திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்/005-011


ஒரிஜினலில் உள்ளபடி


தைப் பெரிய டைப்பில் போடு”

“சரி சார்”

“கதா காலட்சேபம் !... உம். ஏனப்பா! ‘க்ஷே’ என்று போடாமல் ‘ட்சே’ போட்டுத் தொலைக்கிறாய்? ஒரிஜினலில் உள்ளபடிதானே உன்னைக் கம்போஸ் பண்ணச் சொன்னது?”

“...................”

“அம்மன் ‘பிளாக்’கை இப்படி நடுவில் போடு. இந்த ஓரத்தில் அழகாய் ‘பார்டர்’ கட்டிச் செட்டியார் ‘பிளாக்’ கைப் போடு”

“சரி சார்”

“உம், ஆமாம். என்ன புரியுதா? உன் சுத்தத் தமிழை யெல்லாம் இதிலே காட்டாதே, ஒரிஜினலில் உள்ளபடி போடு”

“...................”

“செட்டியார் பொல்லாத கோபக்காரர். உன் செந்தமிழ் நடையைக் காட்டினால் நம்ப அச்சாபீஸ் கடையைக் கட்ட வேண்டியதுதான்”

“அதான் ஒரு தடவை சொன்னீங்களே சார்! ஒரிஜினலில் உள்ளபடியே கம்போஸ் பண்றேன் சார்.”

“உனக்குத்தான் மறதி ஜாஸ்தியாச்சே! உம், போ, ஒரிஜினலில் உள்ளபடி போடு”

கம்பாசிட்டர் கந்தசாமி வேதாந்தி பிரஸ் மானேஜர் வேலாயுதம் பிள்ளையிடம் தான் அச்சுக் கோத்த ஒரு ‘நோட்டீஸ்’ மாதிரித் தாளைக் காட்டியபோது நடந்த உரையாடல் மேலே காண்பது.

கந்தசாமி மானேஜரால் குற்றம் சொல்லப்பட்ட மாதிரித்தாளைக் கிழித்தெறிந்து விட்டு, ஒரிஜினலை எடுத்து ஒரு முறை படித்தான்.

மணி மணியான எழுத்துக்கள், கந்தசாமியின் முகத்திலே ஒரு பரிதாபம் பிரதிபலித்தது.

‘திரௌபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்’ விளம்பரத்தின் தலைப்பு இது. நிகழ்ச்சி நிரல் என்ற பகுதியில் ‘ஸ்ரீஜகத் யோகானந்த சுவாமிகள் பாஞ்சாலி சுயம்வரம் என்பது பற்றி உபன்யாசிப்பார்கள்,’ என்ற குறிப்பு இருந்தது. கந்தசாமி உதடுகளைக் கடித்துக் கொண்டான். ஒரு ஏளனம் பிதுங்கும் குட்டிச் சிரிப்பும் அதைத் தொடர்ந்து ஓர் ஆபாசமான பெருமூச்சும் வெளிக் கிளம்பிற்று.

“நானும் இந்தப் பிரசுக்கு வந்து ஐந்து வருஷமாயிற்று. இந்த ஆபாசம் பிடித்த புராணக் குப்பைக்கு அச்சுக் கோப்பதைவிட தூக்கு மாட்டிக் கொள்வது எவ்வளவோ மேல்! அட தமிழ் எழுத்துக்களே! மலர்களை மாகாளிக்கு காவு கொடுக்கும் ஆட்டுக் குட்டிக்குப் போடும் மாலையாகவும் கட்டுகிறார்கள், மணமாலையாகவும் தொடுக்கிறார்கள். அதே போல் நீங்களும் தித்திக்கும் தேன் சுவைக் கதைகளை, வாழ்வுக்கு வழிவகுக்கும் வசன நடைகளைப் புத்தக வடிவில் பின்னுகிறீர்கள்; பொய்மைப் பித்தலாட்டம், புனை சுருட்டு பொங்கி வழியும் புராணங்களும் உங்கள் சிருஷ்டியாகின்றன. ஆமாம், மனிதர் கையில் அலைக்கழியும் மலர்க்கூட்டம் போலத்தான் இந்த எழுத்துக் கூட்டமும்!”

அவன் இதய அலைகள் ஓய்ந்தன. எதையோ கண்டுபிடித்தவன் போல கந்தசாமி கண்களை விசாலமாய்த் திறந்தான். மீண்டும் கையில் இருந்த ‘ஒரிஜினலை’ ஒரு முறை பார்த்தான். அதில் ஒவ்வோர் எழுத்தும் அவனை உற்றுப் பார்த்தன. அவன் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தன. வாய்க்குள் உளறினான். “மகாகும்பாபிஷேகம்..... ம்.... மட உலகம்...”

அலட்சியம் நிறைந்த வெறுப்பு அவன் முகத்தில் கோடுகளைக் கிழித்தது. மீண்டும் தனக்குள் பேசிக் கொண்டான்.

“கொள்ளையடிக்கிற செட்டி செய்கிறானாம் கும்பாபிஷேகம்!...... கும்மாளம் போட்டு ஊரைக் குட்டிச்சுவராக்குகிறான். இந்தக் குருடர்களும் நம்புகிறார்கள். எனக்குத் தெரியுமே... இவன் ஏகாம்பரம் மனைவியைக் கற்பழித்த கதை. பெரியண்ணப் படையாச்சி பிராணாவஸ்தையில் இருந்தபோது அவர் வீட்டுப் பணப்பெட்டியை அமுக்கியதில்தானே இவன் வீட்டுக்குப் ‘பெரிய பண்ணை’ பட்டம் கிடைத்தது! வேதாளபுரம் வெங்கடாசலபதி கிரீடத்தின் வைரங்களைப் பெயர்த்து விற்றதில் தானே விசாலமான வீடு கட்டினான். இவற்றையெல்லாம் மறைக்க கும்பாபிஷேகம் செய்து விட்டால் போதுமா?...... அட, படுபாவி! நரகம் என்று ஒன்று இருந்தால் உன் நரம்புக்கு நரம்பு நாகப் பாம்பை விட்டுக் கடிக்கச் சொல்லணுமேடா !... நீ கோயில் கட்ட வந்து விட்டாய்–கோயில்! ராமநாதன் செட்டியாரே, இரு! இரு! ஒருகை பார்க்கிறேன். உயிர் போனாலும் கவலையில்லை.”

கந்தசாமியின் தலை கம்பீரமாய் நிமிர்ந்தது. எதிரே நிற்கும் படைத் தலைவனைப் பார்த்து “எடு வாளை” என இறுமாந்து உரைக்கும் பண்டைய திராவிடப் போர் வீரனைப்போலக் கந்தசாமி நின்றான். அவனுக்கெதிரே ராமநாதன் செட்டியார் நிற்பதாக அவன் நினைவு!... பிறகு மளமளவென்று அச்சுக் கோக்க ஆரம்பித்தான். அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டேயிருந்தது.

“என்ன கம்பாசிட்டர், ஆச்சா?” என்று அதட்டினார் மானேஜர்.

அச்சுக்கோத்த மாதிரித்தாளை எடுத்து நீட்டினான் கந்தசாமி.

அருமையான கட்டம், அழகான முறை. அந்த விளம்பரத்தாளின் அமைப்பே அலாதியாக இருந்தது.

அச்சு நிலையத்து வாயிலில் கார் வந்து நின்றது. ராமநாதன் செட்டியார் இறங்கி வந்தார்.

“ஆச்சா?” என்றார் ஆவல் பார்வையுடன்.

சில்க் சட்டையில் நிற்காமல், வழுக்கிக் கீழே விழுந்த வெண்பட்டை எடுத்துச் செட்டியாரின் தோளில் போட்டு விட்டான், பின்னால் வந்த வேலைக்காரன். அந்த அடிமையின் நிலைகண்ட கந்தசாமியின் தொண்டைக்குழி விம்மிற்று. செட்டியார் வாயிலிருந்து எப்படி விமர்சனம் வரப் போகிறதோ என்று வாய்பிளந்தபடி நின்றார் மானேஜர்.

“பேஷ் ஜோராயிருக்கு; பத்தாயிரம் நோட்டீஸ் போடுங்க”

“எஸ்” மானேஜர் கூனன்போல் நின்று கொண்டிருந்தார்.

“செட்டியார் வேலைக்காரனைப் பார்த்து, “டேய் ரத்தினம்! இங்கேயே இருந்து நோட்டீசையெல்லாம் வாங்கி...”

“சுவத்திலே ஒட்டி விடுகிறேனுங்கோ”

“அட மடையா!... இது ‘வால்போஸ்ட்’ இல்லைடா. தெருவுக்குத் தெரு கொண்டு போய்க் கொடுடா. பத்தாயிரம் நோட்டீசும் சாயந்திரத்திற்குள்ளே செலவாகி விடணும்...ஆமாம்”

“உத்தரவு எஜமான்”

மானேஜர் தலைவணங்கிக் கும்பிட்டு வழியனுப்ப ராமநாதன் செட்டியாரின் கார் பறந்தது.

“ஓய் மிஷின்மேன்! பத்தாயிரம் நோட்டீஸ்” உடனே போடு. ‘புளு’ மையில் போடும். ஓய்! கம்பாசிட்டர்! நோட்டீசைத் தயாராக்கிக் கொடு, சீக்கிரம்”

மானேஜர் அவசரத்தால் குதித்துவிட்டுச் சாப்பாட்டுக்குப் புறப்பட்டார். கந்தசாமி மாதிரித்தாளுடன் உள்ளே சென்றான். அச்சுக் கோர்வையை எடுத்து எடுத்து இரும்புச் சட்டத்தில் பொருத்தினான். அப்போது அவன் கைகளில் சிறிது நடுக்கம் காணப்பட்டது. அவன் முதலில் கோர்த்திருந்த சில எழுத்துக்களைப் பிடுங்கினான். வேறு எழுத்துக்களைப் பொறுக்கி அந்தக் காலி இடங்களில் அமைத்தான்.

அச்சு இயந்திரத்தில் இரும்புச் சட்டம் ஏறிற்று. ஒன்று... இரண்டு...... மூன்று...... நூறு..... ஆயிரம்...... பத்தாயிரம்...... ‘நோட்டீஸ்’கள் அடித்து முடிந்தன. கந்தசாமியே அதை எடுத்துக் கட்டிக் கொடுத்தான். வேலைக்கார ரத்தினம் விளம்பரச் சுமையோடு நடையைக் கட்டினான். செட்டியார் உத்தரவுப்படி. பத்தாயிரம் ‘நோட்டீசை’யும் ஊரெங்கும் பரப்பிவிட்டுத் தான் உட்கார்ந்தது அந்த அடிமை.

மறுநாள் கும்பாபிஷேகம். தாங்கமுடியாத கூட்டம். செட்டியார் சர்வாலங்கார பூஷிதராய் தம் சகாக்களுடன் காரில் வந்து இறங்கினார். மற்றொரு காரில் ஒரு மங்கையர் கூட்டம் வந்து இறங்கிற்று. கூட்டத்தை ஒருமுறை பார்த்தார். ‘எல்லாம் என் பெருமை’ என்று அவருடைய நிமிர்ந்த தலை சொல்லிற்று. ஓர் அலட்சியமான புன்னகை-வேண்டுமென்றே வரவழைத்துக் கொண்டது... அகம்பாவம் தெறிக்கும் கண்கள் அகலமாகிக் கொண்டன.

கூட்டம் அவரைப் பார்த்துவிட்டது.

ஒரே ஆரவாரம்!...

“ஏய் காமநாதன் செட்டியார்... காமநாதன் செட்டியார்”... இப்படி ஒரு பேரிரைச்சல் கிளம்பி விட்டது. அநாவசியமான கைத்தட்டல். ஒரே நையாண்டி சிரிப்பு! இடையே, “காமநாதன் செட்டியாரே! போகாநந்த சுவாமிகள் எங்கே? என்ற கேள்விகள்! “பொருத்தமான” பெயர்களப்பா... காமநாதன்- போகாநந்தர்.. இப்படி ஒரு விமர்சனம். மீண்டும் கைத்தட்டலும் சிரிப்பும். “கண்ட பெண்களைக் கற்பழிக்கும் காமநாதன் செட்டியாருக்கு” என்ற ஒற்றைக்குரல். இதைத் தொடர்ந்து ‘ஜே ஜே’ கோஷம். இதற்குள் ஒன்றும் புரியாத சிறுவர்கள் ‘திரு திரு’வென விழிக்கும் செட்டியாரைப் பணக்காரப் பைத்தியமென்றெண்ணி வீசிய சிறு சிறு கற்கள் எல்லாம் சேர்ந்து பெரிய குழப்பத்தை, போலீசாரின் குண்டாந்தடிப் பிரயோகம் வரையில் கொண்டு வந்துவிட்டன. செட்டியாரின் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந்தது. “கும்பாபிஷேகமும் வேண்டாம்; எழயும் வேண்டாம். திருப்புடா காரை” என்று கர்ஜித்தார். கார்கள் கல் மாரியோடு திரும்பின. செட்டியார் தோற்றோடுகிறார் என்ற நினைப்பில் மீண்டும் பலத்த கரகோஷம்!

‘லெக்னம்’ தவறக்கூடாது என்ற சாஸ்திரிகளின் முடிவுப்படி செட்டியார் இல்லாமலேயே கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சி நிரலில் கண்டவாறு யோகானந்த சுவாமிகள் உபன்யாசத்திற்காகச் செட்டியார் வீட்டில் வந்து இறங்கினார். செட்டியார் சோக உருவமாகச் சாய்ந்திருந்தார். யோகானந்த சுவாமிகள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

"செட்டியார்வாள்!... என்னை அவமானப்படுத்த எத்தனை நாள் எண்ணியிருந்தீர்?" என்று ஆத்திரத்தை அள்ளிக் கொட்டினார் சுவாமிகள்.

“என்ன சாமி!... புரியாமல் பேசுவது...!” என்றார் சாவதானமாகச் செட்டியார்.

“இதோ பாரும்.”

யோகானந்த சுவாமிகள் விளம்பரத் தாளை எடுத்துச் செட்டியாரிடம் வீசினார்.

“திரௌபதி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்” செட்டியார் படித்தார்.

“இதற்கென்ன சுவாமி?”

“முழுதும் படிங்க ஐயா”

செட்டியார் படிக்க ஆரம்பித்தார்.

“ஸ்ரீஜத் போகானந்த சுவாமிகள் பாஞ்சாலி விபசாரம் என்பது பற்றி உடன் யாசிப்பார்கள்” “அடடா!... போகானந்தர் ஆகியிருக்கு! பாஞ்சாலி சுயவரம்-பாஞ்சாலி-விபச்சாரம் என்று மாறியிருக்கு. உபன்யாசிப்பார்கள் என்பது உடன் யாசிப்பார்கள் என்று இருக்கு!... இது எந்த அயோக்கியன் செய்த வேலை?”

செட்டியார் சிம்மம்போல் உறுமினார். யோகானந்த சுவாமிகளுக்கு வாய் பேசாமலேயே கையும் காலும் ஆடின. அப்போது எதையோ புதிதாகக் கண்டுபிடித்த கணக்குப்பிள்ளை “இதோ பாருங்க இதோ பாருங்க” என்று நோட்டீசை’க் காட்டினார்.

“இப்படிக்கு அம்பாள் ஊழியர் காமநாதன் செட்டியார்” என்ற கொட்டை எழுத்துக்கள் அவை!

ராமநாதன் செட்டியார் எழுந்து அகோர நர்த்தனத்தை ஆரம்பித்துவிட்டார். பல்லைப் படபடவென்று கடித்துக் கொண்டார்.

“அச்சாபீசுக்காரன் உண்மையைத்தான் போட்டிருக்கிறான்” என்று (சொல்லவில்லை) தனக்குள் எண்ணிக் கொண்டார் கணக்குப்பிள்ளை.

“ஏய் டிரைவர்! காரை எடு” -செட்டியார் உத்தரவு.

வேதாந்தி பிரசின் முன்னே கார் நின்றது. மானேஜர் ரூம், யானைகள் புகுந்த வெண்கலக் கடையாயிற்று.

“ஏய் கம்பாசிட்டர்! டேய்” என்று உருத்திராகாரமாக அழைத்தார் மானேஜர் வேலாயுதம் பிள்ளை.

கம்பாசிட்டர் கந்தசாமி வந்து நின்றான்.

ஓங்கி ஓர் அறை! கந்தசாமி மானேஜரால் தாக்கப்பட்டான்.

அடிபட்ட கந்தசாமி அழவுமில்லை; ஆத்திரப்படவுமில்லை; சிரித்தான்.

“என்னடா சிரிக்கிறாய், தடிப்பயலே!”

மானேஜர் ‘நோட்டீசை’ அவன் முகத்தில் எறிந்தார்.

“ஒன்றுமில்லை சார்; ஒரிஜினலில் உள்ளபடியே அச்சுக் கோர்த்திருக்கிறேன்.”

“ஒரிஜினலா? எதுடர ஒரிஜினல்? ஒரிஜினலில் பாஞ்சாலி விபச்சாரம் என்றுதான் போட்டிருக்கோ ”

“ஆமாம். இதற்கு உண்மையான ஒரிஜினல் பாரதம் இத்தக் கையெழுத்து நோட்டீஸ் அல்ல!.. பாரத ஒரிஜினலில், ஐவருக்கும் தேவியாகவும் ஆறாவது புருஷனாகக் கர்ணன் மேல் ஆசை கொண்டவளாகவும்தான் பாஞ்சாலி சித்தரிக்கப்பட்டிருக்கிறாள். அந்த லட்சணப்படி பாஞ்சாலி சுயம்வரத்தைவிடப் பாஞ்சாலி விபச்சாரம் என்று போடுவதுதான் எனக்குச் சரியான ஒரிஜினலாகத் தெரிந்தது.

அதுமட்டுமல்ல... இந்தச் செட்டியார் காமக்காண்டா மிருகம். அதுதான் இவர் வாழ்க்கை வரலாற்றின் ஒரிஜினல்! அதன்படி காமநாதன் செட்டியார் என்று ‘கம்போஸ்’ செய்தேன்.

உபன்யாசத்திற்கு வரும் சாமியார். ஒரு போகப் பூனை. அவன் பகலில் பரம பக்தன். இரவில் பரம பாதகன். இந்த உண்மை ஒரிஜினலை நான் மாற்ற விரும்பாமல்... சுவாமிகள் போகானந்த என்று போட்டேன்.. இது குற்றமா?” -கந்தசாமி கலகலவென்று சிரித்தான்.

“ஆ!” மானேஜர் வாயைப் பிளந்தார்.

“பொறும். நீர்தானே சொன்னீர் ஒரிஜினலில் உள்ளபடி போடு என்று!”... கந்தசாமி மீண்டும் சிரித்துக் கொண்டே வேதாந்தி பிரசைவிட்டு வெளியேறினான்.

செட்டியாரும், மானேஜரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.