிட வேண்டும் என்ற ஆசை அவனைப் பிடித்து உலுப்பியது.

பெருங்களிப்புடனும் தெம்புடனும் அவன் மீண்டும் முழங்கினான்: “தோழர்களே! தேவாலாயங்களையும் தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்; கைவிலங்குகளையும் காசுகளையும் உருவாக்குவதும் நாம்தான். தொட்டில் முதல் சுடுகாடுவரை ஒவ்வொருவரின் உணவுக்கும், களிப்பிற்கும் ஆதார சக்தியாய் திகழ்வது நாம்!”

“ஆமாம், ஆமாம்!” என்று கத்தினான் ரீபின்.

“எங்கு பார்த்தாலும் சரி, எப்போது பார்த்தாலும் சரி, நாம்தான் உழைப்பதில் முன்னணியில் நிற்கிறோம்; வாழ்க்கையிலேயோ நாம்தான் பின்னணியில் நிற்கிறோம். நம்மைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? நமது நன்மைக்காக, யாராவது என்றாவது சிறிதளவாவது உதவியிருக்கிறார்களா? யாராவது நம்மை மனிதப் பிறவிகள் என்றாவது மதிக்கிறார்களா? இல்லை, ஒருவருமே இல்லை!”

“ஒருவருமே இல்லை” என்று எங்கோ ஒரு குரல் எதிரொலித்தது.

பாவெல் மீண்டும் தன்னைச் சுதாரித்துக்கொண்டு அமைதியுடனும் எளிமையுடனும் பேசத் தொடங்கினான். மக்கள் அனைவரும் ஒரு ஆயிரந்தலை உடல் போல ஒன்று சேர்ந்து, அவனை நோக்கி நகர்ந்தனர். அனைவரும் ஆர்வம் நிறைந்த கண்களோடு அவனது முகத்தையே பார்த்தார்கள்; அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அள்ளிப் பருகினார்கள்.

“நமது உரிமைகளுக்காகப் போராடும் ஆசையால் ஒன்றுதிரண்டு ஒருவரோடு ஒருவர் பிணைந்து நின்று, நாமெல்லாம் நண்பர்கள் என்ற உண்மையை உணர்ந்தாலன்றி, நமது சுக வாழ்வை நாம் போராடிப் பெற முடியாது!”

“விஷயத்துக்கு வா!” என்று தாய்க்குப் பக்கத்திலிருந்து ஒரு முரட்டுக்குரல் கத்தியது.

“குறுக்கிட்டுப் பேசாதே!” என்று வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு குரல்கள் ஒலித்தன.

தொழிலாளர்களது கறுத்த முகங்கள் நம்பிக்கையற்றுச் சுருங்கிச் சுழித்தன. எனினும் பல தொழிலாளர்கள் பாவெலின் முகத்தையே ஆழ்ந்து நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

“இவன். சோஷலிஸ்ட்! முட்டாள் அல்ல!” என்றது ஒரு குரல். “தைரியமாகப் பேசுகிறான், இல்லை?” என்று ஒரு நெட்டையான ஒற்றைக் கண்ணனான தொழிலாளி தாயை இடித்துக்கொண்டே சொன்னான்.

“தோழர்களே! நமக்கு உதவி செய்வதற்கு, நம்மைத் தவிர யாருமே கிடையாது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது. ஒவ்வொருவரின் நன்மைக்காக நாம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும். எல்லாருடைய நன்மைக்காகவும் ஒவ்வொருவரும் ஒன்றாக வேண்டும். நமது எதிரிகளை ஒழிப்பதற்கு இதுவே நமது தாரக மந்திரம்!”

“ஏ பையன்களா! இவன் உண்மையைத்தான் பேசுகிறான்!” என்று தன் முஷ்டியை மேலே உயர்த்திக் காட்டிக்கொண்டே பேசினான் மாகோதின்.

“மானேஜரைக் கூப்பிடுங்கள்!” என்று கத்தினான் பாவெல்.

கூட்டத்தினர் மத்தியில் திடீரென ஒரு சூறாவளிக் காற்று சுழித்து வீசிய மாதிரி தோன்றியது. அந்தக் கூட்டமே அசைந்து கொடுத்தது ஒரே சமயத்தில் எண்ணற்ற குரல்கள் உரக்கக் கத்தின:

“மானேஜரைக் கூப்பிடு!”

“அவருக்கு ஆள் அனுப்புங்கள்!”

தாய் மேலும் முன்னேறி வந்தாள். பெருமிதமும் பெருமையும் பிரதிபலிக்கும் முகத்தோடு தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பாவெல் அந்த மதிப்பும் வயதும் நிறைந்த தொழிலாளர்களுக்கு மத்தியில் நின்றுகொண்டிருந்தான். அது மட்டுமா? ஒவ்வொருவரும் அவன் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்டார்கள். அவன் சொன்னவை அனைத்தையும் ஒப்புக்கொண்டார்கள், அவன் கோபாவேசமடைந்து, மற்றவர்களைப்போல் வசைமாரி பொழியாதிருந்தது பற்றி அவளுக்குப் பிடித்தது.

தகரக் கொட்டகையிலே கல் மழை பொழிந்த மாதிரி கேள்விகளும் வசைமாரிகளும், குத்தலான வார்த்தைகளும் இரைந்து ஒலித்தன. பாவெல் ஜனக்கூட்டத்தைக் குனிந்து நோக்கினான். தனது அகன்று விரிந்த கண்களால் அந்தக் கூட்டத்திடையே எதையோ துழாவிக் காண்பதுபோலக் கூர்ந்து பார்த்தான்.

“தூது செல்வது யார்?”

“சிஸோவ்!”

“விலாசவ்!” “ரீபின்தான் சரி! அவன் துடியாகப் பேசுவான்!”

திடீரென அமுங்கிப்போன குரல்கள் கூட்டத்தினரிடையே கலகலத்தன.

“அவரே வந்துவிட்டார்!”

“அதோ மானேஜர்!”

கூரிய தாடியும் நீண்ட முகமும்கொண்ட ஒரு நெட்டை மனிதன் வருவதற்கு வழிவிட்டு ஜனக்கூட்டம் இடம்கொடுத்து விலகியது.

“வழியை விடுங்கள்!” என்று சொல்லிக்கொண்டே, தொழிலாளர்களைத் தொட்டு விடாதபடி, மெதுவாக வழிவிடும்படி கையாட்டிக்கொண்டே வந்தான் அவன், அவனது கண்கள் குறுகிச் சுழித்திருந்தன. மனிதர்களை அடக்கியாளும் அதிகாரியின் பழகிப்போன பார்வையோடு அவன் தொழிலாளர்களை முறைத்துப் பார்த்துக்கொண்டே முன்னேறினான். தொழிலாளர்கள் தங்கள் தொப்பிகளை எடுத்துவிட்டு, அவனுக்கு மரியாதையாக வணங்கினர். ஆனால் அவனோ தான் பெற்ற மரியாதைக்குப் பிரதி வணக்கமே செய்யாமல், முன்னே சென்றான், மக்கள் அனைவரும் வாயடைத்துப்போய் நின்றார்கள். கலக்கம் நிறைந்த புன்னகையும், அமைதியான வியப்பும் அவர்களிடையே பரவியது. குற்றம் செய்துகொண்டிருக்கும்போது பெற்றோரிடம் அகப்பட்டுக்கொண்ட குழந்தைகளைப்போல் திருகத் திருக விழித்தார்கள்.

மானேஜர் தாயைக் கடந்து சென்றான். செல்லும்போது அவளது முகத்தைக் தனது உக்கிரம் நிறைந்த கண்களால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, அந்த இரும்புக் குவியலுக்கு எதிரே போய் நின்றான். யாரோ அவனை மேலே ஏற்றுவதற்காகக் கைகொடுத்து உதவ முன்வந்தார்கள். ஆனால் அவனோ அந்த உதவியை நிராகரித்துவிட்டு பலத்த வேகத்தோடு, தானே மேலே தாவியேறி சிஸோவுக்கும் பாவெலுக்கும் எதிரே நின்றான்.

“இதெல்லாம் என்ன கூட்டம்? நீங்கள் ஏன் வேலைக்குப் போகவில்லை?”

சில கணநேரம் ஒரே அமைதி நிலவியது. தானியக் கதிர்களைப் போல் மனிதர்களின் தலைகள் ஆடியசைந்தன. சிஸோவ் தன் தொப்பியை எடுத்து வீசினான், தோள்களைச் சிலுப்பினான், தலையைத் தொங்கவிட்டான்.

“என் கேள்விக்குப் பதில் சொல்!” என்று கர்ஜித்தான் மானேஜர். பாவெல் அவனுக்கு முன்னால் வந்து நின்று, சிஸோவையும் ரீபினையும் சுட்டிக்காட்டிக்கொண்டு உரத்த குரலில் பேசத் தொடங்கினான்.

“கூலிக் குறைப்பு பற்றிய உங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று உங்களிடம் கோரும்படி எங்கள் மூவரையும் தோழர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”

“ஏன்?” என்று பாவெலைப் பார்க்காமலேயே கேட்டான் மானேஜர்.

“ஏனென்றால், இந்த மாதிரியான தலைவரிவிதிப்பு அநியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உரக்கக் கூவினான் பாவெல்.

“சதுப்பு நிலத்தைச் சரிபண்ணுவது தொழிலாளர்களது நன்மைக்காக அல்லாமல், அவர்களைச் சுரண்டுவதற்காகச் செய்த காரியம் என்றா நீ கருதுகிறாய்? அதுதானே உன் எண்ணம்?”

“ஆம்” என்றான் பாவெல்.

“நீயும் கூடவா?” என்று ரீபினைப் பார்த்துக் கேட்டான் மானேஜர்.

“நாங்கள் எல்லாருமே அப்படித்தான் நினைக்கிறோம்.”

“ஏனப்பா, நல்லவனே! நீயுமா?” என்று சிஸோவைப் பார்த்துக் கேட்டான்.

“நானும்தான். எங்கள் காசை எங்களுக்கு விட்டுக்கொடுப்பதுதான் நல்லது.”

சிஸோவ் மீண்டும் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, குற்றம் செய்தவனைப்போல் லேசாகச் சிரித்துக்கொண்டான்.

மானேஜர் அந்த ஜனத்திரள் முழுவதையும் மேலோட்டமாகப் பார்த்தான்; தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டான். பிறகு அவன் பாவெலிடம் திரும்பி, அவனைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னான்:

“உன்னைப் பார்த்தால் படித்தவன் மாதிரி தோன்றுகிறது. உனக்குக்கூடவா இந்த நடவடிக்கையால் ஏற்படக்கூடிய நன்மைகளை உணர முடியவில்லை?”

“தொழிற்சாலை நிர்வாகத்தின் சொந்தச் செலவிலே அந்த நிலத்தைச் சீர்பண்ணினால்தான் எங்களுக்கும் அதன் நன்மைகளை உணர முடியும்!” என்று எல்லாருக்கும் கேட்கும்படியாகச் சொன்னான் பாவெல். “தொழிற்சாலை தர்ம ஸ்தாபனம் அல்ல! நீங்கள் அனைவரும் இப்போதே வேலை செய்யத் திரும்பியாக வேண்டும். இது என் உத்தரவு!” என்றான் மானேஜர்.

அவன் யாரையும் பார்க்காமல், இரும்புக் குவியலின்மீது பதமாகக் கால்வைத்துக் கீழிறங்கத் தொடங்கினான்.

கூட்டத்தினரிடையே அதிருப்திக் குரல்கள் கிளம்பின.

“என்ன இது?” என்று சட்டென்று நின்று சத்தமிட்டான் மானேஜர்.

அமைதியைக் குலைத்து தொலைவிலிருந்து ஒரே ஒரு குரல் ஒலித்தது:

“நீயே போய் வேலை செய்!”

“இன்னும் பதினைந்து நிமிஷ நேரத்தில் நீங்கள் வேலைக்குத் திரும்பாவிட்டால், உங்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கும்படி உத்தரவிடுவேன்” என்று அழுத்தமும் வறட்டுத் தன்மையும் நிறைந்த குரலில் சொன்னான் மானேஜர்.

மீண்டும் அவன் கூட்டத்தின் ஊடாக வழிதேடி, நடந்து சென்றான்; அவன் திரும்பிச் செல்லும்போது அவனுக்குப் பின்னால் தங்கிய கூட்டத்தினர் கசமுசத்தனர்; அவன் செல்லச் செல்ல அந்தக் கசமுசப்பும் அதிகரித்தது.

“போய், அவனோடு பேசிப் பாருங்கள்!”

“இதுதானப்பா, உனக்குக் கிடைக்கும் நியாயம்! என்ன பிழைப்பு வாழ்கிறது?” அவர்கள் பாவெலை நோக்கித் திரும்பிச் சத்தமிட்டார்கள்.

“ஏ, சட்டப்புலியே! இப்போது நாங்கள் என்ன செய்வதாம்?”

“பிரமாதமாக மட்டும் பேசிக் கிழித்து விட்டாய்! மானேஜர் - முகத்தைக் கண்டவுடன் உன் வீராப்பெல்லாம் பறந்தோடிவிட்டது!”

“பாவெல் சொல்லு! நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்று சொல்!”

தாங்கமுடியாத அளவுக்கு இந்தக் கசப்புக் குரல்கள் பெருகிவரவே. பாவெல் வாய்திறந்தான்:

“தோழர்களே, கூலியைக் குறைக்கமாட்டேன் என்று அவர் உறுதி கூறினால் அல்லாது, நாம் வேலைக்குப் போகக்கூடாது. இதுதான் என் யோசனை.”

“உத்வேகமான பல குரல்கள் உடனே ஒலித்தன.”

“எங்களை என்ன, முட்டாள்கள் என்று நினைத்தாயா?” “வேனலக்குப் போகாதே என்றால்.... வேலை நிறுத்தமா?”

“எதற்காக? கேவலம் ஒத்தைக் காசுக்காகவா?”

“ஏன், வேலை நிறுத்தம் செய்தால் என்ன?”

“நம்மையெல்லாம் சுட்டுத் தள்ளிவிடுவான்!”

“அப்புறம் அவனுக்கு வேலை பார்க்க ஆள் ஏது?”

“ஆளா கிடைக்காது? எத்தனையோ பேர் தயாராக முன் வருவார்கள்!”

“கருங்காலிகள்!”

குறிப்புகள்

தொகு
  1. ரூபிள் — ருஷியாவின் நாணயம் (நமது ரூபாயைப் போன்றது).— மொ-ர்
  2. கோபெக் —ருஷியாவின் செப்புக் காசு. —மொ-ர்
"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/12&oldid=1293046" இலிருந்து மீள்விக்கப்பட்டது