திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 19 முதல் 20 வரை

"குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை மீண்டும் ஒட்டவைக்க முடியாது; அதுபோலவே நான் இந்த மக்களையும் இந்த நகரையும் தகர்த்தெறிவேன்." - எரேமியா 19:11

அதிகாரம் 19

தொகு

உடைந்த சாடியின் அடையாளம்

தொகு


1 ஆண்டவர் கூறுவது இதுவே:
"நீ சென்று குயவன் செய்த மண்கலயம் ஒன்றை வாங்கு.
மக்களுள் மூப்பர் சிலரையும்
குருக்களுள் முதியோர் சிலரையும் கூட்டிக் கொண்டு,
2 மண்கல உடைசல் வாயில் அருகிலுள்ள
பென்இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ.
அங்கு நான் உன்னிடம் சொல்லப்போகும் சொற்களை அறிவி. [1]
3 நீ சொல்ல வேண்டியது:
"யூதாவின் அரசர்களே, எருசலேம் வாழ் மக்களே!
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
இஸ்ரயேலின் கடவுளாகிய
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
கேட்போர் ஒவ்வொருவரின் காதுகள்
நடு நடுங்கும் அளவுக்கு
இந்த இடத்தின் மீது தீமை வரச் செய்வேன்.
4 அவர்கள் என்னைப் புறக்கணித்தனர்;
இந்த இடத்தைத் தீட்டுப்படுத்தினர்.
தாங்களோ, தங்கள் மூதாதையரோ,
யூதாவின் அரசர்களோ அறிந்திராத
வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர்.
மாசற்றோரின் இரத்தத்தால் இவ்விடத்தை நிரப்பினர்.
5 தங்கள் புதல்வர்களைத் தீயில் சுட்டெரித்துப்
பாகாலுக்கு எரிபலி கொடுக்கும்படி,
அந்தத் தெய்வத்திற்குத் தொழுகை மேடு எழுப்பினர்.
இதனை நான் கட்டளையிடவில்லை;
இதுபற்றி நான் பேசவுமில்லை;
இது என் எண்ணத்தில்கூட எழவில்லை. [2]
6 ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்:
இதோ நாள்கள் வருகின்றன!
அப்போது இந்த இடம் தோபேத்து என்றோ
பென்இன்னோம் பள்ளத்தாக்கு என்றோ பெயர் பெறாது.
மாறாகப் 'படுகொலைப் பள்ளத்தாக்கு' என்று பெயர் பெறும்.
7 யூதா, எருசலேமின் திட்டங்களை
நான் இவ்விடத்தில் முறியடிப்பேன்.
அவர்கள் பகைவர் முன்னிலையிலும்
அவர்களின் உயிரைப் பறிக்கத்
தேடுவோர் முன்னிலையிலும்
அவர்களை வாளால் வீழ்த்துவேன்.
அவர்களின் பிணங்களை
வானத்துப் பறவைகளுக்கும்
நிலத்து விலங்குகளுக்கும்
உணவாகக் கொடுப்பேன்.
8 இந்நகர் கொடூரமாய்க் காட்சியளிக்கும்.
அது ஏளனத்துக்கு உள்ளாகும்.
அவ்வழியே செல்லும் ஒவ்வொருவனும் திகிலுறுவான்;
அதன் காயங்களை எண்ணி ஏளனம் செய்வான்.
9 தங்கள் புதல்வர் புதல்வியரின் சதையை
அவர்கள் உண்ணுமாறு செய்வேன்.
அவர்கள் பகைவர்களும் அவர்களின்
உயிரைப் பறிக்கத் தேடுவோரும்
அவர்களை முற்றுகையிட்டு நெருக்கி வருத்தும்போது,
அவர்கள் ஒருவர் ஒருவருடைய சதையை உண்பார்கள்.
10 அப்போது உன்னோடு வந்திருந்தவர்களின் முன்னிலையில்
அந்த மண்கலயத்தை உடைத்துவிட்டு,
11 நீ அவர்களுக்குக் கூற வேண்டியது:
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
குயவனின் உடைக்கப்பட்ட மண் கலயத்தை
மீண்டும் ஒட்டவைக்க முடியாது;
அதுபோலவே நான் இந்த மக்களையும்
இந்த நகரையும் தகர்த்தெறிவேன்.
இறந்தோரைப் புதைக்க வேறு இடம் இல்லாமையால்
தோபேத்திலேயே புதைப்பர்.
12 ஆண்டவர் கூறுவது:
எருசலேமுக்கும் அதில் குடியிருப்போருக்கும்
எதிராக இவ்வாறு செய்வேன்.
அந்நகரைத் தோபேத்தாகவே மாற்றிவிடுவேன்.
13 எருசலேமின் வீடுகளும்,
யூதா அரசர்களின் மாளிகைகளும்,
எந்த வீட்டு மேல்தளங்களில்
வானத்துப் படைகளுக்குத் தூபம் காட்டினார்களோ,
வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்கள் படைத்தார்களோ,
அந்த வீடுகள் எல்லாம்
தோபேத்தைப் போலத் தீட்டுப்பட்டவையாகும்."


14 இறைவாக்கு உரைக்க ஆண்டவரால்
தோபேத்துக்கு அனுப்பப் பெற்றிருந்த எரேமியா
அங்கிருந்து திரும்பி வந்து,
திருக்கோவில் முற்றத்தில் நின்று கொண்டு
மக்கள் அனைவருக்கும் கூறியது:
15 "இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்
கூறுவது இதுவே:
நான் இந்நகருக்கு எதிராகக் கூறியுள்ள
அனைத்துத் தீமைகளையும் இந்நகர் மேலும்
இதனைச் சுற்றியுள்ள நகர்கள்மேலும் விழச் செய்வேன்.
ஏனெனில் அவர்கள் என் சொற்களைக் கேளாமல்
முரட்டுப் பிடிவாதம் செய்தார்கள்.


குறிப்புகள்

[1] 19:2 = 2 அர 23:10; எரே 7:30-32; 32:34-35.
[2] 19:5 = லேவி 18:21.


அதிகாரம் 20

தொகு

பஸ்கூருக்குச் சாபம்

தொகு


1 இம்மேர் மகனும்,
ஆண்டவரது இல்லத்தில்
தலைமை அதிகாரியுமாய் இருந்த
பஸ்கூர் என்னும் குரு,
எரேமியா இவற்றை எல்லாம்
இறைவாக்காகச் சொல்லக் கேட்டான்.
2 அதன் காரணமாக அவன் எரேமியாவைப் பிடித்து,
அடித்து, ஆண்டவர் இல்லத்தில்
பென்யமின் உயர்வாயிலில் சிறையில் அடைத்தான்.
3 மறுநாள் காலையில் பஸ்கூர்
எரேமியாவைச் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.
அப்போது எரேமியா கூறியது:
"ஆண்டவர் உன்னைப் பஸ்கூர் என்றல்ல,
மாறாக 'மாகோர் மிசாபீபு' [1] என்றே அழைத்துள்ளார்.
4 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ உனக்கும் உன் நண்பர்களுக்கும்
பேரச்சம் உண்டாக நீயே காரணமாவாய்.
உன் கண் முன்னாலேயே அவர்கள்
பகைவர்களின் வாளால் மடிவார்கள்.
யூதா முழுவதையும்
பாபிலோனிய மன்னனிடம் கையளிப்பேன்;
அவன் அவர்களைப் பாபிலோனுக்கு
நாடு கடத்தி வாளால் வெட்டி வீழ்த்துவான்.
5 இந்நகரின் செல்வங்களையும்
உழைப்பின் பயன் அனைத்தையும்
விலை உயர்ந்த பொருள்கள் யாவற்றையும்
யூதா அரசரின் கருவூலங்களையும்
அவர்கள் பகைவர்களிடம் ஒப்புவிப்பேன்.
அவர்கள் அவற்றைப் பறிமுதல் செய்து
பாபிலோனுக்கே கொண்டு செல்வார்கள்.
6 பஸ்கூர்! நீயும் உன் வீட்டில் வாழும் அனைவரும்
நாடு கடத்தப்படுவீர்கள்.
நீயும், உன் பொய்யான இறைவாக்குகளைக் கேட்ட
உன் நண்பர்களும்
பாபிலோனுக்குச் சென்று அங்குச் சாவீர்கள்;
அங்கேயே புதைக்கப்படுவீர்கள்.

எரேமியாவின் முறைப்பாடு

தொகு


7 ஆண்டவரே!
நீர் என்னை ஏமாற்றிவிட்டீர்;
நானும் ஏமாந்து போனேன்;
நீர் என்னைவிட வல்லமையுடையவர்;
என்மேல் வெற்றி கொண்டுவிட்டீர்;
நான் நாள் முழுவதும் நகைப்புக்கு ஆளானேன்.
எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றார்கள்.


8 நான் பேசும்போதெல்லாம்
'வன்முறை அழிவு' என்றே
கத்த வேண்டியுள்ளது;
ஆண்டவரின் வாக்கு என்னை
நாள் முழுதும் பழிச்சொல்லுக்கும்
நகைப்புக்கும் ஆளாக்கியது.


9 "அவர் பெயரைச் சொல்லமாட்டேன்;
அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில்,
உம் சொல் என் இதயத்தில்
பற்றியெரியும் தீ போல இருக்கின்றது.
அது என் எலும்புகளுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது.
அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்;
இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.


10 'சுற்றிலும் ஒரே திகில்!' என்று
பலரும் பேசிக் கொள்கின்றார்கள்;
'பழிசுமத்துங்கள்; வாருங்கள்,
அவன்மேல் பழி சுமத்துவோம்" என்கிறார்கள்.
என் நண்பர்கள்கூட
என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்;
'ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்;
நாம் அவன்மேல் வெற்றி கொண்டு
அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்' என்கிறார்கள்.


11 ஆனால், ஆண்டவர்
வலிமை வாய்ந்த வீரரைப் போல
என்னோடு இருக்கிறார்.
எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர்.
அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள்.
அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை;
அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்;
அது மறக்கப்படாது.


12 படைகளின் ஆண்டவரே!
நேர்மையாளரை சோதித்தறிபவரும்
உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும்
அறிபவரும் நீரே;
நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்;
ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன்.


13 ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்;
அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;
ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத்
தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.


14 நான் பிறந்த நாள் சபிக்கப்படட்டும்;
என் அன்னை என்னைப் பெற்றெடுத்த நாள்
ஆசி பெறாதிருக்கட்டும்.


15 "உனக்கோர் ஆண் குழந்தை பிறந்துள்ளது"
என்ற செய்தியை என் தந்தையிடம் சொல்லி
அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய
அந்த மனிதன் சபிக்கப்படுக!


16 அவன், ஆண்டவர் இரக்கமின்றி வீழ்த்திய
நகர்களுக்கு ஒப்பாகட்டும்.
அவன் காதில் காலையில் அழுகைக் குரலும்
நண்பகலில் போர் இரைச்சலும் ஒலிக்கட்டும்!


17 தாய் வயிற்றில் நான் இருந்தபோதே,
அவள் ஏன் என்னைக் கொல்லவில்லை?
என் தாயே எனக்குக் கல்லறையாய் இருந்திருப்பாளே!
அவள் கருவறையிலேயே என்றும் இருந்திருப்பேனே!


18 கருவறைவிட்டு ஏன்தான் வெளிவந்தேன்?
துன்ப துயரத்தை அனுபவிக்கவும்
என் வாழ்நாள்களை வெட்கத்தில் கழிக்கவும்தான் வந்தேனோ? [2]


குறிப்புகள்

[1] 20:3 - எபிரேயத்தில், 'சுற்றிலும் பேரச்சம்' என்பது பொருள்.
[2] 20:14-18 = யோபு 3:1-19.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை