5

அவர்கள் தாங்கள் சேர வேண்டிய இடத்துக்கு மூன்றாவது நாளன்று வந்து சேர்ந்தார்கள், தார் எண்ணெய்த் தொழிற்சாலை எங்கே இருக்கிறது என்பதை, தாய் வயலில் வேலி பார்த்துக்கொண்டிருந்த ஒரு முஜீக்கிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டாள். இதன்பின் அவர்கள் மரம் செறிந்த செங்குத்தான பாதையின் வழியே நடந்து சென்றார்கள், அந்தப் பாதையில் மரவேர்கள் படிக்கட்டுகளைப்போல் குறுக்கும் மறுக்குமாக ஓடி, நடப்பதற்கு வசதியளித்தன. நிலக்கரித் தூளும் மரத்துண்டுகளும் தார் எண்ணெயும் படிந்த ஒரு இடத்தில் வந்து அந்தப் பாதை முடிந்தது.

“ஒரு வழியாக நாம் வந்து சேர்ந்துவிட்டோம்” என்று சாவகாசமாகச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு கூறினாள் தாய்.

மரக்கிளைகளாலும், கம்புகளாலும் கட்டப்பட்ட ஒரு குடிசைக்கு முன்னால், ஒரு மேஜை கிடந்தது; மூன்று பலகைகொண்ட அந்த மேஜை தரையோடு அறையப்பட்ட ஒரு மரக்குதிரையின் மீது இருந்தது. உடம்பெல்லாம் தார் எண்ணெய் படிந்திருக்க, தனது சட்டையின் முன்பக்கம் முழுவதும் திறந்துவிட்டவாறு, ரீபின் அந்த மேஜையருகே உட்கார்ந்து எபீமோடும் வேறு இரு இளைஞர்களோடும் சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தம்மை நோக்கி வந்த அந்தப் பெண்களை முதன் முதல் கண்டவன் ரீபின்தான், அவன் தன் கையை நெற்றிக்கு நேராக உயர்த்திப் பிடித்துக் கூர்ந்து பார்த்துவிட்டு, மெளனமாக அவர்களது வரவை எதிர்நோக்கி இருந்தான்.

“தம்பி மிகயீல்! சௌக்கியமா?” என்று தூரத்திலிருந்தவாறே கூறினாள் தாய்.

அவன் தன்னிடத்தை விட்டு எழுந்து அவர்களை நோக்கி நிதானமாக நடந்து வந்தான். தாயை அடையாளம் கண்டுகொண்டவுடன் அவன் சட்டென நின்று, புன்னகை புரிந்தவாறே தனது கரிய கரத்தால் தன் தாடியை வருடிவிட்டுக்கொண்டான்.

“நாங்கள் பிரார்த்தனைக்குப் போகிற போக்கில்” என்று கூறிக்கொண்டே முன்வந்தாள் தாய். “போகிற வழியில் என் சகோதரனைப் பார்த்துவிட்டுப் போகலாமே என்று நினைத்தேன். இவள் என் தோழி ஆன்னா.”

தன்னுடைய குயுக்தியைக் கண்டு தானே பெருமைப்பட்டவளாய், தாய் ஓரக்கண்ணிட்டு சோபியாவின் கண்டிப்பும், ஆழ்ந்த உணர்வும் நிறைந்த முகத்தைப் பார்த்தாள்.

“வணக்கம்!” என்று ஒரு வறண்ட புன்னகையோடு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான் ரீபின்; சோபியாவுக்கு வணக்கம் செலுத்தினான். “பொய் சொல்லாதே, நீ இப்போது ஒன்றும் நகர்ப்புறத்தில் இல்லை. இங்கு நீ எந்தப் பொய்யுமே சொல்லத் தேவையில்லை, எல்லோரும் நம்மவர்கள்.”

தானிருந்த இடத்திலிருந்தே எபீம் அந்த யாத்திரிகர்களைக் கூர்ந்து பார்த்தான், பிறகு தன் பக்கத்திலிருந்த தோழர்களிடம் இரகசியமாக ஏதோ சொன்னான். அந்தப் பெண்கள் இருவரும் அருகே நெருங்கி வந்தவுடன் அவன் தன்னிடத்தைவிட்டு எழுந்து, அவர்களுக்கு மௌனமாக வணக்கம் செலுத்தினான். அவனது சகாக்கள் அந்த விருந்தாளிகள் வந்ததையே கவனிக்காதவர்கள் மாதிரி அசைவற்று உட்கார்ந்திருந்தார்கள்.

“நாங்கள் இங்கே பாதிரியார்கள் மாதிரி வாழ்கிறோம்” என்று சொல்லிக்கொண்டே பெலகேயாவின் தோளில் லேசாகத் தட்டினான் பின். “யாருமே எங்களைப் பார்க்க வருவதில்லை. முதலாளி அயலூருக்குப் போயிருக்கிறார், அவர் மனைவி ஆஸ்பத்திரியிலே கிடக்கிறாள். அதனாலே அநேகமாக இங்கே எல்லாம் என் மேற்பார்வைதான். சரி, உட்காருங்கள். ஏதாவது சாப்பிட விரும்புவீர்கள், இல்லையா? எபீம்! நீ போய் கொஞ்சம் பால் கொண்டுவா.”

எபீம் அந்தக் குடிசைக்குள்ளே நுழைந்தான், அந்த யாத்திரிகர்கள் தங்கள் முதுகில் தொங்கிய பைகளைக் கீழே இறக்கினார்கள். நெட்டையாகவும் ஒல்லியாகவும் இருந்த ஒரு இளைஞன் எழுந்து வந்து. மூட்டையை இறக்கி வைப்பதற்கு உதவிசெய்தான், உருண்டு திரண்டு பறட்டைத் தலையுடன் அவனது தோழன் ஒருவன் மேஜையின் மீது முழங்கைகளை ஊன்றியவாறு உட்கார்ந்திருந்தான்; தனது தலையைச் சொறிந்துகொண்டும், ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டும் அவன் அவர்களைக் கூர்ந்து பார்த்தவாறே ஏதோ சிந்தித்தான்.

தார் எண்ணெயின் கார நெடியும், அழுகிப்போன இலைக் குவியல்களின் நாற்றமும் சேர்ந்து அந்தப் பெண்களின் புலன்களைக் கிறக்கின.

“அவன் பேர் யாகல்” என்று அந்த நெட்டை வாலிபனைச் சுட்டிக்கொண்டே சொன்னான் ரீபின்; “அடுத்தவன் பெயர் இக்நாத், சரி, மகன் எப்படி இருக்கிறான்?”

“சிறையிலிருக்கிறான்” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“மறுபடியுமா?” என்றான் ரீபின்: “அவனுக்குச் சிறைபிடித்துப் போயிற்று போலிருக்கிறது.”

இக்நாத் பாடுவதை நிறுத்தினான்; யாகவ் தாயின் கையிலிருந்து கைத்தடியை வாங்கிக்கொண்டே சொன்னான்;

“உட்காருங்கள், அம்மா”

“ஏன் நிற்கிறீர்கள்? உட்காருங்கள்” என்று சோபியாவைப் பார்த்துச் சொன்னான் ரீபின். ஒன்றும் பேசாமல் அவள் ஒரு மரக்கட்டையின் மீது அமர்ந்து ரீபினையே கவனித்துக்கொண்டிருந்தாள்.

“அவனை அவர்கள் எப்போதும் கைது செய்தார்கள்?” என்று கேட்டுக்கொண்டே தாய் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிராக உட்கார்ந்து தலையை ஆட்டினான் ரீபின். “நீலவ்னா, உனக்கு அதிருஷ்டமே கிடையாது.”

“ஆமாம், எல்லாம் சரியாய்த்தானிருக்கிறது.”

“பழகிப்போய்விட்டதா?”

“இல்லை. எனக்கு அது ஒன்றும் பழகிப் போய்விடவில்லை. ஆனால், அதைவிட்டால் எனக்கு வேறு கதி இல்லை.”

“ஹும்!” என்றான் ரீபின்; “நல்லது அதைப்பற்றி எங்களுக்குச் சொல்லேன்.”

எபீம் ஒரு ஜாடியில் பால்கொண்டு வந்தான்; மேஜை மீதிருந்த கோப்பையை எடுத்து அதை அலம்பிவிட்டு அதில் பாலை ஊற்றினான். பிறகு தாய் கூறிக்கொண்டிருக்கும் கதையையும் அவன் காதில் வாங்கிக்கொண்டே அந்தப் பால் கோப்பையை சோபியாவிடம் நீட்டினான். சத்தமே செய்துவிடாதபடி சாமான்களைப் புழங்குவதில் அவன் மிகுந்த ஜாக்கிரதையோடிருந்தான். தாய் அந்த விஷயத்தைச் சுருக்கமாகச் சொல்லி முடித்த பின்னர் ஒரு மௌன அமைதி நிலவியது: அந்தச் சமயத்தில் யாரும் யாரையுமே பார்க்கவில்லை. இக்நாத் மேஜையின் முன்னிருந்தவாறே மேஜைப் பலகை மீது நகத்தால் கீறிக்கொண்டிருந்தான். எபீம் ரீபினுக்குப் பின்னால் வந்து அவனது தோளின் மீது தன் முழங்கையை ஊன்றியவாறு நின்றான். யாகல் ஒரு மரத்தின் மீது சாய்ந்து, தனது கைகளைக் கட்டிக்கொண்டு தலையைத் தொங்கவிட்டவாறிருந்தான். சோபியா அந்த முஜீக்குகளைப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்தாள்....

“ஹும் - ம் -ம்” என்று மெதுவாகவும் உவகையற்றும் முனகினான் ரீபின். “அப்படியா? அவர்கள் பகிரங்கமாகவே கிளம்பிவிட்டார்களா?”

“நாமும் அந்த மாதிரி ஒரு அணிவகுப்பை நடத்த முனைந்தால்” என்று ஒரு கசந்த புன்னகையோடு பேசினான் எபீம்: “அப்படிச் செய்தால் முஜீக்குகளே நம்மை அடித்துக்கொன்று தள்ளிவிடுவார்கள்.”

“ஆமாம். நிச்சயம் அவர்கள் கொன்று தள்ளிவிடுவார்கள்” என்று தலையை அசைத்து ஆமோதித்தான் இக்நாத். “நானும் தொழிற்சாலை வேலைக்கே போகப்போகிறேன். இங்கே இருப்பதைவிட அங்கு நன்றாயிருக்கிறது.”

“பாவெல் மீது கோர்ட்டில் விசாரணை நடக்கும் என்றா சொல்கிறாய்?” என்று கேட்டான் ரீபின். “அப்படியானால் அவனுக்கு என்ன தண்டனை கிடைக்கும்? அதைப்பற்றி ஏதாவது கேள்விப்பட்டாயா?”

“கடுங்காவல், இல்லாவிட்டால் சைபீரியாவுக்கு நிரந்தரமாக நாடு கடத்தப்படுதல்” என்று அமைதியுடன் கூறினாள் அவள்.

அந்த மூன்று இளைஞர்களும் ஒரே சமயத்தில் அவள் பக்கம் திரும்பினார்கள், ரீபின் மட்டும் தலையைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்.

“அவன் அதைச் செய்தபோது, இந்த மாதிரி தனக்கு ஏதாவது நேரும் என்று தெரிந்துதான் செய்தானா?”

“ஆமாம். தெரிந்தே செய்தான்” என்று உரத்த குரலில் சொன்னாள் சோபியா.

எல்லோரும் ஒரே சிந்தனையால் உறைந்துவிட்ட மாதிரி அப்படி அசைவற்றுப் பேச்சற்று மூச்சற்று இருந்தார்கள்.

“ஹும்!” என்று முனகிவிட்டு மெதுவாகவும் வருத்தத்தோடும் பேசினான் ரீபின். “அவனுக்குத் தெரியும் என்றுதான் நானும் நினைத்தேன், முன்யோசனையுள்ள மனிதன் கண்ணை மூடிக்கொண்டு திடுதிப்பென்று இருட்டில் குதிக்கமாட்டான். பையன்களா! கேட்கிறீர்களா? அவர்கள் தன்னைத் துப்பாக்கிச் சனியனால் தாக்கக்கூடும். அல்லது சைபீரியாவுக்கு நாடு கடத்தக்கூடும் என்று தெரிந்திருந்தும், அவன் தன் செய்கையை நிறுத்தவில்லை. அவனது பாதையில், தாயே குறுக்கே விழுந்து தடை செய்திருந்தாலும், அவன் இவளையும் மீறித்தாண்டிச் சென்றிருப்பான். இல்லையா, நீலவ்னா?”

“ஆமாம், அவன் செய்வான்” என்று சொல்லிக்கொண்டு நடுங்கினாள் தாய்: அவள் பெருமூச்செறிந்தவாறு சுற்றுமுற்றும் பார்த்தாள். சோபியா அவள் கையை அமைதியாகத் தட்டிக்கொடுத்துக்கொண்டே, நெற்றியைச் சுருக்கி விழித்து ரீபினையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இவன் ஒரு உண்மையான மனிதன்!” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தனது கரிய கண்களால் அங்குள்ளவர்களைப் பார்த்தான் ரீபின், மீண்டும் அந்த ஆறுபேரும் மோன அமைதியில் ஆழ்ந்துவிட்டார்கள். சூரிய கிரணங்கள் தங்கத் தோரணங்களைப்போல் காற்றில் தொங்கி ஊசலாடின. எங்கோ ஒரு அண்டங்காக்கை கத்தியது. தாயின் மன நிலை மே தினத்தின் நினைவாலும், பாவெல், அந்திரேய் இருவரையும் காணாத ஏக்கத்தாலும் குழம்பித் தடுமாறியது. அந்தக் காட்டின் நடுவிலே காலித் தார் எண்ணெய் பீப்பாய்கள் உருண்டு சிதறிக் கிடந்தன, தரையைக் கீறிக் கிளப்பின மரவேர்கள் எங்கு பார்த்தாலும் துருத்தி நின்றன. அந்தக் காட்டின் எல்லையில் ஓக் மரங்களும் பெர்ச் மரங்களும் மண்டிப் பெருகி, அசைவற்று கரிய நிழல்களைத் தரைமீது பரப்பிக்கொண்டிருந்தன.

திடீரென்று யாகவ் அந்த மரத்தடியிலிருந்து விலகி, வேறொரு பக்கமாகச் சென்றான்.

“அப்படியானால், பட்டாளத்தில் சேர்ந்தால் இந்த மாதிரி ஆட்களை எதிர்ப்பதற்காகத்தான் என்னையும் எபீமையும் அனுப்புவார்களோ?” என்று உரத்து, தன் தலையைப் பின்னுக்கு வாங்கி நிமிர்ந்தவாறே கேட்பன் யாகவ்.

“வேறு யார்மீது உங்களை ஏவி விடுவார்கள் என்று நினைத்தாய்?” என்றான் ரீபின். “அவர்கள் நமது கைகளைக்கொண்டே நம்மை நெரித்துக்கொள்வார்கள் —அதுதான் அவர்களுடைய தந்திரம்!”

“எப்படியானாலும் நான் பட்டாளத்தில் சேரத்தான் போகிறேன்” என்று உறுதியோடு சொன்னான் எபீம்.

“உன்னை யாராவது தடுக்கிறார்களா?” என்று சத்தமிட்டான் இக்நாத். “நீ பாட்டுக்குப் போ. ஆனால், நீ ஒரு வேளை என்னையே சுட நேர்ந்தால், தயை செய்து என் தலைக்குக் குறிபார்; வீணாக வேறிடத்தில் சுட்டு என்னை முடமாக்கிவிடாதே; சுட்டால் ஒரேயடியாய்க் கொன்று தீர்த்துவிடு” என்று சிறு சிரிப்புடன் சொன்னான் இக்நாத்.

“நீ சொல்வது எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்று வெடுக்கென்று பதில் சொன்னான், எபீம்.

“ஒரு நிமிஷம் பொறுங்கள், பையன்களா?” என்று தன் கையை உயர்த்திக்கொண்டே சொன்னான் ரீபின்.

“இதோ இந்த அம்மாளுடைய மகன்தான் இப்போது மடியப்போகிறான்!” என்று தாயைச் சுட்டிக்காட்டினான்.

“நீ அதையெல்லாம் ஏன் சொல்கிறாய்?” என்று வேதனையோடு கூறினாள் தாய்.

“சொல்லத்தான் வேண்டும்” என்று கரகரத்துக் கூறினான் ரீபின். “உன்னுடைய தலைமயிர் ஒன்றுமற்ற காரணத்துக்காக நரை தட்டக்கூடாது. உன்னுடைய மகனுக்கு இந்த மாதிரிக் கொடுமையை இழைப்பதன் மூலம் அவர்கள் அவனைக் கொன்று தீர்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா? சரி, ஏதாவது புத்தகங்கள், பிரசுரங்கள் கொண்டு வந்தாயா, நீலவ்னா ?”

தாய் அவனை லேசாகப் பார்த்தாள்.

“ஆம்......” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னாள்.

“பார்த்தாயா?” என்று மேஜைமீது தன் முஷ்டியைக் குத்திக்கொண்டே சொன்னான் ரீபின், “உன்னைப் பார்த்தவுடனேயே நான் தெரிந்துகொண்டேன். வேறு எதற்காக நீ இங்கு வரப்போகிறாய்? எப்படி? அவர்கள் பிள்ளையைத்தான், பறித்துக்கொண்டு சென்றார்கள் - ஆனால் இன்று அதே ஸ்தானத்தில் தாயே வந்து நின்றுவிட்டாள்!”

அவன் தன் முஷ்டியை ஆட்டியவாறே ஏகவசனத்தில் திட்டினான்.

அவனது கூச்சலினால் பயந்துபோன தாய் அவன் முகத்தைப் பார்த்தாள்; அவன் முகமே மாறிப்போய்விட்டதாக அவளுக்குத் தோன்றியது. அது மெலிந்து போயிருந்தது: தாடி ஒழுங்கற்றுக் குலைந்துபோயிருந்தது. அந்த தாடிக்குக் கீழாக அவனது கன்ன எலும்புகள் துருத்திக்கொண்டு நிற்பதுகூடத் தெரிந்தன. அவனது வெளிறிய நீலக் கண்களில், அவன் ஏதோ ரொம்ப நேரமாய்த் தூங்காது விழித்திருந்தவன் மாதிரி, மெல்லிய ரத்த ரேகைகள் ஓடிப் பரந்திருந்தன. அவனது மூக்கு உள்ளடங்கிக் கொக்கிபோல் வளைந்து ஒரு மாமிச பட்சிணிப் பறவையின் அலகைப்போல் இருந்தது. தனது பழைய சிவப்பு நிறத்தை இழந்து கரிபடிந்துபோன அவனது திறந்த சட்டைக்காலர், அவனது தோள்பட்டை எலும்புகளையும், மார்வில் மண்டி வளர்ந்திருந்த தடித்த கருமயிர்ச் சுருள்களையும் திறந்து காட்டிக்கொண்டிருந்தது. மொத்தத்தில் அவனது தோற்றத்தில் என்னவோ ஒரு சவக்களை படிந்துபோயிருப்பதுபோல் தோன்றியது. கொதித்துச் சிவந்த கண்கள் அவனது கரிய முகத்தில் கோபாக் கினி ஒளி வீசக் கனன்றுகொண்டிருந்தது. சோபியா முகம் வெளுத்துப்போய்ப் பேசாது உட்கார்ந்திருந்தாள். தன் கண்களை அந்த முஜீக்குகளிடமிருந்து அகற்ற முடியாமல் அப்படியே இருந்தாள். இக்நாத் தலையை அசைத்தான், கண்களை நெரித்துச் சுருக்கிட்டிபார்த்தான்; யாகவ் மீண்டும் அந்தக் குடிசை நிழலில் ஒதுங்கி, அங்கு நாட்டப்பட்டிருந்த குடிசைக் கால்களின் மரப்பட்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரித்துக்கொண்டு நின்றான். எபீம் அந்த மேஜையருகே செல்வதும் வருவதுமாக, தாய்க்குப் பின்னால் மெதுவாக உலாவினான். ரீபின் மேலும் பேசத்தொடங்கினான்:

“கொஞ்ச நாட்களுக்கு முன்னால், இந்த ஜில்லா அதிகாரி என்னைக் கூப்பிட்டு அனுப்பி: ‘டேய் அயோக்கியப் பயலே! மத குருவிடம் என்ன சொன்னாய்?’ என்ற கேட்டார். ‘நீங்கள் என்னை எப்படி அயோக்கியப் பயலே என்று கூப்பிடலாம்? நான் என் நெற்றி வியர்வையைச் சிந்தி, உழைத்துப் பிழைக்கிறேன். நான் யாருக்கும் எந்தக் கெடுதியும் செய்வதில்லை’ என்று சொன்னேன் நான். உடனே அவர் என்னை நோக்கிக் கர்ஜித்துப் பாய்ந்தார். என் தாடையில் அறைந்தார்; என்னை மூன்று நாட்களுக்குச் சிறையில் போட்டு வைத்தார். ‘சரிதான், நீங்கள் ஜனங்களிடம் இப்படித்தான் பேசுவீர்கள் போலிருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டேன் நான். “நாங்கள் இதை மறந்துவிடுவோம் என்று எதிர்பாராதே, கிழட்டு ஜென்மமே! நான் இல்லாவிட்டால், வேறொருவன், உன்னிடமில்லாவிட்டால் உன் குழந்தைகளிடம் இந்த அவமானத்திற்காக வஞ்சம் தீர்த்துக்கொள்வோம்; அது மட்டும் ஞாபகமிருக்கட்டும்! நீங்கள் உங்களது இரும்பாலான கோர நகங்களால் மக்களது மார்பகங்களை உழுது பிளந்தீர்கள், அங்கு பகைமையை விதைத்தீர்கள், எனவே பகைமைக்குப் பகைமைதான் பயிராக விளையும். எங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்காதீர்கள், பிசாசுகளே!’ என்று நான் மனத்துக்குள் கூறிக்கொண்டேன். ஆமாம்!”

அவனது முகம் சிவந்துபோயிற்று; ஆக்ரோஷம் அவனுள்ளே கொதித்துப் பொங்கியது. அவனது குரலில் தொனித்த ஏற்றயிறக்கங்கள் தாயைப் பயப்படும்படி செய்தன.

“ஆனால், நான் அந்த மத குருவிடம் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?” என்று மேலும் தொடர்ந்தான் ரீபின். “அவர் கிராமத்தில் கூட்டம் முடிந்து திரும்பி வந்து. ஓரிடத்தில் அமர்ந்து சில முஜீக்குகளோடு பேசிக்கொண்டிருந்தார். என்ன பேசினார்? சாதாரண மக்களெல்லாம் ஆட்டு மந்தைகள்தாம் என்றும், அவர்களைக் கட்டி மேய்க்க ஒரு இடையன் எப்போதும் தேவையென்றும் அவர் பேசினார். ஹும்! எனவே நானும் வேடிக்கையாகச் சொன்னேன். ‘வாஸ்தவம்தான். நரிக்கு நாட்டாண்மை கொடுத்துவிட்டால், காட்டில் வெறும் இறகுகள்தான் மிஞ்சும். பறவைகள் மிஞ்சாது!’ என்றேன். அவர் தம் தலையைச் சாய்த்துக்கொண்டு. என்னைப் பார்த்தார். ஜனங்கள் எப்போதும் கஷ்டப்படவே வேண்டியிருக்குமென்றும், எனவே தமது வாழ்க்கையில் நேரும் துன்பங்களையும் சோதனைகளையும் சங்கடங்களையும் பொறுமையோடு தாங்கிக் கொள்வதற்குரிய சக்தியை அருளுமாறு கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார், எனவே நானும் ஜனங்கள் எவ்வளவோ காலமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டுதானிருக்கிறார்களென்றும், ஆனால், கடவுளுக்கு ரொம் ரொம்ப வேலையிருப்பதால், இந்தப் பிரார்த்தனைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க இயலவில்லையென்றும் சொன்னேன். ஹும் அப்புறம் அவர் என்னைப் பார்த்து: ‘நீ எந்த மாதிரிப் பிரார்த்திக்கிறாய்’ என்று கேட்டார். நான் சொன்னேன். ‘எல்லாச் சனங்களையும்போல் நானும் ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான் என் வாழ்நாள் முழுதும் சொல்லி வருகிறேன்; ‘கருணையுள்ள கடவுளே! எங்களுக்குக் கல்லைத் தின்று வாழவும், கனவான்களுக்காக விறகு பிளக்கவும் செங்கல் சுமக்கவும் கற்றுக்கொடு', என்றுதான் பிரார்த்திக்கிறேன் என்று சொன்னேன், ஆனால், அவரோ என் பேச்சை முடிக்கவிடவில்லை.” திடீரென்று பின் சோபியாவின் பக்கம் திரும்பினான்; “நீங்கள் ஒரு சீமான் வீட்டுப் பிறவியா?” என்றான்.

“ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?” என்று வியப்போடு திடுக்கிட்டுக் கேட்டாள் சோபியா.

“ஏனா?” என்று சிணுங்கிக்கொண்டான் ரீபின். “ஏனென்றால் நீங்கள் அப்படிப்பட்ட குடும்பத்தில்தான் பிறந்திருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். எவரெவர் எப்படியெப்படிப் பிறந்தார்களோ அப்படித்தான் அவர்கள் விதியும் இருக்கும். ஹும், நீங்கள் தலையில் கட்டியிருக்கிறீர்களே அந்தத் துணியினால் சீமான்களின் பாபக் கறையையெல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? ஒரு சாக்குக்குள்ளே போட்டுக் கட்டியிருந்தாலும் நாங்கள் ஒரு மதகுருவை அடையாளம் கண்டுகொள்வோம். மேஜை மீது சிந்தியிருந்த எதன் மீதோ முழங்கை பட்டதுமே முகத்தைச் சிணுங்கிக் கூசி நடுங்கினீர்களே. உங்கள் ஒய்யார உடம்புக்கும் தொழிலாளன் உடலுக்கும் சம்பந்தமே இல்லை......”

தாய் குறுக்கிட்டு சொன்னாள். அவனது முரட்டுத்தனமான ஏளனப் பேச்சு சோபியாவின் மனத்தைப் புண்படுத்திவிடக்கூடாதே என அவள் அஞ்சினாள்.

“மிகயீல் இவானவிச்! அவள் என் சிநேகிதி, மேலும் அவள் நல்லவள். நமது கொள்கைக்காகப் பாடுபட்டுத்தான் அவளது தலைகூட நரைத்துப்போயிற்று. நீ ரொம்பவும் கடுமையாக வெடுக்கென்று பேசுகிறாய்.......”

ரீபின் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டான்.

“ஏன், நான் மனம் புண்படும்படி யாரையாவது எதையேனும் சொல்லிவிட்டேனா?”

“என்னிடம் ஏதோ சொல்ல விரும்பினீர்கள் என்று நினைக்கிறேன்” என்று வறண்ட குரலில் சொன்னாள் சோபியா.

“நானா? ஆமாம். இங்கே சமீபத்தில்தான் ஒரு ஆசாமி வந்திருக்கிறான். யாகவின் சொந்தக்காரன். அவனுக்குக் காசநோய். அவனை அழைத்துவரச் சொல்லட்டுமா?” என்றான் ரீபின்.

“அவசியமாய்!” என்றாள் சோபியா.

ரீபின் அவளைச் சுருங்கி நெரித்த கண்களோடு பார்த்தான்; பிறகு எபீமிடம் திரும்பி மெதுவாக சொன்னான்:

“போ, போய் அவனை இன்று மாலை இங்கு வரச்சொல்லிவிட்டு வா.”

எபீம் தன் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல், எவரையுமே பார்க்காமல், அந்தக் காட்டு வழியில் சென்று மறைந்தான். அவன் செல்வதைப் பார்த்துத் தலையை ஆட்டிக்கொண்டே ரீபின் சொன்னான்:

“இவனுக்கு இப்போது கஷ்டகாலம். சீக்கிரமே, இவனும் யாகவும் பட்டாளத்தில் சேர்ந்துவிடுவார்கள். யாகவுக்கு அதற்குத் தைரியம் கிடையாது. ‘நான் போகமாட்டேன்’ என்கிறான். இவனுக்கும் திராணி இல்லை, இருந்தாலும் இவன் சேர்ந்துவிடுவான். பட்டாளத்தில் சேர்ந்து அங்குள்ள சிப்பாய்களைத் தூண்டிவிட்டுவிட முடியும் என்று இவன் நினைக்கிறான். தலையைக்கொண்டு மோதி, சுவரைத் தகர்த்துவிட முடியுமா? அவர்கள் கையிலும் துப்பாக்கி ஏறிவிட்டால், அப்புறம் அவர்களும் மற்ற சிப்பாய்கள் செல்லும் பாதையில்தான் செல்வார்கள். இக்நாத் என்னவோ அதைப்பற்றியே அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் பேச்சில் அர்த்தமே கிடையாது.”

“இல்லையில்லை” என்று மறுத்துக்கூறிக்கொண்டே ரீபினைப் பார்த்தான் இக்நாத்; “இதையெல்லாம் சொல்லவில்லை என்றால், இவனுக்கு அவர்கள் கொடுக்கிற பயிற்சியில் இவனும் அவர்களைப்போலவே சுட்டுத்தள்ளத் தொடங்குவான்.”

“எனக்கு அதில் நம்பிக்கையில்லை” என்று சிந்தித்தவாறே பதிலுரைத்தான் ரீபின்: “அவன் பட்டாளத்தில் சேராமல் ஓடிவிடுவதே ரொம்ப நல்லது. ருஷியா ரொம்பப் பெரிய தேசம். ஓடிப்போய்விட்டால் அவர்கள் அவனை எங்கேயென்று கண்டுபிடிப்பார்கள்? ஒரு கள்ளப் பாஸ்போர்ட் வாங்கிவிட்டால், அவன் ஊர் ஊராய்த் திரியலாம்.”

“அப்படிதான் நான் செய்யப்போகிறேன்” என்று தன் காலை ஒரு கழியால் அடித்துக்கொண்டே சொன்னான் இக்நாத் “விரோதமாகப் போவதென்று தீர்மானித்துவிட்டால், அப்புறம் தயக்கம இருக்கக்கூடாது; நேராகப் போகவேண்டியதுதான்.”

அவர்கள் பேச்சு நின்றது. தேனீக்களும் குளவிகளும் மொய்த்துப் பறந்து, ரீங்காரித்து இரைந்தன. பறவைகள் கூவின: வயல் வெளியிலிருந்து ஒரு பாட்டுக் குரல் மிதந்து வந்தது. ஒரு கணம் கழித்து ரீபின் பேசத் தொடங்கினான்;

“நல்லது. நாங்கள் வேலைக்குப் போக நேரமாகிவிட்டது உங்களுக்கும் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கத் தோன்றும். இல்லையா? இந்தக் குடிசைப்புறத்தில் சிறு குடில்கள் இருக்கின்றன. யாகவ், நீ போய்க் கொஞ்சம் காய்ந்த சருகுகளைக் கொண்டுவா, சரி, அம்மா, நீ அந்தப் பிரசுரங்களை எடுத்துக் கொடு.”

தாயும் சோபியாவும் தங்கள் மூட்டைகளை அவிழ்க்க ஆரம்பித்தார்கள்.

“அடேயப்பா! எவ்வளவு புத்தகங்கள்?” என்று வியந்துகொண்டே அந்தப் புத்தகங்களைக் குனிந்து நோக்கினான் ரீபின், “இந்த மாதிரிக் காரியத்திலே ரொம்பக் காலமாய் ஈடுபட்டிருக்கிறீர்களா?.... ம்... சரி. உன் பேரென்ன?” என்று சோபியாவிடம் திரும்பக் கேட்டான்.

“ஆன்னா இவானவ்னா” என்றாள் அவள்; “பன்னிரண்டு வருஷ காலமாய் வேலை செய்கிறேன். ஆமாம். எதற்காகக் கேட்டீர்கள்?”

“முக்கிய காரணம் ஒன்றுமில்லை ; அது சரி, சிறைக்கும் போயிருக்கிறீர்களா?”

“ஆமாம்.”

“பார்த்தாயா?” என்று கண்டிக்கும் குரலில் சொன்னாள் தாய். “நீ முதலில் எவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்து கொண்டாய்.......”

‘என் பேச்சைக் கண்டு வருத்தப்படாதே, அம்மா’ என்று பல்லைக் காட்டிச் சொல்லிக்கொண்டே அவன் ஒரு புத்தகக் கட்டை வெளியில் எடுத்தான்: “சீமான்களுக்கும் முஜிக்குகளுக்கும் ஒட்டவே ஒட்டாது இரண்டுபேரும் எண்ணெய்யும், தண்ணீரும் மாதிரி.”

“நான் ஒன்றும் சீமாட்டியல்ல. நான் ஒரு மனிதப் பிறவி!” என்று சிரித்துக்கொண்டே மறுத்தாள் சோபியா.

“இருக்கலாம்” என்றான் ரீபின்.“'நாய்கள்கூட ஒரு காலத்தில் ஓநாய்களாகத்தானிருந்தன என்று சொல்லுகிறார்கள். சரி, நான் போய் இவற்றை ஒளித்து வைத்துவிட்டு வருகிறேன்.”

இக்நாதும் யாகவும் தங்கள் கைகளை நீட்டிக்கொண்டே அவன் பக்கமாக வந்தார்கள்.

“நாங்களும் அதைப் பார்க்கலாமா?” என்றான் இக்நாத்.

“எல்லாம் ஒரே மாதிரிப் புத்தகம்தானா?” என்று சோபியாவிடம் கேட்டான் ரீபின்.

“இல்லை, வேறுவேறு. சில பத்திரிகைகளும் இருக்கின்றன.”

“அப்படியா?”

அந்த மூன்று பேரும் தங்கள் குடிசைக்குள் விரைந்து சென்றார்கள்.

“இந்த முஜீக் ஓர் உருகிக்கொண்டிருக்கிற பேர்வழி!” என்று ரீபினைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள் தாய்.

“ஆமாம்” என்றாள் சோபியா. “இவனது முகத்தைப் போன்ற வேறொரு முகத்தை நான் பார்த்ததே இல்லை. ஒரு தியாகியின் முகம்போலிருக்கிறது. சரி, நாமும் உள்ளே போகலாம். நான் அவர்களைக் கவனித்துப் பார்க்க விரும்புகிறேன்.”

“அவனது முரட்டுத்தனமான பேச்சால் நீங்கள் புண்பட்டுப் போகாதீர்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

சோபியா சிரித்தாள்.

“நீலவ்னா, நீங்கள் எவ்வளவு அன்பானவர்!”

அவர்கள் வாசலுக்குச் சென்றதும், இக்நாத் தலையை உயர்த்தி அவர்களை விருட்டெனப் பார்த்தான்; தனது சுருண்ட தலைமயிரைக் கலைத்துவிட்டுக்கொண்டே, மடியில் கிடந்த பத்திரிகையைப் பார்க்கத் தொடங்கினான், ரீபின் கூரை முகட்டிலுள்ள ஒரு கீறல் இடைவெளி வழியாக விழும் சூரிய ஒளிக்கு நேராக, ஒரு பத்திரிகையை உயர்த்திப் பிடித்துக்கொண்டிருந்தான். படிக்கும்போது அவனது உதடுகள் மட்டும் அசைந்தன. யாகவ் முழங்காலிட்டுத் தனக்கு முன்னால் குவிந்துகிடக்கும் பிரசுரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

தாய் ஒரு மூலைக்குச் சென்று உட்கார்ந்தாள். சோபியா அவளுக்குப் பின்னால் வந்து நின்று, தாயின் தோள் மீது ஒரு கையை வைத்தவாறே, அவர்களது நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள்.

“மிகயீல் மாமா, அவர்கள் முஜீக்குகளான நம்மைச் சீண்டிவிடுகிறார்கள்” என்று எங்கும் பார்க்காமல் யாகவ் அமைதியாகச் சொன்னான். பின் அவனை நோக்கிச் சிரித்தான்.

“அவர்கள் நம்மை நேசிக்கிறார்கள். அதனால்தான்!” என்றான் ரீபின்.

இக்நாத் ஆழ்ந்த பெருமூச்சு வாங்கிக்கொண்டே தலையை உயர்த்தினான்.

“இதோ எழுதியிருக்கிறது கேள்: ‘மனிதனாயிருந்த விவசாயி இப்பொழுது மாறிப்போனான். மனித குணங்களையெல்லாம் இழந்துவிட்டான்.’ ஆமாம், அவன் மனிதனாகவே இல்லைதான்!” அவனது தெளிந்த முகத்தில் திடீரென ஒரு கருமை ஓடிப் பரந்தது; அந்த வாக்கியத்தைக் கண்டு அவனது மனம் சிறுத்தது போல் தோன்றியது: “அட புத்திசாலிகளா, என் உடம்புக்குள்ளே புகுந்துகொண்டு நீங்கள் ஒரு நாள் பொழுது சுற்றி வாருங்கள், அப்போது தெரியும் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்று.”

“சரி, நான் கொஞ்ச நேரம் படுக்கப்போகிறேன்” என்று சோபியாவிடம் கூறினாள் தாய். “எனக்குக் களைப்பாயிருக்கிறது. அதிலும் இந்த நாற்றம் என்னைக் கிறக்குகிறது. சரி, நீங்கள் என்ன பண்ணப் போகிறீர்கள்?”

“நான் ஓய்வெடுக்க விரும்பவில்லை.”

தாய் ஒரு மூலையில் முடங்கிப்படுத்தாள். உடனே தூங்கத் தொடங்கிவிட்டாள், சோபியா அவள் அருகில் உட்கார்ந்து அந்த மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்; தாயின் தூக்கத்தைக் கலைக்க வரும் தேனீக்களையோ குளவிகளையோ கையால் விரட்டிவிட்டுக் கொண்டிருந்தாள். அரைக் கண் தூக்கத்தில் சோபியா தனக்குச் செய்யும் சேவையைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியுற்றாள் தாய்.

ரீபின் அங்கு வந்து கரகரத்த குரலில் மெதுவாகக் கேட்டான்.

“தூங்கிவிட்டாளா?”

“ஆமாம்.”

அவன் அங்கு சிறிது நேரம் நின்றவாறே தாயின் முகத்தையே பார்த்தான்; பிறகு பெருமூச்சு விட்டுவிட்டு மெதுவாகச் சொன்னான்:

“மகன் சென்ற மார்க்கத்தில் தானும் பின்பற்றிச் செல்லும் முதல் தாய் இவள்தான் போலிருக்கிறது!”

“சரி, அவளைத் தொந்தரவு பண்ணக்கூடாது. நாம் வெளியே போகலாம்” என்றாள் சோபியா.

“சரி. நாங்களும் வேலைக்குப் போக வேண்டியதுதான், உங்களோடு பேசிக்கொண்டிருக்க வேண்டுமென்றுதான் விருப்பம். ஆனால், நமது பேச்சை மாலையில் வைத்துக்கொள்ளலாம். டேய், பையன்களா! புறப்படுங்களடா!”

அவர்கள் மூவரும் சோபியாவை அங்கேயே விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

“நல்லதாய்ப் போயிற்று. இவர்கள் நம்புரிமையோடு பழகிக்கொள்கிறார்கள்” என்று நினைத்தாள் தாய்.

அந்தக் காட்டுப் பிராந்தியத்தின் நெடிமணத்தோடு, தார் நாற்றத்தையும் சுவாசித்தபடி அப்படியே தூங்கிவிட்டாள் தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தாய்/34&oldid=1412179" இலிருந்து மீள்விக்கப்பட்டது