திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை
எரேமியா (The Book of Jeremiah)
தொகுஅதிகாரங்கள் 21 முதல் 22 வரை
அதிகாரம் 21
தொகுசெதேக்கியாவின் தூதர்க்கு மறுமொழி
தொகு
1 மல்கியாவின் மகன் பஸ்கூரையும்
மாசேயாவின் மகனாக குரு செப்பனியாவையும்
செதேக்கியா அரசன் எரேமியாவிடம் அனுப்பிய நேரத்தில்
ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது:
2 அவர்கள் எரேமியாவிடம் வந்து,
"பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்
நமக்கு எதிராய்ப் போருக்குப் புறப்பட்டு வருகிறான்.
இந்நேரத்தில் ஆண்டவர் நமக்காக வியத்தகு செயல்கள் செய்து
நெபுகத்னேசரைப் பின்வாங்க வைப்பாரா? என்று
ஆண்டவரிடம் கேட்டுச் சொல்" என்றனர். [1]
3 அப்போது எரேமியா அவர்களிடம் கூறியது:
"நீங்கள் செதேக்கியாவிடம் இவ்வாறு சொல்லுங்கள்:
4 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
மதில்களுக்கு வெளியே உங்களுக்கு எதிராய்
முற்றுகையிட்டுள்ள பாபிலோனிய மன்னனோடும்
கல்தேயரோடும் போரிடுவதற்கு
நீங்கள் கையாளும் படைக்கலன்களை
உங்களுக்கு எதிராகத் திருப்புவேன்.
அவற்றை எல்லாம் இந்நகரின் மையத்தில் குவித்துவைப்பேன்.
5 என் சினத்திலும், சீற்றத்திலும்,
கடும் வெஞ்சினத்திலும் உங்களுக்கு எதிராக
நானே போரிடுவேன்.
ஓங்கிய கையோடும்
வலிமைமிகு புயத்தோடும் போரிடுவேன்.
6 இந்நகரில் வாழ்வோரை வதைப்பேன்.
இங்குள்ள மனிதர்களும் விலங்குகளும்
பெரும் கொள்ளை நோயால் மடிவார்கள்.
7 அதன் பின் யூதா அரசன் செதேக்கியாவையும்
அவன் அலுவலரையும்,
கொள்ளைநோய், வாள், பஞ்சம்
ஆகியவற்றிலிருந்து தப்பி
இந்நகரில் எஞ்சியிருப்போரையும்,
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையிலும்,
உங்கள் பகைவர்களின் கையிலும்,
உங்கள் உயிரைப் பறிக்கத் தேடுவார் கையிலும் ஒப்படைப்பேன்.
நெபுகத்னேசர் அவர்களை வாளால் வெட்டி வீழ்த்துவான்.
அவர்களைக் காப்பாற்றவோ,
அவர்களுக்கு இரக்கம் காட்டவோ,
பரிவு காட்டவோ மாட்டான்" என்கிறார் ஆண்டவர்.
8 இம்மக்களுக்கு நீ கூற வேண்டியது:
ஆண்டவர் கூறுவது இதுவே:
"இதோ, வாழ்வின் வழியையும்
சாவின் வழியையும் உங்கள்முன் வைக்கிறேன்.
9 இந்நகரில் தங்கிவிடுபவன் வாளாலும்,
பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் மடிவான்.
ஆனால், வெளியேறி உங்களை முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்
கல்தேயரிடம் சரணடைபவன் உயிர்பிழைப்பான்.
அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த
கொள்ளைப்பொருளாய் இருக்கும்.
10 இந்நகருக்கு நன்மையை அல்ல,
தீமையையே கொணர முடிவு செய்துள்ளேன்;
அதனைப் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்போகிறேன்.
அவன் அதனைத் தீக்கிரையாக்குவான், என்கிறார் ஆண்டவர்."
யூதாவின் அரச குடும்பத்துக்கு எதிராக
தொகு
11 யூதாவின் அரச குடும்பத்திற்கு நீ கூறவேண்டியது:
"ஆண்டவர் வாக்கைக் கேளுங்கள்:
12 தாவீதின் வீட்டாரே, ஆண்டவர் கூறுவது இதுவே:
காலைதோறும் நீதி வழங்குங்கள்;
கொள்ளையடிக்கப்பட்டவனைக்
கொடியோனிடத்திலிருந்து விடுவியுங்கள்;
இல்லையேல் உங்கள் தீச்செயல்களை முன்னிட்டு
என் சீற்றம் நெருப்பென வெளிப்பட்டுப் பற்றியெரியும்;
அதனை அணைப்பார் யாருமிலர்.
13 பள்ளத்தாக்கில் வாழ்வோரே!
சமவெளிப் பாறையே!
'எங்களுக்கு எதிராக யார் வரமுடியும்?
நம் கோட்டைகளில் யார் நுழைய முடியும்?'
என்று கூறும் உங்களுக்கு எதிராய்
நானே எழும்பியுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.
14 உங்கள் செயல்களின் விளைவுக்கேற்ப
உங்களைத் தண்டிப்பேன்;
நகரிலுள்ள வனத்திற்குத் [2] தீமூட்டுவேன்;
சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
- குறிப்புகள்
[1] 21:2 = 2 அர 25:1-11; 2 குறி 37:11-21.
[2] 21:14 - "வனம்" என்பது இங்கு
எருசலேம் அரண்மனையைக் குறிக்கும் (காண் 1 அர 7:2).
அதிகாரம் 22
தொகுயூதாவின் அரச குடும்பத்திற்கு எதிராக
தொகு
1 ஆண்டவர் கூறுவது இதுவே:
"யூதா அரசன் மாளிகைக்குச் செல்.
அங்கு இந்தச் செய்தியைச் சொல்.
2 'தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் யூதா அரசனே,
நீயும் உன் அலுவலரும்
இந்த வாயில்கள் வழியாகச் செல்லும் உன் மக்களும்
ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்' என்று சொல்.
3 ஆண்டவர் கூறுவது இதுவே:
நீதியுடனும் நேர்மையுடனும் நடந்துகொள்ளுங்கள்;
பறிகொடுத்தோரை கொடியோரிடமிருந்து விடுவியுங்கள்;
அன்னியரையும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் ஒடுக்காதீர்கள்;
அவர்களுக்குக் கொடுமை இழைக்காதீர்கள்;
மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதீர்கள்.
4 நீங்கள் உண்மையில் இவ்வாறு நடப்பீர்களாகில்,
தாவீதின் அரியணையில் அமரும் அரசர்கள்
இந்த அரண்மனை வாயில்கள் வழியாகச் செல்வார்கள்;
தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிச் செல்வார்கள்;
அவர்களோடு அவர்கள் அலுவலரும் மக்களும் செல்வார்கள்.
5 ஆனால் நீங்கள் இந்த வாக்கிற்குச் செவிகொடுக்காவிட்டால்
இந்த அரண்மனை பாழ்பட்டுப்போகும் என
என்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன், என்கிறார் ஆண்டவர். [1]
6 யூதா அரச மாளிகைபற்றி ஆண்டவர் கூறுவது இதுவே:
'நீ எனக்குக் கிலயாதைப் போலவும்,
லெபனோனின் கொடுமுடி போலவும் இருக்கின்றாய்;
ஆனால் நான் உன்னைப் பாழ் நிலமாகவும்,
குடியிருப்பாரற்ற நகராகவும் ஆக்குவேன்.
7 உன்னை அழிப்பதற்காக ஆள்களை ஏற்படுத்தியுள்ளேன்;
அவர்கள் தம் ஆயுதங்களால் உன்னிடமுள்ள
சிறந்த கேதுரு மரங்களை வெட்டித் தீயில் போடுவார்கள்.'
8 இந்நகரைக் கடந்து செல்லும் பல பிற இனத்தார்,
'இம்மாநகருக்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?'
என்று ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வர்.
9 'அவர்கள் தங்கள் கடவுளாகிய ஆண்டவரின்
உடன்படிக்கையைப் புறக்கணித்து
வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு
அவற்றுக்கு ஊழியம் செய்ததால்தான்
இவ்வாறு நேர்ந்தது' என்பர்."
யோவகாசுக்கு எதிராக
தொகு
10 இறந்தவனைக் குறித்து அழ வேண்டாம்;
அவனுக்காகப் புலம்ப வேண்டாம்;
சென்றுவிட்டவனுக்காகக் கதறி அழுங்கள்;
ஏனெனில் அவன் இனி திரும்பிவரப் போவதில்லை;
தான் பிறந்த நாட்டைப் பார்க்கப் போவதில்லை.
11 யூதா அரசனைப் பற்றி ஆண்டவர் கூறுவது இதுவே:
தன் தந்தை யோசியாவுக்குப் பதிலாக ஆட்சி செய்து வந்தான்.
அவன் இந்த இடத்தைவிட்டுச் சென்றுவிட்டான்;
இனி இங்குத் திரும்பி வரமாட்டான். [2]
12 அவன் நாடுகடத்தப்பட்ட இடத்திலேயே சாவான்.
இந்த நாட்டை இனி ஒருபோதும் பாரான்.
யோயாக்கிமுக்கு எதிராக
தொகு
13 நீதியின்றித் தன் மாளிகையையும்,
நேர்மையின்றித் தன் மாடியறைகளையும்
கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு!
அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான்.
அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.
14 'நான் பெரியதொரு மாளிகையையும்
காற்றோட்டமான மாடியறைகளையும்
கட்டிக்கொள்வேன்' என்கிறான்.
அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான்.
கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து
அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.
15 கேதுரு மரங்களின் சிறப்பில்தான்
உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா?
உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும்,
நீதி நேர்மையுடன் நடந்தானே!
அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே!
16 ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான்.
எல்லாம் நலமாய் இருந்தது.
என்னை அறிதல் என்பது இதுதானே! என்கிறார் ஆண்டவர்.
17 நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும்
மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும்
ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான்
கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.
18 ஆகவே யூதாவின் அரசனும் யோசியாவின் மகனுமாகிய
யோயாக்கிமைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே:
'ஐயோ என் சகோதரனே! ஐயோ சகோதரியே!' என்று
அவனுக்காக யாரும் ஒப்பாரி வைக்கமாட்டார்கள்.
'ஐயோ என் தலைவரே! மாண்பு மிக்கவரே!' என்று
அழமாட்டார்கள். [3]
19 ஒரு கழுதைக்குரிய அடக்கமே அவனுக்குக் கிடக்கும்
அவனை இழுத்து எருசலேமின் வாயில்களுக்கு வெளியே எறிவர்.
எருசலேம் மக்களுக்கு எதிராக
தொகு
20 லெபனோன்மேல் ஏறிக் கதறியழு!
பாசானில் அழுகைக்குரல் எழுப்பு!
அபாரிமில் ஓலமிடு!
ஏனெனில், உன் அன்பர்கள் அனைவரும் நொறுக்கப்பட்டார்கள்.
21 நீ நலமாய் இருந்த காலத்தில் உன்னோடு பேசினேன்;
நீயோ 'நான் செவிசாய்க்க மாட்டேன்' என்றாய்;
உன் இளமையிலிருந்து இதுவே உன் வழிமுறை;
எனது குரலுக்கு நீ செவிகொடுக்கவே இல்லை.
22 உன் மேய்ப்பர்களைக் காற்றே மேய்க்கும்;
உன் அன்பர்கள் நாடுகடத்தப்படுவர்;
அப்போது நீ வெட்கமுறுவாய்.
உன் தீச்செயல்களைக் குறித்து மானக்கேடு அடைவாய்.
23 லெபனோனில் குடிகொண்டுள்ள நீ,
கேதுரு மரங்களுள் கூடுகட்டியிருக்கும் நீ,
பேறுகால வேதனை போன்ற துன்பம் வரும்போது,
எவ்வாறு புலம்பி அழப்போகின்றாய்?
யோயாக்கின் அரசனுக்கு எதிராக
தொகு
24 ஆண்டவர் கூறுவது:
என்மேல் ஆணை!
யோயாக்கிமின் மகனும் யூதாவின் அரசனுமான கோனியாவே,
நீ என் வலக்கை முத்திரை மோதிரம் போல் இருந்தாலும்,
நான் உன்னைக் கழற்றி எறிந்து விடுவேன். [4]
25 உன் உயிரைப் பறிக்கத் தேடுவோரின் கையில்,
நீ அஞ்சுகின்றவர்களின் கையில்,
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் கையில்,
கல்தேயரின் கையில் உன்னை ஒப்புவிப்பேன்.
26 உன்னையும் உன்னைப் பெற்றெடுத்த அன்னையையும்
இன்னொரு நாட்டுக்குத் தூக்கியெறிவேன்.
நீங்கள் பிறவாத அந்த நாட்டில் இறப்பீர்கள்.
27 எந்த நாட்டுக்குத் திரும்பிவர
அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்களோ,
அந்த நாட்டிற்குத் திரும்பி வரவே மாட்டார்கள்.
28 கோனியா என்னும் இம்மனிதன்
அவமதிப்புக்குள்ளான உடைந்த ஒரு பானையோ?
யாரும் விரும்பாத ஒரு மண்கலமோ?
அவனும் அவன் வழி மரபினரும்
ஏன் தூக்கி எறியப்பட்டார்கள்?
முன்பின் தெரியாத நாட்டுக்கு ஏன் துரத்தப்பட்டார்கள்?
29 நாடே! நாடே! நாடே!
ஆண்டவரின் வாக்கைக் கேள்.
30 ஆண்டவர் கூறுவது இதுவே:
'இந்த ஆள் மகப் பேறற்றவன்;
தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன்' என எழுது.
ஏனெனில் அவன் வழி மரபினர் யாரும்
வெற்றி அடையமாட்டார்கள்;
யாரும் தாவீதின் அரியணையில் வீற்றிருந்து
யூதாவின்மேல் ஆட்சி புரிய மாட்டார்கள்.
- குறிப்புகள்
[1] 22:5 = மத் 23:38; லூக் 13:35.
[2] 22:11 = 2 அர 23:31-34; 2 குறி 36:1-4.
[3] 22:18 = 2 அர 23:36-24:6;
2 குறி 36:5-7.
[4] 22:24 = 2 அர 24:8-15; 2 குறி 36:9-10.
(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 23 முதல் 24 வரை