தாய்/31
அவன் வந்து சென்ற நாலாவது நாளன்று அவள் அவனுடைய வீட்டுக்குக் குடி போனாள். அவளது இரண்டு பெட்டிகளோடு, அவள் ஏறிச்சென்ற வண்டி அந்தத் தொழிலாளர் குடியிருப்பை விட்டு வெளிவந்து, ஊருக்குப் புறம்பேயுள்ள வெம்பரப்புக்கு வந்து சேர்ந்தது. உடனே அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எங்கே இருள் படிந்த, இடையறாத துன்பம் கலந்த வாழ்வை அவள் அனுபவித்தாளோ, எங்கே புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.
கரி படர்ந்த பூமியின்மேல் ஆகாயத்தை நோக்கி புகை போக்கிகளை உயர நீட்டிக்கொண்டு கருஞ்சிவப்புச் சிலந்தியைப் போல நின்றது தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் தொழிலாளர்களின் மாடியற்ற ஒற்றைத்தள வீடுகள் மொய்த்துச் சூழ்ந்திருந்தன. அவை சிறிதும் பெரிதுமாக நிறம் வெளிறிக் குழம்பிப் போய், சேற்றுப் பிரதேசத்தை அடுத்து நின்றன; அந்த வீடுகள் தமது ஒளியற்ற சிறுசிறு ஜன்னல்கள் மூலம் அடுத்தடுத்த வீடுகளைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அந்த வீடுகளுக்கு மேலாக, தொழிற்சாலையைப் போலவே கருஞ்சிவப்பாகத் தோன்றும். தேவாலயம் உயர்ந்து நின்றது. அதனுடைய ஊசிக் கோபுரம் புகை போக்கிகளின் உயரத்தை விட குட்டையாயிருந்தது.
பெருமூச்செறிந்துகொண்டே, தனது கழுத்தை இறுக்கி திணறச் செய்வதுபோலத் தோன்றி தனது ரவிக்கையின் காலரைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள் தாய்.
“போ இப்படி!” என்று முனகிக்கொண்டே வண்டிக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். அவன் ஒரு கோணக்கால் மனிதன். குட்டையானவன், வயதை நிதானிக்க முடியாத தோற்றமுடையவன். அவனது தலையிலும் முகத்திலும் வெளிறிய மயிர்கள் சில காணப்பட்டன, கண்களில் வர்ண ஜாலம் எதுவுமே இல்லை. அவன் வண்டிக்குப் பக்கமாக நடந்து வரும்போது அசைந்து அசைந்து நடந்தான். வலப்புறம் போவதோ. இடப்புறம் போவதோ. அவனுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று தெளிவாகத் தெரிந்தது.
“சீக்கிரம் போ” என்று உணர்ச்சியற்ற குரலில் குதிரையை விரட்டிக்கொண்டே, தனது கோணல் கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்தான்; அவனது பூட்சுகளில் சேறு ஒட்டி அப்பிக் காய்ந்து போயிருந்தது. தாய் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது இதயத்தைப் போலவே வயல்வெளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.
கொதிக்கும் மணல் வெளியில், குதிரை தலையை ஆட்டிக்கொண்டு கால்களை கனமாக ஊன்றி நடந்தது. மணல் சரசரத்தது; அந்த லொடக்கு வண்டி கிரீச்சிட்டது. வண்டிச் சக்கரத்தால் ஏற்படும் ஒலி புழுதியுடன் பின்தங்கிவிட்டது...
நிகலாய் இவானவிச் நகரின் ஒரு கோடியில் ஒரு அமைதி நிறைந்த தெருவில் குடியிருந்தான். பழங்காலக் கட்டிடமான ஒரு இரண்ட்டுக்கு மாடி அருகில், பச்சை வர்ணம் அடிக்கப் பெற்ற சிறு பகுதியில் அவனது வாசஸ்தலம் இருந்தது. அந்தப் பகுதிக்கு முன்னால் ஒரு சிறு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்திலுள்ள பன்னீர்பூ மரக்கிளைகளும், வேல மரக்கிளைகளும் வெள்ளிய இலைகள் செறிந்த இளம் பாப்ளார் மரக்கிளைகளும் அந்தப் பகுதியிலிருந்த மூன்று அறைகளின் ஜன்னல்களிலேயும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அறைகளுக்குள்ளே எல்லாம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தன. மோன நிழல்கள் தரைமீது நடுநடுங்கும் கோலங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. சுவரோரங்களில் புத்தக அலமாரிகள் வரிசையாக இருந்தன; அவற்றுக்கு மேல் சிந்தனை வயப்பட்டவர்கள் மாதிரித் தோன்றும் சிலரின் உருவப் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.
“இந்த இடம் உங்களுக்கு வசதியானதுதானே?” என்று கேட்டுக்கொண்டே, நிகலாய் தாயை ஒரு சிறு அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த அறையிலுள்ள ஒரு ஜன்னல் தோட்டத்தை நோக்கியிருந்தது. இன்னொரு ஜன்னல் புல் மண்டிக்கிடந்த முற்றத்தை நோக்கியிருந்தது. அந்த அறையின் சுவரோரங்களிலும் புத்தக அலமாரிகள் இருந்தன.
“நான் சமையல் கட்டிலேயே இருந்து விடுகிறேன், சமையல்கட்டே வெளிச்சமாகவும் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறதே....” என்றாள் தாய்.
அவளது வார்த்தைகள் அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது. அதன் பிறகு அவன் அவளிடம் எப்படியெல்லாமே சுற்றி வளைத்துப் பேசி, அவளை அந்த அறையில் வசிக்கச் சம்மதிக்கச் செய்த பிறகுதான், அவனது முகம் பிரகாசமடைந்தது.
அந்த மூன்று அறைகளிலுமே ஒரு விசித்திரமான சூழ்நிலை நிரம்பித் தோன்றியது. அங்கு நல்ல காற்றோட்டம் இருந்தது. சுவாசிப்பது லகுவாயிருந்தது. எனினும் அந்த அறையில் யாருமே உரத்த குரலில் பேசுவதற்குத் தயங்குவார்கள். சுவர்களில் தொங்கிக்கொண்டு குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருக்கும் அந்தச் சித்திரங்களிலுள்ள மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனையைக் கலைப்பது அசம்பாவிதமானது போலத் தோன்றியது.
“இந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட வேண்டும்!” என்று ஜன்னல்களிலிருந்த பூந்தொட்டிகளின் மண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள் தாய்.
“ஆமாம்” என்று வீட்டுக்காரன் தனது குற்றத்தை உணருபவன் போலச் சொன்னான். “எனக்கு அவையெல்லாம் ரொம்பப் பிடித்தமானவை. ஆனால் எனக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.”
தனது விசாலமான அந்த வீட்டில் கூட நிகலாய் மிகவும் பதனமாகவும் நிதானமாகவும் யாரோ ஒரு அன்னியன் மாதிரி நடமாடித் திரிவதைத் தாய் கண்டாள். அவன் அந்த அறையிலுள்ள பல பொருள்களையும் குனிந்து உற்றுப் பார்த்தான்:
அப்படிப் பார்க்கும்போது தன் வலது கையின் மெல்லிய விரல்களால் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டும், கண்களைச் சுருக்கிக் கூர்மையாக்கிக்கொண்டும் தனக்கு அக்கறையுள்ள பொருள்களைப் பார்த்தான். சில சமயங்களில் அவள் ஒரு சாமானைத் தன் முகத்தருகே கொண்டுபோய்க் கண்களால் தொட்டு உணர்வதுபோலப் பார்த்தான். தாயைப் போலவே அவனும் அந்த அறைக்கு முதன் முதல் வந்திருப்பவன் போலவும், அதனால் அங்குள்ள பொருள்களெல்லாம் அவனுக்குப் புதியனவாக, பழக்கமற்றதாக இருப்பன போலவும் தோன்றியது. இந்த நிலைமை தாயின் மனநிலையைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் நிகலாயைத் தொடர்ந்து அந்த இடத்தை முழுதும் சுற்றிப்பார்த்தாள். எங்கு என்ன இருக்கிறது என்று கண்டறிந்தாள். அவனது பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்தாள். அவன் ஏதோ ஒரு குற்றவாளியைப் போல் கள்ளக் குரலில் பதிலளித்தான். அவன் பதில் சொல்லிய பாவனையானது. ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் ஆனால் வேறு மாதிரியாகச் செய்யவும் தெரியாதவன் சொல்வது போலத் தொனித்தது.
அவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டாள்; பியானோ வாத்தியத்தின்மீது சிதறிக் கிடந்த இசை அமைப்புத் தாள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். தேநீர்ப் பாத்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு பேசினாள்:
“இந்தப் பாத்திரத்தை விளக்க வேண்டும்.”
அவன் அந்த மங்கிப்போன பாத்திரத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தான்; தன் விரலை முகத்தருகே கொண்டு போய்க் கவனித்தான். தாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.
அன்றிரவு அவள் படுக்கைக்குச் செல்லும் போது அன்றைய தினத்தின் சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். வேறொருவருடைய வீட்டில் இரவைக் கழிப்பது என்பது அவளது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை, எனினும் அவளுக்கு அதனால் எந்தவிதச் சிரம உணர்ச்சியும் தோன்றவில்லை. அவள் நிகலாயைப் பற்றி அக்கறையோடு நினைத்துப் பார்த்தாள். அவனது வாழ்வை, முடிந்தவரை மேன்மையுடையதாக்கி, அவனது வாழ்க்கையின் மென்மையும் கதகதப்பும் சேருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஒரு உணர்வு தோன்றியது. அவனது லாவகமின்மை, வேடிக்கையான சாமர்த்தியமின்மை மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்ட அவனது விசித்திர நடத்தை, ஞான ஒளி வீசும். எனினும் குழந்தை நோக்குக்கொண்ட அவனது பிரகாசமான கண்கள் முதலியவெல்லாம் அவளது இதயத்தைத் தொட்டுவிட்டன. பிறகு அவள் மனம் அவளது மகன்பால் திரும்பியது; மீண்டும் மே தின வைபவத்தின் சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடிச்சென்றன. எனினும் அந்தச் சம்பவத்தின் நினைவுச் சித்திரத்தில் இப்போது ஒரு புதிய அர்த்தமும். புதிய குரலும் அவளுக்குத் தொனித்தனர். அன்றைய தினத்தைப் போலவே, அந்த தினத்தைப் பற்றிய சோக உணர்ச்சியிலும் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருந்தது என்றாலும் அந்தச் சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச்செய்யும் உணர்ச்சி போல் இல்லை. அந்த உணர்ச்சி இதயத்துக்குள் பன்மடங்கு வேதனையோடு துளைத்துத் துருவிப் புகுந்து, கோப உணர்ச்சியை மெதுமெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.
“நமது குழந்தைகள் உலகினுள்ளே புகுந்து புறப்பட்டுவிட்டார்கள்!” என்று அவள் நினைத்தாள். அப்போது அவள் திறந்துகிடக்கும் ஜன்னலின் வழியே, இலைகளின் சலசலப்போடு கலந்து வரும் தனக்குப் பழக்கமற்ற பட்டணத்து இரைச்சலைக் காது கொடுத்துக் கேட்டாள். அந்தச் சப்தங்கள் எங்கோ தொலைவிலிருந்து மங்கித் தேய்ந்து களைத்துச் சோர்ந்து போய் வந்தன. அந்த அறைக்குள்ளே வரும்போது அந்தச் சப்த அலைகள் அநேகமாகச் செத்துத்தான் ஒலித்தன.
மறுநாள் காலையில் அவள் தேநீர்ப் பாத்திரத்தைத் தேய்த்துத் துலக்கி, தேநீருக்காக வெந்நீர் காய வைத்தாள். அரவமின்றி மேஜையைச் சரி செய்தாள். பிறகு நிகலாய் எழுந்து வருவதை எதிர்நோக்கிச் சமையலறையில் காத்திருந்தாள், அவன் இருமிக்கொண்டே கதவைத் திறந்தான். ஒரு கையால் தன் மூக்குக் கண்ணாடியைப் பிடித்துக் கொண்டும் மறு கையால் சட்டைக் காலரைப் பிடித்துக் கொண்டும் அவன் வந்தான். காலை வணக்கம் கூறிக்கொண்ட பிறகு, அவள் தேநீர்ப் பாத்திரத்தை அடுத்த அறைக்குள் கொண்டுபோனாள்; அதற்குள் அவன் தரையெல்லாம் தண்ணீரைக் கொட்டி முகம் கை கழுவினான். தனக்குத்தானே முனகிக்கொண்டு, தனது பல் விளக்கும் பிரஷையும் சோப்பையும் கீழே தழுவவிட்டான்.
சாப்பிடும் போது அவன் தாயைப் பார்த்துச் சொன்னான்:
“நான் விவசாய இலாகாவில் எனக்குப் பிடிக்காத வேலை யொன்றைப் பார்த்து வருகிறேன். நம்முடைய விவசாயிகள் எப்படி நாசமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கிறதுதான் என் வேலை.”
ஒரு குற்றப் புன்னகையோடு அவன் மேலும் பேசினான்:
“பட்டினிதான் விவசாயிகளை அகாலத்திலேயே கல்லறைக்குள் தள்ளிச் செல்கிறது. அவர்களது குழந்தைகளும் பிறக்கும்போதே சோனியாகப் பிறந்து, இலையுதிர் காலத்தின் ஈசல் பூச்சிகளைப் போல் மாண்டு மடிகின்றன. எங்களுக்கும் இது தெரியும்; இதற்குரிய காரணமும் எங்களுக்குத் தெரியும். இந்தக் காரணத்தின் வளர்ச்சியைப் படிப்படியாகக் கவனித்துக்கொண்டு இருப்பதற்கு எங்களுக்குச் சம்பளம் கூடக் கொடுக்கிறார்கள். ஆனால், இப்படியே இது போய்க் கொண்டிருந்தால்....”
“நீங்கள் ஒரு மாணவரா என்று கேட்டாள் தாய்”
“இல்லை. நான் ஆசிரியர். என் தந்தை வியாத்தியாவிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மானேஜர். ஆனால், நானோ ஆரிசியர் வேலைக்குத்தான் படித்தேன். கிராமத்திலே இருந்தபோது நான் முஜீக்குகளுக்குப் புத்தகங்களைக் கொடுத்து உதவினேன்; அதன் காரணமாக, என்னைச் சிறையில் போட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்த பிறகு நான் ஒரு புத்தகக் கடையில் விற்பனைக்காரனாக வேலை பார்த்தேன். ஆனால் எனது ஜாக்கிரதைக் குறைவினால் மீண்டும் என்னைச் சிறையில் போட்டார்கள். கடைசியாக என்னை அர்ஹாங்கெல்சுக்கு நாடு கடத்திவிட்டார்கள். அங்கும் அங்கிருந்த கவர்னரின் வெறுப்புக்கு நான் ஆளானேன். அதன் காரணமாக மீண்டும் என்னை வெண்கடல் கரையிலுள்ள ஒரு சிறு கிராமத்துக்கு நாடு கடத்தினார்கள். அங்கு ஒரு ஐந்து வருஷ காலம் வாழ்ந்தேன்...”
சூரிய ஒளி நிறைந்த அந்த அறையில் அவனது குரல் மளமளவெனப் பொழிந்தோடியது. இதற்கு முன்பே இது மாதிரி எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறாள் தாய். எனினும் அந்தக் கதைகளைச் சொல்பவர்கள் ஏன் இத்தனை அமைதியோடு, ஏதோ தவிர்க்கமுடியாததொன்றைப் பேசுவதுபோல், அவற்றைக் கூறுகிறார்கள் என்பது மட்டும் அவளுக்குப் புரியவில்லை.
“இன்று, என் சகோதரி வருகிறாள்.” என்றான் அவன்.
“அவளுக்குக் கல்யாணமாகிவிட்டதா?”.
“அவள் ஒரு விதவை. அவளது கணவன் சைபீரியாவுக்கு கடத்தப்பட்டுச் சென்றான். ஆனால் அவன் அங்கிருந்து தப்பியோடி விட்டான். இரண்டு வருஷங்களுக்கு முன்னால், அவன் ஐரோட்டாவில் காசநோயால் செத்துப் போனான்.”
“அவள் உங்களைவிட இளையவளா?”
“ஆறு வருஷம் மூத்தவள். நான் அவளுக்கு மிகவும் கடமைப்பட்டவன். அவள் இங்கு வந்து சங்கீதம் வாசிப்பது வரை நீங்கள் பொறுத்திருங்கள். அது அவளுடைய பியானோவாத்தியம்தான். பொதுவாகச் சொன்னால், இங்குள்ள பொருள்களில் பெரும்பாகம் அவளுடையவைதாம். புத்தகங்கள் மட்டுமே என்னுடையவை.
“அவள் எங்கு வசிக்கிறாள்?”
“எங்கும்தான்” என்று சிறு புன்னகையோடு பதில் சொன்னாள் அவன். “எங்கெல்லாம் ஒரு துணிச்சலான ஆசாமி தேவையோ அங்கெல்லாம் அவள் இருப்பாள்.”
“அவள் இந்த மாதிரி-இந்த மாதிரி வேலைக்குக் கூடச் செல்கிறாளா?”
“ஆமாம். நிச்சயமாய்” என்றான் அவன்.
அவன் சீக்கிரமே போய்விட்டான்; தாய் “இந்த மாதிரி வேலையைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினாள். அந்த வேலைக்காக ஒவ்வொரு நாளும் அமைதியோடும் விடா முயற்சியோடும் தங்களைத் தாமே தத்தம் செய்து கொள்ளும் மனிதர்களைப் பற்றி நினைக்கும் போது, ஏதோ ஒரு மலையின் முன்னே இரவு வேளையில் நிற்பது போல் அவளுக்குத் தோன்றும். மத்தியானத்துக்கு மேல், நெட்டையான அழகிய பெண் ஒருத்தி வந்தாள்.
அவள் கரியநிற உடையுடுத்தியிருந்தாள். தாய் கதவைத் திறந்தவுடன் அவள் தன் கையிலிருந்த மஞ்சள் நிறமான. சிறு பையைக் கீழே நழுவ விட்டுவிட்டு தாயின் கையைப் பற்றிப் பிடித்தாள்.
“நீங்கள் தானே பாவெல் விகாய்லவிச்சின் தாய்?” என்று கேட்டாள்.
“ஆம்!” என்று பதிலுரைத்தாள் தாய். எனினும் அந்தப் பெண்ணின் அழகிய கோலத்தைக் கண்டது முதல் அவளுக்கு என்னவோ போலிருந்தது.
“நீங்கள் எப்படி இருப்பீர்களென்று கற்பனை எண்ணியிருந்தேனோ. அப்படியே இருக்கிறீர்கள். நீங்கள் இங்கு வந்து வசிக்கப் போவதாக என் தம்பி எழுதியிருந்தான்” என்று அவள் கூறிக்கொண்டே கண்ணாடியின் முன் நின்றுகொண்டு தொப்பியைக் கழற்றினாள். “நான் வெகு காலமாகப் பாவெல் மிகாய்லவிச்சோடு நட்புரிமை கொண்டவள், அவன் உங்களைப் பற்றிக் கூறியிருக்கிறான்.”
அவளது குரல் உள்ளடங்கியிருந்தது. மேலும் அவள் மெதுவாகத் தான் பேசினாள். அவளது நடமாட்டங்கள் மட்டும் விறுவிறுப்போடும் வேகத்தோடும் இருந்தன. அவள் தனது சாம்பல் நிறக் கண்களால் புன்னகை புரிந்தாள். அதில் வாலிப பாவமிருந்தது. அவளது கன்னப் பொறியில் சிறு சிறு சுருக்க ரேகைகள் விழுந்திருந்தன. அவளது சிறு காதோரங்களுக்கு மேல் இளம் நரை ரோமங்களும் மின்னிக் கொண்டிருந்தன.
“எனக்குப் பசிக்கிறது. கொஞ்சம் காப்பி குடித்தால் தேவலை” என்றாள் அவள்.
“அதற்கென்ன. தயார் செய்கிறேன்” என்று பதிலுரைத்தாள் தாய். பதில் கூறி விட்டு அவள் அலமாரிக்குச் சென்று காப்பிச் சட்டியை எடுத்துக்கொண்டே கேட்டாள்.
“என்னைப்பற்றி டாவெல் சொன்னதாகவா சொன்னீர்கள்?”
“எவ்வளவோ சொல்லியிருக்கிறான்.”அந்த மாது தோல் சிகரெட் பெட்டியைத் திறந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.
“நீங்கள் அவனைப்பற்றி ரொம்பவும் பயந்து போயிருக்கிறீர்களா?” என்று கேட்டுக்கொண்டே அவள் அந்த அறைக்குள் உலவினாள்.
சாராய அடுப்பில், காப்பிச் சட்டிக்குக் கீழாக எரியும் நீலநிறத் தீ நாக்குகளைப் பார்த்துக்கொண்டே லேசாகப் புன்னகை புரிந்தாள் தாய். அந்தப் பெண்ணின் முன்னிலையில் ஏற்பட்ட சங்கட உணர்ச்சியை விழுங்கி உள்ளடக்கிய அவள் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.
“அப்படியென்றால், அவன் அவளிடம் என்னைப்பற்றிக் கூறியிருக்கிறான், நல்ல பிள்ளை!” என்று தனக்குத்தானே நினைத்துக்கொண்டு, பிறகு மெதுவாகச் சொன்னாள்.
“ஆமாம். அது ஒன்றும் சாமானியமான சிரமம் அல்ல. ஆனால், முன்புதான் அந்தச் சிரமம் எனக்குப் பெரிதாய் இருந்தது. இப்போது அவன் தன்னந் தனியாக இல்லை என்பதால் எனக்குக் கொஞ்சம் நிம்மதி”
அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை பார்த்துக்கொண்டே தாய் அவளது பெயரைக் கேட்டாள்.
“சோபியா” என்றாள் அந்தப் பெண்.
தாய் அந்தப் பெண்ணைக் கூர்ந்து பார்த்தாள். அந்தப் பெண்ணிடம் ஏதோ ஒரு பரபரப்பு-அதீதமான அவசரமும் துணிவும் கொண்ட பரபரப்புக் காணப்படுவதாகத் தோன்றியது.
“இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்கள் அதிக நாள் சிறையில் இருக்கக்கூடாது என்பதுதான்” என்று தீர்மானமாகச் சொன்னான் அந்தப் பெண். “அவர்களுக்கு மட்டும் விசாரணையைச் சீக்கிரமே நடத்தினால்! அவர்களை நாடு கடத்திவிட்டவுடனேயே பாவெல் மிகாய்வலிச் அங்கிருந்து தப்பியோடி வருவதற்கு நாம் உடனடி!பாக ஏற்பாடு செய்து தருவோம். அவன் இப்போது இரங்கு அவசியம் இருந்தாக வேண்டும்.”
தாய் வியந்துபோய் சோபியாவைப் பார்த்தாள். சோபியா தனது சிகரெட் கட்டையை எங்கு போடுவது என்பதற்காக அங்குமிங்கும் இடம் பார்த்துக் கொண்டிருந்தாள். கடைசியாக, அவள் அந்தச் சிகரெட் கட்டையை ஒரு பூத்தொட்டியிலிருந்த மண்ணில் புதைத்து அமுக்கினாள்.
“ஐயோ! அது பூக்களைக் கெடுத்துவிடுமே! என்று தன்னையறியாமல் கூறினாள் தாய்.
“மன்னிக்க வேண்டும்” என்றால் சோபியா. “நிகலாயும் இதே விஷயத்தைத்தான் எனக்கு எப்பொழுதும் சொல்லுவோன்.”
அவள் அந்தச் சிகரெட் கட்டையை அதிலிருந்து எடுத்து, ஜன்னலுக்கு வெளியே எறிந்தாள்.
இதைக் கண்டவுடனே தாய் மீண்டும் ஒரு சங்கட உணர்ச்சியுடன் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே ஒரு குற்றவுணர்வுடன் சொன்னாள்:
“என்னை மன்னியுங்கள்! நான் வேண்டுமென்று அப்படிச் சொல்லவில்லை. என்னையறியாமலே வாய் வந்துவிட்டது, உங்களுக்குப் போதிக்க நான் யார்?”
“நான் அசுத்தம் பண்ணினால் போதித்தால் என்னவாம்?” என்று தோளை உலுக்கிக்கொண்டே கேட்டாள் சோபியா. “சரி. காப்பி தயாராய் விட்டதா? ரொம்ப நன்றி. ஒரே ஒரு கோப்பைதானா? உங்களுக்கு ஒன்றும் வேண்டாமா?”
திடீரென்று அவள் தாயின் தோளைப் பற்றிப்பிடித்து அவளைத் தன்னருகே இழுத்து அவளது கண்களை ஆழ்ந்து நோக்கிக்கொண்டே கேட்டாள்
“நீங்கள் என்ன வெட்கப்படுகிறீர்களா?”
தாய் லேசாகப் புன்னகை புரிந்தாள்.
“இப்பொழுதுதான் சிக்ரெட் கட்டையைப்பற்றி உங்களிடம் சொன்னேன். அதற்காக நான் வெட்கப்படுகிறேனா என்று கேட்கிறீர்களா?” என்றாள் தாய். தனது வியப்புணர்ச்சியை மூடி மறைக்காமல் அவள் மீண்டும் ஏதோ கேட்கும் பாவனையில் பேசினாள்:
“நேற்றுத்தான் நான் இங்கு வந்தேன். அதற்குள்ளாக இதை என் சொந்த வீடு போலவே கருதி நடந்து வருகிறேன். எதற்கும் அஞ்சாமல், என்ன சொல்லுகிறோம் என்பதே தெரியாமல்....”
“அப்படித்தானிருக்க வேண்டும்” என்றாள் சோபியா.
“என் தலையே சுற்றுகிறது. நானே எனக்கு அன்னியமாய்ப் போய்விட்டதுபோல் தோன்றுகிறது” என்று மேலும் பேசத் தொடங்கினாள் தாய். “முன்பெல்லாம் ஒரு நபரிடம் நான் என் மனத்திலுள்ள விஷயத்தை வெளியிட்டுக் கூறத் துணிவதென்றால் அதற்கு எனக்கு அந்த நபரோடு ரொம்ப நாள் பழக்கம் வேண்டும். ஆனால், இப்போதோ என் இதயம் எப்போதும் திறந்துகிடக்கிறது. எனவே இதற்குமுன் நான் எண்ணிப் பார்த்திராத விஷயங்களைக்கூட, திடீரெனச் சொல்லித் தீர்த்துவிடுகிறேன்.”
சோபியா மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்துக்கொண்டே தனது சாம்பல் நிறக் கண்களில் மிருதுவான ஒளிததும்பத் தாயைப் பார்த்தாள்.
“அவன் தப்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்வதாகக் கூறுகிறீர்கள். ஆனால் அப்படி ஓடிவந்த பிறகு அவனால் எப்படி வாழ முடியும்? என்று தன் மனத்துக்குள் அழுத்திக்கொண்டிருந்த அந்தக் கேள்வியைக் கேட்டு, மனப் பாரத்தைக் குறைத்துக்கொண்டாள் தாய்.
“அது ஒன்றும் பிரமாதமில்லை என்று கூறிக்கொண்டு இன்னொரு கோப்பை காப்பியை ஊற்றிக்கொண்டாள் சோபியா. “இப்படி ஓடி வந்தவர்களில் எத்தனையோ பேர் எப்படி வாழ்கிறார்களோ, அப்படியே அவனும் வாழ்வான். நான் அப்படி ஒரு ஆசாமியைச் சந்தித்தேன். அவனை அவன் வசிக்க வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றேன், அவனும் நமக்கு இன்றியமையாத ஆசாமிதான். அவனை. ஐந்து வருஷகாலத்திற்கு நாடு கடத்தினர். ஆனால் அவன் அங்கு மூன்றரை மாதம்தான் காலம் தள்ளினான்.”
தாய் அவளது முகத்தையே சிறிது நேரம் பார்த்தாள். பிறகு புன்னகை புரிந்தாள். அதன் பின் தலையை அசைத்துக்கொண்டே மெதுவாகச் சொன்னாள்:
“மே தினக் கொண்டாட்டம் என்னிடம் ஏதோ ஒரு மாறுதலை உண்டாக்கிவிட்டதுபோல் எனக்குத் தோன்றுகிறது. அது என்ன என்பதை என்னாலேயே கண்டுபிடிக்க முடியவில்லை, நான் என்னவோ ஒரே சமயத்தில் இரண்டு பாதைகளில் சென்றுகொண்டிருப்பதுபோல் ஒரு பிரமை. சமயங்களில் எல்லாமே எனக்குப் புரிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. மறுகணம் ஒரே மங்கல்: கண் முன் இருள் மண்டிக் கவிகிறது. உதாரணமாக உங்களைப் பார்க்கிறேன். நீங்கள் ஒரு பெரிய இடத்துப் பெண், இந்த வேலைக்கு வருகிறீர்கள்.... பாவெலை தெரிந்திருக்கிறீர்கள், அவனைப்பற்றி நல்லபடியாய்ப் பேசுகிறீர்கள். அதற்காக நான் உங்களுக்கு நன்றி கூற வேண்டும்.
“நன்றி பெறத் தகுதியுடையவர் நீங்கள்தான்” என்று கூறிச் சிரித்தாள் சோபியா.
“நான் என்ன செய்துவிட்டேன்? அவனுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நானில்லையே” என்று பெருமூச்செறிந்தாள் தாய்.
சோபியா சிகரெட்டை கோப்பைத் தட்டில் நசுக்கி அணைத்தாள். அவள் தலையை அசைத்த அசைப்பில் அவளது பொன்நிற முடி, உலைந்து நழுவி. அவளது இடை வரையிலும் வந்து விழுந்து கற்றை கற்றையாய் புரண்டது.
“சரி, இந்த அலங்காரத்தையெல்லாம் களைவதற்கு நேரமாகிவிட்டது’ என்று கூறிக்கொண்டே அவள் எழுந்தாள், எழுந்து வெளியே சென்றுவிட்டாள்.