தாய்/32
நிகலாய் மாலையில் திரும்பி வந்தான், அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, சோபியா சிரித்துக்கொண்டே அவள் எப்படி தேசாந்திர சிட்சையிலிருந்து தப்பியோடி வந்த மனிதனைச் சந்தித்தாள், அவனை எப்படி மறைத்து வைத்தாள். அவள் எப்படி ஒற்றர்களுக்காக பயந்து நடுங்கினாள், வழியில் பார்க்கின்ற ஒவ்வொருவரையுமே ஒற்றர்கள் என்று அவள் எப்படிக் கருதினாள். ஓடி வந்த மனிதன் எப்படி நடந்துகொண்டான் என்பன போன்ற விவரங்களையெல்லாம் சுவாரசியத்தோடு விளக்கிச் சொன்னாள், அவளது குரலில் ஒரு பெருமைத்தொனி ஒலிப்பதாகத் தாய் கண்டறிந்தாள். ஒரு தொழிலாளி தான் ஒரு சிரம் சாத்தியமான காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடித்ததைப்பற்றி அடையும் பெருமித உணர்ச்சி போலிருந்தது அது.
இப்போது அவள் ஒருசாம்பல் நிற வேனிற்கால நீள் அங்கி அணிந்திருந்தாள். அந்தக் கவுன் அவளை மேலும் சிறிது நெடியவளாகக் காட்டியது. அவளது கண்கள் கருமை எய்தின போலவும் அவளது நடமாட்டங்கள் மிகுந்த அடக்கம் கொண்டன போலவும் தோன்றின.
“உனக்கு இன்னொரு வேலை காத்திருக்கிறது. சோபியா” என்று சாப்பிட்டு முடிந்தவுடன் கூறினான் நிகலாய். “விவசாயிகளுக்காக நாம் பத்திரிகை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சமீபத்தில் நடந்த கைதுகளால், அப்பத்திரிகையை வினியோகித்து வந்த மனிதனொரு நமக்கிருந்த தொடர்பு விட்டுப் போய்விட்டது. அவனைக் கண்டுபிடிப்பதில் பெலகேயா நீலவ்னா மட்டும்தான் நமக்கு உதவக் கூடியவன். நீ அவளைக் கிராமத்துக்கு ஒரு முறை உன்னோடு அழைத்துச் செல்ல வேண்டும்; கூடிய சீக்கிரம்.”ரொம்ப சரி” என்று பதில் கூறிக்கொண்டே சிகரெட்டை ஒரு முறை இழுத்துக் கொண்டாள் சோபியா. “சரி, நாம் போவோம். இல்லையா, பெலகேயா நீலவ்னா!”
“கட்டாயம்!”
“அதென்ன, ரொம்ப தூரமோ?”
‘சுமார் 80 கிலோ மீட்டர் தூரம்தான்.”
“நல்லது சரி, இப்போது எனக்குக் கொஞ்சம் வாத்தியம் வாசிக்க வேண்டும்போலிருக்கிறது. பெலகேயா நீலவ்னா. நீங்கள் என் வாத்தியத்தைக் கொஞ்ச நேரமேனும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?”
“என்னைப் பற்றிக் கவலைப்படாதே. அம்மா. நான் ஒருத்தி இங்கே இல்லையென்றே நினைத்துக்கொள்ளேன்’ என்று கூறிக்கொண்டே, சோபாவின் ஒரு மூலையில் போய்ச் சாய்ந்தாள் தாய். அக்காளும் தம்பியும் தாயை ஒரு சிறிதும் கவனிக்காதவர்கள் போலவே காட்டிக் கொண்டனர். எனினும் அவர்கள் அவளைச் சாதுர்யமாகப் பேச்சில் இழுத்துவிட முனைந்தார்கள்.”
“கேள், நிகலாய். இது கிரீக்கின் இசை. இன்று வரும் போது கையோடு கொண்டுவந்தேன். சரி, ஜன்னல் கதவுகளை அடை”
அவள் வாத்தியத்தைத் திறந்து. தனது இடது கையால் மெதுவாக வாசிக்கத் தொடங்கினாள். வாத்தியம் இனிமையான ஆழமான நாதத்தோடு இசைக்க ஆரம்பித்தது. ஒரு தாழ்ந்த பெருமூச்சோடு மற்றொரு ஸ்வரமும் முதல் ஸ்தாயியோடு சேர்ந்து ஒலித்தது. அவளது வலது கைவிரல்களிலிருந்து ஸ்வரநாதம் பளிச்சிட்டுக் குபுகுபுவெனப் பொங்கிப் பிறந்தது. அந்த ஸ்வரங்கள் அந்தத் தாழ்ந்த ஸ்வரங்களின் இருண்ட சூழ்நிலையிலே பயந்தடித்துப் படபடத்துச் செல்லும் பறவைக் கூட்டம் போல் சிதறிப் பறந்தன.
முதலில் தாய் அந்தச் சங்கீதத்தால் கொஞ்சங்கூட நெகிழவில்லை. அந்தச் சங்கீதப் பிரவாகம் அவளுக்கு வெறும் குழம்பிப்போன சப்த பேதங்களாகவே தோன்றியது. பல்வேறு ஸ்வரங்களும் பின்னுமுடைந்தெழும் இங்கித நாத சுகத்தை அவளது செவிகளால் உணர்ந்து அனுபவிக்க இயலவில்லை, அவள் சொக்கிப்போன கண்களோடு நிகலாயைப் பார்த்தாள். நிகலாய் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் இன்னொரு மூலையில் கால்களை இழுத்து மடக்கி உட்கார்ந்தான். தங்கமயமான குழல் கற்றையால் விளிம்பு கட்டப்பெற்றுச் சிறந்து விளங்கும் சோபியாவின் பக்கவாட்டு உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி சோபியாவின் தலைமீதும் தோள் மீதும் படிந்து ஒளிர்ந்து. வாத்தியத்தின் ஸ்வரக் கட்டைகளின் மீது விளையாடும் அவளது விரல்களைத் தடவிக்கொடுப்பதற்காக நழுவி இறங்கியது. அந்த கீதம் விம்மிப் பெருகி அறை முழுதும் நிரம்பி ஒலித்தது. தாயின் உள்ளத்தைத் தன்னையறியாமல் தொட்டு ஒலிக்கத் தொடங்கியது.
என்ன காரணத்தினாலோ கடந்த காலத்தின் இருள் கிடங்கிலிருந்து ஒரு பெரும் வேதனை மறந்து மரத்துப் போன வேதனை மீண்டும் உயிர் பெற்றெழுந்து அவள் மனத்தில் புகுந்து உறுத்தி. மிகுந்த கசப்பைக் கொடுத்தது.
அந்தக் காலத்தில் ஒருநாள் அவளது கணவன் இரவில் அகால வேளையில் நன்றாகக் குடித்துத் தீர்த்துவிட்டு வீட்டுக்கு வந்தான், அவளைத் தன் கரத்தால் இறுகப் பிடித்து, படுக்கையினின்றும் இழுத்துக் கீழே தரையில் தள்ளி ஒரு உதை கொடுத்துவிட்டுப் பேசினான்:
“இங்கிருந்து போய்விடு. நாயே! உன்னைக் கண்டாலே எனக்கு எரிச்சலாய் வருகிறது!”
அவனது அடிகளிலிருந்து தப்பிப்பதற்காக. அவள் தனது இரண்டு வயதான மகனைப் பற்றியெடுத்து, முழுங்காலிட்டிருந்த தன் உடம்புக்கு முன்னால் அவனை ஒரு கேடயம் மாதிரி நிறுத்திக்கொண்டாள். அந்தக் குழந்தை, பயந்து போயிருந்த அந்த அம்மணமான குழந்தை, அலறிக் கூச்சலிட்டது. அவள் கைக்குள் அடங்காமல் திமிறியது..
“போ வெளியே!’ என்று கர்ஜித்தான் மிகயீல்.
அவள் துள்ளியெழுந்து, சமையல் கட்டுக்குள் ஓடி ரவிக்கையைத் தோள்மீது தூக்கிப்போட்டுக்கொண்டு குழந்தையையும் ஒரு துணியில் சுற்றியெடுத்துக்கொண்டு, வாய் பேசாது முனங்காது படுக்கப்போவதற்கு முன் போட்டிருந்த ஆடையுடனேயே தெருவுக்கு வந்தாள். அப்போது மே மாதம், அன்றிரவு குளிர் மிகவும் விறைத்து நடுக்கியது. தெருப்புழுதி அவளது பாதங்களில் அப்பிக்கொண்டு குளிர்ந்து விறைத்தது. பெருவிரல்களில் ஒட்டிக்கொண்டது குழந்தை அலறித்துடித்துக் கொண்டிருந்தது. அவள் குழந்தையைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு பயமடித்துப் போய் தெரு வழியே விறுவிறுவென நடந்தாள். போகும் போதே குழந்தையைச் செல்லமாகச் கொஞ்சி அதன் அழுகையை நிறுத்த முயன்றாள்.
“அடடா, கண்ணு ! அட்டா....”
பொழுது விடிய ஆரம்பித்ததும் அவள் நாணிக் கூசினாள். தன்னை அந்த அரை நிர்வாணக் கோலத்தில் யாரேனும் தெருவில் பார்த்துவிடக் கூடாதே என அஞ்சினாள். எனவே அவள் ஊர்ப்புறத்திலுள்ள சதுப்புப் பிரதேசத்துக்குச் சென்று, அங்கிருந்த அஸ் பென் மரத்தடியில் உட்கார்ந்தாள். அங்கேயே வெகுநேரம் உட்கார்ந்து, அகன்று விரிந்த கண்களோடு இருளையே வெறித்துப் பார்த்தாள். தூங்கி வழிந்து கொண்டிருக்கும் குழந்தையை உறங்கப் பண்ணுவதற்காகவும் தனது இதய வேதனையைச் சாந்தப்படுத்துவதற்காகவும் அவள் ஒரு தாலாட்டுப் பாட்டை முணுமுணுத்தாள்.
“அடடா, கண்ணு ! அடடா...”
அவள் அங்கிருந்தபோது, ஒரு கரிய பறவை அரவமின்றி அவள் பக்கமாகப் பறந்து சென்றது. அந்தப் பறவையின் சிறகு வீச்சு அவளைச் சோக அமைதியினின்றும் திடுக்கிட்டு எழுந்திருக்கச் செய்தது. குளிரால் நடுநடுங்கிக்கொண்டே வீட்டை நோக்கி, மீண்டும் அந்த வழக்கமான கொடுமையையும் உதைகளையும், ஏச்சுப் பேச்சுக்களையும் நோக்கித் திரும்பி நடந்தாள்......
கடைசி ஸ்வர ஸ்தாயி ஆழ்ந்து முனகியது. உள்ளடங்கி விறைத்துப்போன ஒரு பெருமூச்சுடன் அந்தக் கீதம் மடிந்து மறைந்து போயிற்று.
சோபியா தன் சகோதரனிடம் திரும்பினாள்.
“உனக்கு இது பிடித்திருந்ததா?” என்று அமைதியாகக் கேட்டாள்.
“ரொம்ப ரொம்ப!” என்று ஏதோ தூக்கத்திலிருந்து விழிப்புற்றவன் மாதிரி சொன்னான் அவன்; “மிகவும்......”
தனது நினைவின் எதிரொலி தாயின் உள்ளத்துக்குள்ளே நடுங்கிப் பாடியது; அதே சமயம் அவள் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் வேறொரு எண்ணமும் எழுந்தது.
“பாரேன்–அமைதியாகவும், நட்புரிமையோடும் ஒன்றாக வாழ்கிற ஜனங்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் சண்டை போடுவதில்லை; குடிப்பதில்லை. அந்த இருண்ட வாழ்விலே உள்ள மனிதர்களைப் போல் இவர்கள் ஒரு துண்டு ரொட்டிக்காக ஒருவருக்கொருவர் சண்டை பிடிப்பதில்லை.....”
சோபியா ஒரு சிகரெட்டை எடுத்துட் பற்ற வைத்தாள். அவள் இடைவிடாது ஒரேயடியாய்ப் புகைபிடித்தாள்.
“இது காலஞ்சென்ற சோஸ்த்யாவுக்கு ரொம்பப் பிடித்த இசை” என்றாள் அவள். அவள் நெடுக புகைத்து மூச்சு வாங்கினாள். பிறகு மீண்டும் வாத்தியத்தின் கட்டைகளைத் தடவி, ஒரு சோக நாதத்தை எழுப்பினாள்; “அவரிடம் நான் எவ்வளவு ஆசையோடு இதை வாசித்துக் காட்டுவேன். அவர் எவ்வளவு உணர்ச்சி வசத்தோடு, தம் இதயமே விம்மிப் புடைத்துப் புளகாங்கிதம் அடையும்படி இந்தச் சங்கீதத்தைக் கேட்பார்!”
“அவள் தன் கணவனைப்பற்றி நினைத்துக் கொள்கிறாள் போலிருக்கிறது” என்று முனகிக்கொண்டாள் தாய்; “அவள் புன்னகை கூட செய்கிறாளே.....”
“அவர் என்னை எப்படி மகிழ்வித்தார்!” என்று மீண்டும் சோபியா மெதுவாகச் சொன்னாள். அவளது சிந்தனைகளோடு வாத்தியத்தின் மெல்லிய இசையையும் இணைத்து வெளியிட்டாள்; “எப்படி வாழ வேண்டும் என்பதை அவர் எவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்!”
“ஆமாம்” என்று தன் தாடியை வருடிக்கொண்டே சொன்னான் நிகலாய்; “அவன் ஒரு இனிய மனிதன்.”
சோபியா அப்போது தான் பற்றவைத்த சிகரெட்டைத் தூர எறிந்துவிட்டு, தாயிடம் திரும்பினாள்.
“இந்தச் சத்தம் உங்களுக்குத் தொந்தரவாயில்லையே?” என்றாள்.
தாயால் தனது உணர்ச்சிக் குழப்பத்தை மறைக்க முடியவில்லை.
“என்னை ஒன்றும் கவனிக்காதீர்கள். எனக்கு ஒன்றுமே புரியாது. நான் பாட்டுக்கு இங்கே உட்கார்ந்து கேட்கிறேன்; ஏதேதோ நினைக்கிறேன்.”
“ஆனால், நீங்களும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்”என்றாள் சோபியா:“ஒரு பெண் அவசியம் சங்கீதத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலும் அவள் துக்கமயமாயிருக்கும் போது...”
அவள் ஸ்வரக் கட்டைகளை அழுத்தி வாசித்தாள்; உடனே அந்தப் பியானோ வாத்தியம், பயங்கரச் செய்தியைக் கேள்விப்பட்டவர்களின் பயபீதியின் ஓலத்தைப்போல் ஒலித்து விம்மியது. இந்தத் திகைப்பூட்டும் ஓலநாதம், அவர் இதயத்தையே உலுக்கிவிட்டது. அதற்கு எதிரொலி செய்வது போல் பயபீதி நிறைந்த இளங்குரல்கள் துள்ளிவந்து, ஓடி மறைந்தன. மீண்டும் ஒரு உரத்த உக்கிரமான கூச்சல் நாதம் எழுந்து, மற்ற குரல்களையெல்லாம் மூழ்கடித்து ஒலித்தது. இதன் பின்னர், ஏதோ ஒரு பெருந்துயர ஒலி விம்மியது. எனினும் அந்தத் துயர ஒலி அனுதாபத்தைவிட ஆத்திரத்தைத்தான் அதிகம் கிளப்பியது. பிறகு ஒரு வலிமைமிக்க இனிய நாதம் ஒலித்துப் பெருகியது. அந்த ஒலியில் கவர்ச்சியும் பிடிப்பும் இருந்தன.
அவர்களிடம் இனிய வார்த்தைகள் புகலவேண்டும் என்ற ஆசை தாயின் உள்ளத்தில் நிரம்பித் ததும்பியது. அந்தச் சங்கீதத்தால் அவள் கிறுகிறுத்துப் போயிருந்தாள். அந்தச் சகோதர சகோதரி இருவருக்கும் தன்னால் உதவ முடியும் என்ற எண்ணம் தோன்றவே அவள் லேசாகப் புன்னகை செய்துகொண்டாள்.
அவள் சுற்றுமுற்றும் பார்த்தாள்-அவளால் என்னதான் செய்ய முடியும்? அவள் அமைதியாக எழுந்து சமையலறைக்குள்ளே சென்று தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்தாள்.
ஆனால் இந்த ஒரு செய்கை மட்டும் அவளுக்கு அவர்கள் மீதிருந்த ஆர்வத்தைத் திருப்திப்படுத்திவிடவில்லை. அவள் தேநீரைக் கோப்பைகளில் ஊற்றும்போதே ஏதோ கசந்து போய் சிரித்துக்கொண்டே சொன்னாள். அவர்களை ஆசுவாசப்படுத்துவற்கென்றும், அதேபோலத் தன் இதயத்துக்குச் சமாதானம் சொல்வது போலவும் அவ்வார்த்தைகளை அவள் சொன்னாள்;
“நாமெல்லாம், அந்த இருண்ட வாழ்விலிருந்து வந்த நாமெல்லாம், எல்லாவற்றையும் உணரத்தான் செய்கிறோம். ஆனால், நமது உணர்ச்சிகளை நம்மால் வாய்விட்டுச் சொல்ல முடியவில்லை. நமக்கு வெட்க உணர்ச்சி தோன்றுகிறது. ஏனெனில் நமக்குப் புரிந்த விஷயத்தையே நம்மால் சொல்ல முடியவில்லையே! அடிக்கடி–நமது வெட்க உணர்ச்சியால் — நாம் நமது சொந்த எண்ணங்களின் மீதே எரிந்து விழுகிறோம். வாழ்க்கை நம்மைச் சகல கோணங்களிலிருந்தும் தாக்குகிறது. நாமோ ஓய்ந்திருக்க எண்ணுகிறோம். நமது சிந்தனைகளோ நம்மை அப்படியிருக்க விடுவதில்லை.”
நிகலாய் தன் மூக்குக் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக்கொண்டே அவள் கூறியதைக் கேட்டான்; சோபியா தனது அகன்ற கண்களைத் திறந்தபடியே புகை பிடிக்கவும் மறந்து போய் இருந்தாள். சிகரெட் கூட அணைந்துவிடும் போலிருந்தது. அவள் இன்னும் அந்தப் பியானோ வாத்தியத்தின் முன்புதான் இருந்தாள். தன் சகோதரனை நோக்கிச் சிறிது திரும்பியிருந்தாள். எனினும் தனது வலது கையால் பியானோவின் கட்டைகளை சமயங்களில் தட்டிக் கொடுத்துக்கொண்டாள். தாய் தனது உணர்ச்சியை உருவாக்கி வெளியிடும் மனங்கனிந்த வார்த்தைகளோடு, அந்த ஸ்வரநாதங்களும் ஒன்றிக் கலந்து மிருதுவாக ஒலித்தன.
“இப்போது என்னால் என்னைப் பற்றியும், பொதுவாக மக்களைப் பற்றியும் சொல்ல முடியும். ஏனெனில் இப்போது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளவும்; ஒப்பிட்டுப்பார்க்கவும் என்னால் முடிகிறது. இதற்கு முன்பெல்லாம் ஒப்புநோக்கிப் பார்ப்பதற்கே ஒரு விஷயமும் இருந்தது. இல்லை. எல்லோருமே ஒரே மாதிரியாக வாழ்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றியது. இப்போதோ மற்ற ஜனங்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதையும் நான் எப்படி வாழ்ந்தேன் என்பதையும் என்னால் அறிய முடிகிறது. இதுவும் ஒரு கஷ்டம்தான்!”
அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு மேலும் பேசினாள்:
“நான் சொல்லுவது தவறாக இருக்கலாம். சொல்லவே தேவையில்லாமல் இருக்கலாம். ஏனென்றால் உங்களுக்கே அதெல்லாம் நன்கு தெரியும்....”
அவளது குரலில் கண்ணீரின் அடையாளம் தென்பட்டது. எனினும் அவர்களைப் பார்த்தபோது அவள் கண்களில் ஒரு குதூகலம் பிறந்தது. அவள் சொன்னாள்:
“ஆனால் நான் என் இதயத்தை உங்களிடம் திறந்து காட்ட விரும்புகிறேன். உங்களது நலத்தில் நான் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டிருக்கிறேன் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்”
“நாங்கள்தான் கண்ணாரப் பார்க்கிறோமே” என்று மெதுவாகச் சொன்னான் நிகலாய்.
என்றாலும், தனது ஆவலைத் தான் பூர்த்தி செய்து கொள்ள இயலாதது போலத் தோன்றியது அவளுக்கு. எனவே அவள் தனக்குப் புதியனவாகவும், அளவற்ற முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தோன்றிய எதையெதையோ பற்றி மீண்டும் பேசத் தொடங்கினாள். பொறுமையும் கசப்புணர்ச்சியும் நிறைந்த தனது வாழ்வைப்பற்றி அவர்களிடம் சொல்லத் தொடங்கினாள். ஆனால் அந்தப் பேச்சில் உக்கிரம் இல்லை; ஏதோ ஒரு இரக்கமான பேலி பாவம்தான் தொனித்தது. தனது கடந்த கால வாழ்க்கையை உருவாக்கிய இருண்ட நாட்களைப் பற்றிய சிந்தனைகளைச் சொன்னாள். தனது கணவனிடம் தான் பெற்ற அடி உதைகளைப் பற்றிக் கூறினாள். அந்த அடி உதைகளுக்குரிய காரண காரியமற்ற நிலைமையையும் அவற்றைத் தடுக்க முடியாதிருந்த தன் ஏலாத் தளத்தையும் எண்ணி அவளே வியந்துகொண்டாள்......
அவள் சொல்வதை அவர்கள் அமைதியுடன் கேட்டார்கள். மிருகத்தைப் போல் மதிக்கப்பட்டு நடத்தப்பட்ட அவளது வாழ்க்கையில், தனக்கு நேர்ந்த துயரங்களையும் கொடுமைகளையும் பொறுமையோடு சகித்துத் தாங்கிய அவளது வாழ்வில் பாடாடோபமோ அலங்காரமோ அற்ற அவளது எளிய வாழ்க்கையின் பின்னணியிலே மறைந்துள்ள யதார்த்தமான அர்த்த பாவத்தை அவர்கள் உணர்ந்து உணர்ச்சி வசப்பட்டார்கள். அவள் மூலம் ஆயிரக்கணக்கான ஜீவன்கள் பேசுவது போலிருந்தது. அவள் வாழ்ந்ததெல்லாம் எளிய வாழ்வு, சர்வ சாதாரண வாழ்வு. இந்த உலகிலுள்ள எண்ணிறந்த பெரும்பான்மை மக்களது வாழ்வைப் போன்ற சாதாரண வாழ்வு. அவளது வாழ்க்கைக் கதை அந்த வாழ்வுக்கு ஒரு உதாரணம் ஒரு அறிகுறி, நிகலாய் தனது முழங்கைகளை மேஜைமீது ஊன்றி, மோவாயைக் கைகளில் தாங்கியவாறு கண்களைச் சுருக்கி, கண்ணாடி வழியாக அவளைக் கூர்ந்து கவனித்தான். சோபியா, நாற்காலியில் சாய்ந்து இடையிடையே நடுங்கிக்கொண்டாள், தலையையும் உலுப்பிக்கொண்டாள். அவளது முகம் மெலிந்து வெளுத்துப்போனது போலத் தோன்றியது. அவள் சிகரெட்டும் பிடிக்கவில்லை.
“ஒரு காலத்தில் நான் என்னையே துர்ப்பாக்கியசாலி என்று கருதினேன்” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு, அமைதியாகச் சொன்னாள் சோபியா. “என்னுடைய வாழ்க்கையே ஒரு ஜன்னி மயக்கம் என்று எனக்குத் தோன்றியது. அது என்னை ஒரு சிறு நகரத்திற்கு கடத்தப்பட்டிருந்த காலம். அந்தச் சமயத்தில் என்னைப் பற்றி நினைப்பதைத் தவிர, எனக்கு வேண்டியதைக் கவனிப்பதைத் தவிர, வேறு சிந்தனையோ செயலோ கிடையாது. ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற விருப்பால், நான் எனது துன்பங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். என்னை மிகவும் நேசித்த தந்தையோடு சண்டைபிடித்துக்கொண்டிருந்தேன்; என்னைப் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றினார்கள்; என்னை ஒரு அவமானச் சின்னமாகக் கருதினார்கள். நான் சிறையிலும் தள்ளப்பட்டேன். எனது நெருங்கிய தோழன் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுத்தான். என் கணவர் கைதாகி, நான் சிறைக்குள் போய் மீண்டும் நாடு கடத்தப்பட்டேன், பிறகு கணவரின் மரணமும் சம்பவித்தது. இந்த உலகிலேயே நான்தான் மிகவும் துர்ப்பாக்கியமானவள் என்று அப்போது எனக்குத் தோன்றியது. ஆனால், என்னுடைய சகல துர்பாக்கியங்களும்–அதைவிடப் பத்துமடங்கு அதிகமான துர்பாக்கியங்களும்கூட, உங்களுடைய ஒருமாத வாழ்க்கைக்குச் சமமாகாது, பெலகேயா நீலவ்னா! உங்கள் துர்ப்பாக்கியமோ அன்றாடச் சித்திரவதை: ஆண்டாண்டுதோறும் நிரந்தரமாக நிலைத்திருந்த சித்திரவதை. அந்த மாதிரியான சித்திரவதையை தாங்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் எங்கிருந்துதான் சக்தி பெறுகிறார்களோ?”
“எங்களுக்கு எல்லாம் பழகிப்போய்விடுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் பெலகேயா.
“நான் வாழ்க்கையை நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது” என்று சிந்தனை வயப்பட்டவனாகக் கூறினான் நிகலாய்: “என்றாலும் வாழ்க்கையைப் பற்றிப் புத்தகத்தின் மூலமாவது என்னுடைய பக்குவமடையாத அரைகுறை அபிப்பிராயங்கள் மூலமாவது தெரிந்துகொள்ளாமல், இந்த மாதிரி நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போது, வாழ்க்கை பயங்கரமாய்த் தோற்றமளிக்கிறது. சின்னஞ் சிறு விஷயங்கள்தான் பயங்கரமாய்த் தோன்றுகின்றன. அந்தக் கவனிப்பற்ற சிறுசிறு பொழுதுகள்தான் ஆண்டுகளை உருவாக்குகின்றன.......”
அந்தப் பேச்சு இடைவிடாது விரிந்து பெருகியது. இருண்ட வாழ்க்கையின் சகல அம்சங்களையும் அந்தப் பேச்சு தொட்டுவிரிந்தது. தாய் தனது நினைவின் ஆழத்திலேயே முங்கி, முழுகிவிட்டாள்; தனது இளமைக் காலத்தில் பயங்கரத்தை உண்டாக்கிய அன்றாடத் துயரங்களையும், ஆறாத மனப் புண்களையும் அவள் சங்கிலித் தொடர்போல நினைவுக்குக்கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தாள். கடைசியாக அவள் பேசினாள்:
“நீங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளும் நேரமாகிவிட்டது. நான் பாட்டுக்குப் பேசிக்கொண்டே இருக்கிறேனே. சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி முடித்துவிட என்னால் முடியுமா? முடியாது.”
அக்காவும் தம்பியும் அவளிடமிருந்து மெளனமாகவே விடை பெற்றுச் சென்றனர். வழக்கத்துக்கு மாறாக, நிகலாய் தன் தலையை அதிகம் தாழ்த்தி வணங்கியது போலவும், தன்கரத்தை அதிக அன்போடு குலுக்கியது போலவும் தாய்க்குத் தோன்றியது. சோபியா தாயை அவளது அறை வரையிலும் சென்று வழியனுப்பிவிட்டு, திரும்ப முனையும்போது வாசல் நடையில் நின்றவாறே சொன்னாள். “நிம்மதியாகத் தூங்குங்கள். நல்லிரவு!”
அவளது குரலில் பரிபூரணமான பரிவு தொனித்தது; அவளது சாம்பல் நிறக் கண்கள் ஆர்வங் கலந்த அன்போடு தாயின் முகத்தைக் கனிந்து நோக்கின.
பெலகேயா சோபியாவின் கரத்தைத் தனது இரு கரத்தாலும் பற்றிப் பிசைந்துகொண்டே சொன்னாள்:
“மிகுந்த நன்றி.”