திருக்குறள் மணக்குடவருரை/வாழ்க்கைத்துணைநலம்
௬-வது.-வாழ்க்கைத் துணை நலம்.
வாழ்க்கைத் துணைநல மாவது, இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனையாளது பெண்மையிலட்சணம். இல்வாழ்க்கைக்கு மனையாள் இன்றியமையாத துணையாதலான், இஃது அதன்பின் கூறப்பட்டது.
மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை,
இ-ள்:- மனை தக்க மாண்பு உடையளாகி - தான் பிறந்த குடிக்குத்தக்க ஒழுக்கத்தை உடையாளாய், தன் கொண்டான் வளம் தக்காள் - தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள், வாழ்க்கை துணை - இல்வாழ்க்கைக்குத் துணையாவள்.
இது, வாழ்க்கைத் துணையின் இலட்சணம் கூறிற்று. ௫௧.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின், வாழ்க்கை
எனைமாட்சித் தாயிலும் இல்,
இ-ள்:- மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - குடிக்குத் தக்க ஒழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் - இல்வாழ்க்கை எத்தனை நன்மைகளை உடைத்தாயினும், இல் - ஒரு நன்மையும் இன்றாம்.
இஃது, அவளிடம் நன்மை யில்லையாயின் இல்வாழ்க்கையின் எல்லா நன்மைகளும் கெடு மென்றது. ௫௨.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
இ-ள்:- சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் - (மகளிரைச்) சிறைசெய்து காக்கும் காவல் யாதினைச் செய்யும்? மகளிர் நிறை காக்கும் காப்பே தலை - மகளிரது கற்புக் காக்கும் காவலே தலையான காவல்.
இஃது, அவள் தனது கற்பால் தன்னைக் காத்தலே காவலாமென்றது. ௫௩.
பெண்ணின் பெருந்தக்க யாவுள, கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
இ-ள்:- பெண்ணின் பெருந் தக்க யா உள - பெண்பிறப்புப் போல மிக மேம்பட்டன யாவை யுள, கற்பு என்னும் திண்மை உண்டாக பெறின் - கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறில்? [திண்மை:-உறுதிப்பாடு.]
இது, கற்புடைய பெண்ணின் பிறப்புப்போல மிக மேம்பட்டவை இல்லை யென்றது. ௫௪.
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை, இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
இ-ள்:- புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழ் பொருந்தின மனையாளை இல்லாதார்க்கு, இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை - தம்மை இகழ்ந்துரைப்பார்முன் ஏறுபோல் நடக்கும் மேம்பட்ட நடை, இல்லை - இல்லையாம். [புரிந்த என்பது ஈற்று அகரம் கெட்டு நின்றது. ஏறு - எருது.]
பீடுநடை = அசைவும் தலையெடுப்பும் பொருந்திய நடை.
இது, கற்புடையா ளென்ற புகழைச் செய்த மனையாளை இல்லாதானை எல்லாரும் இகழ்வ ரென்றது. ௫௫.
இல்லதென் இல்லவள் மாண்பானால்? உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
இ-ள்:- இல்லவள் மாண்பானால் - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யுடையாளானால், இல்லது என் - இல்லாதது யாது? (எல்லாம் உளவாம்). இல்லவள் மாணாக்கடை - (ஒருவனுக்கு) மனையாள் மாட்சிமை யில்லாளானால், உள்ளது என் - உள்ளது யாது? (ஒன்றும் இல்லை).
இது, கற்புடைய மனையாளை உடையவன் எல்லாச் செல்வங்களையும் உடைய னென்றது. ௫௬.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
இது, பெண்களிற் சிறந்தாளது இலக்கணம் கூறிற்று. ௫௭.
தெய்வம் தொழாஅள், கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
இ-ள்:- தெய்வம் தொழாள் - தெய்வத்தைத் தெய்வமென்று தொழாளாய், கொழுநன் தொழுது எழுவாள் - தெய்வமும் தன் கணவனென்றே கருதி அவனை நாள்தோறும் தொழுது எழுமவள், பெய் என மழை பெய்யும் = பெய்யென்று சொல்ல மழை பெய்யும்.
எழுதல் - உறங்கி யெழுதல். [தொழுது எழுவாள் - தொழுதுகொண்டே எழுகின்றவள்.]
இது, கணவனைக் கனவிலும் நனவிலும் தெய்வம் எனத் தொழுவாள் ஆணைக்குப் பூதங்களும் கீழ்ப்படியு மென்றது. ௫௮.
பெற்றார்ப் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
இ-ள்:- பெண்டிர் பெற்றார் பெறின் - பெண்டிரானவர் (தம்மை மனைவியாராகப்) பெற்றவரையே (தமக்குத் தலைவராகப்) பெறின், புத்தேளிர் வாழும் பெரும் சிறப்பு உலகு பெறுவர் - தேவர் வாழும் பெருஞ் சிறப்பினை யுடைய உலகத்தைப் பெறுவர். [தலைவன் - கடவுள்.]
இது, கணவனைத் தெய்வமாகக் கொண்டவள் அடையும் பயன் கூறிற்று. ௫௯..
மங்கலம் என்ப மனைமாட்சி : மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
இ-ள்:- மனைமாட்சி - மனையாள் ஒழுக்கமுடைய ளாதலை, மங்கலம் என்ப - (ஒருவனுக்கு) அழகென்று சொல்லுப : நல்மக்கள் பேறு அதன் மற்று நன்கலம் என்ப - நல்ல மக்களைப் பெறுதலை அவ்வழகின் மேலே நல்ல அணிகல மென்று சொல்லுப (ஆன்றோர்). [என்ப என்பது பின்னரும் கூட்டப்பட்டது.]
இது, நல்ல மனைவியும் மக்களும் ஒருவனுக்கு அழகும் அணியுமா மென்றது : அடுத்த அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்தது மாம். ௬0.