தாய்/35
அந்தத் தார் எண்ணெய்த் தொழிலாளிகள் தங்களது. அன்றைய வேலை முடிந்த உற்சாகத்தோடு திரும்பி வந்தனர்.
அவர்களது பேச்சுக் குரல் தாயை எழுப்பிவிட்டுவிட்டது: அவள் எழுந்திருந்து, புன்னகை செய்துகொண்டும் கொட்டாவி விட்டுக்கொண்டும் வெளியே வந்து சேர்ந்தாள்.
“நீங்களோ வேலைக்குப் போனீர்கள். நானோ அங்கே சீமாட்டியைப்போல் செல்லமாகத் தூங்கினேன்” என்று கூறிக்கொண்டே அவர்களை வாஞ்சையோடு பார்த்தாள்.
“அதற்காக உன்னை மன்னித்துவிடலாம்” என்று சொன்னான் ரீபின். அவனது அமித சக்தியைக் களைப்பு ஆம்கொண்டு விழுங்கிவிட்டது. எனவே அவன் சாந்தமாக இருந்தான்.
“இக்நாத்! கொஞ்சம் தேநீர் சாப்பிட்டால் என்ன? நாங்கள் இங்கே. எங்கள் வீட்டு வேலைகளை ஒவ்வொருவராக முறை வைத்துச் செய்கிறோம். சாப்பாடும் தேநீரும் தயாரிப்பது இன்று இக்நாத்தின் வேலை, அவனது முறை.”
“இன்று நான் என் முறையை யாருக்காவது தாராளமாக சந்தோஷமாக விட்டுக் கொடுக்கிறேன்” என்று கூறிக்கொண்டே அவன் அடுப்பு மூட்டுவதற்காகச் சுள்ளிகளையும் சிராத்துண்டு விறகுகளையும் சேகரிக்க ஆரம்பித்தான்.
“நமது விருந்தாளிகளோடு இருப்பதற்கு நீ ஒருவன் மட்டுமே விரும்பவில்லை!” என்று கூறிக்கொண்டே எபீம் சோபியாவுக்கு அருகில் உட்கார்ந்தான்.
“நான் உனக்கு உதவுகிறேன். இக்நாத்” என்றான் யாகவ். அவன் அந்தக் குடிசைக்குள்ளே சென்று ஒரு ரொட்டியை எடுத்து வந்து, துண்டு துண்டாக நறுக்கி மேஜைமீது வைத்தான்.
“கேட்டாயா? யாரோ இருமுகிறார்கள்” என்றான் எபீம்.
ரீபின் தன் காதுகளைத் தீட்டிக்கொண்டு கூர்ந்து கேட்டான், தலையை அசைத்துக்கொண்டான்.
“அவனேதான். அந்த உயிருள்ள சாட்சியம்தான் வருகிறது” என்று சோபியாவிடம் சொன்னான் அவன்; “என்னால் மட்டும் முடியுமானால், நான் அவனை உர் ஊராக அழைத்துச் சென்று, ஒவ்வொரு சந்தியிலும் அவனை நிறுத்தி, அவன் பேச்சை எல்லா ஜனங்களும் கேட்கும்படி செய்வேன்: அவன் எப்பொழுதும் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருப்பான். ஆனால் அவன் பேச்சு எல்லோரும் கேட்கவேண்டிய பேச்சு.”
மஞ்சள் வெயில் கறுத்தது; அமைதியும் அதிகமாகியது; அவர்களது பேச்சுக் குரலும் தணிந்தது. சோபியாவும் தாயும் மிகுந்த களைப்பினால் மெல்லமெல்ல அசைந்து வேலை செய்யும் அந்த முஜீக்குகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்; அவர்களும் பதிலுக்கு அந்தப் பெண்களையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
காட்டுக்குள்ளிருந்து ஒரு நெடிய கூனிப்போன உருவம் கம்பை ஊன்றிக் கொண்டே வந்தது. அந்த மனிதனின் சிரமம் நிறைந்த சுவாசத்தை அவர்கள் அனைவருமே கேட்க முடிந்தது.
“வந்துவிட்டேன்” என்று சொல்லி முடித்தான் அவன். அதற்குள் அவனைக் குத்திருமல் அலைத்துப் புரட்டியது.
அவன் ஒரு பழங் கந்தையான நீளக்கோட்டை அணிந்திருந்தான். அந்தக் கோட்டு கால்வரையிலும் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது அமுங்கிப்போன வட்டமான தொப்பிக்குக் கீழே சிலிர்த்துக் குத்திட்டு நிற்கும் மஞ்சள் நிற ரோமங்கள் தெரிந்தன. அவனது மஞ்சள் பாரித்த ஒட்டிய முகத்தில் மெல்லிய தாடி அழகு செய்து கொண்டிருந்தது. அவனது உதடுகள் நிரந்தரமாகத் திறந்து காணப்பட்டன. அவனது கண்கள் ஆழ்ந்து குழிந்து இருண்டு பள்ளத்தில் பதிந்து ஜுரத்தில் பிரகாசித்தன.
“நீங்கள் புத்தகங்கள் கொண்டு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்று ரீபின் சோபியாவை அறிமுகப்படுத்தி வைத்தபோது அவன் சொன்னான்.
“ஆமாம்” என்றாள் அவள்.
“ரொம்ப நன்றி—எல்லா மக்களின் சார்பாகவும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்கள் இன்னும் உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனால், எனக்கு அது தெரியும். எனவே அவர்கள் சார்பில் நான் நன்றி கூறுகிறேன்.”
அவன் பரபரவென்று சுவாசித்தான்; அவனது சுவாசம் ஆசுவாசமின்றி ஆழமின்றிப் பதைபதைப்போடு இயங்கியது. அவனது குரல் அடிக்கடி தடைப்பட்டது. பலமற்ற கரங்களின் எலும்பு விரல்கள் கோட்டுப் பித்தான்களை மாட்டுவதற்காக நெஞ்சுத் தடத்தில் தடுமாறித் தடவின.
“இந்த நேரத்தில் நீங்கள் காட்டுப் பக்கம் வருவது உங்கள் உடல் நிலைக்கு நல்லதல்ல. காட்டில் ஈரமாயும் புழுக்கமாயும் இருக்கிறது.” என்றாள் சோபியா.
“எனக்கு இனி எதுவுமே நல்லதல்ல” என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு சொன்னான் அவன். “சாவு ஒன்றுதான் இனி எனக்கு நல்லது!”
அவனது குரலைக் கேட்டாலே நெஞ்சில் வேதனை உண்டாயிற்று: அவனது தோற்றம் முழுவதும் ஓர் அதீதமான அனுதாப உணர்ச்சியையே கிளறிவிட்டது. அந்த அனுதாப உணர்ச்சியால் எந்தப் பலனும் இல்லாததோடு, வெறும் கசப்புணர்ச்சியே மிஞ்சி நிற்கும் என்பது தெரிந்திருந்தும்கூட, அனுதாபம் உண்டாகத்தான் செய்தது. அவன் ஒரு பீப்பாயின் மீது அமர்ந்து தனது முழங்கால்களை மிகவும் நிதான்மாக மடக்கினான்; அந்தக் கால்களை ஒடிந்துவிடாதபடி பதனமாக மடக்குவது மாதிரி இருந்தது அவனது செய்கை. வியர்த்திருந்த நெற்றியைத் துடைத்தான். அவன் முடியோ சருகுபோல உயிரற்றிருந்தது.
நெருப்புப் பற்றியெரிந்தது. சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் அசைந்தாடும்படியாக அனல் அடித்தது. காட்டுக்குள் இருள் கவிந்து நிழலாடியது. நெருப்புக்கு மேலாக, உப்பிய கன்னங்களோடு விளங்கும் இக்நாத்தின் உருண்ட முகம் பிரகாசித்தது. நெருப்பு மீண்டும் அணைந்துவிட்டது. புகை நாற்றம் மண்டியது. மீண்டும் இருளும் அமைதியும் நிலவியது: எனவே அந்த நோயாளி மனிதனின் கரகரத்த குரலை அப்போது தெளிவாகக் கேட்க முடிந்தது.
“நான் இன்னும் சாதாரண மக்களுக்கு உதவ முடியும். ஒரு பெரிய குற்றத்தின் உயிருள்ள ஞாபகச் சின்னமாக நான் விளங்க முடியும்.... இங்கே, என்னைப்பாருங்கள்.... இருபத்தெட்டு வயதிலேயே நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பத்து வருஷங்களுக்கு முன்னால், நான் ஐநூறு பவுண்டுக் கனமுள்ள சாமான்களைக்கூடக் கொஞ்சமும் முக்கி முனகாமல் சுமந்து சென்றுவிடுவேன். அந்த மாதிரியான உடல் வளம் மட்டும் இருந்திருந்தால், என்னால் எழுபது வயது வரை கூடச் சுலபமாக உயிர்வாழ முடியும் என நான் நினைத்தேன். ஆனால், நானோ மேற்கொண்டு பத்தே பத்து வருஷங்கள்தான் உயிர்வாழ முடிந்தது. இப்போதோ — இதுதான் என் அந்திம காலம். என்னுடைய முதலாளிகள் என்னைச் சுரண்டிக் கொள்ளையிட்டுவிட்டார்கள். என்னுடைய வாழ் நாளின் நாற்பது வருஷ காலத்தை. நாற்பது வருஷ வாழ்வையே அவர்கள் பறித்துக்கொண்டுவிட்டார்கள்!”
“இதுதான் அவன் பாடுகிற பாட்டு!” என்றான் ரீபின்.
மீண்டும் நெருப்புப் பற்றிக்கொண்டு முன்னைவிடப் பிரகாசமாகவும் பெரிதாகவும் எரிய ஆரம்பித்தது. மீண்டும் அங்கு சூழ்ந்து நின்ற இருள் தோப்பைப் பார்க்க விலகியோடியது; மீண்டும் அந்த நெருப்பை நெருங்கி வந்து ஊமையாக, வெறுப்போடு நடமிட்டு அசைந்தாடத் தொடங்கியது. ஈரவிறகு இரைச்சலோடு வெடித்தது. வெது வெதுப்பான காற்று வீசியபோது மரத்திலைகள் சலசலத்தன. சிவப்பும் மஞ்சளும் கலந்த தீ நாக்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி உற்சாகமாக விளையாடின; அவை மேலோங்கி எரியும்போது தீப்பொறிகள் உதிர்ந்து பொறிந்தன. நெருப்புக்கனலும் ஒரு தீச்சருகும் பறந்து சென்று அணைந்து செத்தன. வானத்துத் தாரகைகள் பூமியை நோக்கிப் புன்னகை பூத்தன; அந்தத் தீப்பொறிகளைத் தமது நட்சத்திர மண்டலத்துக்குக் கவர்ந்திழுக்க முயன்றன.
“இது என் பாட்டல்ல. துர்ப்பாக்கியம் நிறைந்த தங்கள் வாழ்க்கை எத்தனை பேருக்கு ஒரு பெரிய பாடமாக விளங்கக்கூடும் என்பதையே அறியாத பல்லாயிரம் மக்களின் பாட்டு இது. எத்தனை மக்கள் தங்களது உழைப்பினால் முடமாகிறார்கள், எத்தனைபேர் வாய் பேசாது பட்டினிச் சாபு சாகிறார்கள்......” அவன். மீண்டும் இருமலினால் குனிந்து குலுங்கினான்.
யாகவ் மேஜைமீது ஒரு பாத்திரம் நிறைய ‘க்லாஸ்’ பீரும், வசந்த காலத்து வெங்காயம் சிலவற்றையும் கொண்டு வந்துவைத்தான்.
“சவேலி, இங்கே வா, நான் உனக்குக் கொஞ்சம் பால்கொண்டு வந்திருக்கிறேன்” என்றான் அவன்.
சவேலி தலையை ஆட்டினான். ஆனால் யாகவ் கக்கத்தில் கைகொடுத்து அவனை மேஜையருகே கூட்டிச் சென்றான்.
“அவனை ஏன் இங்கு வரவழைத்தீர்கள்? அவன் எந்த நிமிஷத்திலும் சாகக்கூடிய நிலைமையிலிருக்கிறானே” என்று ரீபினை நோக்கிக் கண்டிக்கும் தோரணையில் சொன்னான் சோபியா.
“எனக்குத் தெரியும்” என்றான் ரீபின், “ஆனால் அவனால் முடிந்த மட்டும் அவன் பேசிக்கொண்டிருக்கட்டும். அவனது வாழ்க்கை எந்த நல்ல காரணத்துக்காகவும் தியாகம் செய்யப்படவில்லை. அந்தக் கடைசிக் காலத்தையாவது அவன் நல்லபடியாய்ச் செலவழிக்கட்டுமே. எல்லாம் சரியாய்ப் போகும் — நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்!”
“இதில் என்ன, நீங்கள் ஆனந்தம் காண்கிறீர்கள் போலிருக்கிறதே!” என்றாள் சோபியா.
ரீபின் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு விரக்தியோடு சொன்னான்:
“சீமான் வீட்டுப் பிறவிகளான நீங்கள் சிலுவையில் அறையப்பட்டு முனகித் தவிக்கும் ஏசு சிறிஸ்துவைக் கண்டாலும்கூட ஆனந்தம் கொள்வீர்கள். ஆனால் நாங்களோ இந்த மனிதனிடமிருந்து ஒருபாடம் கற்றுக்கொள்ள விரும்புகிறோம்; நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கருதுகிறோம்.......”
தாய் பயத்தோடு தன் புருவத்தை உயர்த்தியவாறே சொன்னாள்.
“சரி, சரி. இது போதும்.”
மீண்டும் அந்த நோயாளி மேஜையருகே தானிருந்த இடத்திலிருந்தே பேசத் தொடங்கினான்:
“அவர்கள் ஏன் மக்களை வேலையால் சாகடிக்கிறார்கள்? ஒரு மனிதனின் வாழ்நாளை அவர்கள் ஏன் கொள்ளையிட்டுப் பறிக்கிறார்கள்? எங்கள் முதலாளி—நான் நெபியோதவ் தொழிற்சாலையில் வேலை பார்த்தேன்—ஒரு பாட்டுக்காரிக்குக் குளிப்பதற்காக தங்கப் பாத்திரம் ஒன்றைப் பரிசளித்தான். அவளது படுக்கைக்குக் கீழே போடுவதற்கு ஒரு தங்கத்தாலான மூத்திரச் சட்டியைக்கூடப் பரிசளித்தான்; என்னுடைய பலமும் என்னுடைய வாழ்க்கையும் அந்தப் பாத்திரத்துக்குள்ளேயே போய்விட்டது. அதற்காகத்தான் நான் என் வாழ்க்கையைப் பறிகொடுத்தேன். என்னை வேலையைக் கொடுத்தே கொன்றுவிட்ட அந்த மனிதன் என்னுடைய வாழ்க்கையின் ரத்தத்தைக் கொண்டு தன் வைப்பாட்டியைக் களிப்பூட்டினான். என்னுடைய ரத்தத்தைக் கொண்டு அவன் அவளுக்குத் தங்கத்தாலான மூத்திரச் சட்டியை வாங்கிகொடுத்தான்!”
“கடவுளின் அம்சமாகவும் கடவுளின் பிம்பமாகவும்தான் மனிதன் பிறந்தானாம்! அந்த உருவத்துக்கு அவர்கள் செய்த உபகாரத்தைப் பார்த்தீர்களா?” என்று கசந்துபோய்ச் சொன்னான் எபீம்.
“பின்னே. சும்மா இராதே!” என்று தன் கையை மேஜைமீது தட்டி அறைந்துகொண்டே சொன்னான் ரீபின்.
“அத்துடன் நிறுத்திவிடாதே” என்றான் யாகவ்.
இக்நாத். ஒரு சிரிப்புச்சிரித்தான். ரீபின் எப்போதெப்போது பேசினாலும் அடங்காத அகோரப்பசிகொண்ட மனிதனின் பரபரப்போடு அந்த மூன்று இளைஞர்களும் அவனது பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கத் துடிப்பதைத் தாய் கண்டறிந்தாள். சவேலியின் பேச்சு அவர்களது முகத்தில் ஒரு விசித்திரமான ஏளன பாவத்தைப் படரச் செய்தது. அந்த பாவம் துல்லியமாகவும் வெளியே தெரிந்தது; அந்த நோயாளிக்காக அவர்கள் கொஞ்சம்கூட அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.
“அவன் சொல்வதெல்லாம் உண்மைதானா?” என்று சோபியாவின் பக்கமாகச் சாய்ந்துகொண்டு மெதுவாகக் கேட்டாள் தாய்.
“ஆமாம் உண்மைதான்” என்று உரத்த குரலில் பதில் சொன்னாள் சோபியா. “இந்த மாதிரி விஷயங்களைப்பற்றி மாஸ்கோ பத்திரிகைகளில்கூட எழுதினார்கள்.”
“ஆனால் குற்றவாளிதான். தண்டிக்கப்படவே இல்லை!” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் ரீபின். “அவனைத் தண்டித்தே இருக்க வேண்டும். அவனை ஜனங்களுக்கு மத்தியில் உருட்டித் தள்ளி, கண்டம் கண்டமாக, துண்டம் துண்டமாக வெட்டித் தறித்து. அவனது அழுகிப்போன மாமிசத்தை நாய்களுக்கு விட்டெறிந்திருக்க வேண்டும்! ஜனங்கள் மட்டும் விழித்தெழுந்துவிட்டால், அவர்கள் கொடுக்கின்ற தண்டனை மகாப்பெரிய தண்டனையாகவே இருக்கும், தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கழுவுவதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தத்தைச் சிந்தித் தீர்ப்பார்கள்! அந்த ரத்தம் அவர்களது சொந்த ரத்தம்தான்! அவர்களது ரத்தக் குழாயிலிருந்து உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கப்பட்ட ரத்தம்தான்! எனவே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை அகற்றுவதற்காக பெருமளவு ரத்தம் சிந்துகிறார்கள்.
"குளிருகிறது” என்றான் அந்த நோயாளி.
அவனை எழுந்திருக்கச் செய்து நெருப்பருகே கொண்டுபோய் உட்கார வைட்பதற்கு யாகவ் உதவி செய்தான்.
இப்போது நெருப்பு பிரகாசமாக எரிந்தது: உருவமற்ற நிழல்கள் அதற்கு மேலாக நடுங்கியாடிக்கொண்டே, தீ நாக்குகளின் உற்சாகம் நிறைந்த விளையாட்டை வியந்து நோக்கிக்கொண்டிருந்தன. சவேலி ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து, மெலிந்து வெளுத்துப்போன தனது கரங்களை நெருப்பு வெக்கையை நோக்கி நீட்டினான். ரீபின் அவனை நோக்கித் தலையை அசைத்துவிட்டு, சோபியாவிடம் பேசத் தொடங்கினான்:
“இவன் புத்தகங்களைவிட, தெளிவாகக் கூறிவிட்டான். ஒரு யந்திரம் ஒரு தொழிலாளியைக் கொன்றால், அல்லது அவனது கையைத் துண்டாக்கி, அவனை முடமாக்கினால், அது அவன் குற்றம்தான் என்று சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒரு மனிதனின் ரத்தத்தைக் கொஞ்சங்கொஞ்சமாக உறிஞ்சித் தீர்த்து, அவனைக் குப்பைத் தொட்டியில் எறியும் சக்கைபோல விட்டெறிந்தால், அதற்கு மட்டும் விளக்கமே கிடையாதாம்! ஒருவனை ஒரேயடியில் படுகொலை செய்வதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஆனால் ஒரு மனிதனைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை செய்து அவனைக் கொல்வதும், அதிலே ஆனந்தம் பெறுவதும்தான் எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மக்களை வதைக்கிறார்கள்? அவர்கள் ஏன் நம்மையெல்லாம் வாட்டி வதைபுரிகிறார்கள்? அந்தச் சித்திரவதையில் ஆனந்தம் காண்பது அவர்களது சொந்த சுகானந்தத்துக்காக! அதன் மூலம் அவர்கள் இந்த உலகத்தில் சுகபோக வாழ்க்கை நடத்துவதற்கு: தாங்கள் விரும்புவதையெல்லாம் மனிதத்தையே விலையாகக் கொடுத்து வாங்கி அனுபவிப்பதற்கு; பாட்டுக்காரிகளை, பந்தயக் குதிரைகளை, வெள்ளிக் கத்திகளை, தங்கத் தட்டுகளை, தங்கள் குழந்தைகளுக்கு விலையுயர்ந்த விளையாட்டுச் சாமான்களையெல்லாம் வேண்டுமட்டும் வாங்கிக் குவிப்பதற்குத்தான்! ‘நீ பாட்டுக்கு வேலையைச் செய்; கொஞ்சம் சிரமப்பட்டு வேலையைச் செய்; அப்படிச் செய்தால்தான் உன் உழைப்பின் மூலம் நான் பணத்தை மிச்சம் பிடிக்க முடியும்; மிச்சம் பிடித்து என் வைப்பாட்டி மூத்திரம் பெய்வதற்குத் தங்கப்பாத்திரம் வாங்கிக் கொடுக்க முடியும்! என்கிறார்கள் அவர்கள்!”
தாய் கவனித்துக் கேட்டாள். அவளது கண் முன்னால், அந்த இரவின் இருளுக்கு ஊடே, தனது மகன் பாவெலும் அவனது தோழர்களும் தேர்ந்தெடுத்துள்ள புனித மார்க்கம் பிர்காசமாக ஒளிவிட்டுத் தெரிந்தது.
சாப்பாடு முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்துகொண்டார்கள். தீ நாக்குகள் விறகுக் கட்டைகளைப் பேராசையோடு நக்கிக்கொடுத்தன. அவர்களுக்குப் பின்னால் இருள் திரைபோலத் தொங்கி, வானத்தையும் தோப்பையும் மறைத்து நின்றது. அந்த நோயாளி தனது அகன்று விரிந்த கண்களால் நெருப்பையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் இடைவிடாது இருமினான்; அவனது உடம்பே குலுங்கியது. நோயினால் பாழ்பட்டுப்போன உடம்பிலிருந்து அவனது வாழ்வின் மிச்ச சொச்சங்கள் அனைத்தும் பொறுமையிழந்து விடுபெற முயன்று போராடுவதுபோல இருந்தது. நெருப்பின் ஒளி அவனது முகத்தில் விளையாடியது; எனினும் அவனது உயிர்ப்பற்ற சருமத்தில் அந்த ஒளி எந்த உணர்ச்சியையும் உருவேற்ற இயலவில்லை. அவனது கண்கள் மட்டும் அணையப்போகும் நெருப்பைப் போல் பிரகாசித்தன.
“சவேலி, நீ உள்ளே போய்ப் படுத்துக்கொள்வது நல்லது” என்று அவன் பக்கமாகச் சாய்ந்தவாறு சொன்னான் யாகவ்.
“ஏன்?” என்று அந்த நோயாளி சிரமத்தோடு கேட்டான். “நான் இங்கேயே இருக்கிறேன், மனிதர்களோடு இருப்பதற்கு எனக்கு அதிக காலமில்லை.”
அவன் தன்னைச் சுற்றிலும் பார்த்தான்; சிறிது நேரம் கழித்து வெளுத்துப்போன புன்னகையுடன் பேசினான்:
“உங்களோடு இருப்பதே எனக்கு நல்லது. உங்களைப் பார்க்கும்போது, பேராசையின் காரணமாகக் கொல்லப் பட்டவர்களுக்காக. கொள்ளையிடப்பட்டவர்களுக்காக நீங்கள் பழிக்குப்பழி வாங்குவீர்கள், வஞ்சம் தீர்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்.” அவனுக்கு யாருமே பதில் சொல்லவில்லை. அவனது தலை பலமற்றுச் சோர்ந்து மார்பின் மீது சரிந்தது; சீக்கிரமே அவன் தூங்கிப்போய்விட்டான். ரீபின் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகச் சொன்னான்:
“இவன் எப்போதும் இங்கே வந்து உட்கார்ந்து இதையே. இந்த மனிதனின் ஏமாற்றத்தைப் பற்றியே பேசுவான். அவனது இதயம் முழுவதிலும் இந்த ஏமாற்றம்தான் நிரம்பியிருக்கின்றது. அந்த உணர்ச்சி அவனது கண்களையே திரையிட்டுக் கட்டிவிட்ட மாதிரி அவனுக்குத் தோன்றுகிறது; அதைத் தவிர வேறு எதையுமே அவன் பார்ப்பதில்லை; உணர்வதில்லை.”
அவன் வேறு என்னத்தைத்தான் பார்க்க வேண்டும்?” என்று ஏதோ சிந்தித்தவளாய்க் கேட்டாள் தாய். “தங்களது முதலாளிகள், மானாங்காணியாகவும் துராக்கிரமமாகவும் பணத்தைச் செல்விட்டுக் கொண்டிருப்பதற்காக, தினம் தினம் ஆயிரக்கணக்கான மக்கள் உழைத்து உழைத்து, அந்த உழைப்பினாலேயே கொல்லப்பட்டுச் சாகிறார்கள் என்றால், இதைவிட உனக்கு வேறு என்ன விஷயம்தான் வேண்டும் என்கிறாய்?”
“ஆனால் இவன் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பது எரிச்சலாயிருக்கிறது” என்றான் இக்நாத், “இவன் பேச்சை ஒரு தடவை கேட்டுவிட்டாலே அதை மறக்க முடியாது: மறக்க முடியாத அதே விஷயத்தையே அவன் திருப்பித் திருப்பித் தினம் பாடம் சொல்லிக்கொண்டிருக்கிறானே.”
“ஆனால், இந்த ஒரே விஷயத்தில் சகல விஷயங்களுமே. வாழ்க்கை முழுவதுமே அடங்கிப் பொதிந்திருக்கிறது!” என்று சோகத்தோடு கூறினான் ரீபின். “அதைப் புரிந்துகொள்ளத்தான் வேண்டும். நானும் இந்தக் கதையை எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இருந்தாலும்கூட, எனக்குச் சமயங்களில் சில சந்தேகங்கள்கூடத் தோன்றுவதுண்டு. பணக்காரர்களையும் ஏழைகளையும், - எல்லோரையுமே ஒரு மாதிரியாகவே எண்ணிப் பார்ப்பதற்கும், மனிதனது தீய குணங்களையும் முட்டாள்தனங்களையும் நம்பவிரும்பாதிருப்பதற்கும் சில சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். பணக்காரர்கள்கூடத் தம்மை மறந்து செல்ல முடியும்! சிலர் பசியால் குருடாகிப் போகிறார்கள், சிலர் தங்கத்தால் குருடாகிப் போகிறார்கள். அதுதான் சங்கதி! ‘ஓ மனிதர்களே, சகோதரர்களே! உதறியெழுந்து வாருங்கள், தன்னலம் கருதாது நேர்மையோடு சிந்தியுங்கள்’ என்று நினைக்கத் தோன்றும்.”
அந்த நோயாளி அசைந்து கொடுத்தான், கண்களைத் திறந்தான், பிறகு தரையில் படுத்துவிட்டான். யாகவ் வாய் பேசாது எழுந்திருந்து வீட்டிற்குள் சென்று ஒரு கம்பளிக்கோட்டைக் கொண்டுவந்து அந்த நோயாளியைப் போர்த்தி மூடினான், மீண்டும் சோபியாவுக்கு அருகில் சென்று உட்கார்ந்துகொண்டான்.
குதூகலம் நிறைந்து கும்மாளியிடும் நெருப்பு தன்னைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த கரிய உருவங்களை ஒளிரச் செய்தது. நெருப்பின் இரைச்சலோடும், வெடிக்கும் சத்தத்தோடும், அந்த மனிதர்களின் குரல்களும் சேர்ந்து கலந்து ஒலித்துக்கொண்டிருந்தன.
உயிர் வாழும் உரிமைக்காகச் சகல தேசத்திலுமுள்ள மக்கள் அனைவரும் நடத்துகின்ற போராட்டங்களைப் பற்றியும், ஜெர்மனி தேசத்தில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சிகளைப் பற்றியும். அயர்லாந்து நாட்டு மக்களின் பஞ்ச நிலையைப் பற்றியும், இடைவிடாது அடிக்கடி நடத்தப்படும் பிரெஞ்சுத் தொழிலாளர்களின் சுதந்திரப் போராட்டங்களைப் பற்றியும் சோபியா அவர்களுக்கு எடுத்துச் சொன்னாள்.
இருள் திரை படிந்து கவிந்த அந்தத் தோப்பு வெளியிலே, மரங்கள் அடர்ந்து செறிந்த அந்த வெட்ட வெளியிலே, இருண்ட வானமே மேல் முகடாக விளங்கும் அந்த அத்துவானப் பிரதேசத்தில், நெருப்பால் ஒளிபெற்று, வியப்பும் வெறுப்பும் நிறைந்த நிழலுருவங்கள் சூழ்ந்த அந்த இடத்திலே உண்டு கொழுத்து உறங்கும் பேராசைக்காரர்களின் உலகை அசைத்து ஆட்டி உலுப்பிய சம்பவங்களைப் பற்றிய விவரங்கள் உயிர்பெற்று ஒலித்தன. சத்தியத்துக்காகவும் சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட வீரர்களின் திருநாமங்கள் உச்சரிக்கப்பட்டன; போராட்டங்களால் களைத்து, போராட்டங்களால் ரத்தம் சிந்தித் தோய்ந்த ஒவ்வொரு நாட்டு மக்களும் வரிசை வரிசையாக அங்கு வந்து சென்றார்கள்.
அந்தப் பெண்ணின் அடங்கிய குரல் மெதுவாக ஒலித்தது. கடந்த காலத்தின் எதிரொலி போன்ற அந்தக் குரல் அவர்களது நம்பிக்கைகளைக் கிளறிவிட்டது; தீர்மானங்களைத் தூண்டிவிட்டது. பிற தேசங்களிலுள்ள தங்கள் சகோதரர்களைப் பற்றிய கதைகளைக் கேட்டவாறே அந்த மனிதர்கள் அசையாது வாய்பேசாது உட்கார்ந்திருந்தனர். உலகத்தின் சகல மக்களும் எந்த ஒரு புனித லட்சியத்துக்காகப் போராடுகிறார்களோ, அந்த லட்சியம் - சுதந்திரத்துக்காக நடைபெறும் இடையறாத முடிவற்ற போராட்டம்—அவர்களுக்கு வரவரத் தெளிவாகியது. அந்தப் பெண்ணின் மெலிந்த வெளுத்த முகத்தைப் பார்க்கப் பார்க்க அந்தப் போராட்டமும் போராட்ட லட்சியமும் அவர்களுக்குப் புரிந்து வரலாயின. அவர்கள் தங்களது சொந்த எண்ணங்களையும், விருப்பங்களையும், தம்மால் அறிய முடியாத வேற்று இன மக்களிடம் கண்டார்கள். அந்த மனிதர்களிடமிருந்து தங்களை ஒரு கரிய ரத்தம் தோய்ந்த கடந்த காலத்தின் இருள் படிந்த திரைபிரித்து நிற்பதாகவும் கண்டார்கள்: தங்களது மனத்தாலும் இதயத்தாலும் அவர்கள் இந்தப் பரந்த உலகம் முழுமையோடும் தொடர்புகொண்டார்கள். ஒரு புதிய ஒளி நிறைந்த ஆனந்த வாழ்க்கைக்காக, தங்களது ரத்தத்தையே சிந்தி அர்ப்பணித்து, உலகத்திலே சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற உறுதியான கொள்கைக்காக, வெகுகாலமாக ஒன்றுபட்டு நின்று, அந்த லட்சியத்தின் வெற்றிக்காக சகலவிதமான பெருந்துன்பங்களையும் தாங்கிச் சகித்து நின்ற பல்வேறு நாட்டு மக்களினத்திலும் அவர்கள் தங்கள் தோழர்களைக் கண்டார்கள். சகல மக்கள் மீதும் உளப்பூர்வமாகத் தோன்றும் ஒரு புதிய பந்தபாச உணர்ச்சி சுடர்விட்டு எழுந்தது; உலகத்துக்கே ஒரு புதிய இதயம் - எல்லாவற்றையும் ஒன்றாக இணைக்க வேண்டும், எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற தீராத ஆவலுணர்ச்சியால் துடிதுடிக்கும் ஒரு புதிய இதயம் —பிறந்துவிட்டது!
“சர்வ தேசங்களிலுமுள்ள சகல தொழிலாளர்களும் நிமிர்ந்து நின்று, “போதும் போதும்! இது போன்ற வாழ்க்கை இனி எமக்குத் தேவையில்லை’ என்று கோஷித்து விம்மும் காலம் ஒருநாள் வரத்தான் போகிறது!” என்று நிச்சய தீர்க்கத்தோடு கூறினாள் சோபியா. “தங்களது பேராசையின் பலத்தைத் தவிர, வேறு எந்தவிதமான நிஜ பலத்தையும் பெற்றிராத இன்றைய உலகின் ‘பலசாலிகள்’ அன்றைய தினத்தில் அழிக்கப்டுவார்கள். இந்த உலகம் அவர்களது காலடியைவிட்டு நழுவி மறையும். அவர்களுக்குத் தப்பிப் பிழைப்பதற்கு எந்த உதவியும், எந்த மார்க்கமும் இருக்கவே இருக்காது!”
“அவ்வாறு நேரப்போவது உறுதி!” என்று தலைதாழ்த்திச் சொன்னான் ரீபின். “நாம் மட்டும் நம்மிடமுள்ள சகலவற்றையும், நம்மையுமே கொடுக்க, தியாகம் செய்யத் தயாராயிருந்தால், நம்மால் செய்ய முடியாத காரியம் எதுவுமே இருக்க முடியாது!”
தாய் தன் புருவங்களை உயர்த்தி, உதடுகளிலே வியப்பு நிறைந்த ஆனந்தப் புன்னகை தவழ, அந்தப் பேச்சைக் கேட்டாள். இயற்கைக்கு முற்றும் பொருந்தாததுபோலத் தோன்றிய சோபியாவின் குணம்— எதையுமே அளவுக்கு மீறிய அநாயாசத்தோடு வெடுக்கென்று தூக்கியெறிந்து வெட்டிப் பேசுவதாகத் தோன்றிய அவளது குணம்— அவள் கூறிய ஆர்வமிக்க, தங்கு தடையற்ற கதையின் போக்கிலே அழிந்து மறைந்துபோய்விட்டது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். அன்றைய இரவின் அமைதியும், நெருப்பின் விளையாட்டும்; சோபியாவின் முகமும் அவளுக்குப் பிடித்துப்போய்விட்டன; ஆனால் அவளுக்கு மிகவும் பிடித்துப்போன விஷயம், அந்த முஜீக்குகள் அனைவரும் காட்டிய பரிபூரணமான ஈடுபாட்டு உணர்ச்சிதான்! அவர்கள் அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள். சர்வதேசங்களோடும் தங்களை இணைத்துப் பிணைக்கும் பட்டுக்கயிறு போன்ற அந்தக் கதை. இடையிலே அறுந்துவிடக்கூடாதே என்ற பயமும் அந்த இடையறாத கதையின் போக்குத் தடைப்பட்டு நின்றுவிடக் கூடாதே என்ற அங்கலாய்ப்புமே அவர்களை அப்படி அசையாதிருக்கச் செய்தன, இடையில் மட்டும் அவர்களில் யாராவது ஒருவன் எழுந்திருந்து அரவமே இல்லாமல் ஒரு விறகுக்கட்டையை எடுத்து நெருப்பில் மெதுவாகப் போடுவான். உடனே தீப்பொறிகள் தெறித்துச் சிதறும்; புகைச்சுழல் மண்டியெழும்பும். உடனே அவன் தன் கைகளை வீசி அந்தத் தீப்பொறிகளை விலக்குவான்; அந்தப் பெண்கள் பக்கமாகப் புகை மண்டாதபடி விசிறிவிடுவான்.
இடையிலே யாகவ் எழுந்திருந்து அமைதியாகச் சொன்னான்:
“கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்தி வையுங்கள்.”
இப்படிக் கூறிவிட்டு அவன் வீட்டுக்குள்ளே ஓடிப்போய் சில துணி மணிகளைக் கொண்டு வந்தான்; பிறகு அவனும் இக்நாதுமாக, அந்தத் துணிகளைத் தங்கள் விருந்தாளிகளின் தோள்மீதும் கால்மீதும் போர்த்தி மூடினார்கள். பிறகு சோபியா மீண்டும் பேசத் தொடங்கினாள். தங்களது வெற்றி தினத்தைப் பற்றிய நினைவுச் சித்திரத்தை வருணித்தாள், தமது சொந்த பலத்தின்மீது அவர்கள் நம்பிக்கை விசுவாசம்கொள்ளும்படி தூண்டிவிட்டாள்: உண்டு கொழுத்து மதர்த்துப்போன உதவாக்கரை மனிதர்களின் முட்டாள்தனமான நப்பாசைகளையெல்லாம் பூர்த்தி செய்து வைப்பதற்காக, தங்களது உழைப்பையும் வாழ்வையும் விழலுக்கு இறைத்துக்கொண்டிருக்கும் உலக மக்களோடு, இவர்களும் ஒன்று கலந்து ஏகத்தன்மை பெற வேண்டும் என்ற அந்தரங்க உணர்ச்சியைக் கிளறித் தூண்டிவிட்டாள். சோபியாவின் வார்த்தைகளால் தாய் உணர்ச்சிவசப்பட்டு விடவில்லை. ஆனால், அவள் சொல்லிய விவரங்களால் அவர்கள் அனைவரது உள்ளத்திலும் எழும்பிய ஆழ்ந்த உணர்ச்சி தாயின் உள்ளத்திலும் நிறைவைப் பொழிந்தது; அன்றாட உழைப்பினால் அடிமைப்பட்டுத் தளையிட்டுக்கிடக்கும் மக்களுக்கு நேர்மையான சிந்தனையையும், சத்தியத்தையும், அன்பையும் பரிசாகக் கொண்டுவந்து தர வேண்டும் என்ற காரணத்துக்காக, தங்களது வாழ்க்கையையே துயரத்துக்கும் துன்பத்துக்கும் ஆளாக்கி அர்ப்பணித்தவர்களின்மீது ஒரு மனப்பூர்வமான நன்றியுணர்ச்சி அவள் உள்ளத்திலே நிரம்பி நின்றது.
“கடவுள் அவர்களுக்கு அருள் செய்யட்டும்” என்று தன் கண்களை மூடித் தனக்குள்ளாகச் சிந்தித்துக்கொண்டாள் தாய்.
அருணோதயப் பொழுதில்தான் களைத்து ஓய்ந்துபோன சோபியா தன் பேச்சை நிறுத்தினாள். நிறுத்திவிட்டு, தன்னைச் சுற்றி சிந்தனையும் பிரகாசமும் தோன்றும் முகங்களோடு இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்.
“நாம் புறப்படுவதற்கு நேரமாகிவிட்டது” என்றாள் தாய்.
“ஆமாம்” என்றாள் சோபியா.
அந்த இளைஞர்களில் ஒருவன் உரத்துப் பெருமூச்செறிந்தான்.
“நீங்கள் போவது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது” ‘என்று வழக்கத்துக்கு மாறான மெல்லிய குரலில் சொன்னான் ரீபின்; “நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். அது ஒரு பெரிய விஷயம்—மக்களுக்கு ஒருமையுணர்ச்சியை ஊட்டுவது பெரிய விஷயம்! லட்சோபலட்சமான மக்களும் நாம் என்ன விரும்புகிறோமோ, அதையே விரும்புகிறார்கள் என்பதை அறிய நேரும்போது. அந்த உணர்ச்சி நம் இதயத்தில் அன்புணர்ச்சியே ஒரு மாபெரும் சக்திதான்!”
“ஆமாம். நீ அன்பு செய். அவன் உன் கழுத்தை வெட்டட்டும்” என்று கூறிச் சிரித்துக்கொண்டே எழுந்தான் எபீம். “சரி, மிகயீல் மாமா, யார் கண்ணிலும் படுவதற்கு முன்பே இவர்கள் போய்விடுவதுதான் நல்லது. அப்புறம் நாம் இந்தப் பிரசுரங்களைப் பரப்பிவிடத் தொடங்கியவுடனேயே அதிகாரிகள் இவற்றைக்கொண்டு வந்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முனைவார்கள். ‘இங்கே வந்தார்களே, அந்த இரு யாத்திரிகர்கள், ஞாபகமிருக்கிறதா?’ என்று பிறகு யாராவது கண்டவர்கள் சொல்லித் தொலைக்கப் போகிறார்கள்....”
“அம்மா, நீ எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி” என்றான் ரீபின். “உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குப் பாவெலைப் பற்றியே ஞாபகம் வருகிறது; நீ எவ்வளவு நல்ல சேவை செய்கிறாய்!”
இப்போது ரீபின் சாந்த குணத்தோடு இருந்தான், மனம்விட்டுப் புன்னகை புரிந்தான். காற்று குளிர்ந்து வீசியது. இருந்தாலும், அவன் கோட்டுக்கூடப் போடாமல், சட்டையைக்கூடப் பொத்தானிட்டு மூடாமல், திறந்த மார்போடு நின்றான். அவனது பெரிய தோற்றத்தைப் பார்த்தவாறே தாய் அன்போடு கூறினாள்:
“நீ உன் உடம்பில் ஏதாவது போர்த்திக்கொள். ஒரே குளிராயிருக்கிறது.”
“என் நெஞ்சுக்குள்ளே நெருப்பு எரிகிறதே” என்றான் அவன்.
அந்த மூன்று இளைஞர்களும் நெருப்பைச் சுற்றி நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்; அவர்களது காலடியிலே அந்த நோயாளி கம்பளிக் கோட்டினால் போர்த்தப்பட்டுக் கிடந்தான். வானம் வெளிறிட்டது. இருட்படலம் விலகிக் கரைந்தது. சூரியனின் வரவை நோக்கி இலைகள் படபடத்தன.
“நல்லது. நாம் விடைபெற்றுக்கொள்ள வேண்டியதுதான்” என்று கூறிக்கொண்டே தன் கரத்தை சோபியாவிடம் நீட்டினான் ரீபின். “சரி, நகரில் உங்களை எங்கு கண்டுபிடிப்பது?”
“நீ என்னைத்தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்றாள் தாய்.
அந்த இளைஞர்கள் மூவரும் மெதுவாய் சோபியாவிடம் வந்து, அசடு வழியும் நட்புரிமையோடு அவளது கரத்தைப் பற்றிக் குலுக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு அருமையான, அன்பான, அந்தரங்கமான இன்ப உணர்ச்சிக்கு ஆளானார்கள் என்பது தெளிவாகத் தெரிந்தது, இந்த உணர்ச்சி அதனது புதுமையினால் அவர்களைக் கலங்கச் செய்வதுபோலத் தோன்றியது. அந்த இளைஞர்கள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் தூக்கம் விழித்துச் சிவந்துபோன தன் கண்களால் சோபியாவைப் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டார்கள்:
“போவதற்கு முன்னால், கொஞ்சம் பால் சாப்பிடுகிறீர்களா?” என்று கேட்டான் யாகவ்.
“பால் இருக்கிறதா?” என்றான் எபீம்.
“இல்லை” என்று கூறிக்கொண்டே, தலையைத் தடவினான் இக்நாத்: “நான் அதைச் சிந்திவிட்டேன்.”
அவர்கள் மூவரும் சிரித்தார்கள்.
அவர்கள் பாலைப் பற்றித்தான் பேசினார்கள், என்றாலும் அவர்கள் வேறு எதைப்பற்றியோ சிந்தித்துக்கொண்டிருப்பதாக, தன்மீதும் சோபியா மீதும் மனம் நிறைந்த பரிவோடும் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதாகத் தாய்க்குத் தோன்றியது. இந்த நிலைமை சோபியாவின் உள்ளத்தைத் தொட்டுச் சிறு குழப்பத்தை உண்டாக்கிவிட்டது. அவளும் அந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க முடியாமல், குன்றிப்போனாள். அவளால் பின் வருமாறுதான் சொல்ல முடிந்தது:
“நன்றி, தோழர்களே!”
அந்த இளைஞர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். அவள் தங்களைப் பார்த்துச் சொன்ன அந்த வார்த்தை ஓர் ஊஞ்சலைப் போன்று கொஞ்சங் கொஞ்சமாக ஆகாயத்தில் தூக்கிச் செல்வதுபோல் அவர்களுக்குப்பட்டது.
அந்த நோயாளி திடீரெனப் பலத்து இருமினான். அணைந்துகொண்டிருந்த நெருப்பில் கரித்துண்டுகள் கனன்று மினுமினுக்கவில்லை.
“போய்வாருங்கள்” என்று அமைதியாகக் கூறினார்கள் முஜீக்குகள், அந்தச் சோகமயமான வார்த்தை அப்பெண்களின் காதுகளில் வெகுநேரம் ஒலித்துக்கொண்டிருந்தது.
அவர்கள் மீண்டும் அந்தக் காட்டுப்பாதை வழியாக அருணோதய காலத்தின் பசப்பொளியில் அவசரமேதுமின்றி நிதானமாக நடந்து சென்றார்கள்.
“இங்கு, எல்லாம் எவ்வளவு அருமையாயிருந்தது!” என்று சோபியாவுக்குப் பின்னால் நடந்துகொண்டே வந்த தாய் சொன்னாள்!” எல்லாம் சொப்பனம் மாதிரி இருக்கிறது. மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்! உண்மையைத் தெரிந்துகொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். இது எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரு பெரிய திருநாளன்று மக்களெல்லாம் அதிகாலைப் பிரார்த்தனைக்காகத் தேவாலயத்தில் கூடியிருப்பதுபோலவும், மதகுரு இன்னும் வராததுபோலவும், எங்குமே இருளும் அமைதியும் சூழ்ந்திருப்பது போலவும், அப்போது நம் உடம்பு தவியாய்த் தவிப்பது போலவும், மக்கள் வந்து நிறைந்துகொண்டே இருப்பதுபோலவும் தோன்றுகிறது. அந்தத் தேவாலயத்திலுள்ள விக்ரகத்தின் முன்னால் யாரோ விளக்குகளை ஏற்றி வைக்கிறார்கள்; கடவுளின் இல்லத்துக்கு ஒளி வருகிறது. இருள் கொஞ்சங் கொஞ்சமாக விலகியோடுகிறது.”
“எவ்வளவு உண்மை!” என்று உவகையோடு சொன்னாள் சோபியா, “இங்கு மட்டும்தான் கடவுளின் இல்லம் உலகம் முழுவதையுமே தழுவி நிற்கிறது!”
“உலகம் முழுவதையுமா?” என்று தலையை அசைத்துச் சிந்தித்துக்கொண்டே சொன்னாள் தாய். “நம்புவதற்கே முடியாத அவ்வளவு பெரிய உண்மை இது. சோபியா! நீங்கள் எவ்வளவு நன்றாகப் பேசுகிறீர்கள். அருமையாயிருந்தது. உங்களை அவர்களுக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்று நான் பயந்திருந்தேன்.”
சோபியா ஒரு கணம் மௌனமாக இருந்தாள்; பிறகு அமைதியோடும் சோர்வோடும் சொன்னாள்:
“அவர்களோடு இருந்தாலே நாமும் எளிமை பெற்றுவிடுகிறோம்.”
அவர்கள் இருவரும் ரீபினைப் பற்றியும் அந்த நோயாளியைப் பற்றியும், கவனம் நிறைந்த மௌனமும், விருந்தாளிகளுக்கு வேண்டிய சின்னஞ்சிறு சேவைகளில்கூட மிகுந்த ஈடுபாடும் நன்றியுணர்ச்சியும் கொண்டிருந்த அந்த இளைஞர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே நடந்து சென்றார்கள். அவர்கள் காட்டுப் பிராந்தியத்தைக் கடந்து வயல்வெளிக்கு வந்தார்கள். சூரியன் அவர்களுக்கு எதிராக மேலெழுந்தது. எனினும் சூரியனின் முழு உருவமும் வெளியே தெரியவில்லை. செக்கச் சிவந்த கதிர்களை மட்டும் விசிறி மாதிரி வான மண்டலம் முழுவதும் விரிந்து ஒளி பாய்ச்சிக்கொண்டிருந்தது. புல் நுனிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் பனித்துளிகள் சூரிய கிரணம் பட்டவுடன் வானவில்லின் வர்ண ஜாலம் சிதறி. வசந்தத்தின் கோலாகலத்தோடு புன்னகை புரிந்தன. பறவைகள் விழித்தெழுந்து உற்சாகமயமான கீதக் குரலை எழுப்பி, அந்தக் காலை நேரத்துக்குக் களிப்பூட்டி ஜீவனளித்தன. பெரிய பெரிய காக்கைகள் தங்களது இறக்கைகளைப் பலமாக அடித்து வீசிக்கொண்டும், ஆர்வத்தோடு கத்திக்கொண்டும் வான மண்டலத்தில் பறந்து சென்றன. எங்கிருந்தோ ஒரு மஞ்சலாத்திக் குருவியின் சீட்டிக் குரல் ஒலித்தது. தூரவெளிகள் கண்ணுக்குத் தெரிந்தன. குன்றுகளின் மீது படிந்திருந்த இருட்திரைகள் சுருண்டு மடங்கி மேலெழுந்து மறைந்தன,
“சமயங்களில் ஒருவன் பேசிக்கொண்டே இருப்பான், அவன் எவ்வளவுதான் வளைத்து வளைத்துப் பேசினாலும் அவன் சொல்லுகின்ற விஷயம் புரிபடுவதேயில்லை. திடீரென அவன் ஒரு சாதாரண வார்த்தையைக் கூறிவிடுவான். உடனே எல்லாமே விளங்கிவிடும்” என்று ஏதோ நினைத்தவளாய்ப் பேசினாள் தாய். “அதுபோலத்தான் அந்த நோயாளியின் பேச்சும் இருந்தது. நானும் எவ்வளவோ கேட்டிருக்கிறேன். எவ்வளவோ பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படித் தொழிலாளர்களைத் தொழிற்சாலைகளிலும், வேறிடங்களிலும் விரட்டி விரட்டி வேலை வாங்குகிறார்கள் என்பதை நானும் அறிந்திருக்கிறேன். ஆனால், சிறுவயதிலிருந்தே இதெல்லாம் பழகிப்போய்விடுவதால், அதைப்பற்றிய சுரணையே நம் மனத்தில் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் அத்தனை வேதனையையும் அவமானத்தையும் தரும் அவன் சொன்ன அந்த விஷயம் இருக்கிறதே! கடவுளே தங்களது முதலாளிகளின் சில்லறை விளையாட்டுக்களுக்காக மக்கள் தங்கள் உயிரைக்கொடுத்து உழைத்துக்கொண்டிருக்க முடியுமா? அதிலே என்ன நியாயம் இருக்கிறது?”
அந்த மனிதனின் நிலையைப்பற்றியே அவளது சிந்தனைகள் வட்டமிட்டன; இந்த மனிதனின் வாழ்க்கையைப் போலவே ஒரு காலத்தில் அவளுக்குத் தெரிந்திருந்த பலபேருடைய வாழ்க்கைகளைப் பற்றிய நினைவுகளும் அவள் மனத்தில் மங்கித் தோன்றின.
“அவர்களிடம் அனைத்தும் இருக்கிறது. எல்லாம் திகட்டிப்போய் உமட்டுகிறது என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு ஒரு கிராம அதிகாரியைத் தெரியும். அவன் தனது குதிரை கிராமத்து வழியாக எப்போதெப்போது சென்றாலும், கிராம மக்கள் அந்தக் குதிரைக்கு வணக்கம் செலுத்த வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தான். வணங்காதபேர்களை அவன் கைது செய்து கொண்டுபோய்விடுவான். இந்த மாதிரிக் காரியங்களை அவன் எதற்காகச் செய்ய வேண்டும்? இந்த மாதிரியான செய்கையிலே ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?”
அருணோதய வேளையைப் போலவே குதூகலம் தொனிக்கும் ஒரு பாட்டை மெதுவாகப் பாட ஆரம்பித்தாள் சோபியா,...