19

பாவெலைப் பார்க்க அனுமதி கோரி அவள் மூன்றுமுறை சிறைக்குச் சென்றாள். பெரிய மூக்கும், சிவந்த கன்னங்களும் நரைத்த தலையும் கொண்ட போலீஸ்காரர்களின் ஜெனரல் ஒருவன் அங்கிருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் அவளிடம் இதமாகப்பேசி, அனுமதி தரவே மறுத்துவிட்டான்.

“அம்மா., நீ இன்னும் ஒருவார காலமாவது பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஒருவாரம் கழியட்டும். அப்புறம் பார்க்கலாம். ஆனால் இப்போது மட்டும் அது முடியாத காரியம்” என்பான்.

அவன் உருண்டு திரண்டு கொழுத்துப்போய் இருந்தான்: பழுத்து அதிக நாளாகி, பூஞ்சைக் காளான் படர்ந்துபோன காட்டிலந்தைப் பழத்தைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான். அவன் எப்போதும் ஒரு சிறு மஞ்சள் நிறமான ஈர்க் குச்சியால் தனது சின்னஞ் சிறிதான வெள்ளைநிற உளிப்பற்களைக் குத்திக் கொண்டிருந்தான். அவனது சின்னங்சிறு பசிய கண்கள் அன்பு ததும்பச் சிரித்தன. அவன் எப்போதுமே நட்போடு பேசினான். "அவன் மிகவும் அடக்கமானவன்” என்று அவள் ஹஹோலிடம் சொன்னாள்; “எப்போதும் சிரித்த முகத்தோடேயே இருக்கிறான்.....”

“ஆமாம்!” என்றான் ஹஹோல்: “அவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். அவர்கள் மரியாதை தவறமாட்டார்கள்.

சிரித்த முகத்தோடேயே பேசுவார்கள்; ஆமாம்! ‘இதோ ஒரு கண்ணியமான யோக்கியமான புத்தி நிறைந்த மனிதன் இருக்கிறான்; இவன் ஒரு பயங்கரமான ஆசாமி என நாங்கள் நினைக்கிறோம். எனவே, உங்களுக்குச் சிரமமில்லாவிட்டால், இவனை வெறுமனே தூக்கில் போட்டுவிடுங்கள்! போதும் என்று அவர்கள் சொல்வார்கள். அப்புறம் அவர்கள் சிரித்துக் கொண்டே அவனைத் தூக்கிலும் போட்டு விடுவார்கள். போட்ட பிறகும் சிரித்துக்கொண்டே இருப்பார்கள்’.

“ஆனால் இங்கே சோதனைபோட வந்தானே ஒருத்தன். அவன் வேறு மாதிரிப் பேர்வழி. அவன் ஒரு பன்றிப் பிறவி என்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்துகொள்ளலாம்’ என்று சொன்னாள் தாய்.

“அவர்களில் யாருமே மனிதப் பிறவிகள் அல்ல. அவர்கள் மக்களைச் செவிடாக்கும் சம்மட்டிகள்தான் அந்தப் பிறவிகள். நம்மை மாதிரி, ஆட்களையெல்லாம் மட்டம் தட்டி, சீர்படுத்தி, கையாள்வதற்குச் சுலபமானவர்களாக நம்மை மாற்ற முனையும் கருவிகள் தான் அவர்கள். அவர்கள் நம்மை அதிகாரம் செய்யும் மேலிடத்தின் கைக் கருவிகளாக ஏற்கெனவே தம்மை மாற்றிக்கொண்டு விட்டவர்கள். தங்களுக்கு இட்ட எந்த ஆணையையும் எந்தவித முன்பின் யோசனையுமின்றி உடனே நிறைவேற்றி வைத்துவிடுவார்கள்’

கடைசியாக ஒரு நாள் அவளுக்குத் தன் மகனைப் பார்ப்பதற்கு அனுமதி கிடைத்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று சிறைச்சாலை ஆபிஸில் ஒரு மூலையில் அவன் மிகவும் பணிவோடு அடங்கி ஒடுங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அட்டும் அழுக்கும் நிறைந்த அந்தத் தாழ்ந்த கூரை கொண்ட அறைக்குள்ளே வேறு பலரும் இருந்தார்கள். அவர்களும் கைதிகளைப் பார்ப்பதற்காகக் காத்துக் கிடப்பவர்கள்தான். அவர்கள் அங்கு அப்படிக் காத்துக் கிடப்பது அதுவே முதல் தடவை அல்லவாதலால். அங்குள்ள மனிதர்கள் நாளாவட்டத்தில் ஒருவருக்கொருவர் பழகிக்கொண்டுவிட்டார்கள்; எனவே சிலந்தி வலை பின்னுவதைப்போல அவர்கள் அமைதியாக ஒருவருக்கொருவர்பேசிக் கொண்டிருந்தார்கள்.

மடியிலே ஒரு ஜோல்னாப்பையோடு உட்கார்ந்திருந்த தொளதொளத்த முகம்படைத்த ஒரு தடித்த பெண்பிள்ளைபேசத் தொடங்கினாள்; “உங்களுக்குச் சங்கதி தெரியுமா? இன்றைக்குக் காலையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்தபோது பாதிரியார் ஞானப்பாடல் பாடுகின்ற பையன் ஒருவனின் காதைத் திருகினாராம்!”

“அந்தப் பையன்களும் சுத்தப் போக்கிரிப் பயல்கள்!” என்று ஒரு வயதான கனவான் பதில் சொன்னார். அவர் உடுத்தியிருந்த உடையைப் பார்த்தால் அவர் யாரோ ஒய்வுபெற்ற ராணுவ அதிகாரி மாதிரி இருந்தது.

குட்டைக் கால்களும், நெட்டைக் கைகளும், துருத்தி நீண்ட மோவாயும் வழுக்கைத் தலையும் கொண்ட சித்திரக் குள்ளப் பிறவியான ஒரு மனிதன், அந்த அறைக்குள் நிலைகொள்ளாமல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். இடையிடையே உடைந்து கரகரத்த குரலில் ஏதேதோ உத்வேகத்தோடு பேசிக்கொண்டான்;

‘விலைவாசியோ விஷம் போல் ஏறிக்கொண்டே இருக்கிறது. மனிதர்களோ வரவர மோசமாகிக் கொண்டே வருகிறார்கள். இரண்டாம் தரமான மாட்டுக் கறியின் விலைகூட பவுண்டுக்கு பதினான்கு கோபெக்காம்! ரொட்டி விலையோ இரண்டரைக் கோபெக்குக்கு ஏறிப்போய்விட்டது.....”

இடையிடையே கைதிகள் வந்து, போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக சாம்பல் நிறமான ஆடையும் கனமான தோல் செருப்புகளும் அணிந்திருந்தார்கள், மங்கிய ஒளி நிறைந்த அந்த அறைக்குள்ளே நுழைந்தவுடன் அவர்கள் திருக திருக விழித்தார்கள், அவர்களில் ஒருவனுக்கு காலில் விலங்குகள் பூட்டப்பட்டிருந்தன.

சிறையின் சகல சூழ்நிலையுமே விபரிதமான அமைதியுடனும், விரும்பத்தகாத எளிமையுடனும் இருந்தது. தங்களது நிர்க்கதியான நிலைமையை அவர்கள் வெகுகாலத்துக்கு முன்பே ஏற்றுப் பழகி மரத்துப் போய்விட்டவர் போலவே தோன்றினர். சிலர் தங்கள் சிறைத்தண்டனையைப் பொறுமையோடு அனுபவித்தார்கள். சிலர் உற்சாகமே அற்று சோம்பியுறங்கிக் காத்து நின்றார்கள். இன்னும் சிலர் ஒழுங்காக வந்திருந்து உற்சாகமோ விருப்பமோ அற்று, கைதிகளைப் பார்வையிட்டுக் கொண்டு சென்றார்கள். தாயின் உள்ளமோ பொறுமையிழந்து துடித்துத் தவித்தது. அவள் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலையை எதுவுமே புரியாமல் பார்த்துக் கொண்டாள். அங்கு நிலவிய சோகமயமான எளிமையைக் கண்டு வியந்தாள். அவளுக்குப் பக்கத்தில் சுருங்கிய முகமும். இளமைத்ததும்பும் கண்களும் கொண்ட முதியவள் ஒருத்தி இருந்தாள். அவள் தனது மெலிந்த கழுத்தைத் திருப்பி, பிறர் பேசிக் கொள்வதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்டாள். கண்கள் படபடக்க அவள் ஒவ்வொருவரையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?’ என்று பெலகேயா அவளை நோக்கி மெதுவாய்க் கேட்டாள்.

“என் மகனை! அவன் ஒரு கல்லூரி மாணவன்” என்று உரக்கப் பதில் அளித்தாள் அந்தக் கிழவி, “நீங்கள்?”

‘மகனைத்தான். அவன் ஒரு தொழிலாளி.”

“அவன் பேரென்ன’

“பாவெல் விலாசல்’

‘கேள்விப்பட்டதே இல்லை. உள்ளே வந்து ரொம்ப காலமாகிறதோ?”

“சுமார் ஏழு வாரமிருக்கும்.’

‘என் மகன்—அவன் வந்து பத்து மாசமும் முடியப் போகிறது’ என்றாள் அந்த முதியவள். அவளது குரலில் ஏதோ ஒரு பெருமிதம் தொனிப்பதாக பெலகேயாவுக்குத் தோன்றியது.

“ஆமாம். ஆமாம்” என்று அந்த வழுக்கைத் தலைக் கிழவள் சளசளக்கத் தொடங்கினான். ‘மனிதர்களுக்குப் பொறுமையே போய்விட்டது. எல்லோரும் எரிந்து பேசுகிறார்கள். ஒவ்வொருவரும் சத்தம் போடுகிறார்கள். விலைவாசியோ மேலே மேலே போகிறது. ஜனங்களோ, அதற்குத் தக்கபடி நாளுக்கு நாள் நலிந்து வருகிறார்கள். இதற்கு ஒரு முடிவு கால எவனுமே முன்வரக் காணோம்!”

“நீங்கள் சொல்வது ரொம்ப சரி’ என்றான் அந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி; “ஒழுங்கீனம்!” கடைசி கடைசியாக ‘போதும் நிறுத்து’ என்று கத்தத்தான் வேண்டும். அந்தக்குரல். அந்தச் சக்திவாய்ந்த குரல்தான் இன்று நமக்குத் தேவை....”

ஒவ்வொருவரும் இந்த சம்பாஷணையில் கலந்து கொண்டார்கள். அவர்களது பேச்சு உயிர்பெற்று ஒலித்தது. எல்லோரும் வாழ்க்கையைப் பற்றிய தம் அபிப்பிராயத்தைச் சொல்ல வேண்டுமென்பதில் பேரார்வம் காட்டினார்கள், எனினும் அவர்கள் அனைவருமே தணிந்த குரலில்தான் பேசிக்கொண்டார்கள். அவர்கள் பேசிக்கொண்டது அனைத்தும் தனது கருத்துக்களுக்கு முற்றிலும் மாறுபட்டவை என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். வீட்டில் இருந்தவர்கள் அந்த மனிதர்களைவிட எவ்வளவு உரித்தும் தெளிவாகவும் எளிதாகவும் பேசிக்கொள்வார்கள்:...

சதுரமாய்க் கத்தரித்துவிடப்பெற்ற சிவந்த தாடியோடு கூடிய ஒரு கொழுத்த சிறையதிகாரி வந்தான். அவளது பேரைச் சொல்லிக் கூப்பிட்டான். அவளை அவன் ஏற இறங்கப் பார்த்தான். பிறகு கெந்திக்கெந்தி நடந்துகொண்டே சொன்னான்:

“என் பின்னால் வா.’

அந்தச் சிறையதிகாரி முதுகைப் பிடித்துத் தள்ளி அவனைச் சீக்கிரம் முன்னேறி’ நடக்கச் செய்யவேண்டும் போலிருந்தது அவளுக்கு.

பாவெல் ஒரு சின்ன அறையில் முகத்தில் புன்னகை தவழ கைகளை நீட்டியவாறே நின்றான். அவள் அவன் கையைச் செல்லமாகப் பற்றிப் பிடித்தாள்; சிறுகச் சிரித்தாள்; படபடவென்று இமைகொட்டிப் பார்த்தாள்.

“நலமா? நன்றாயிருக்கிறாயா?’ என்றாள் அவள். அவளுக்கு பேச வார்த்தையே கிடைக்கவில்லை. தடுமாறிக் குழறினாள்.

“அம்மா, நிதானப்படுத்திக்கொள். பொறு’ என்று அவளது கையைப் பற்றி பிடித்தவாறு சொன்னான் பாவெல்,

“இல்லை. நான் நன்றாய்த்தான் இருக்கிறேன்.’

‘உன் அம்மாவா!” என்று பெருமூச்சுடன் கேட்டான் சிறை அதிகாரி: பிறகு அவன் பலமாகக் கொட்டாவி விட்டுவிட்டு, “நீங்கள் இரண்டு பேரும் கொஞ்சம் விலகி விலகி நில்லுங்கள். இடையிலே கொஞ்சம் இடம் இருக்கட்டும்” என்றான்

பாவெல் அவனது ஆரோக்கியத்தைப் பற்றியும் வீட்டு விஷயங்களைப் பற்றியும் விசாரித்துக் கொண்டான். அவள் வேறுபல கேள்விகளை எதிர்பார்த்தாள். அந்தக் கேள்விகளை எதிர்நோக்கி அவன் கண்களையே வெறித்து நோக்கினாள். ஆனால் பயனில்லை. அவன் எப்போதும் போலவே அமைதியாக இருந்தான். கொஞ்சம் வெளுத்துப் போயிருந்தான். அவனது கண்கள் முன்னைவிடப் பெரிதாகி இருந்தன போலத் தோன்றின.

“சாஷா உன்னை விசாரித்தாள். தன்னை மறந்து விடவேண்டாம் எனக் கேட்டுக் கொண்டாள்’ என்றாள் தாய்.

பாவெலின் கண்ணிமைகள் துடித்தன; முகம் தளர்வற்றது அவன் புன்னகை செய்தான். தனது. இதயத்தில் திடீரென ஒரு குத்தலான வேதனை ஏற்பட்டது போல தாய் உணர்ந்தாள். "அவர்கள் உன்னைச் சீக்கிரம் விட்டுவிடுவார்கள் என்று கருதுகிறாயா?” என்று எரிச்சலோடும் துயரத்தோடும் கேட்டாள் அவள். ‘எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள். அந்தப் பிரசரங்கள் தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!” என்றாள்.

பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன.

“உண்மையாகவா?'என்று உடனே கேட்டான்.

“ஏய்! இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் இங்கே பேசக்கூடாது. உங்கள் குடும்ப விஷயம் ஒன்றை மட்டும்தான் நீங்கள் பேசலாம்” என்று தூங்கி வழியும் குரலில் சொன்னான் சிறையதிகாரி,

“இது குடும்ப விஷயமில்லையா?’ என்று எதிர்த்துக் கேட்டாள் தாய்.

“இதற்குப் பதில் ஒன்றும் சொல்ல முடியாது. அதை இங்குப் பேசக்கூடாது. அவ்வளவுதான்” என்று அலட்சியமாகச் சொன்னான் அவன்.

‘சரி, நீ வீட்டு விஷயங்களையே சொல்’ என்றான் பாவெல், “நீ எண்ண பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”

அவள் தனது கண்களில் இளமையில் குறுகுறுப்பு பளிச்சிட்டு மின்ன, அவனுக்குப் பதில் சொன்னாள்.

“நானா? நான்தான் அந்தச் சாமான்களையெல்லாம் தொழிற்சாலைக்கு கொண்டுபோய்க் கொடுக்கிறேன்....”

அவள் பேச்சை நிறுத்தினாள். பிறகு சிறு சிரிப்புடன் மீண்டும் பேசினாள்.

“முட்டைகோஸ், சூப்பு, சேமியா—இந்த மாதிரி சாமான்களையெல்லாம் மரியா செய்து தருகிறாள். மற்ற சரக்குகளும்....”

பாவெல் புரிந்து கொண்டுவிட்டான்; அவன் தன் கையால் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பொங்கிவந்த சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டான்.

“பரவாயில்லை. நீ சும்மா இராமல் சுறுசுறுப்போடு வேலை செய்வதற்கு இது ஒரு அருமையான உத்தியோகம்தான். அப்படியென்றால் உனக்குத் தனியாயிருக்கவே நேரமிராதே” என்று அவன் அன்பு ததும்பச் சொன்னான். அந்தப் பரிவு நிறைந்த குரலை அவள் அவள் அதற்குமுன் அவனிடம் கேட்டதே இல்லை. "அந்தப் பிரசுரங்கள் மீண்டும் தலைகாட்டியவுடன், அவர்கள் என்னைக்கூடச் சோதனை போட்டுவிட்டார்கள்” என்று கொஞ்சம் தற்பெருமையுடனேயே அவள் சொல்லிக் கொண்டாள்.

“ஏய்! மீண்டும் அதையா பேசுகிறாய்?” சினந்து போய்ச் சொன்னான் சிறை அதிகாரி. “அதைத்தான் பேசக்கூடாது என்று ஒருமுறை சொல்லிவிட்டேனே. ஒரு மனிதனை எதற்காகச் சிறையில் அடைக்கிறார்கள்? வெளியில் நடப்பது என்ன என்பது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்குத்தானே. நீயோ அதையே சொல்லிக் கொண்டிருக்கிறாய். ம்? எது எதைப் பேசக்கூடாது என்பது இன்னுமா தெரியவில்லை?”

“போதும் அம்மா” என்றான் பாவெல். ‘மத்வேய் இலானவிச் மிகவும் நல்லவர். அவரைக் கோபமூட்டுவதில் அர்த்தமே இல்லை. நாங்கள் நெருங்கிய நண்பர்கள். நீ வந்த சமயத்தில் இவர் இருந்ததே ஒரு நல்லகாலம். வழக்கமாக இவருடைய மேதிகாரிதான் இருப்பான்.”

“சரி நேரமாய்விட்டது” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்தவாறே சொன்னான் சிறையதிகாரி.

“ரொம்ப வந்தனம். அம்மா கவலைப்படாதே. என்னைச் சீக்கிரம் விடுதலை செய்துவிடுவார்கள்” என்றான் பாவெல்.

அவன் அவளை ஆர்வத்தோடு அணைத்து முத்தமிட்டான். அவனது அரவணைப்பினால் உள்ளம் நெகிழ்ந்து, ஆனந்தப் பரவசமாகி வாய்திறந்து கத்திவிட்டாள் தாய்.

“சரி போதும். புறப்படு” என்று சொன்னான் சிறையதிகாரி, பிறகு அவளை வெளியே அழைத்துவரும்போது அவளிடம் லேசாக முணுமுணுத்தான்” அழாதே, அவர்கள் அவனை விட்டுவிடுவார்கள். எல்லோரையுமே விட்டுவிடுவார்கள். வரவர, இங்கே கூட்டம்தான் பெருத்துப் போயிற்று.”

வீட்டுக்கு வந்தவுடன் அவள் ஹஹோலிடம் எல்லாவற்றையும் சொன்னாள். சொல்லும்போது அவள் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. புருவங்கள் துடிதுடித்தன.

“நான் அவனிடம் அதை எவ்வளவு சாமர்த்தியமாகச் சொன்னேன். தெரியுமா? அவன் அதைப் புரிந்துகொண்டுவிட்டான்: அவனுக்குப் புரிந்திருக்கத்தான்வேண்டும்” என்று கூறிவிட்டுப் பெருமூச்செறிந்தாள். ‘இல்லையென்றால் அவன் என்னிடம் அத்தனை அன்பு காட்டியிருக்கமாட்டான். அவன் அப்படிக் காட்டிக் கொண்டதே இல்லை.” "நீங்கள் ஒரு விசித்திரப் பிறவி, அம்மா” என்று கூறிச் சிரித்தான் ஹஹோல்: “மக்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தேவையாயிருக்கின்றன. ஆனால் ஒரு தாய்க்குத் தேவையான பொருள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான்....பாசம்!”

“இல்லை, அந்திரியூஷா? அந்த மக்களை நீங்கள் பார்த்திருக்கவேண்டும் என்று திடீரென்று ஏற்பட்ட உத்வேக உணர்ச்சியோடு பேசத் தொடங்கினாள் அவள், “அவர்களுக்கு அதெல்லாம் பழகிப்போய்விட்டது! அவர்களது பிள்ளைகளை அவர்களிடமிருந்து பிடுங்கிப் பறித்துச் சிறைக்குள்ளே தள்ளிவிட்டார்கள். என்றாலும். அவர்கள் எதுவுமே நிகழாதது மாதிரி நடந்து கொள்கிறார்கள். சும்மா வெறுமனே வந்து உட்கார்ந்து, காத்திருந்தது, ஊர் வம்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். படித்தவர்களே இந்த மாதிரி நடந்துகொண்டால், அறிவில்லாத பாமர மக்களிடம் நீ என்னத்தைத்தான் எதிர்பார்க்க முடியும்?”

‘புரிகிறது. அது இயல்புதானே?” என்று தனக்கே உரிய கேலித் தொனியில் பதிலளித்தான் ஹஹோல். ‘பார்க்கப் போனால், சட்டம் நம்மீது கடுமையாய் இருப்பதுபோல் அவர்களிடம் கடுமையாக இருப்பதில்லை. ஆனால் நம்மைவிட அவர்களுக்குத்தான் சட்டத்தின் உதவி அதிகம் தேவை. எனவே சட்டம் அவர்கள் தலையில் ஒங்கியறைந்தால், அவர்கள் சத்தம் போடுவார்கள், ஆனால் வெளிக்குத் தெரியாமல் சத்தம் போடுவார்கள்; தன் கையிலுள்ள தடியைக் கொண்டு தானே தன் தலையில் அடித்துக்கொண்டால், அந்த அடி அப்படியொன்றும் உறைக்காது. நம்மவர் அடித்தால்தான் உறைக்காது. வலிக்காது!”

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/19&oldid=1293062" இலிருந்து மீள்விக்கப்பட்டது