திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்/006-011
நடுத்தெரு நாராயணி
விடிந்தால் தீபாவளி. இரவு முழுவதும் ஊரெங்கும் வாணவேடிக்கைகள். தெருவுக்குத் தெரு, வீட்டுக்கு வீடு போட்டி போட்டுக் கொண்டு வாணம் கொளுத்தி மகிழ்ந்தனர். சந்தர்ப்பவாதிகளின் பச்சோந்தி உள்ளம் போல மத்தாப்புகள் பல நிறம் காட்டின. ஒரு சில அரசியல் தலைவர்களின் போராட்ட அறிவிப்புகள் போல ‘அவுட்’ வாணங்கள் ஆகாயத்தில் எழும்பின ஆனாவுக்கு ஆனா கானாவுக்கு கானா என்ற விதத்திலே எழுதப்படும் அர்த்தமற்ற அடுக்குச் சொல் வசனம் போல சீன வெடிகள், ஊசிப் பட்டாசுகள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டன. புதிய ஆடைகளைக்கண்டு பூரிப்பு தவழ ஓடி ஆடினர் சிறுவர், சிறுமியர். தலைத் தீபாவளிக்கு வந்திருக்கும் தம்பதிகள் உபசாரங்களுக்கும், கிண்டல் உபத்திரவங்களுக்குமிடையே உல்லாசப் பொழுது போக்கினர். ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் அந்த இரவில் நாராயணி மட்டும் சோகத்தின் நிழலாகத் தன் வீட்டில் அமர்ந்திருந்தாள். ‘தீபாவளி தமிழரின் திருநாளல்ல; தமிழன் இறந்தநாளைக் கொண்டாடும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே அதில் கலந்துகொள்ளக் கூடாது’ என்பதல்ல நாராயணியின் எண்ணம். அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளுமல்ல. போட்டி போட்டுக்கொண்டு புராணக் குட்டையிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவளும் ஒருத்திதான். ஆயினும் அவள் தீபாவளி கொண்டாடவில்லை!
காதைத் தொட முயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்திலே அமைந்த உடற்கட்டும் பெற்ற நாராயணி, தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழாவில் கலந்து மகிழும் ஊரைப்பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.
வீதியிலே கிருஷ்ணன்-சத்யபாமா விக்ரகம் அலங்கரிக்கப்பட்ட அழகான ரதம் பவனி வந்துகொண்டிருந்தது. ‘வீரன்’ கிருஷ்ணன் நரகாசூரனிடம் தோற்று மயங்கும் வேளையிலே, தனது கணைகள் கொண்டு அசுரனை அழித்தாள் பாமா என்பதுதானே புராணம். சங்கு சக்ராயுத பாணியான விஷ்ணுவின் அம்சம் பரமாத்மாவே வீழ்ந்து விட்டபோது, அவரின் தேவி அசுர சிங்கத்தின் உயிரை அணைத்துவிட்டாள் என்றால் ஆச்சரியமாகத்தானிருக்கும். எக்கணை வீசினாளோ, என்ன வக்கணை பேசினாளோ! எப்படியோ தேவியின் தியாகத்தால் தேவர்களின் எதிரி ஒழிந்தான் என்று திருப்தி கொண்டனர் பக்தர்.
அந்தப் பக்தகோடிகள் பரந்தாமன் பெற்ற வெற்றியைக் கொண்டாடி, அவனையும் அவன் பிராட்டி பாமாவையும் ரதத்திலே வைத்து தெருச் சுற்றினர். வெற்றியின் சூட்சுமம் தெரியாத விளையாட்டுப் பிள்ளைகளும் பரமாத்மாவுக்கு ‘ஜே’ போட்டனர். ஊர்ப் பிரமுகர்கள் ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். நாயன வித்வான்கள் தங்கள் திறமையைப் பொழிந்தனர். வீடெங்குமுள்ள பெண்டிரெல்லாம் ஆயர்பாடிக் கண்ணனுக்கு ஆரத்தி எடுத்து ஆனந்தப்பட்டனர். ஆடினர், பாடினர்.
ஆனால் நாராயணியோ ஆடவுமில்லை; பாடவுமில்லை. ஆரத்தி எடுக்கவுமில்லை. நடக்கும் வைபவங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தாள். பரமாத்மாவின் ஊர்வலம் அவள் வீட்டைத் தாண்டிப் போயிற்று. அந்த வீட்டிலிருந்து யாராவது வந்து பகவானுக்கு காணிக்கை செலுத்துவார்கள் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். யாரும் வரவில்லை.
ரதம் போகும் திக்கைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டேயிருந்தாள் நாராயணி. ரதத்திலே நரகாசூர வதமே சித்தரிக்கப்பட்டிருந்தது. அந்தக் காட்சியை அவள் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். மலையெனத் தோள் படைத்த நரகாசூரனின் மார்பிலே ஒரு வேல் பாய்ந்திருக்கிறது. குகையெனத் திறந்தவாயோடு நிற்கிறான் அவன். அவனெதிரே கிருஷ்ணன் மயங்கிய நிலையில்! பாமா, வேல் பாய்ச்சும் சாயலில்! இதுவே ரதத்தில் சித்தரிக்கப்பட்டிருத்த தீபாவளிக் காட்சி. அறிவுக்கு அணை கட்டி, இன உணர்ச்சியைத் தடுக்கப் பெரும் சுவரும் எழுப்பி வைக்கும் அந்தப் பண்டிகையில் தம்மை மறந்து பங்கெடுத்துக் கொண்டு, பரவசமுற்றனர் அந்த ஊரார்.
நாராயணியின் கண்களை விட்டு ரதம் மறைந்தது. வாணச் சத்தம் அவள் காதைத் துளைத்துக்கொண்டு தானிருந்தது. ரதத்திலே அவள் கண்ட நரகாசூரவதக் காட்சி, அவள் நெஞ்சைவிட்டகலவில்லை. நினைவுகள் அலைமோதின.
ஃஃஃ
நடுத்தெருவிலேதான் நாராயணியின் வீடு. நடுத்தெருவிலே வீடுகட்ட நகரசபையார் எப்படி அனுமதித்தார்கள், நகரசபையாருக்கு நாராயணியின் மீது அவ்வளவு அனுதாபம் விழக் காரணமென்ன என்றெல்லாம் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. அவள் வீடு இருந்த தெருவுக்குப் பெயரே நடுத்தெருதான்!
நாராயணி நடுத்தெருவிலே, நடுத்தரமான குடும்பத்திலே, நாலுபேர் அண்ணன் தம்பிகளுக்கிடையிலே பிறந்தவள். ஐந்து மக்களையும் விட்டுவிட்டுப் பெற்றோர் விடைபெற்றுக் கொண்டனர். மாயூரம் காவேரியாற்றிலே துலா முழுக்கு ஆடுவதற்காகச் சென்ற சகோதரர்கள் நால்வரும் திரும்பி வராமலே போய்விட்டனர். இளைய தம்பி ஆற்றுச் சுழலிலே சிக்கிக்கொள்ள, அவனை விடுவிக்க ஒருவர் பின் ஒருவராக மூவரும் குதித்து, அனைவரும் நேரே ‘மோட்ச லோகம்’ போய்விட்டனர் என்ற செய்தி மட்டுமே நாராயணிக்குக் கிடைத்தது.
இந்த சோகச் சுமை அவள் தலையிலே விழும்போது அவள் பருவக்கொடி. சிற்பியின் கைத்திறனே உயிர் பெற்றது போன்ற சிந்தை கவர் உருவம்! புருவம், பருவம் எல்லாமே ஆண்களின் கருவ மடக்கும் விதத்திலே அமைந்திருந்தன. அழகுச்சிலை! அற்புதப் பதுமை! தேன்மலர்! திராட்சைக்கொடி! ஆனால் அந்த வாச ரோஜா, வேலியின்றி, பாதுகாக்க யாருமின்றி தன்னந்தனியே வாடிக் கொண்டிருந்தது. “தந்தை, தாய், அண்ணன், தம்பி எல்லோரையும் விழுங்கிவிட்டு இந்தப் பாவிக்கு மட்டும் பாழும் உயிரை ஏன் வைத்திருக்கிறாய்?” என்று அவள் பகவான் சன்னிதானத்திலே பலமுறை அழுதிருக்கிறாள்.
அப்படி அழுவதற்காக அவள் ஆலயத்திற்குச் செல்லும்போதுதான் குருக்கள் கிருஷ்ணய்யரின் சந்திப்பு ஏற்பட்டது. கிருஷ்ணய்யர் கோயில் குருக்கள் என்ற போதிலும் மிடுக்கான நடையுடை பாவனைகள் உடையவர். கழுத்திலே அழகான தங்கச் சங்கிலி, அந்தச் சங்கிலியின் முனையிலே ருத்ராட்சக்காய், இடுப்பிலே மயில்கண் வேட்டி, மேலே ஒரு வெண்பட்டுத் துண்டு, பி.ஏ. குடுமியுடன் கூடிய அமெரிக்கன் கிராப்-இவைதான் கோயில் குருக்கள் கிருஷணய்யரின் அடையாளங்கள்! மறந்து விட்டேனே- மன்னிக்கவும்-அன்றாடம் சலவை செய்யப்படும் பூணூல் உண்டு, மார்பிலே விபூதிப் பூச்சு உண்டு; விஷ்ணுவுக்கு விசேடமான நாட்களிலே நாமமும் போடுவார்; பட்டையாக அல்ல, பக்குவமாக, சிறிய கோடாக சிங்காரம் கெடாமல்!
வயதோ முப்பதிற்கு மேல் இல்லை. இந்த ஒரு முதல் போதாதா காதல் வியாபாரத்தை ஆரம்பிக்க!
ஐம்பது அறுபது ஆனதுகளே, நரைமயிர் கருக்கும் தைலம் தடவிக்கொண்டு, பொய்ப் பல்லால் புன்னகை புரிந்து, நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையென்று காதல் வாணிபம் நடத்தக் கன்னியரைத் தேடி அலையும்போது, முப்பதே வயதான கிருஷ்ணய்யர் மட்டும் சும்மா இருப்பாரா? அதுவும் புறா வலுவிலே பறந்து வருகிறது வட்டமிட்டுப் போகிறது என்றால், கேட்கவும் வேண்டுமா?
நாள்தோறும் நாராயணி ஆண்டவன் சன்னதியிலே கண்ணீர்த் துளிகளை சிந்தினாள். கிருஷ்ணய்யர், விபூதிப் பிரசாதம் அளித்து வந்தார். இந்த விஷயம், பல நாட்கள் மௌனமாகத்தான் நடந்து வந்தது. மாலை எப்போது வரும், அப்போது அந்த மயிலும் வருமே என்று பாதை மீது பார்வையை விரிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணய்யர். நாராயணி கடவுளின் முன்னே தினம் தினம் அழவேண்டிய காரணமென்ன? -குருக்களின் இதயத்தைக் குடைந்தது இந்தக் கேள்வி. அவளையே கேட்டுவிடத் தீர்மானித்நார். ஆனால் அவள் வரும் நேரத்திலேதான் அந்தப் பாழும் பக்தகோடிகளும் ஆலயத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. தனிமையில் அவளிடம் பேச அவருக்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது.
ஃஃஃ
ஒருநாள்—சோமவாரம்—கோயிலிலே அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்பட்டன. நல்ல கூட்டம் கச்சேரிகள் வேறு. அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் காங்கிரசிலே சேர்ந்து விட்டதற்காக நடத்தப்பட்ட திருவிழா அது. கோயிலுக்கு எதிரேயுள்ள காளி மண்டபத்தில் ஆடு வெட்டிப் பலி கொடுத்து, கள்ளுக் குடங்களும் வைத்துப் படைத்து, காந்தியாரின் கொள்கைக்குப் பெருமை கொடுத்தார்கள். அதை யொட்டி பெரிய கோயிலிலும் உயர்ந்த முறையில் உபயம் நடத்தினார்கள்.
அன்றைய தினம் வழக்கம்போல் நாராயணி வந்தாள். காத்திருந்த அய்யரும் பூத்திருந்த மல்லிகை வந்துவிட்டதென மகிழ்ந்தார் பரதம் நடக்குமிடத்திலும் பாட்டுக் கச்சேரி நடக்குமிடத்திலும் பக்தர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியிருந்தார்கள். நாராயணியோ கர்ப்பக்கிரகத்திற்குள்ளே நுழைந்தாள். தாமரை மொட்டுபோல் கரங்குவித்தாள். காமனை வெல்லும் விழி மூடினாள். இமை அணையைப் பிளந்து கொண்டு கண்ணீர் வெள்ளம் புறப்பட்டு, கன்னத்தின் மேட்டிலே கிளைகளாகப் பிரிந்தது. ஆழ்ந்த பக்தியிலே மெய்மறந்து நின்றாள். “எனக்கு வழிகாட்டு அப்பனே! என்னை மட்டும் இந்த உலகத்திலே ஜீவித்திருக்க ஏன் விட்டாய்? பெரிய குடும்பத்திலே தனிமரமாய் நின்று தவிக்கிறேனே; இது உனக்கு நியாயந்தானா?” என்று கதறினாள்.
பிரார்த்தனை முடிந்தது, பிரசாதம் தர அய்யர் வந்தார். விபூதியை வாங்கி நெற்றியிலே இட்டுக் கொண்டாள். திரும்பினாள்.
காய்ந்துபோன தொண்டையைக் கனைத்துக் கொண்டு, அய்யர் ஏதோபேச வாயெடுத்தார். நாக்கு எழவில்லை. கஷ்டப்பட்டு பேசியே விட்டார், நடுக்கத்தோடு. “ஏனம்மா தினந்தோறும் இப்படிக் கண்ணிலே ஜலம் விடுறே?”
இதைக் கேட்டதும் நாராயணிக்குத் தூக்கி வாரிப்போட்டது. தானோ, ஒரு பருவ மங்கை. வீட்டை விட்டு வெளியிலே கிளம்புவதே தப்பு; கோயிலுக்கு வருகிறாள் என்பதால் யாரும் குறை சொல்ல மாட்டார்கள், ஆனால் அங்கே ஒரு ஆடவரோடு பேசுவது என்பது ஒத்துக் கொள்ளக் கூடிய விஷயமா? இவ்வளவையும் அவள் நினைத்துப் பார்த்து, பதில் சொல்வதா, இல்லையா என்ற தீர்மானத்துக்குவர நேரமில்லை. நடுங்கியவாறே, “எல்லாம் என் விதி!” என்று பதில் கூறினாள்.
“நாராயணி! நோக்கு என்ன கஷ்டம்னு நேக்கு நன்னாத்தெரியும். பெத்தவாள், பிறந்தவாள் எல்லாம் போயிட்டா. ஒண்டிக் கட்டையா இருந்து தவிச்சிண்டிருக்கே!” என்று பீடிகை போட ஆரம்பித்தார் குருக்கள்.
நாராயணிக்கு அழுகை அதிகமாயிற்று. “நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, கர்ப்பக்கிரகத்தை விட்டு வெளியேறினாள் அவள்.
ஆண்டவன் தரிசனம் முடிந்ததும் கோயில் பிரகாரத்தைச் சுற்றிவிட்டுப் போவது நாராயனியின் பழக்கம் அவ்வாறே, அன்றும் அவள் பிரகாரத்தைச் சுற்றிவந்து கொண்டிருந்தாள். பிரகாரத்திலே. அப்பிரதக்ஷணமாக சுற்றி வந்து கொண்டிருந்த கிருஷ்ணய்யரை அவள் எதிரே கண்டாள். நாணத்தால் தலையைக் குனிந்தவாறு அவரைக் கடந்து செல்ல முயன்றாள். கிருஷ்ணய்யர் சுற்றுமுற்றும் பார்த்தார். பிரகாரத்தின் பக்கம் யாருமே வரவில்லை. எல்லோருமே கச்சேரி மண்டபங்களில் நிறைந்நிருந்தனர். “நாராயணி, நில்!” என்றார் மெதுவாக. நாராயணிக்குக் கால் பெயரவில்லை. நின்று தீர வேண்டியிருந்தது. கிருஷ்ணய்யர் அவள் எதிரே ஓடினார். அவள் கால்களிலே தலை முட்டுமளவுக்கு சாஷ்டாங்கமாக தெண்டனிட்டு வீழ்ந்தார்.
நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. “சுவாமி! சுவாமி!!” என்று கத்தி விட்டாள்.
“நாராயணி! அடியேனை ஏற்று ரட்சிப்பாய். தேவி விக்கரகத்தின் மூன்னேகூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது. தீதான் எனக்குத் தேவி! என்னை ஏற்றுக்கொள்!” என்று மன்றாடி நின்றார்.
“சுவாமி! தாங்கள் தேவ குலம். நானோ....” என்று இழுத்தாள் அவள்.
“முற்றும் கடந்த பெரியவாளுக்கு எல்லாக் குலமும் ஒரே குலந்தான்! நான் ஆண்குலம் தீ பெண்குலம்; வா, இருவரும் காதல் குளத்திலே நீந்துவோம்” என்று கையைப் பிடித்தார் அய்யர்.
“அய்யோ,சாமி! ஆண்டவன் கோயில்..” என்று எச்சரித்தாள் நாராயணி.
“அருகில் ஒன்றும், தலையில் ஒன்றும் வைத்திருப்பவர்தானே ஆண்டவன்; இது தெரியாதோ நோக்கு!” என்று அவள் ஜடையைப் பிடித்து விளையாடினார் குருக்கள்.
‘அய்யோ, இதெல்லாம் கூடாது, எனக்குப் பிடிக்காது’ என்று சொல்லிவிட்டு, தட்டிக் கழித்து விட எண்ணி வாயைத் திறந்தவள், ஏனோ தெரியவில்லை “யாராவது பார்த்து விடுவார்கள்!” என்று நாணிக் கோணி நகர்ந்தாள் இந்த வார்த்தை போதாதா, அய்யருக்கு!
“எல்லாப் பசங்களும் பரத நாட்டியம் பார்த்துண்டு இருக்கான். ஒருத்தனும் வரமாட்டான்; பயப்படாதே” என்று சொல்லி அய்யர் அவளை எட்டிப்பிடித்தார் அவள் கன்னம் சிவந்தது. அவரது கையிலே தன்னை ஒப்படைத்தாள். திடீரென்று நாராயணிக்கு ஞானோதயம் ஆயிற்று. அய்யரின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “சுவாமி! என்னைக் காப்பாற்றுங்கள். நீங்கள்தான் எனக்குத் துணை!” யென்று ‘ஓ’வென அலறினாள்.
அய்யர் அவளை வாரியெடுத்துத் தாவியணைத்து தைரியம் கூறி வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அவளும் ஆண்டவன் அருள்பாலித்து விட்டான் என்ற நம்பிக்கையோடு, வீட்டுக்குப் புறப்பட்டாள். அய்யரும், அந்தத் தையலின் கன்னத்தைச் சுவைத்த உதடுகளை கழுவாமலே ஆண்டவனுக்கு அர்ச்சனை மந்திரம் ஜெபிக்கக் கர்பக்கிரகம் நோக்கி விரைந்தார்.
கோயில் பிரகாரத்திலே வாக்களித்த பிரகாரம் அய்யர் நாராயணியை எப்போதும் வைத்துக்காப்பாற்றுகிற அளவுக்கு அவள் வீட்டிற்கே வந்து சேர்ந்தார்.
“கோயில் குருக்களுக்கு அடிச்சுதடா சான்ஸ்! கொய்யாப் பழமாக இருந்தாள், அவளைக் கொய்து விட்டார் அய்யர். என்ன இருந்தாலும் அனுபவிக்கப் பிறந்த ஜாதியப்பா அது! எத்தனையோ பேர் நத்திக் கிடந்தார்கள்; எல்லோரையும் எட்டி உதைத்துவிட்டு பூணூல் வலையிலே மாட்டிக் கொண்டது அந்த புள்ளிமான். போகிறான் போ! அவனாவது சுவைக்கட்டும்!” —இளங்காளைகளிடத்திலே, இப்படிப் பொறாமை வடிவத்திலே ஆரம்பமான பேச்சு, விட்டுக் கொடுக்கும் தன்மையிலே முடிவு பெற்றது.
கடவுளின் பக்கத்திலேயிருந்து கடமைகளைச் செய்கிற மனிதர் மிகவும் நல்லவராக இருப்பார்: நம்பியவரைக் கைவிட மாட்டார்; அதிலும் பிராமணர்—புரண்டு பேசமாட்டார்; பொய் கூறுவது பாபமெனக் கருதுவார். பரமசிவன் பக்கத்திலே பார்வதி போலத் தன்னையும் அருகே வைத்து ரட்சிப்பார் என்ற நம்பிக்கையிலேதான் நாராயணி கோயில் குருக்களைக் தன் கணவனாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்தாள். கோயில் பிரகாரத்திலே, கர்பக் கிரகத்தின் நிழல்பட்டு இருண்டிருந்த இடத்திலே, இதழ்களைப் பரிமாறிக் கொண்டு திரும்பி இல்லம் வந்தபிறகு, அன்றிரவு முழுதும் தூங்காமல் அவள் யோசித்ததின் முடிவு, குருக்களைத் தன் மணாளனாக ஆக்கிக் கொள்வது என்பதுதான்!
“ஏண்டி நாரா, கவலைப்படுறே! நான் பிராமணன் நீ சூத்திரச்சின்னுதானே பாக்கிறே! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே எங்க ராஜாஜி, அவர் மகளை காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ? ஜாதி ஆச்சாரம் பேசினாளே, என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறையன்-ஆதிதிராவிடர்னு சொல்லிக்குவா-அவரைக் கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரியுமோ? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆச்சாரம் எங்கேடி போச்சு? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு? பித்துக்குளி! சொல்றதைக் கேளுடி! பயப்படாதே! நான் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” -என்று கிருஷ்ணய்யர் பிரசங்க மான்றே செய்தார்.
“ஜாதியாரெல்லாம் கல்யாணத்துக்கு வருவார்களா?” என்று கேட்டு வைத்தாள் நாராயணி.
“வரவேண்டாமே! நான் ஜாதியாருக்குச் சொல்லப் போறதே இல்லை. நீ என்னோட சாயரக்ஷை கோயிலுக்கு வரவேண்டியது: இதோ இதோ வாங்கி வச்சிருக்கேன் மாங்கல்யம். ஆண்டவனுக்கு நேரா இதை உன் கழுத்திலே கட்டுவேன். நமக்கு மனுஷாள் சாக்ஷி வேண்டாம்! தேவாள் சாக்ஷி போதும். ஆண்டவாள் சாக்ஷி போதும். என்ன சொல்றே?” என்று குழைவோடு கேட்டார் குருக்கள்.
மகேசன் சன்னிதானத்திலேயே தனக்குத் தாலி கட்டப் போகிறார் குருக்கள் என்ற செய்தி கேட்டு நாராயணி குதூகலமடைந்தாள். அவள் கழுத்திலே தாலி மின்னியது. ஆனாலும் ஊரிலே பேசிக் கொண்டார்கள், கிருஷ்ணய்யர் நாராயணியை வைப்பாக வைத்திருக்கிறார் என்று! அப்படிப் பேசியவர்களிடம் அவரும் “ஆமாம்” போட்டார். இப்படி ஊரார் பேசுவது, நாராயணி காதிலேயும் விழுந்தது. அவள் அவரிடம் முறையிட்டாள், “என்னை உங்கள் ‘வைப்பு’ என்று சொல்கிறார்கள்” என்று.
“அட பித்து! ‘வைப்பு’ என்றால் ஏன் கோபப்படணும்? ‘ஒய்ப்’ என்ற இங்கிலீஷ் வார்த்தையை சொல்லத் தெரியாமே, அவா ‘வைப்’ என்று சொல்ரா! அவ்வளவுதான்” என்று ஒரு போடு போட்டார் கிருஷ்ணய்யர்.
கணவனே தெய்வமென்று கருதிக் கிடக்கும் நாராயணியும் அந்தப் பேச்சையெல்லாம் அதிகமாக வளர்த்தாமல் அவரோடு சுமூகமாகவே பழகி வந்தாள்.
திடீரென்று ஒருநாள், வீட்டுக்கு வந்த அய்யரின் முகத்திலே சோகம் படர்ந்திருப்பதை நாராயணி கண்டாள். காரணம் கேட்டாள். கோயில் வேலையிலிருந்து தர்மகர்த்தா நரசிம்மநாயுடு தன்னை விலக்கிவிட்டார் என்று கூறினார் அய்யர்.
“ஏன்?” என்று துடித்தாள் நாராயணி.
“ஊரிலேயுள்ள பிராமணர்கள்எல்லாம் மகாநாடு கூடினார்களாம். அதிலே, நான் கலப்புத் திருமணம் செய்து உன்னோடு வாழ்வதைக் கண்டித்தார்களாம். சூத்திரச்சியோடு வாழுகிறவன், கோயிலிலே சாமியைத் தொட்டு பூஜை செய்யக்கூடாது என்று தர்மகர்த்தாவிடம் வலியுறுத்தினார்களாம். அதனால், தர்மகர்த்தா என்னை விலக்கி விட்டார்” என்றார் அய்யர்.
இப்படி ஒரு புரட்சிகரமான செய்தியைக் கேள்விப் பட்ட நாராயணி, கிருஷ்ணய்யரைக் கட்டிப்பிடித்தபடி “பிராமணோத்தமரே! இந்த அனாதைக்காக உங்கள் ஆச்சார அனுஷ்டானங்களையெல்லாம் எதிர்த்து நின்றதோ இல்லாமல், சமூகத்தையும் துச்சமாக மதித்து, கோயில் வேலையையும் தியாகம் செய்து விட்டீர்களே!, என்று கதறினாள்.
“நாராயணி! சிறுபிள்ளை மாதிரி அழுதுண்டு இருக்காதே! உனக்காக நான் எவ்வளவோ செய்திருக்கேன். அதுமாதிரி நீ எனக்காக எதுவும் செய்யத் தயாராயிருக்கணும்; அதுதான் எனக்குத் தேவை!” என்று சொல்லியபடி அவள் கூந்தலைக் கோதினார் அய்யர்.
“சுவாமி! தங்களுக்காக உடல்,பொருள், ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறேன்” என்று அவரது மடியிலே சாய்ந்து விக்கி விக்கி அழுதாள் அந்த விழியழகி.
‘கிருஷ்ணய்யர் - நாராயணி’ ஜோடியைப் பார்க்கும் போது, ‘அய்யோ, இந்த யுவதிக்கு இந்த மனிதன் அவ்வளவு பொருத்தமில்லையே’ என்று சொல்லத்தான் தோன்றும். ‘கிளி மாதிரி இருக்கிறாள்; இவனோ எலி மாதிரி இருக்கிறான்’ என்று விமர்சித்தவர்களும் உண்டு. ‘பேரழகின் பிறப்பிடம் அவள்; இந்தப் பிராமணனோ இவளெதிரே விண்மீனுக்கு முன் மின் மினியாகத் தெரிகிறான்’ -இப்படிப் பேசாதாரும் இல்லை. ஆனால், நாராயணியின் கண்களோ, இவைகளுக்கெல்லாம் விதிவிலக்கு. அவள் மனக்கண்களுக்கு முன்னே எல்லோருடைய விமர்சனமும் தவிடு பொடியாகிவிட்டது.
குலப் பெருமை இழந்தார்,கோயில் குருக்கள் என்ற மதிப்பை இழந்தார்-இவ்வளவும் தனக்காக! தன்னிடம் தந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக!என நினைக்கும் போது, நாராயணிக்கு நேரே கிருஷ்ணய்யரின் உருவம் கிருஷ்ண பகவானின் உருவம் போலவே தோற்றமளித்தது. “கண்ணா, மணி வண்ணா!” என்று அவள் பாடாததுதான் பாக்கி. அவ்வளவு பக்தியும் பாசமும் புருஷன் மீது ஏற்பட்டு விட்டது அவளுக்கு.
குஷ்டரோகிக் கணவனைத் தாசியின் வீட்டுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி, தேவலோகத்து மாதர்கள் கற்பரசிகளாய் இல்லாத போது, பூலோகத்திலே மட்டும் கற்பரசிகள் இருக்கலாமா? அவர்களைச் சோதிப்போம்.' எனத் தோள் தட்டிப் புறப்பட்டு, நிர்வாணமாக வந்து சோறு பரிமாறச் சொன்ன மும்மூர்த்திகளைக் குழந்கைதளாக மாற்றி, நிர்வாணக் கோலத்தோடு அன்னமிட்ட அனுசூயா இத்தகைய பத்தினிகளை யெல்லாம் தோற்கடிக்கும் அளவுக்குப் பதிசொல் தட்டாத பாவையாக நடந்து கொள்ளவேண்டுமென்று நாராயணி ஆசைப்பட்டாள். அவளது பதிபக்தியைப் பார்த்து ஊரே ஆச்சரியப்பட்டது.
☐
கோயில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் இரவு கிருஷ்ணய்யர் அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்தார். அவரது உடலெங்கும் வியர்வைத் துளிகள். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி “நாராயணி! நாராயணி!” என்று அலறினார்.
அவளோ, “என்ன? என்ன?” என்று கேட்டபடி, சின்ன இடை நெளிய ஓடிவந்தாள், பள்ளியறையிலிருந்து.
அய்யர், பிரக்ஞையற்ற நிலையில் நின்று கொண்டு பிதற்றினார்.
“நாராயணி! நோக்காக நான் எவ்வளவு தியாகம் செய்திருக்கேன்?”
“ஆமாம், அதற்கென்ன இப்போது?”
“ஞாபகமிருக்கா? நோக்காக நீ உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்வேணு சொன்னியே!”
“ஆமாம், சொன்னேன்; இப்போதும் சொல்கிறேன்!”
“நாராயணி! ஆபத்து வந்துவிட்டதடி! நீ, ஆவியையும் பொருளையும் தியாகம் செய்யத் தேவையில்லை. உடலை மட்டும் தியாகம் செய்; போதும்!”
“என்ன சொல்கிறீர்கள் சுவாமி?”
“ஆமாண்டி கண்ணே! என் உயிரைக் காப்பாற்ற வேணும்னா, நீ உன் உடலைத் தியாகம் செய்யத்தான் வேணும்!”
“புரிய வில்லையே!”
“தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு இருக்காரே, அவருக்கு உன் உடலை .....”
அய்யர் வாய் மூடவில்லை. அதற்குள் நாராயணி மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தாள்.
நாராயணிக்கு பிரக்ஞை வந்தபோது தான் கட்டிலிலே படுக்க வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தாள். தன்னுடைய நெற்றியை மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த கைகளைத் தனது கைகளால் வெறுப்போடு நகர்த்தினாள். அப்படி அவள் நகர்த்தும்போது, கண்களையும் அகல விரித்துப் பார்த்தாள். அவளருகே சாய்ந்தபடி அமர்ந்திருந்தது. கிருஷ்ணய்யர் அல்ல!
கிருஷ்ணய்யரைவிட அழகான ஒரு மனிதர். நல்ல தேகக்கட்டு படைத்த வாலிபர். முறுக்கிவிடப்பட்ட இள மீசைகள் அவரது முகத்தின் கம்பீரத்தை அதிகப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தன. பரந்த மார்பகமும், அதை மூடியிருக்கும் பட்டுச் சொக்காயும், பார்ப்பவரைக் கவரத்தக்க விதத்திலே அமைந்திருந்தன, நெற்றியிலே நாமம்-சிவப்புக்கோடு மட்டும்! அவர், நாராயிணியை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தார், அவரைக் கண்ட நாராயணிக்குப் பேச வாயெழவில்லை. எழுந்தோடுவதற்கும் சக்தியற்றுப் போனாள். ஏதோ சொல்ல நினைத்தாள்; வாய் குழறிற்று.
“நீங்கள்...? நீங்கள்..?” என்று மட்டுமே அவளால் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.
“நான்தான் தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு” என்று கூறியவாறு, நாயுடு அவளை இறுகத் தழுவிக் கொண்டார்.
நாராயணி அவரிடமிருந்து விலகிக் கொண்டு “அய்யோ, தெய்வமே! இது உனக்கு அடுக்குமா?” என்று கதறினாள். தெய்வம் அப்போது என்ன வேலையாக எங்கே போயிருந்ததோ, தன் பிரதிநிதியாக ‘காமனை’ அனுப்பியிருந்தது போலும்! அவனும் நரசிம்ம நாயுடு பக்கம் சேர்ந்து கொண்டு தூபம் போட ஆரம்பித்தான்.
“கண்ணே நாராயணி! என் பேச்சைக் கேளடி பெண் தெய்வமே!” என்று நாயுடு அவள் அழகின் முன்னே மண்டியிட்டார். “என் கணவர்தான் இது போன்ற இழி தொழிலுக்கு இசைந்தார் என்றால், கோயில் தர்மகர்த்தாவாகிய தாங்களும் பாவச் செயல் புரியலாமா?” எனக் கண்ணீர் வடித்தபடி தர்மகர்த்தாவின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு துடித்தாள் நாராயணி.
“பாபம், புண்யம் எல்லாம் எனக்குத் தெரியாது நாராயணி. அதைப்பற்றி யெல்லாம் உன்னிடம் உபதேசம் கேட்கத் தேவையில்லை. வாரம் ஒரு முறை எது தவறினாலும், கோயிலிலே வாரியாரின் உபதேசம் தவறுவதில்லை. அதை வரி பிசகாமல் என் காதால் கேட்டுக் கொண்டுதான் வருகிறேன்” எனச் சிரித்தபடி அவளை வாரியணைத்தார் நாயுடு:
அவரது வாலிபம் துள்ளும் வலிமை மிக்க கரங்களிலே நாராயணியின் மெல்லிய இடை சிக்குண்டு நெளிந்தது; வளைந்தது; துவண்டது.
அந்தப் பலமான அணைப்பிலே சிக்கியபடியே நாராயணி அவரைப் பார்த்துப் பேசினாள். இருவருடைய முகங்களும் ஒன்றுக்கொன்று வெகு அருகாமையிலே தானிருந்தன. அவள் ஆத்திரத்தோடு கேட்டாள் “நீங்கள் செவி மடுக்கும் உபன்யாசங்களிலே இப்படித்தான் இன்னொருத்தன் மனைவியிடம் இன்பப் பிச்சை கேட்கச் சொல்லுகிறார்களோ?” என்று.
“ஆமாம் கண்ணே, ஆமாம்! சாம்பல் பூசிய சிவனை, தன் மனைவியோடு சரச சல்லாபத்திற்கு அனுப்பிய இயற்பகை நாயனார் புராண காலட்சேபம் இன்று காலையிலே தான் ஆயிரக்கால் மண்டபத்திலே அதிவிமரிசையாக நடைபெற்றது” எனக் கூறியபடி அவள் முகத்தோடு தன் முகத்தைப் பொருத்த முனைந்தார். அவரிடமிருந்து எப்படியும் விடுபட வேண்டும் என்ற ஆவேச உணர்ச்சியோடு அவரை ஒரு தள்ளாகக் கீழே தள்ளிவிட்டு, சுவரின் பக்கம் போய் ஒதுங்கி நின்று விம்மியழத் தொடங்கினாள் அவள்.
நாயுடுவுக்குக் கோபம் பிறந்தது. “நாராயணீ இதனால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. நாளைக்கு உன் புருஷன் கையிலே காப்பு போட்டுக் கொண்டு வீதியிலே போவான். அதைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையிருந்தால் உன் இஷ்டப்படியே நட!” என்று கூறிவிட்டு நாயுடு அறையைவிட்டு வெளியேறினார்.
நாராயணி சிலைபோல் நின்று கொண்டிருந்தாள். கிருஷ்ணய்யர் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தார். “அடிபாவி! என்னை மோசம் செய்து விட்டாயே!” என்று அவள் கையைப் பிடித்துக் கொண்டு அலறினார். நாராயணிக்கு அவரோடு பேச மனமில்லை. பேசாமல் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கிருஷ்ணய்யரை எரித்து விடுவது போல் பார்த்தாள்.
“ஏண்டி இப்படி என்னைப் பார்க்கிறே? என்னை ஜெயிலில் போடறதுக்கு நீயும் தீர்மானிச்சுட்டியா?”
கிருஷ்ணய்யர் பரிதாபமாகக் கேட்டார். நாராயணி பேசாமலிருக்கவே, மீண்டும் அவரே பேச்சைத் தொடர்ந்தார்.
“அடி என் கண்ணு! என் நிலைமை நோக்குத் தெரியாதுடி! கைக்கு விலங்கு காத்துண்டு இருக்குடி. கோயில்லே அம்மன் தாலியையும்,மூலவிக்கிரகத்து தங்கக் கவசத்தையும் நான் திருடிவிட்டேன்னு பேரு கட்டிவிட்டானுங்கடி! வித்த இடத்திலே, அந்த வாங்கின பயலுகளும் என்னைக் காட்டிக் கொடுத்து விட்டானுங்கடி. இப்ப என்னடி பண்றது? தர்மகர்த்தா தயவு இல்லேன்னா தலை தப்பாதுடி; தலை தப்பாது.”
நாராயணி அழுது கொண்டிருந்தாளே தவிர பேசவில்லை. அவளது நெஞ்சிலே எத்தனையோ குமுறல்கள். கொழுந்து ளிட்டெரியும் தீ ஜுவாலையைப் போல இருந்தன அவள் கண்கள்.
“எனக்காக இந்த தியாகம் பண்ணுடி! இது ஒண்ணும் பெரிய குற்றமில்லேடி. தர்மகர்த்தா நரசிம்மலு நாயுடு நல்ல மனுஷன் - எனக்கு சகோதரன் மாதிரி. அவன் மனசு வைச்சாதான் என்னைக் காப்பாத்த முடியும். ஒரு குல ஸ்திரீ, அஞ்சு பேர் வரை ஆடவாளிடம் தொடர்பு வச்சிக்கலாம்னு நம்ப பாரதமே சொல்லுதடி. கேளு என் பிராண நாயகி! பத்து வருஷம், பதினைந்து வருஷம்ன்னு என்னை ஜெயில்லே போட்டுட்டா, அப்ப கவலைப்பட்டுகிட்டுதானே இருப்பே; அந்தக் கவலையில்லாமே ரெண்டு பேரும் சந்தோஷமாயிருக்க, சம்மதம் கொடடி!”
அய்யர் கெஞ்சினார். நாராயணியின் மௌனம் நீடித்தது. அய்யருக்குச் சிறிது நம்பிக்கை பிறந்தது. நாராயணி தனக்காகத் தன்னைத் தியாகம் செய்யத் தீர்மானித்து விட்டதாகக் கருதினார்.
“அவர் எங்கும் போய்விடவில்லை. அடுத்த அறையிலேதான் இருக்கிறார் - இப்போதே வரச் சொல்றேண்டி. மறுபடியும் அவரை விரட்டிடாதே!” என்று கூறியபடி கிருஷ்ணய்யர் வெளியே ஓடினார்.
நாராயணி கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். ஏதோ ஒரு முடிவோடு எழுந்து நின்று நாயுடுவின் வரவை எதிர் நோக்கினாள். நாயுடுவும் ஆவலோடு உள்ளே நுழைந்தார். நாராயணி அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள்
“வந்துவிட்டேன் நாராயணி! நான் எங்கும் போகவில்லை. பக்கத்து அறையிலேதான் இருந்தேன். நீ என் உறுதியைச் சோதிப்பதற்காகவே பிடிவாதம் செய்தாய் என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று பல்லை இளித்தபடி அவளது பக்கம் வந்து நின்றார் நாயுடு. அவர் பேசி முடிப்பதற்குள்ளாக நாராயணி அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னை எப்போதும் வைத்து காப்பாற்றுவீர்களா?” என்று திடீரெனக் கேட்டுவிட்டுத் தேம்பி அழுதாள்.
இதுபோன்ற வார்த்தை அவளிடமிருந்து வெளியாகும் என எதிர்பார்க்காத நாயுடுவும் திடுக்கிட்டார்.
“உண்மையாகவே கேட்கிறேன். என்னை உங்களிடம் ஒப்படைத்தவனை இன்று முதல் புருஷன் என்கிற நிலையிலே வைத்து நான் பூஜிக்கப் போவதில்லை. இனி நீங்கள்தான் எனக்குக் கதி! நீங்கள் தான் எனக்குப் பதி! நான் உங்களுக்கு மனைவியாக இருக்கும் பாக்கியம் பெற்றவள் அல்லதான்; ஆனாலும், உங்கள் அடிமையாக இருக்கிறேன். மீண்டும் என்னை அந்தப் பாவியின் கையிலே ஒப்புவிக்காமல் இருப்பதாக எனக்கு வாக்குக் கொடுங்கள்”
நாராயணியின் கோரிக்கை எதுவாக இருந்தாலும் நிறைவேற்றுவேன் என்று சொல்லித் தீரவேண்டிய நேரம் அது! அதனால் நாயுடு தலையசைத்தார்.
“துண்டுக் கரும்பு கேட்டவனிடம், தோட்டத்தையே எடுத்துக் கொள் என்பது போல் இருக்கிறது நாராயணி உன் பேச்சு!” என்றார். பிறகு வென்றார். கிருஷ்ணய்யர் மறுபடியும் கோயில் குருக்களானார். திருட்டுப்போன நகைகளைப் பற்றிச் சரியான புலன் கிடைக்கவில்லையென்று போலீசாரும் அறிவித்து விட்டனர். காலை முதல் அர்த்தஜாமப் பூஜை வரையிலே கிருஷ்ணய்யருக்கு கோயிலிலே வேலைதான்! இரவு இரண்டு மணி வரையில் தினந்தோறும் பக்தர்களுக்குப் பிரசாங்கம் செய்வார். அதற்குமேல் கோயில் மண்டபத்திலேயே படுக்கை, உறக்கம் எல்லாம்! நாயுடுவுக்கும் நாராயணிக்கும் ஒரு குழந்தை பிறந்தது. பிறந்த நாலாம் நாள் நல்ல வேளையாக அது இறந்துவிட்டது. அது உயிரோடு இருந்திருந்தால் ஒரு வேளை நாயுடுவின் தொடர்பு அறுந்திருக்கலாம். நாராயணி கிருஷ்ணய்யர் என்று தனக்கு ஒரு நாயகர் இருந்ததையே மறந்துவிட்டாள்.
தர்மகர்த்தா ஒரு நாள் ஊரில் இல்லை என்ற செய்தி கிருஷ்ணய்யர் காதுக்கு எட்டியது. நகரசபைத் தலைவர் தேர்தலுக்காக ஏழெட்டு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி எங்கேயோ ஒரு கடாரம்பத்திற்கு ஓட்டிக் கொண்டு போய்விட்டார் என்றும், திரும்ப இரண்டு நாட்கள் ஆகும் என்றும் அய்யர் கேள்விப்பட்டார்.
நாராயணியைப் பற்றிய நினைவுகள் அய்யரைக் குடைந்தன. நாராயணியை நாயுடுவிடம் அர்ப்பணிக்காமல், ஜெயிலுக்கே போயிருந்தாலும் பரவாயில்லையே; ஜெயில் என்ன இந்தக் கோயில் மண்டபத்தை விடவா மோசமாக இருக்கப் போகிறது என்று தனக்குத்தானே வருந்திக்கொண்டிருந்த அய்யருக்கு, எப்படியும் நாராயணியை ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்ற ஆசை பிறந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ள, தக்க சமயம் கிடைத்ததாக எண்ணிப் புறப்பட்டார்.
நாராயணி வீட்டுக் கதவைத் தட்டினார். நாயுடுதான் வந்துவிட்டார் போலும் என்ற நினைவில் அவளும் கதவைத் திறந்தாள். அய்யர் எதிரே நின்றார். நாராயணி அவரை உடனே வெளியேறுமாறு கட்டளையிட்டுத் தன் அறைப் பக்கம் போனாள். அய்யரும் அவளைத் தொடர்ந்தார். “மரியாதையாகப் போய் விடுவது நல்லது!” என எச்சரித்தாள் அவள். அய்யர் கெஞ்சினார்.
“அன்றொரு நாள் கோயிலிலே முதன் முதல் சந்தித்துக் கொஞ்சினீரே, அந்த நாராயணி அல்ல இவள். இவள் நாயுடு மனைவி; தர்மகர்த்தா நரசிம்மரின் உடமை!” என கர்ச்சித்தாள் அவள்.
“என்ன இருந்தாலும் நீ என் மனைவியல்லவா?”
அய்யரின் பசிக்கு எப்படியும் அவளை இரையாக்கித் தீரவேண்டும். அவளோ, எரிமலையாக இருந்தாள். அய்யரைச் சுட்டெரித்துவிடும் நெருப்புக் குண்டங்களாகக் காட்சியளித்தன அவள் விழிகள்.
“முடியுமா, முடியாதா நாராயணீ?” -மூரட்டுத்தனமாக அவளது கரங்களை இழுத்த அய்யரின் கன்னத்திலே நாராயணி “பளார்!” என அறைந்தாள்.
“அடி விபச்சாரி! உனக்கு இவ்வளவு கொழுப்பா?” எனக் குதித்தார் அய்யர்.
“நான் விபச்சாரிதான் அய்யரே; விபச்சாரிதான். உம்மைப்போன்ற மனைவியை விற்கும் அரிச்சந்திரர்களின் மத்தியிலே என்னைப் போன்றவர்கள் எப்படிக் கற்போடு வாழ முடியும்?” -நாராயணி பெருங் கூச்சலிட்டுப் பேசினாள்.
“பத்து வருட சிறைவாசம்! அதைத் தாங்க உம்மால் முடியவில்லை! பத்தினியின் உடலை விற்றீர்! பகற் கொள்ளைக்காரனைப் போல, பகவானின் சொத்தைத் திருடி, மனைவியைப் பரத்தையாக்கி, மானத்தை இழந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்ட உமக்கு, என்னை மனைவி என்று அழைக்கவும் உரிமை வாழ்கிறதோ? தூ! வெட்கங்கெட்ட மனிதரே! போமய்யா போம்! உமது பித்தலாட்டங்களைப் பிரசங்கம் என்று போற்ற பக்தர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் போம்!”
விரல் நீட்டி தெரு வழியைக் காட்டி நின்றாள் நாராயணி.
அய்யரோ அவளை விடுவதாயில்லை. எப்படியும் அன்றைய தாகத்தைத் தணித்துச் செல்லவே விரும்பினார். எதிரே நிற்பது ஏதோ ஒரு மண் பதுமை என்ற எண்ணம்தான் இருந்தது நாராயணிக்கு.
அய்யர் அவளைத் தழுவிக்கொண்டார். “தப்ப முடியாது நீ!” என்று கரகரத்த குரலிலே கத்தினார். நாராயணிக்கும் அவருக்கும் சிறிது நேரம் கடும் போராட்டமே நடைபெற்றது. எப்படியும் விடுபட முடியாது எனக் கண்ட நாராயணிக்கு, நாயுடு மேஜையிலே ஒளித்து வைத்திருக்கும் கைத் துப்பாக்கி நினைவுக்கு வந்தது. ஓடிப்போய் மேஜையைத் திறந்தாள். துப்பாக்கியை எடுத்தாள்.
‘டுமீல்! டுமீல்!’ என ஒலி கிளம்பிற்று.
“அய்யோ! அய்யோ!” என்ற அலறல்.
நாராயணி திகைத்தாள். அது அய்யரின் குரல் அல்லரி நாயுடுவின் குரல்தான்! ஓடிப்போய்ப் பார்த்தாள். நாயுடு அறை வாயிற்படியிலே சுருண்டு கிடந்தார். அய்யரோ; எந்த ஆபத்துமின்றி, கட்டிலுக்கடியிலே ஒளிந்திருந்தார். நாயுடுவைக் கொன்றுவிட்ட நாராயணி அவர்மீது விழுந்து புலம்பினாள்.
நகரசபைத் தலைவர் தேர்தலைப் பற்றிய கவலையைக்கூட ஒதுக்கி வைத்துவிட்டு, அதற்குள் ஒருமுறை நாராயணியைப் பார்க்க ஓடிவந்த நரசிம்ம நாயுடு. எதிர்பாராத வகையிலே நாராயணியாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், போலீசார் அப்படி வழக்குப் பதிவு செய்யவில்லை. அவர்கள் அய்யரை வீரராக்கிவிட்டார்கள். கட்டிலுக்கடியிலே ஒளிந்து மயங்கிக் கிடந்த அய்யர்தான் நரசிம்ம நாயுடுவை சுட்டுக் கொன்று வஞ்சம் தீர்த்துக்கொண்டார் என்று தீர்ப்புக் கூறப்பட்டது.
ஆயுள் தண்டனை! அந்தமட்டில் ஆண்டவன் நாராயணியின் துப்பாக்கி முனையிலிருந்தும், நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையிலிருந்தும் தன்னை விடுவித்தானே என்ற மகிழச்சி அய்யருக்கு! நாராயணியோ அனாதையானாள். அய்யரோடு குடும்பம் நடத்திய வரையில் “நாராயணி அம்மாமி!” என்று ஊரார் அவளை அழைத்தனர். நரசிம்ம நாயுடு பிரவேசித்த பிறகு, “மிஸஸ் நாயுடு” என்று ஊர் கூறியது. இப்போது அவள், ‘நடுத்தெரு நாராயணி’ ஆகிவிட்டாள். முன்பெல்லாம் நடுத்தெரு நாராயணி என்றால் அவள் இருக்கும் தெருவைக் குறிக்கும். இப்போதோ?.. நடுத்தெருவுக்கு அர்த்தமே வேறு!—
☐
என்னதான் நாராயணியின் வாழ்க்கை கெட்டுவிட்டாலுங்கூட, அவளது மனத்திலே நரசிம்ம நாயுடுவுக்கு நல்லதோர் இடமுண்டு. அற்ப புத்திக்கார அய்யரைக் கொல்லப்போய் ஆசை நாயகனையல்லவா கொன்று விட்டாள். அவசரத்திலும்—ஆவேசத்திலும்! பாமாவினால் கொல்லப்பட்டதாகச் சித்திரிக்கப்பட்ட நரகாசுர வதைப்படல ஊர்வல ரதத்தைப் பார்க்கும்போது அவளுக்கு, தான் செய்த கொலைதான் ஞாபகத்திற்கு வருகிறது. அதனால்தான் தீபாவளி தினத்திலே அவள் அப்படி சோகமாக அமர்ந்திருந்தாள் போலும்! ★