திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எரேமியா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை

"அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து, 'எரேமியா, நீ காண்பது என்ன?' என்று கேட்டார். நான் 'அத்திப்பழங்களைப் பார்க்கிறேன். நல்லவை மிக நல்லவையாயும், தீயவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன' என்றேன்." - எரேமியா 24:4

அதிகாரம் 23

தொகு

வருங்கால அரசரைப் பற்றிய முன்னறிவிப்பு

தொகு


1 ஆண்டவர் கூறுவது:
என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச்
சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு!
2 தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு
எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்;
அதனைத் துரத்தியடித்தீர்கள்;
அதனைப் பராமரிக்கவில்லை.
இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக
உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.
3 என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை,
நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும்
கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய
ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன்.
அவையும் பல்கிப் பெருகும்.
4 அவற்றைப் பேணிக்காக்க நான்
மேய்ப்பர்களை நியமிப்பேன்.
இனி அவை அச்சமுறா; திகிலுறா;
காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.
5 ஆண்டவர் கூறுவது இதுவே:
இதோ நாள்கள் வருகின்றன;
அப்போது நான் தாவீதுக்கு
ஒரு நீதியுள்ள 'தளிர்' தோன்றச் செய்வேன்.
அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார்.
அவர் ஞானமுடன் செயல்படுவார்.
அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்.
6 அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்;
இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்.
'யாவே சித்கேனூ' [1] என்னும் பெயரால்
இந்நகர் அழைக்கப்படும். [2]
7 ஆதலால் ஆண்டவர் கூறுவது:
இதோ நாள்கள் வருகின்றன.
அப்போது, 'எகிப்து நாட்டிலிருந்து
இஸ்ரயேல் மக்களை அழைத்து வந்த
வாழும் ஆண்டவர்மேல் ஆணை'
என்று எவரும் சொல்லார்.
8 மாறாக, 'இஸ்ரயேல் குடும்ப மரபினர்
தங்கள் சொந்த நாட்டில் வாழும்படி,
அவர்களை வடக்கு நாட்டிலிருந்தும்
அவர்கள் துரத்தியடிக்கப்பட்டிருந்த
அனைத்து நாடுகளிலிருந்தும்
அழைத்து வந்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை'
என்று கூறுவர்.

போலி இறைவாக்கினருக்கு எதிராக

தொகு


9 இறைவாக்கினரைக் குறித்து:
என்னுள் என் இதயம் நொறுங்கியுள்ளது;
என் எலும்புகள் எல்லாம் நடுநடுங்குகின்றன;
ஆண்டவரை முன்னிட்டும்
அவர்தம் புனித சொற்களை முன்னிட்டும்
நான் குடிபோதையில் இருப்பவன் போல் ஆனேன்;
மதுவினால் மயக்கம் கொண்டவன் ஆனேன்.


10 ஏனெனில் நாட்டில் விபசாரர்கள் நிரம்பியுள்ளனர்;
சாபத்தின் விளைவாக நாடு புலம்புகிறது;
பாலைநிலத்துப் பசும்புல் தரை உலர்ந்து போயிற்று;
அவர்கள் வழிகள் தீயவை;
அவர்கள் ஆற்றல் தீயவற்றிற்குப் பயன்படுகின்றது.


11 இறைவாக்கினர், குருக்கள் ஆகிய
இரு சாராரும் இறையுணர்வு அற்றவர்கள்;
என் இல்லத்தில் அவர்களின் தீச்செயல்களை
நான் கண்டுள்ளேன், என்கிறார் ஆண்டவர்.


12 எனவே, அவர்கள் பாதை வழுக்கிவிடக்கூடியது;
இருளில் அவர்கள் தள்ளப்பட்டுத்
தடுக்கி விழுவர்;
அவர்கள் தண்டிக்கப்படும் ஆண்டில்
அவர்கள்மேல் தீமை வரச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.


13 சமாரியாவின் இறைவாக்கினரிடையே
ஒவ்வாத செயல் ஒன்று கண்டேன்;
அவர்கள் பாகால் பெயரால்
பொய் வாக்குரைத்து
என் மக்கள் இஸ்ரயேலைத்
தவறான வழியில் நடத்தினார்கள்.


14 எருசலேமின் இறைவாக்கினரிடையே
திகிலூட்டும் செயல் ஒன்று கண்டேன்;
அவர்கள் விபசாரம் செய்கிறார்கள்;
பொய்ம்மை வழியில் நடக்கிறார்கள்;
தீயோரின் கைகளை வலுப்படுத்துகிறார்கள்;
இதனால் யாரும் தம் தீய வழியிலிருந்து திரும்புவதில்லை;
அவர்கள் எல்லாரும் என் பார்வையில்
சோதோமைப் போன்றவர்கள்;
எருசலேமின் குடிமக்கள்
கொமோராவைப் போன்றவர்கள். [3]


15 எனவே இறைவாக்கினரைப் பற்றிப்
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
அவர்களை எட்டிக்காய் உண்ணச் செய்வேன்;
நஞ்சு கலந்த நீரைக் குடிக்கச் செய்வேன்.
ஏனெனில், எருசலேம் இறைவாக்கினரிடமிருந்தே
இறைஉணர்வின்மை நாடெங்கும் பரவிற்று.


16 படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே:
உங்களுக்கு வீண் நம்பிக்கை கொடுக்கும்
இந்த இறைவாக்கினரின் சொற்களுக்குச்
செவி கொடுக்காதீர்கள்.
அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று;
மாறாகத் தங்கள் உள்ளத்துக் கற்பனைகளே.
17 ஆண்டவரின் வாக்கை இகழ்வோரிடம்
'உங்களுக்கு நலம் உண்டாகும்' எனத்
தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் இதயத்தின் பிடிவாத்தின்படி நடப்போர் அனைவரிடமும்
'உங்களுக்குத் தீமை நேராது' என்று கூறுகிறார்கள்.


18 ஆண்டவரின் மன்றத்தில் நின்றவன் யார்?
அவர் சொல்லைக் கண்டவன் அல்லது கேட்டவன் யார்?
அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து அதனை அறிவித்தவன் யார்?


19 இதோ ஆண்டவரின் சீற்றம்
புயலாய் வீசுகின்றது;
அது தீயோரின் தலைமேல்
சூறாவளியாய்ச் சுழன்றடிக்கின்றது.


20 ஆண்டவர் தம் இதயத்தின் திட்டங்களைச்
செயலாக்கி நிறைவேற்றும்வரை
அவர் சினம் தணியாது;
வரப்போகும் நாள்களில் இதனை
நீங்கள் முற்றிலும் அறிந்துகொள்வீர்கள்.


21 அந்த இறைவாக்கினர்களை நான் அனுப்பவில்லை;
அவர்களாகவே ஓடிவந்தார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை;
அவர்களாகவே இறைவாக்கு உரைத்தார்கள்.


22 ஆனால் அவர்கள் என் மன்றத்தில் நின்றிருந்தால்
என் சொல்லை என் மக்களுக்கு எடுத்துரைத்து,
அவர்கள் தங்கள் தீய வழிகளையும்
தீச்செயல்களையும் விட்டு விலகச் செய்திருப்பர்.


23 ஆண்டவர் கூறுவது:
அருகில் இருந்தால்தான் நான் கடவுளா?
தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா?
24 என் கண்ணில் படாதபடி
எவராவது பதுங்கிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா?
என்கிறார் ஆண்டவர்.
விண்ணிலும் மண்ணிலும் நிறைந்திருப்பது நான் அல்லவா?
என்கிறார் ஆண்டவர்.
25 என் பெயரால் பொய்யுரைக்கும் இறைவாக்கினர்
'நான் கனவுகண்டேன், நான் கனவுகண்டேன்'
என்று கூறியதைக் கேட்டேன்.
26 பொய்யையும், தம் வஞ்சக எண்ணங்களையும்
இறைவாக்காக உரைக்கும்
இந்த இறைவாக்கினரின் மனப்பாங்கு என்று மாறுமோ?
27 இவர்களுடைய மூதாதையர்
பாகால் காரணமாக என் பெயரை மறந்தனர்.
அதுபோலத் தாங்கள் ஒருவர் ஒருவருக்குக் கூறும்
கனவுகள் வழியாக
என் மக்களின் நினைவிலிருந்து
என் பெயரை அகற்றிவிடலாம் என நினைக்கின்றனர்.
28 கனவு கண்ட இறைவாக்கினன்
தன் கனவை எடுத்துச் சொல்லட்டும்.
என் சொல்லைத் தன்னிடத்தில் கொண்டிருப்பவனோ
அதனை உண்மையோடு எடுத்துரைக்கட்டும்.
தாளைத் தானியத்தோடு ஒப்பிட முடியுமா?
என்கிறார் ஆண்டவர்.
29 என் சொல் தீயைப் போன்றது அல்லவா?
பாதையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது அல்லவா?
என்கிறார் ஆண்டவர்.
30 ஆகவே, ஒருவர் ஒருவரிடமிருந்து
என் சொற்களைத் திருடும் இறைவாக்கினருக்கு
எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
31 தங்கள் நாவினால் 'ஆண்டவர் கூறுகிறார்'
என்று உரைக்கும் இறைவாக்கினருக்கு
எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
32 பொய்க் கனவுகளை
இறைவாக்காக உரைப்போருக்கு
எதிராய் நான் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர்.
இவர்கள் அவற்றை எடுத்துரைத்து,
தங்கள் பொய்களாலும் மூடச்செயல்களாலும்
என் மக்களைத் தவறான வழியில்
நடத்திச் செல்கிறார்கள்.
நான் அவர்களை அனுப்பவில்லை;
அவர்களுக்குக் கட்டளையிடவும் இல்லை,
அவர்களால் இந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை,
என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவரின் சுமை

தொகு


33 இந்த மக்களோ ஓர் இறைவாக்கினரோ
ஒரு குருவோ உன்னிடம்
'ஆண்டவரின் சுமை யாது?'
என்று கேட்டால்,
'நீங்களே, அந்தச் சுமை;
நான் உங்களைத் தள்ளவிடுவேன்,
என்கிறார் ஆண்டவர்' என்று சொல்.
34 'ஆண்டவரின் சுமை' என்று
ஓர் இறைவாக்கினர் அல்லது குரு
அல்லது மக்களில் யாராவது கூறினால்,
அந்த மனிதரையும் அவர் வீட்டாரையும் நான் தண்டிப்பேன்.
35 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?'
'ஆண்டவர் என்ன பேசினார்?' என்றே
நீங்கள் உங்கள் உற்றார் உறவினரிடம் கேட்க வேண்டும்.
36 'ஆண்வரின் சுமை' என்று
இனி யாரும் குறிப்பிடக்கூடாது;
அவனவன் சொல்லே அவனுக்குச் சுமை.
வாழும் கடவுளும் படைகளின் ஆண்டவருமான
நம் கடவுளின் சொற்களை நீங்கள் திரித்துக் கூறுகிறீர்கள்.
37 நீங்கள் இறைவாக்கினரிடம்,
'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?',
'ஆண்டவர் என்ன பேசினார்?' என்றே கேட்கவேண்டும்.
38 'ஆண்டவரின் சுமை' என்று நீங்கள் கூறுவீர்களானால்,
ஆண்டவர் சொல்வதைக் கேளுங்கள்.
'ஆண்டவரின் சுமை' என்று
நீங்கள் கூறக்கூடாது என்று
நான் உங்களுக்குச் சொல்லியனுப்பியிருந்தும்,
நீங்கள் 'ஆண்டவரின் சுமை' என்று கூறுகிறீர்கள்.
39 ஆதலால், நான் உங்களை முற்றிலும் மறந்து,
உங்களையும் உங்களுக்கும்
உங்கள் மூதாதையருக்கும்
நான் கொடுத்த நகரையும்
என் முன்னிலையிலிருந்து தூக்கி வீசியெறிவேன்.
40 நீங்கள் என்றென்றும் வசைச் சொல்லுக்கு ஆளாவீர்கள்.
உங்கள் அவமானம் என்றென்றும் நிலைத்திருக்கும்;
அது மறக்கப்படாது.


குறிப்புகள்

[1] 23:6 - எபிரேயத்தில், 'ஆண்டவரே நமது நீதி' என்பது பொருள்.
[2] 23:5-6 = எரே 33:14-16.
[3] 23:14 = தொநூ 18:20; எசே 16:49.


அதிகாரம் 24

தொகு

அத்திப் பழங்களின் அடையாளம்

தொகு


1 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்,
யோயாக்கிமின் மகனும் யூதாவும் அரசனுமான
எக்கோனியாவையும்
யூதாவின் தலைவர்களையும்
தச்சர்களையும் கொல்லர்களையும்
எருசலேமிலிருந்து நாடுகடத்திப்
பாபிலோனுக்குக் கொண்டு சென்ற பின்னர்,
ஆண்டவர் எனக்கு அருளிய காட்சி:
இதோ, ஆண்டவரது கோவில்முன்
அத்திப் பழங்கள் நிறைந்த இரண்டு கூடைகள் வைக்கப்பட்டிருந்தன. [*]
2 ஒரு கூடையில் மிக நல்ல அத்திப்பழங்கள் இருந்தன;
அவை முதன்முதலில் பழுத்தவை போன்று இருந்தன.
மற்றக் கூடையில் தீய அத்திப் பழங்கள் இருந்தன;
அவை தின்ன முடியாத அளவுக்கு மிகக் கெட்டவையாய் இருந்தன.
3 அப்போது ஆண்டவர் என்னைப் பார்த்து,
'எரேமியா, நீ காண்பது என்ன?' என்று கேட்டார்.
நான் 'அத்திப்பழங்களைப் பார்க்கிறேன்.
நல்லவை மிக நல்லவையாயும்,
தீயவை தின்ன முடியாத அளவுக்கு
மிகக் கெட்டவையாயும் இருக்கின்றன' என்றேன்.


4 ஆண்டவரின் வாக்கு எனக்கு மீண்டும் அருளப்பட்டது:
5 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே:
யூதாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள்,
அதாவது இவ்விடத்திலிருந்து
நான் கல்தேயரின் நாட்டுக்கு அனுப்பியிருப்பவர்கள்
இந்த நல்ல அத்திப் பழங்களைப் போன்றவர்கள்.
அவர்களை நான் நல்லவர்களாகக் கருதுகிறேன்.
6 அவர்களுக்கு நன்மை செய்வதில்
நான் கண்ணாயிருக்கிறேன்;
அவர்களை மீண்டும் இந்நாட்டுக்குக் கொண்டு வருவேன்.
நான் அவர்களைக் கட்டி எழுப்புவேன்;
கவிழ்த்து வீழ்த்தமாட்டேன்.
நான் அவர்களை நட்டு வளர்ப்பேன்;
பிடுங்கி எறியமாட்டேன்.
7 நானே ஆண்டவர் என்பதை
அறிந்துகொள்ளும் உள்ளத்தை
நான் அவர்களுக்குக் கொடுப்பேன்.
அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள்.
நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.
ஏனெனில் அவர்கள் தங்கள் முழு உள்ளத்தோடு
என்னிடம் திரும்பிவருவார்கள்.


8 ஆண்டவர் கூறுவது இதுவே:
யூதா அரசன் செதேக்கியாவையும்
அவர் தலைவர்களையும்
இந்நாட்டில் விடப்பட்டுள்ள எருசலேமின் எஞ்சியோரையும்,
எகிப்து நாட்டில் வாழ்வோரையும்,
தின்ன முடியாத அளவுக்குத்
தீயவையாய் இருந்த அத்திப் பழங்களைப் போன்று நடத்துவேன்.
9 உலகின் அரசுகள் அனைத்துக்கும்
அவர்கள் திகிலின் சின்னமாக அமைவார்கள்.
நான் அவர்களைத் துரத்தியடிக்கும் இடங்களில் எல்லாம்
அவர்கள் வசைச் சொல்லுக்கும் ஏளனத்துக்கும்
பழிப்புரைக்கும் சாபத்துக்கும் ஆளாவார்கள்.
10 நான் அவர்களுக்கும்
அவர்களின் மூதாதையருக்கும்
கொடுத்த நாட்டில் யாரும் இராது அழியும்வரை
அவர்கள்மேல் வாளையும் பஞ்சத்தையும்
கொள்ளை நோயையும் அனுப்புவேன்.


குறிப்பு

[*] 24:1 = 2 அர 24:12-16; 2 குறி 36:10.


(தொடர்ச்சி): எரேமியா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை