திருவிளையாடற் புராணம்/09
நாட்டுக்கு அரசனாக உலகை ஆட்டுவிக்கும் இறைவன் இருந்து ஆட்சி செய்து வந்த நாளில் காட்டுக்குள் திரிந்து தவம்செய்த முனிவர்களும் தவசிகளும் சந்திக்க அங்கு வந்து கூடுவார் ஆயினர். வேதம் கற்ற முனிவன் ஆகிய கவுதமனும் அங்கு வந்து திரும்பும் வேளையில் காஞ்சன மாலையின் இல்லத்து வந்து அமர்ந்தார். அவளும் வரவேற்று முகமன் உரை வழங்கிப் பொன் ஆதனம் இட்டு அஞ்சலி செய்து அரிய தவத்தின் திறம் அறிந்து கொள்ளக் கேட்டாள். தவம் என்றால் என்ன? அதன் அவசியம் யாது? அதனால் உண்டாகும் பயன் யாது? என்று கேட்கத் தொடங்கினாள்.
"உலகீன்ற தடாதகைக்கு நீ தாயானாய்; சிவனுக்கு மருகன் என்னும் சீர் பெற்றாய்; மலையத்துவசனின் மனைவியாக இருந்து பெருமை பெற்றாய். நீ அறியாத தவ விரதங்கள் எவை இருக்கின்றன? என்றாலும் வேத நூலில் உள்ளதைச் சொல்கிறேன் என்று கூறினான்.
"மானதம், வாசிகம், காயிகம் எனத் தவம் மூன்று வகைப்படும். அவற்றுள் சிவனைத் தியானித்தல், புலனடக்கம். தரும தானங்கள் மானதம் எனப்படும். வாசிகமாவது ஐந்தெழுத்து ஓதல்; வேத பாராயணம் செய்தல், தோத்திரங்கள் தருமங்கள் எடுத்துப் பேசுதல் முதலியனவாம். காயிகமாவது சிவத்தலங்களுக்கும் கோயில்களுக்கும் சென்று தீர்த்தங்களில் நீராடி வழிபடுதல் முதலியனவாம். கோயில் திருப்பணியும். இவற்றுள் அடங்கும். இவற்றுள் இம்மூன்று தவங்களுள் காயிகமே மேலான்து ஆகும். அனைவரும் எளிதில் செய்யத் தக்கது ஆகும். அவற்றுள்ளும் தீர்த்த யாத்திரையே மிகச் சிறந்தது ஆகும். கங்கை, யமுனை, முதலிய நீர்களில் நீராடி இறைவனை வழிபடுதல் மிகவும் போற்றத் தக்கதாகும். தனித்தனியாக இந்நீர்களில் நீராடுவதைவிட அது சென்று படியும் கடலில் நீர் ஆடுவது மிகவும் எளியது ஆகும்" என்றான்.
"உப்புக் கரிக்காதா?"
"தப்பு அப்படிச் சொல்வது; சாத்திரம் கூறுவது; அது பழிக்கக் கூடாது" என்றான்.
பொன்மாலைக்குப் புது ஆசை வந்தது. மதுரைக்குக் கடல் நீர் வருமா என்ற ஆசை உண்டாயிற்று.
கவுதமர் சென்றதும் மகளை அணுகித் தன் ஆசையைத் தெரிவித்தாள்.
"இது என்னம்மா புது ஆசை?"
"உன் கணவனால் முடியாதது என்ன இருக்கிறது; குண்டோதரனுக்குச் சோறு போட்ட போது கங்கையையே அழைக்கவில்லையா, சிவனையே மருமகனாகப் பெற்ற எனக்குச் சீவன் முத்தி அடையச் செய்வது முடியாதா” என்று மனம் குழைந்து பேசினாள்.
”என்ன அம்மாவிடம் கொஞ்சல்?”
”அது அவர்கள் உம்மிடம் கெஞ்சல்”
”சொல்லு நீ அதை; அதற்காக அஞ்சல்' என்றார்.
"கடல் வேண்டுமாம் முழுகி எழுவதற்கு, யாரோ முனிவர் சொன்னராம் உடம்புக்கு நல்லது என்று”.
”உடம்புக்கு அல்ல; உயர் தவத்திற்கு உகந்தது”.
"அந்த அவத்தை எல்லாம் எனக்கும் தெரியும்; மருமகனிடம் நேரே சொல்ல வெட்கப்படுகிறாள்”.
”மாமியாரின் லட்சணம் அது தானே; மெச்சினோம் நாம்; ஒரு கடல் என்ன ஏழு கடலும் கொண்டு வருகிறோம்”.
”அதற்கப்புறம் இங்கு மதுரை இருக்காது; கடல் தான் இருக்கும்” என்றாள்.
"கவலைப்படாதே ஏழுகடல் நீரும் வந்து குவியும்; அதற்கப்புறம் அது தானே வழியும்” என்றார். மதுரையில் கிழக்கே ஒரு குளத்தில் ஏழ்கடல் நீரும் வந்து விழுந்தது. ஏழு நிறங்களோடு அவை விளங்கின.
”காதற் பெண்ணின் கடைக் கண் பார்வையிலே விண்ணையும் சாடுவோம்' என்று பாரதி சொன்னது இங்கு உண்மையாயிற்று.
தடாதகைப் பிராட்டி காட்டிய குறிப்பில் விடையேறிவரும் விண்ணவன் ஆகிய சிவபெருமான் ஏழுகடலையும் கொண்டு வந்து சேர்த்தார். இதுவும் மதுரைத் தலத்துக்குப் பெருமை சேர்த்தது.