18

அன்று மாலை ஹஹோல் வெளியே சென்ற பிறகு, தாய் விளக்கை யேற்றிவிட்டு, ஒரு காலுறை பின்ன முனைந்தாள். பின், உடனேயே எழுந்திருந்து, சஞ்சல மனத்தோடு அறைக்குள் மேலும் கீழும் நடந்தாள். சமையல்கட்டில் நுழைந்தாள் கதவைச் சாத்தினாள். புருவங்களைச் சுருக்கி நெரித்தவாறே திரும்பி வந்தாள். ஜன்னலின் திரைகளை இழுத்து மூடிவிட்டு, அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தாள். மீண்டும் மேஜைமுன் சென்று அமர்ந்தாள். அவள் எவ்வளவுதான் முன்னேற்பாடுகள் செய்துவிட்டு உட்கார்ந்த போதிலும், அவள் கண்கள் மட்டும் அக்கம் பக்கம் பார்த்துத் திருகத்திருக விழிப்பதை அவளால் தடுக்க முடியவில்லை, புத்தகத்தைத் திறந்து எழுத்துக்களை முணுமுணுக்கத் தொடங்கினாள். தெருப்பக்கத்தில், ஏதாவது சிறு சத்தம் கேட்டாலும், அவள் உடனே திடுக்கிட்டாள். புத்தகத்தைப் பட்டென்று மூடினாள், காதுகளை தீட்டிவிட்டுக்கொண்டாள்;

பிறகு மீண்டும் அவள் புத்தகத்தைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தாள், கண்ணைத் திறந்தும் மூடியும் வாய்க்குள் சொல்லிப் பார்த்துக்கொண்டாள்.

“நாம் வாழும் இந்த நிலத்தில்....”

கதவு தட்டும் சத்தம் கேட்டது விறுட்டென்று எழுந்து புத்தகத்தை அலமாரியில் செருகிவிட்டுக் கலக்கத்துடன் கேட்டாள்;

“யார் அங்கே”

“நான்தான்”

ரீபின் தன் தாடியைத் தட்டி கொண்டு வந்து சேர்ந்தான்.

“நீ யாரங்கே?” என்று முன்பெல்லாம் கேட்க மாட்டாயே. தனியாயிருக்கிறாயா? ஹஹோலும் இருப்பான் என்று நினைத்தேன். அவனை நான் இன்று பார்த்தேன்; சிறைவாசம் இவனைக் கெடுக்கவில்லை” என்றான் ரீபின்.

அவன் கீழே உட்கார்ந்து தாயின் பக்கமாகத் திரும்பினான்.

“சரி. நான் வந்த விஷயத்தைப் பேசலாம்’

அவனது கவனமிக்க புதிரான பார்வை அவள் உள்ளத்திலே புரியாத பயத்தை எழுப்பியது.

“பணம் இல்லாமல் எதுவும் நடக்காது” என்று ஆழ்ந்து கரகரக்கும் குரலில் சொன்னான் அவன். “பிறப்பதற்கும் பணம் வேண்டும்: சாவதற்கும் பணம் வேண்டும். புத்தகம் போடவும், பிரசுரம் வெளியிடவும் பணம் வேண்டும். இந்தப் புத்தகங்களுக்கு எல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது என்பது உனக்குத் தெரியுமா?

‘இல்லை. எனக்குத் தெரியாது” என்று அமைதியுடன், எனினும் ஏதோ சந்தேக உணர்ச்சியுடன் சொன்னாள் தாய்.

“எனக்கும் தெரியாது. சரி, இன்னொரு விஷயம். இதையெல்லாம் யார் எழுதுகிறார்கள்?”

“படித்தவர்கள்.....”

“ஓஹோ, படித்த சீமான்கள்தானா? என்றான் ரீபின், அவனது தாடி வளர்ந்த முகம் திடீரெனச் சிவந்தது. “சொல்லப்போனால், இந்தச் சீமான்கள் புத்தகங்களை எழுதி அதை வெளியே பரப்பிவிடுகிறார்கள், ஆனால் அவர்கள் எழுதிய புத்தகங்களோ சீமான்களுக்கு எதிராக இருக்கின்றன. நீயே இதை யோசித்து எனக்கு விளக்கிச் சொல்லு. அவர்கள் எதற்காகத் தங்கள் பணத்தைப் பாழாக்கிப் புத்தகம் எழுத வேண்டும்? அந்தப் புத்தகங்களைக்கொண்டு சாதாரண மக்களைத் தங்களுக்கு எதிராகவே ஏன் தூண்டிவிட வேண்டும்? இல்லையா?”

தாய் படபடவென்று இமைகொட்டி பயந்து போய்க் கூச்சலிட்டாள்:

“நீ என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய்?”

“ஆஹா!” என்று கூறியவாறு அவன் ஒரு கரடியைப் போலத் திரும்பி உட்கார்ந்தான். “அப்படிச் சொல்லு நானும், உன்னைப் போலத்தான், இந்த நினைப்பு என் மனதில் பட்டதோ இல்லையோ, உடனே என் உடம்பெல்லாம் குளிர்ந்து போயிற்று! ஆமாம்.”

“ நீ என்ன, ஏதாவது புதிதாகக் கண்டுபிடித்திருக்கிறாயா?”

“ஆமாம். வெறும் ஏமாற்று!” என்றான் ரீபின். “தம்மையெல்லாம் அவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று நான் உணர்கிறேன். எனக்கு ஒன்றும் விவரம் தெரியாது. என்றாலும், இதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தை! துரோகச் செயல்! அதுதான் சங்கதி! என்னுடைய படித்த சீமான்கள் இருக்கிறார்கள். அவர்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். ஆனால் நானோ உண்மையைத்தான் நாடுகிறேன். இப்போது தான் எனக்கு உண்மை புரிந்தது. இனி நான் இந்தச் சீமான்களைப் பின்பற்றவே மாட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது, இவர்கள் என்னைக் கீழே தள்ளி, என் எலும்புகளை ஒரு பாலம் மாதிரி உபயோகித்து அதன் மீது நடந்து சென்றுவிடுவார்கள்....”

அவனது வார்த்தைகள் தாயின் உள்ளத்தை ஒரு பாப சிந்தையைப் போல் பற்றிப் பிடித்தது.

“அட கடவுளே!” என்று வருத்தத்தோடு சொன்னாள் அவள். “பாஷாவுக்குக் கூடவா இது புரியாமல் போயிற்று! மற்றவர்கள் எல்லோருக்கும் கூடவா.....”

அவளது கண் முன்னால் : உறுதியும் நேர்மையும் நிறைந்த முகங்கள்—இகோர், நிகலாய் இலானவிச், சாஷா முதலியோரின் முகங்கள் தோன்றி மறைந்தன, அவள் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது.

“இல்லையில்லை” என்று தலையைக் குலுக்கிக்கொண்டே சொன்னாள் அவள். “என்னால் இதை நம்பமுடியாது! அவர்கள் மனச்சாட்சி உள்ளவர்கள்!" “நீ யாரைச் சொல்லுகிறாய்?” என்று ஏதோ யோசித்தவாறே கேட்டான் ரீபின்.

“அவர்கள் எல்லோரையும்தான், நான் கண்டறிந்த அத்தனை பேரையும்தான்!”

“அம்மா, நீ இன்னும் சரியாகப் பார்க்கவில்லை. இன்னும் எட்டிப் பார்க்க வேண்டும்” என்று தலையைத் தொங்க விட்டுக்கொண்டே சொன்னான் ரீபின். “நம்மோடு சேர்ந்து உழைக்கிறார்களே. அவர்களுக்கே இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம், அவர்கள் நம்புகிறார்கள். தாங்கள் நம்பிக்கொண்டிருப்பதே உண்மை என்கிறார்கள். ஆமாம், அது அப்படித்தான், ஆனால் அவர்களுக்குப் பின்னால் மற்றவர்கள் நிற்கலாம்; தங்கள் சுயநலத்தையே பெரிதாக மதிக்கும் மனிதர்கள் நிற்கலாம். ஒரு மனிதன் தனக்குத்தானே எதிராக வேலை செய்வானா?”

பிறகு அவன் ஒரு விவசாயியின் கடுமையான நம்பிக்கையோடு பேசினான்.

“ இந்தப் படித்த சீமான்களால் எந்த நன்மையும் என்றுமே விளையப் போவதில்லை.”

“நீ என்ன செய்வதாக நினைத்திருக்கிறாய்?” என்று மீண்டும் சந்தேக வயப்பட்டவளாய்க் கேட்டாள் தாய்.

“நானா?” என்று அவளைப் பார்த்துக் கூறிவிட்டு மௌனமானான் ரீபின். பிறகு சொன்னான். “இந்தச் சீமான்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. அதுதான் சங்கதி!”

மீண்டும் அவன் சோர்ந்து குன்றி, மௌனமானான். “நான் இந்தத் தோழர்களோடு சேர்ந்து உழைக்க விரும்பினேன், அந்த மாதிரி வேலைக்கு நான் லாய்க்குத்தான், மக்களிடம் என்ன சொல்ல வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்போதோ நான் விலகிச் செல்கிறேன். எனக்கு நம்பிக்கை அற்றுவிட்டது. எனவே நான் போகத்தான் வேண்டும்.

அவன் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

“கிராமங்களுக்கும் நாட்டுப் புறங்களுக்கும் போகப் போகிறேன்; போய், அங்குள்ள சாதாரண எளிய மக்களைத் தூண்டிவிடப் போகிறேன். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அவர்களே வழிதேடி முனையவேண்டும், அவர்களுக்கு உண்மை புரிந்துவிட்டால், தங்கள் வழியைத் தாமே கண்டுகொள்வார்கள். அவர்களுக்கு உண்மையைப் புரிய வைப்பதுதான் என் வேலை. அவர்கள் தம்மைத் தாமே நம்பவேண்டும். அவர்களுக்கு உதவுவதெல்லாம் அவர்களது சொந்த அறிவுதான் ஆமாம்!”

அவள் அந்த மனிதனுக்காக அனுதாபப்பட்டாள்; அவன் போக்கைக் கண்டு அஞ்சவும் செய்தாள். எப்போதுமே அவள் மனதுக்குப் பிடிக்காதிருந்த ரீபின். இப்போது, ஏதோ ஒரு புரியாத காரணத்தால், அவள் அன்புக்கு உரியவனாகத் தோன்றினான். எனவே அவள் அவனிடம் மிருதுவாகச் சொன்னாள்.

“அவர்கள் உன்னை பிடித்துக்கொண்டுபோய் விடுவார்கள்...” ரீபின் அவளை ஏறிட்டுப் பார்த்தான்;

“அவர்கள் என்னைக் கைது செய்வார்கள்; பிறகு விட்டுவிடுவார்கள். அதன்பின் நான் என் வேலையை மீண்டும் தொடங்குவேன்!”

“முஜீக்குகளே[1] உன்னைக் கட்டிப்போட்டு விடுவார்கள். சிறையில் தள்ளுவார்கள்.

“நான் சிறைவாசம் அனுபவிப்பேன்; பிற்கு வெளியேயும் வருவேன், மீண்டும் என் வேலையையே தொடங்குவேன். முஜீக்குகள் என்னை மீண்டும் ஒருமுறை, இருமுறை, பலமுறை கட்டிப்பிடித்துச் சிறைக்கு அனுப்புவார்கள். அதன் பிறகுதான் என்னைக் கட்டிப்போடத் தயங்கி நின்று, நான் சொல்வதை அவர்கள் காதில் வாங்குவார்கள்; உணரத் தொடங்குவார்கள், “என்னை நம்பவேண்டாம் ஆனால் நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்” என்பேன் நான். அவர்கள் கேட்கமட்டும் தொடங்கிவிட்டால், அப்புறம் என்னை நம்பவும் தொடங்குவார்கள்.”

அவன் மிகவும் மெதுவாகவே பேசினான்; ஒவ்வொரு வார்த்தையையும் எடை போட்டுத் தரம்பார்த்து நிதானமாகப் பிரயோகிப்பது மாதிரி தோன்றியது.

“அண்மையில் நான் நிறையக் கேள்விப்பட்டேன். ஏதோ கொஞ்சம் புரிந்துகொண்டேன்....”

“மிகயீல், இவானிவிச் இத்துடன் நீ முடிந்து தொலையட்போகிறாய்” என்று தலையை வருத்தத்தோடு அசைத்துக் கொண்டு சொன்னாள் தாய். அவன் தனது ஆழ்ந்த கரிய கண்களால் எதையோ வினவுவது போலவும் எதிர்பார்ப்பது போலவும் அவளைப் பார்த்தான். அவனது பலம் பொருந்திய உடம்பு முன்புறமாகக் குனிந்தது. அவனது கைகள் நாற்காலியை இறுகப் பற்றின. அவனது பழுப்பு முகம் தாடிக்குள்ளாக வெளிறியதாய்த் தெரிந்தது.

“கிறிஸ்து நாதர் விதையைப்பற்றிச் சொன்ன விஷயத்தை எண்ணிப் பார். விதையை உற்பத்தி பண்ணுவதற்காக பழைய விதை செத்துத்தான் ஆகவேண்டும். ஆனால் எனக்கு மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் வந்துவிடாது. நான் ஒரு சாமர்த்தியமான கிழட்டுக் குள்ளநரிப் பிறவி!”

அவன் நிலை கொள்ளாமல் அசைந்து கொடுத்தான்: பிறகு நிதானமாக நாற்காலியை விட்டு எழுந்தான்.

“நான் சாராயக்கடைக்குச் சென்று அங்குள்ளவர்களோடு சிறிது நேரம் பொழுது போக்குவேன், அந்த ஹஹோல் இன்னும் வருகிற வழியாய்க் காணோம். அவன் தன் பழைய வேலைக்குக் கிளம்பிவிட்டான் போலிருக்கிறது.”

“ஆமாம்” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள் தாய்.

“நல்லது, நீ அவனிடம் என்னைப்பற்றிச் சொல்லு.....”

அவர்கள் இருவரும் ஒருவர் பக்கம் ஒருவராக ஒன்றாகவே சமையற்கட்டுக்குப் போனார்கள். ஒருவரையொருவர் முகம் கொடுத்துப் பார்க்காமலே ஏதேதோ பேசிக்கொண்டார்கள்.

“சரி, நான் வருகிறேன்.”

“போய்வா, நீ தொழிற்சாலை வேலைக்கு எப்போது கணக்குக் கொடுக்கப் போகிறாய்?”

“ஏற்கெனவே கொடுத்தாயிற்று”. “எப்போது போகிறாய்?” “நாளைக்கு அதிகாலையில் சரி வருகிறேன்’

போகவே மனமற்றவனைப்போல் அவன் தயங்கித் தயங்கித் தடுமாறி வாசல் நடையைக் கடந்தான். ஒரு நிமிஷநேரம் அவனது ஆழ்ந்த காலடியோசையைக் காதில் வாங்கியவாறே வாசலில் நின்றாள் தாய். அதே சமயம் அவளது இதயத்தின் சந்தேகங்களும் அவள் காதில் ஒலி செய்துகொண்டிருந்தன. அவள் அமைதியாகத் திரும்பி அடுத்த அறைக்குள் வந்தாள்; ஜன்னல் திரையைத் தூக்கிக் கட்டினாள். ஜன்னலுக்கு வெளியே இருள் அசைவற்ற மோன சமாதியில் ஆழ்ந்து கிடந்தது. “நான் இருளிலே வாழ்கிறேன்” என்று அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்,

அந்தப் பலமும் திடமும் நிறைந்த கௌரவமான அந்த முஜீக்குக்காக அவள் வருத்தப்பட்டாள், அனுதாப்பட்டாள்.

அந்திரேய் ஒரே குதூகலத்தோடு திரும்பி வந்தான்.

தாய் அவனிடம் ரீபனைப்பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டுவிட்டு அவன் சொன்னான். “போனால் போகட்டும், கிராமங்கள் தோறும் அலைந்து திரிந்து நியாயத்தைப் பற்றி அவன் கூச்சல் போடட்டும்; அங்குள்ள மக்களை அவன் தட்டியெழுப்பட்டும், நம்மோடு ஒத்துழைப்பதென்பது அவனுக்குச் கொஞ்சம் சிரமம்தான். முஜீக்கின் கருத்துக்கள் தான் அவன் மூளை நிறைய இருக்கின்றன. நம்முடைய கருத்துக்கள் அவன் மண்டையில் ஏறாது. அதற்கு இடமும் கிடையாது.”

“அவன் படித்த சீமான்களைப்பற்றிப் பேசினான். அவன் சொன்னதில் ஏதோ கொஞ்சம் உண்மையிருப்பது போலத்தான் தெரிகிறது” என்று மிகவும் பதனமாகச் சொன்னாள் தாய். “அவர்கள் உங்களை ஏமாற்றிவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!”

“அம்மா, அவர்கள் உங்களை ஏமாற்றிக் கெடுக்கப் பார்க்கிறார்கள்” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல், “அம்மா, நம்மிடம் பணம் மட்டும் இருந்தால்!...... இன்னும் நாம் பிறர் தரும் பணத்தைக் கொண்டுதான் நம் காரியங்களைச் செய்கிறோம். உதாரணமாக, நிகலாய் இவானவிச்சுக்கு எழுபத்தைந்து ரூபிள்கள் மாதச் சம்பளம்; அதில் அவன் நமக்கு ஐம்பது ரூபிள்களை நன்கொடையாகத் தருகிறான். அவன் மாதிரிதான் மற்றவர்களும் அரைப்பட்டினி கால்பட்டினியாகக் கிடந்து படிக்கும் கல்லூரி மாணவர்கள்கூட, காலும் அரையுமாக வசூலித்த காசுகளை நமக்கு நன்கொடையாக அனுப்பிவைக்கிறார்கள். சொல்லப்போனால், சீமான்களில் எத்தனையோ ரகம்; சிலர் விட்டுப்பிரிவார்கள்; சிலர் ஏமாற்றுவார்கள், அவர்களில் மிகவும் நல்லவர்கள்தான் நம்முடனே சேர்ந்து நமது கொள்கைக்காகப் பாடுபடுவார்கள்.....”

அவன் தன் இரு கைகளையும் தட்டிக்கொண்டு ஆர்வத்தோடு பேச ஆரம்பித்தான்.

“நம்முடைய இறுதி வெற்றிக்கு நாம் எவ்வளவோ தூரம் போயாக வேண்டும். எனினும் மேதின விழாவைச் சிறிய அளவிலாவது கொண்டாடுவோம். மகிழ்ச்சியாயிருக்கும்.” ரீபினுடைய பேச்சினால் தாயின் உள்ளத்தில் ஏற்பட்டிருந்த கவலை அவனது உற்சாகத்தினால் துடைத்தெறியப்பட்டது. அந்த ஹஹோல் தன் தலைமயிரைக் கலைத்துக் கோதியபடி, தரையையே பார்த்தவாறு மேலும் கீழும் நடந்தான்.

“சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது. தெரியுமா. உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும். அவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே நெருப்பாய் எரிவார்கள், அவர்கள் அனைவரும் நல்லவர்களாகவும், குதூகலமும் அன்பும் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். வாய்ப் பேச்சின் உதவியின்றியே ஒருவரையொருவர் புரிந்துகொள்வார்கள். அவர்கள் கோஷ்டி கானமாய் வாழ்ந்துகொண்டிருப்பார்கள். எனினும் ஒவ்வொருவரின் இதயமும் அவரவர் பாட்டைப் பாடிக் கொண்டிருக்கும். அந்த கீத நாதமெல்லாம் சிற்றாறுகளைப்போல் ஒரே ஜீவநதியில் சங்கமமாகும். அந்த ஜீவநதி விரிந்து பெருகி சுதந்திர வேகத்துடன் செல்லும்; இறுதியாக, புதிய வாழ்க்கை என்னும் சந்தோஷ சாகரத்தோடு கலந்து சங்கமித்து ஒன்றாகிவிடும்!”

தாய் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். தான் லேசாக அசைந்து கொடுத்தாலும் அவனது சிந்தனையோ போசோ அறுபட்டு நின்றுபோகக்கூடும் என அவள் அஞ்சினாள். அவள் எப்போதுமே மற்றவர்களைவிட அவனையே மிகவும் கூர்ந்து கவனித்துக் கேட்பாள்: அவனும் மற்றவர்களைப் போலல்லாது, எளிய சாதாரண வார்த்தைகளையே உபயோகித்துப் பேசுவான். எனவே அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அவளது இதயத்துக்குள் நேராகச் சென்று புகுந்து பதிந்துவிடும். எதிர்காலக் கனவில் எண்ணத்தையும், கற்பனையையும் பற்றி பாவெல் எப்போதுமே பேசுவதில்லை. ஆனால் ஹஹோலோ எப்போதுமே அந்த எதிர்காலக் கனவில் இன்ப உலகிலேயே வாழ்ந்து கொண்டிருப்பது போலத்தான் தோன்றும் அவன் பேச்சுக்களெல்லாம்... இந்தப் பூலோக மாந்தர் அனைவருக்கும் வரப்போகும் புதிய வாழ்வையும் புதிய மகிழ்ச்சியையும் பற்றியதாகவே இருக்கும். இந்தப் பேச்சுக்கள்தான். தாய்க்குத் தன் வாழ்க்கையின் அர்த்தத்தையும், தன் மகன் எடுத்துக்கொண்டுள்ள வேலையின் நோக்கத்தையும், அனைத்துத் தோழர்களின் சேவையின் காரணத்தையும் விளங்கச் செய்யும்.

“இந்தக் கனவிலிருந்து விடுபட்டு உணர்ச்சி பெறும் போது...” என்று தன் தலையை உலுப்பிவிட்டுப் பேசத் தொடங்கினான் ஹஹோல். “சுற்றுமுற்றும் பார்த்தால், எல்லாமே விறைத்துப்போய், அசிங்கமாய்த் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் களைத்துச் சோர்ந்து எரிந்து விழுகிறார்கள்.....”

அவன் மேலும் துக்கம் தோய்ந்த குரலில் பேசத் தொடங்கினான்”

“மனிதனை நம்பக்கூடாது என்பதும், அவனிடம் பயப்படவேண்டும்: அவனை வெறுக்கக் கூட வேண்டும் என்பதும் கேவலமான விஷயமே. ஆனால் அது அப்படித்தான். ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. நீ மனிதனை நேசிக்க மட்டுமே விரும்பலாம். ஆனால் அது எப்படி முடியும்? உன் மனத்திலே உருவாகி உயிர் பெற்றுத் துடிக்கும் புதிய இதயத்தைக் காணாமல் உன் முகத்திலேயே ஒங்கி அறைவதற்காக, உன்மீது காட்டு மிருகம் மாதிரிச் சாடியோடிவரும் மனிதனை நீ எப்படி மன்னிக்க முடியும்? அதை உன்னாலே மன்னிக்கவே முடியாது. அதற்குக் காரணம் உனது தற்காப்புச் சிந்தை அல்ல. உன்னால் எதையுமே தாங்கிக் கொள்ளக்கூட முடியலாம். ஆனால், அப்படி அறைவதை நீ ஒப்புக்கொண்டு விடுவதாக அவர்கள் நினைக்கும்படி நீ விட்டுவிடமாட்டாய். மற்றவர்களை எப்படி அடித்து நொறுக்குவது என்பதற்குப் பழக்கப்படுத்திக்கொள்ள நீ உன் முதுகைக் குனிந்து கொடுத்து அவர்களை அடிக்க விட்டுவிடுவாயா? ஒரு நாளும் உன்னால் அப்படி விட்டுக் கொடுக்க முடியாது.”

அவனது கண்களில் உணர்ச்சியற்ற நெருப்பு கனல்வது போலிருந்தது; அவனது தலை பலமாகக் குனிந்து போயிருந்தது. அவன் மேலும் உறுதியோடு பேச ஆரம்பித்தான்;

“எந்தத் தவறானாலும் சரி, அது என்னைப் பாதித்தாலும் பாதிக்காவிட்டாலும் சரி, அதை மன்னித்து விட்டுக்கொடுக்க எனக்கு உரிமை கிடையாது. இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர்வாழவில்லை. இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கிழைப்பதை நான் விட்டுக்கொடுத்துவிடலாம்; அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால், அதைக்கண்டு நான் சிரிக்கலாம்; அது என்னைச் சீண்டுவதில்லை. ஆனால், நாளைக்கோ என்மீது பலப்பரீட்சை செய்து பழகிய காரணத்தால், வேறொருவனின் முதுகுத் தோலையும் உரிக்க அவன் முனையலாம். ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது. மிகவும் ஜாக்கிரதையாக, நெஞ்சிளக்கமற்று ஆட்களை எடைபோட வேண்டும்; பொறுக்கியெடுக்க வேண்டும். “இவன் நம் ஆள் இவன் வேறு” என்று தீர்மானிக்க வேண்டும். இதெல்லாம் உண்மைதான். ஆனால், இது மட்டும் ஆறுதல் தராது.” என்ன காரணத்தினாலோ சாஷாவைப்பற்றியும் அந்த மஞ்சள் மூஞ்சி அதிகாரியைப்பற்றியும் நினைத்துப் பார்த்தாள் தாய்.

“ஆமாம். உமியும் தவிடுமாக மாவிருந்தால் ரொட்டி எப்படிச் சுடுவது?” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“அதுதான் இதிலுள்ள சங்கடம்!” என்றான் ஹஹோல்,

“ஆமாம்” என்றாள் தாய். அவளது நினைவில் அவளது கணவனின் உருவம் தோன்றியது: பாசியும் பச்சையும் படர்ந்து மூடிய பாறாங்கல்லைப்போல் உணர்ச்சியற்றுப்போன தடித்த சொரூபியான கணவனின் உருவம் நிழலிட்டது. அதே வேளையில் அவள் வேறொன்றையும் கற்பனை செய்து பார்த்தாள். நதாஷாவை ஹஹோலும் சாஷாவை பாவெலும் மணந்துகொண்டால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தாள்.

“சரி, இதெல்லாம் இப்படியிருக்கக் காரணம் என்ன?” என்று மீண்டும் தன் பேச்சில் சூடுபிடிக்கப் பேச ஆரம்பித்தான் ஹஹோல். “உன் முகத்தில் மூக்கு இருப்பது எவ்வளவு தெளிவாயிருக்கிறதோ, அவ்வளவு தெளிவானது இது. மக்கள் அனைவரும் ஒரே சமநிலையில் இல்லாதிருப்பதுதான் இதற்கெல்லாம் மூலகாரணம், நாம் இந்த ஏற்ற இறக்கத்தைத் தட்டி நொறுக்கி சமதளப்படுத்துவோம். மனித சிந்தனையும், மனித உழைப்பும் சாதித்து வெற்றி கண்ட சகல பொருள்களையும் நாம் நமக்குள் பங்கிட்டுக் கொள்வோம். பயத்துக்கும் பொறாமைக்கும் மக்கள் அடிமையாகாமல், பேராசைக்கும் முட்டாள் தனத்துக்கும் ஆளாகாமல் நாம் அவர்களைக் காப்பாற்றுவோம்....”

இதன் பிறகு அவர்கள் அதே மாதிரிப் பல பேச்சுக்களைப் பேசிக்கொண்டார்கள்.

அந்திரேயை மீண்டும் தொழிற்சாலையில் வேலைக்கு எடுத்துக்கொண்டுவிட்டார்கள். அவன் தன் சம்பளத்தையெல்லாம் தாயிடமே கொடுத்துவிட்டான், அவளும் எந்தவிதக் கூச்சமோ தயக்கமோ இன்றி பாவெலிடமிருந்து பெறுவது போலவே சாதாரணமாக அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டாள்,

சமயங்களில் தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அந்திரேய் தாயைப் பார்த்துச் சொல்லுவான்;

“என்ன அம்மா, கொஞ்சம் பாடம் படிப்போமா?’

அவள் சிரிப்பாள்; கண்டிப்பாக படிக்க மறுப்பாள். அவனது கண்ணின் குறும்புத்தனம் அவளைத் துன்புறுத்திவிடும். 'நான் பாடம் படிப்பது உனக்கு ஒரு வேடிக்கையாயிருந்தால் என்னை ஏன் நீ படிக்கச் சொல்கிறாய்?’ என்று அவள் தனக்குள்ளாகவே நினைத்துக்கொள்வாள்.

ஆனால் எத்தனை எத்தனையோ முறை அவள் அவனை நெருங்கி ஏதாவது ஒரு அரும்பதத்துக்கு அர்த்தம் கேட்பாள். அப்படிக் கேட்கும்போது அவள் தன் பார்வையையும் வேறுபுறமாகத் திருப்பிக் கொள்வாள். கேட்கின்ற பாவனையிலும், தான் அதிக அக்கறை கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ளமாட்டாள், என்றாலும் அவள் இரகசியமாய்க் கல்வி கற்று வருகிறாள் என்பதை அவன் ஊகித்துக்கொள்வான். அவளது அடக்கமான குணத்தைக் கண்டு வியந்து. அவளைப் பாடம் படிக்குமாறு கேட்டுக்கொள்வதை நிறுத்திக்கொண்டுவிட்டான்.

“என் கண்கள் வரவர மோசமாகி வருகின்றன. அந்திரியூஷா! எனக்கு ஒரு கண்ணாடி வேண்டும்” என்று அவள் அவனிடம் ஒருநாள் சொன்னாள்.

“அதற்கென்ன? போட்டால் போகிறது” என்றான் அவன்” ஞாயிற்றுக்கிழமையன்று நகரிலுள்ள டாக்டரிடம் அழைத்துப் போகிறேன், கண்ணாடியும் வாங்கிக்கொள்வோம்.

குறிப்பு

தொகு
  1. முஜீக்–ருஷ்ய விவசாயி. பொதுவாக ஆண்களைச் சற்று இளக்காரமாகக் குறிப்பதற்கும் வழங்கும் சொல்.—மொ-ர்.
"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/18&oldid=1293060" இலிருந்து மீள்விக்கப்பட்டது