கொண்டு வந்து சேர்த்தார். இதுவும் மதுரைத் தலத்துக்குப் பெருமை சேர்த்தது. 

10. மலையத்துவசனை அழைத்த படலம்

சுந்தரபாண்டியனாகிய சோமசுந்தரர் தடாதகைப் பிராட்டியை அழைத்துக் கொண்டு ஏழுகடல் வந்து குவிந்த வாவியின் கரையிலே அழகிய சோலையில் இருந்து கொண்டு அடுத்துச் செய்ய வேண்டுவது குறித்துப் பேசினார். தீர்த்த மேன்மை அறிந்து அன்னை காஞ்சனைக்காக அழகுற நிரப்பிய கடல் நீரில் வந்து குளித்துப் பயன் பெறுமாறு சுந்தரர் கூற அவ்வாறே காஞ்சனை அம்மையை வாவிக்கரைக்குத் தடாதகை அழைத்து வந்தாள்.

குளித்துக் களித்து மகிழ அவள் அங்கு வரவில்லை; சாத்திரப்படி அதில் முழுகி நற்பயன் பெறவே அங்கு வந்திருந்தாள். சடங்குகள் அறிந்துசொல்வதில் சதுரர்கள் ஆகிய புராண நூல் கேள்வியர் தம்மை நோக்கிக் கடல் நீர் குடைந்திடும் கடமைகள் யாவை எனக் கேட்க விதிமுறை அறிந்த அந்த வேதியர்கள் "மாசற்ற கற்பினாய்! மகிழ்நன், பெற்ற மகள் இவர்கள் கைத்தலம் அல்லது கன்றின் வால் இம்மூன்றுள் ஒன்றைப் பற்றிக் கொண்டே கடல் நீராடுதல் மரபு" என்று ஓதினர்.

"கைப்பிடித்த கணவனும் இல்லை; பெற்று வளர்த்த மகளும் இல்லை; கன்றின் வால் தான் எனக்குக் கிடைத்தது. இது விதியின் செயல் என்று தன் கதியை எடுத்துக் கூறிக் கதறினாள். தடாதகை தன்னுயிர்த் தலைவனை அடைந்து பணிந்து தன் அன்னையின் குறையை எடுத்து உரைக்கத் தென்னவனைக் கொணர்வதற்கு அவர் சிந்தனையுள் ஆழ்ந்தார். அவன் வரவேண்டும் என நினைத்த அளவில் மலையத்துவசன் மண் நோக்கி விண்ணிலிருந்து விரைவாக விமானத்தில் வந்து இறங்கினான்; கண் நிறைந்த அழகனாகிய சுந்தரனைக் கண்டு தழுவித் தன் அன்பைக் காட்டத் துடிதுடித்தான். இறைவனும் தன் மாமனைச் சந்தித்துத் தோள்களில் தழுவிக் கொண்டு பின் அருகு அவனை அமர்த்தினார்.

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? மணப் பெண் போல நாணி அவன் முன்னே வந்து நின்றாள்.

"மகளின் மணத்தைக் காண நீர்வரவில்லையே" என்றாள்.
"அழைப்பும் ஆண்டவன் அருளும் அன்று கிடைக்க வில்லை" என்றான்.
"தவத்தின் பேறு அடைய நீர் பூதலத்துக்கு வந்தது என் பேறு" என்றாள்.
"கைப்பிடித்துக் கடலில் முழுகுவோம்" என்று கூறி இருவரும் நீரில் மூழ்கினர்.

வேதியர்கள் ஐந்தெழுத்து மந்திரம் சொல்லி மறை நூல் விதிப்படி சடங்குகள் செய்ய இருவரும் கடலில் நீர் ஆடினர்.

மலையத்துவசனும் காஞ்சனையும் புதுப்பிறவி பெற்றது போல் கரை ஏறிக் கறை நீங்கி இறை வடிவம் பெற்றனர். மானுட வடிவம் மாறித் தெய்வ வடிவம் பெற்றுவிட்டனர். அவர்களை அழைத்துச் செல்லத் தெய்வ விமானம் வந்து நின்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். சிவனை வணங்கிவிட்டு விடை பெற்றவராய் விண்ணுலகம் அடைந்தனர். .

புவ லோகம், சுவர்க்கலோகம், மகர்லோகம், சனக லோகம், தவலோகம் சத்தியலோகம் வைகுந்தம் இவற்றைக் கடந்து தலைமைமிக்க சிவலோகத்தை அடைந்தனர்.

கணவனை இழந்தவர்க்குக் காட்டுவது இல்லை என்று சிலப்பதிகாரம் கூறும், கைம்மை நோன்பு நோற்ற காஞ்சனை கணவனின் கரம் பற்றி இறைவன் திருவடி நிழலை அடைந்து அமர வாழ்வைப் பெற்றாள். 

11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம்

காஞ்சனையும் மலையத் துவசனும் துறக்க வாழ்வு அடைந்ததால் நாடாளும் பொறுப்பை விட்டு விலக முடியவில்லை. சுந்தரேசுவரர் மக்களுக்கு உயிராக விளங்கித் தக்க முறைப்படி செங்கோல் நடத்திச் சீர் பெற ஆட்சி செய்து வந்தார்.

காஞ்சனையின் காதல் மகளாகத் தடாதகைப் பிராட்டி பிறந்ததால் கயிலை மன்னர் ஆகிய சிவனும் சுந்தரனாக வந்து அரசு ஏற்று நடத்த வேண்டியதாயிற்று. செம்மையான ஆட்சியை நிலைபெறச் செய்ய ஓர் வழி காட்டியாக விளங்கத் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். ஆண்டுகள் பல கழிய எடுத்த கடமைக்கேற்ப ஒரு வாரிசினை ஏற்படுத்தி மகன் ஒருவனை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.

தடாதகையே தவச் செல்வியாக வேள்வியில் மூன்று வயது குழந்தையாக அவதரித்தவள் உலகம்ஈன்ற தாயாகிய பிராட்டி ஒரு மகவை மானுடரைப் போலப் பெற மாட்டாள் என்பது தெரிந்ததாகும். எனினும் கருப்பம் உள்ளது போலவும் கரு உயிர்த்துத் திங்கள் பத்துச் சுமந்தது போலவும் நடிக்க வேண்டியது ஆயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருவிளையாடற்_புராணம்/10&oldid=1111421" இலிருந்து மீள்விக்கப்பட்டது